“தீண்டாமை குறுகிய காலமுடையதோ, தற்காலிகமானதோ அல்ல. அது, நிரந்தரமானது. நேரடியாகச் சொல்ல வேண்டும் எனில், சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையிலான போராட்டம் நிரந்தரமான ஒன்று. இப்போராட்டத்திற்கு முடிவே இல்லை. ஏனெனில், சாதி இந்துக்களின் நம்பிக்கையின்படி, சமூகத்தின் கடைநிலையில் உங்களை நிறுத்தியிருக்கும் மதத்திற்கும் அழிவே இல்லை. எந்த காலச்சூழலிலும் இம்மதம் மாறா தன்மை கொண்டதாகவே இருக்கிறது. இன்று நீங்கள் சாதிப் படிநிலையில் ஆகக் கீழ்நிலையில் இருக்கின்றீர்கள். எதிர்காலத்திலும் நீங்கள் இதே கீழ்நிலையில்தான் இருந்தாக வேண்டும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையிலான போராட்டம், எக்காலத்திற்கும் தொடரும் என்பதே இதன் பொருள். இப்போராட்டத்திற்கிடையில் நீங்கள் எப்படி வாழப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. இது குறித்து நீங்கள் சிந்திக்காதவரை, வேறு வழியே இல்லை.

“இந்துக்களின் கட்டளைக்கேற்ப அடிபணிந்து வாழ விரும்புகிறவர்கள், அடிமைகளாக வாழ விழைகின்றவர்கள் இப்பிரச்சனை குறித்து சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், சுயமரியாதையுடனும் சமத்துவத்துடனும் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள், இது குறித்து சிந்திக்க வேண்டும். இப்போராட்டத்திலிருந்து மீண்டெழுவது எப்படி?''

– டாக்டர் அம்பேத்கர், 1936 மே 30 அன்று மும்பையில் ஆற்றிய உரையிலிருந்து...

இம்மண்ணில் வர்க்கப் புரட்சியை உருவாக்குவதற்காகவே முக்கால் நூற்றாண்டு காலமாகப் போராடி வரும் கம்யூனிஸ்டுகள், இந்நாட்டின் பாட்டாளிகளான தலித் மக்களை வரலாறு கண்டிராத அளவுக்கு பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறார்கள் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? 44 தலித்துகள் கொல்லப்பட்ட கீழ்வெண்மணி கொடுமை பற்றி வாய் கிழியப் பேசும் மார்க்சிஸ்டுகள்தான் 31 ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தர்பான் – மரிச்ஜாப்பி தீவில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் மக்களை படுகொலை செய்திருக்கிறார்கள்! மார்க்சிஸ்டுகளின் முதல் புரட்சிகர சோசலிச அரசுக்கு எதிராக அப்படி என்னதான் செய்துவிட்டார்கள் தலித்துகள்? இந்நாட்டில் அவர்கள் கீழ் ஜாதியினராகப் (நாமசூத்திரர்கள்) பிறந்து தொலைத்தனர் என்பதைத் தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை.

ஆட்சி அதிகாரத்திற்கு யார் வந்தாலும், அவர்கள் இடதுசாரிகளாகவே இருந்தாலும் யாருக்கு எதிராக அவர்கள் செயல்படுகின்றனர் என்பதுதான் நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். ஜாதியையும், முதலாளித்துவத்தையும் ஒழிப்பதற்கு மாறாக, பாட்டாளிகளான தலித் மக்களை ஒழிப்பதற்கே வர்க்கப் போராட்டம் வழிவகுத்திருக்கிறது. புரட்சி என்ற கூர் தீட்டப்பட்ட வாளின் ஒருபுறம் அரசியல் எனில், மறுபுறம் அதிகாரம். இப்புரட்சிகர அரசியல் அதிகாரத்திலும் முதலாளித்துவ வர்க்கம் பலியாகாது எனில், புரட்சியின் பொருள்தான் என்ன? இன்றளவும் ஆயுதமேந்தும் கம்யூனிஸ்டுகள் யாரை பலியாக்கியும் – பலி கொடுத்தும் வருகிறார்கள்? ஆயுதந்தாங்கிப் போராடும் நக்சல்பாரி இயக்கத்திலும்; அரசின் காவல் மற்றும் ராணுவப் படையிலும் பங்கேற்பவர்கள் – தலித், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானே – இருபுறமும் சண்டையிட்டு மடிகிறார்கள். இரு பிரிவினருக்கும் நோகாமல் தலைமை தாங்கக் கூடியவர்களாக "பிறவி முதலாளிகள்' இருக்கிறார்கள்!

ஒரு திட்டமிட்ட கள்ள மவுனத்தின் (Conspiracy of Silence) மூலம் – இடதுசாரி அறிவுஜீவிகளும், கம்யூனிஸ்டுகளும் – மரிச்ஜாப்பி இனப்படுகொலையை இருட்டடிப்புச் செய்துவிட்டனர். "மேற்கு வங்கம்தான் இந்தியாவின் மாதிரி மாநிலம்; அங்கு பிற மாநிலங்களில் இருப்பது போல தீண்டாமையே இல்லை' என்று கம்யூனிஸ்டுகள் சாதிப்பதன் பொருள் இப்போதுதான் புரிகிறது. அவர்கள் தீண்டாமையை ஒழிக்கவில்லை; தீண்டத்தகாதவர்களையே நிர்மூலமாக்கியிருக்கிறார்கள். அரதப்பழசான கோயில் நுழைவுப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் அரசுகளைக் கண்டித்து, நாள்தோறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் கம்யூனிஸ்டுக் கட்சிகள், கால் நூற்றாண்டு கழித்தாவது – இவ்வினப் படுöகாலைக்குப் பொறுப்பேற்க வேண்டும். நடுவண் அரசும், உச்ச நீதிமன்றமும் இதில் தலையிட்டு, முறையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். உலகெங்கும் வாழும் தலித் செயல்வீரர்கள், போஸ்னியா இனப்படுகொலைக்கும்; ஈழத்து இனப்படுகொலைக்கும் இணையான இப்படுகொலைக்கு காரணமானவர்களை – பன்னாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கவும், தண்டிக்கவும் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தலித் மக்கள் தாங்கள் நாள்தோறும் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, இழிவுகளை எதிர்கொண்டு வருவதைக் கண்டு கதறுகின்றனர்; போராடுகின்றனர்; அமைப்பாகவும் திரள்கின்றனர். ஆனால், தாங்கள் சந்திக்கும் பிரச்சனையைப் பற்றி காலம் முழுக்க புலம்பும் அளவிற்கு, இதற்கான நிரந்தரத் தீர்வு காண அவர்கள் அக்கறை செலுத்துவதேயில்லை. அதனால்தான் இழிவுகளோடும் வன்கொடுமைகளோடும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தலித்துகள் தங்கள் இன்னல்களுக்கெல்லாம் தீர்வாக, அம்பேத்கர் சொன்னதாக ஒரேயொரு வழியை மட்டும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு, அரசியல் அதிகாரத்திற்கான மாயையில் சிக்கித் தவிக்கின்றனர். இச்செயல்பாடு மட்டுமே தங்களை அனைத்து துயரங்களிலிருந்தும் மீட்டுவிடும் என்று நம்புகின்றனர். சுதந்திரத்திற்குப் பிறகான இந்த 63 ஆண்டுகளில், ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கணக்கான தலித் அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. அவை இதுவரை எத்தகைய அதிகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன – வீணாய்ப்போன சில சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்ததைத் தவிர!

தமக்கு கிட்டிய வாய்ப்புகள் மூலம் பல தளங்களிலும் போராடிய அம்பேத்கர், அரசியலிலும் தன் தடத்தைப் பதித்தார். அரசியல் தீர்வையே "சர்வ ரோக நிவாரணியாக' அவர் எங்கும் குறிப்பிடவில்லை. அம்பேத்கரின் அரசியல் பங்களிப்பை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் சமூகம், ஓர் அடிப்படை உண்மையை மறந்து விடுகிறது. தன் மீதும் – தன் சமூகத்தின் மீதும் திணிக்கப்பட்ட பிறவி இழிவை, அரசியல் அதிகாரத்தின் மூலம் அம்பேத்கர் ஒழிக்கவில்லை. அவர் உருவாக்கிய உலகின் மிகப் பெரிய சட்டத்தின் மூலமோ, அவர் சட்ட அமைச்சரானதாலோ – அவருடைய பிறவி இழிவு போய்விடவில்லை. மாறாக, இந்து மதத்தை அவர் முற்றாக மறுத்ததன் மூலமே – தன் மீதான பிறவி இழிவை அவரால் அழித்தொழிக்க முடிந்தது! எக்காலத்திலும் அதிகாரம் பிறவி இழிவைப் போக்காது என்பதற்கு, உத்திரப் பிரதேசத்தின் முதல்வராக நான்காவது முறை பொறுப்பேற்றிருக்கும் மாயாவதி அவர்களே சான்று.

அரசியல் அதிகாரம் சில சலுகைகளையும், நலத் திட்டங்களையும் பெற்றுத்தரும். அதற்கும் முன்நிபந்தனையாக, தலித்துகள் இந்துக்களாக (அடிமைகளாக) இருந்தாக வேண்டும். சில போலி அதிகாரத்தைக் கொடுத்து, தலித்துகளை இந்துக்களாகவே நிரந்தரமாக வைத்திருக்கும் அதிகாரத்தின் அரசியல் அது! இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது நிரந்தரமான பிறகு, தீண்டாமையும், ஆகக் கீழ் நிலையில் இருப்பதும் – அம்பேத்கர் சொல்வது போல் நிரந்தரமானதுதானே! இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்த இழிவை தலித்துகள் சுமக்கப் போகிறார்கள்? அரசியல் அதிகாரத்திற்காக தலித்துகள் போராட வேண்டும் என்று வலியுறுத்துகின்றவர்கள், மற்றொரு எளிய உண்மையை மறைத்து விடுகிறார்கள். அனைத்து தொகுதிகளிலும் தீண்டத்தகாத சிறுபான்மையினராக இருக்கக்கூடிய மக்களை, ஜாதி இந்து சமூகம் தங்கள் பிரதிநிதிகளாக எப்படி தேர்ந்தெடுக்கும்? குறைந்தபட்சம் பட்டியல் சாதியினரிடையேகூட, போதிய புரிதலும் இணக்கமும், சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் இல்லாத நிலையில், இது எப்படி சாத்தியமாகும்?

"பிறவி இழிநிலை பற்றியும், ஜாதி ஒழிப்பு பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை; எங்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தாமல், எல்லா சாதியினரையும் போல் சமத்துவமாக நடத்த வேண்டும்' என்பது தலித் செயல்திட்டமாக இருக்கும் எனில், இதைவிட கடைந்தெடுத்த முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது. ஜாதியும் தீண்டாமையும் சேர்ந்தே தோன்றியது; அதை சேர்த்தே வீழ்த்த வேண்டும். இவற்றைப் பிரித்து ஒன்றை மட்டும் அழித்து விடலாம் என்று நினைப்பது, தலித்துகளின் அறியாமை மட்டுமல்ல; அது இந்து தலைவர்களின் சதித் திட்டம்; காந்தியத்தின் கயமை.

இந்து பண்பாட்டை மறுதலிக்காமல் – கல்வியும், பொருளாதாரமும், தன் முன்னேற்றமும் தங்களை விடுவித்து விடும் என்றோ, தாங்கள் தற்பொழுது இழிவை சந்திக்கவில்லை என்றோ, வன்கொடுமைகள் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வு என்றோ "படித்த' – "முன்னேறிய' தலித் மக்கள் ஒருவித மாயையில் சமூகப் பொறுப்பின்றி காலத்தை கழிப்பார்கள் எனில் – அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த, தங்கள் சகோதரர்கள் இன்றளவும் வாழும் இடத்தை ஒரு முறை திரும்பிப் பார்க்கட்டும். அனைத்துவித நவீனங்களையும் உள்வாங்கிக் கொண்டு, ஊரும் – சேரியும் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன.

எவருமே அறிந்திராத சுந்தர்பான் – மரிச்ஜாப்பி படுகொலை பற்றிய கொடூர வரலாற்றை உலகறியச் செய்யவே – தலித் முரசின் 15 ஆம் ஆண்டு சிறப்பிதழையே இதற்காக அர்ப்பணித்திருக்கிறோம். இப்படுகொலை பற்றிய கூடுதல் தகவல்கள், அடுத்த இதழிலும் இடம்பெறவிருக்கின்றன.

Pin It