இன்று இந்தியா என்றழைக்கப்படும் நிலப் பகுதியானது 1600களிலிருந்து 1947வரை ஆங்கிலேய நாடாளுமன்ற வழிகாட்டுதலின்படி கிழக்கிந்தியக் கம்பெனி என்ற அமைப்பின் மூலம் அதன் அரசு நிகராளிகள் (Viceroys) தலைமை ஆளுநர்கள் (Governor Generals) ஆகியோரின் மேலாண்மைக்குட்பட்டு இயங்கி வந்த ஒன்றாகும்.

1934ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியத் தேர்தல் நடைபெற்றபோது வெளியிடப்பட்ட இந்திய நாட்டு வரைபடம் இன்றைய மியன்மார், பாகிஸ்தான், வங்காள தேசம், பலுசிஸ்த்தான் மற்றும் மன்னராட்சிக்கு உட்பட்ட பல தேசங்கள் அடங்கிய ஒன்றாகும். அதற்கு முந்திய 1916 ஆண்டு வரைபடங்களில் ஆப்கானிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளும் அடங்கியிருந்தது. இந்திய நாடு என்ற அழைக்கப் பட்ட நிலப்பகுதியின் எல்லைகள் காலந்தோரும் மாற்றங்களுக்குட்பட்ட ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது. அங்கு ஒரு பொதுவான இனம்; பொதுவானப் பண்பாடு; பொதுவான கலாச்சாரம்; பொதுவான உணவு அல்லது பொதுவான மொழி என்ற தன்மை எப்போதும் இருந்ததில்லை.

இப்பகுதியின் வரலாற்றை நோக்கும் பொழுது, அரப்பா, சிந்து சமவெளிப் பகுதியில் திராவிட நாகரிகம் நிலைபெற்றிருந்த நிலையில், ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்து முதன் முதலில் சிந்து ஆற்றங்கரையில் தங்கியதன் விளைவாக அந்நிலப் பகுதி சிந்து எனப் பெயர் பெற்றது. பாரசீகர்கள் அதை ஹிண்டு (Hind) என வழங்கினர்; பிற்காலத்தில் கிரேக்கர்கள் அதை ஹிந்தோசு (Indos) எனத் திரித்தனர். இலத்தீனில் அது ஆற்றைக் குறித்து (Indus) என்றும் நாட்டைக் குறித்து இந்தியா (India) என்றும் திரிந்தது என மொழி ஞாயிறு பாவாணர் விளக்குவார்.

வரலாற்றுக் காலந்தொட்டு இந்திய நிலப் பகுதி பல்வேறு மன்னராட்சிக்குட்பட்டிருந்தாலும் இன்றைய நிலை போல மொழி ஆதிக்க உணர்வு அல்லது சிக்கல்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தி என்பது ஒரு தனிமொழியல்ல

anti hindi agitation in karnatakaஅரேபியரும், பாரசீகர்களும், துருக்கியரும், ஆப்கானிஸ்தருமான முகம்மதியர் 8ஆம் நூற்றாண்டு அளவிலேயே இந்தியா மீது படையெடுத்தாலும் கி.பி. 12 ஆம் நூற்றாண்டுவரை சிந்து, பஞ்சாப் பகுதிகளுக்குள்ளாகவே அவர்கள் ஆட்சி அமைந்தது. முகம்மது துக்ளக் காலத்தில் (1325-1351) முகம்மதியர் ஆட்சி தக்காணம் வரை நீட்சி பெற்றது. வலிமை மிக்க அவுரங்கசீபு காலத்தில் (1658-1707) முகம்மதிய ஆட்சி கருநாடகம், தமிழ்நாடு உள்ளிட்டத் தென்னிந்திய பகுதிகளிலும் பரவியது. தில்லி முகம்மதிய அரசின் தலைநகராகிய பின் இந்தி மொழி பேசிய மக்களொடு பழகியதன் விளைவாக அம்மொழிகளுடன் பாரசீகம், அரபிச் சொற்கள் கலந்து உருது என்னும் ஒரு கலவை மொழி தோன்றியது. இந்தியென்பது ஓர் ஒழுங்குபட்டத் தனி மொழியன்று. பஞ்சாப், சிந்து, வங்கம், நேபாளம், குஜராத் உட்பட்ட வட மாநிலங்களில் பேசப் படும் பல உட்பிரிவுகளைக் கொண்ட ஒரு பல்கிளை மொழியே இந்தி ஆகும்.

அதாவது மேல்நாட்டு இந்தி என்பது பச்சானி, ப்ரஜாபாஷா, கன்னோசி, பந்தேலி, உருது ஆகியவையும், கீழ்நாட்டு இந்தியாக அவதி, பகேலி, சத்தீசுகடி, மைதிலி, போஜ்புரி, மசுகி எனவும், இராஜஸ்தான் நிலப்பரப்பில் மால்வி, மார்வாடி, மேவதி, சைபுரி எனவும் அறியப்பட்டதாக சென்னைப் பல்கலைக் கழகத் தலைவராகயிருந்த் முனைவர் சங்கரராச நாயுடு தன்னுடைய இந்தி நடைமொழிகள்- ஓர் உடனுறவுப் படுத்தம் (Hindi dialects - A correlation) என்ற நூலில் விளக்கியிருப்பார்.

இந்திய நாட்டு வட்டார மொழிகளுடன் அராபி மொழியும், பாரசீக மொழியும் கலந்தமையால் உருது என்ற மொழியும், அதைப்போல சமற்கிருதம் கலந்தமையால் இந்தி மொழியும் தோன்றின. அந்த இந்தியும் உருதும் கலந்த மொழி இந்துஸ்தானி எனவும் அழைக்கப் படுகிறது. இந்த மொழியையே மகாத்மா காந்தியும் முன்னெடுத்தார். இந்தக் கலப்பும் உருவாக்கமும் கடந்த 200 ஆண்டுகளில் உருவான ஒன்று. எனவே தென் இந்திய மக்களுக்கு இந்தி, இந்துஸ்தானி, சமற்கிருதமும் அயல் மொழிகளே! ஆங்கிலமும் இதே காலவரையரைக்கு உட்பட்ட ஒன்றாகும்.

இந்தி நடை மொழிகளைப் பாகுபடுத்திக் கூறுவதும், இந்தி பேசுவோர் தொகையைக் குறிப்பதும், அதையே இந்தியைப் பொது மொழியாகக் கருதி சான்று காட்டுவதும் மிக மிகத் தவறாகும். எனவே இந்தி என்றொரு திருந்தா மொழி இன்ன காலத்தில் தோன்றியது என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. அதன் இலக்கிய வடிவம் 500 ஆண்டுகளுக்கு உட்பட்டதேயாகும். தமிழுக்குச் சிறந்த பாவலர்களாக நாம் தொல்காப்பியரையும், திருவள்ளுவரையும் காட்டுவதைப் போல இந்தியின் தலைசிறந்த பாவலர் துளசிதாசர் ஆவார். இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார்.

இன்று நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஒன்றிய அரசின் துறைகளில் பயன்படுத்தப்படும் இந்தி என்பது பேச்சு வழக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவம் ஆகும். இந்த இந்தி முக்கால் பகுதி சமற்கிருதமேயாகும். இந்தி என்ற பெயரில் இன்று கையாளப் படும் மொழி என்பது வட இந்திய வட்டார மொழிகளிலிருந்து பெரிதும் மாறுபட்ட ஒன்றாகும்.

ஆங்கிலேயர் விரும்பிய மாநிலங்களின் தன்னாட்சி

இந்திய நாட்டின் மொழிக் கொள்கையென்பது நாட்டின் விடுதலைக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது அதிக சிக்கல் நிறைந்த ஒன்றாகவும் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு சவாலாகவும் அமைந்துள்ளது.

பிரிட்டிஷார் இந்திய நிலப்பகுதியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பியிருந்த நிலையில் 1946 ஆம் ஆண்டு சனவரித் திங்களில் தேர்தல் நேரத்தில் மக்களுடைய மனநிலையை நேரிடையாக அறிந்து கொள்வதற்காக ஆங்கிலேய நாடாளுமன்ற அமைச்சரவைக் குழு இந்தியாவைப் பார்வையிட வந்தது. இந்த தூதுக் குழுவின் நோக்கம் இந்தியாவிற்கு ஒரு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதேயாகும். மேலும் அதை இந்திய மக்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் எண்ணினர். பின்னர் அந்த அமைச்சரவைக் குழு தன்னுடைய பரிந்துரையாக இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் சில முகாமையான அடிப்படை வடிவத்தில் இருக்க வேண்டும் என்று அறிவித்தனர்.

அதன் படி,

(1) பிரிட்டிஷ் இந்தியாவையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய ஒரு மைய அரசு இருக்க வேண்டும். அதன் கீழ் வெளியுறவு, பாதுகாப்பு, நாணயம் மற்றும் போக்குவரத்து ஆகியவை வைத்திருக்க வேண்டும்.

(2) பிரிட்டிஷ் இந்தியா மற்றும் மாநிலங்களின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு நிருவாகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

(3) மாநிலங்கள் முழுமையானத் தன்னாட்சி அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்.

(4) மாநிலங்கள் தனியான குழுக்களாகச் செயல்பட அதிகாரம் பெற்றிருப்பதுடன் நிருவாகம் மற்றும் ச௪ட்டமன்றங்களயும் வைத்துக் கொள்ள வசதி செய்யப் பட வேண்டும்.

(5) மேலும் இந்துக்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள் ஆகியோர்களின் பெரும்பான்மையைக் கணக்கில் கொண்டு இந்திய மாகாணங்கள் “ஏ”, “பி" “சி" என வகைப் படுத்தப்பட்டன. இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் தன் அரசியல் பங்கீட்டை உறுதி செய்தது. அரசமைப்புச் சட்டமன்றத்திற்கான இந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சி 205 இடங்களையும் முஸ்லீம் லீக் 73 இடங்களையும் சீக்கியர்கள் 4 இடங்களையும் பெற்றனர்.

ஆட்சி மொழி விவாதங்கள்

டாக்டர் இராசேந்திர பிரசாத் அவர்களைத் தலைவராகக் கொண்ட இந்த அரசமைப்பு மன்றத்தில் மொழி பற்றிய விவாதங்களில் பங்கேற்றவர்கள் 78 பேர் ஆகும்.

இதில் அரசமைப்பு வரைவில் (சரத்து-301) பரிந்துரைக்கப் பட்ட ஆட்சி மொழி பற்றிய விவாதம் 1949 செப்டம்பர் 12,13,-14 ஆகிய நாட்களில் நடைபெற்றது. ஆங்கிலேயர் ஆதிக்கத் திலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்ற உற்சாகத்தில் ஒரு கொடி, ஒரு மத்திய அரசு, ஓர் இராணுவம் என்பதைப் போல ஒரு தேசிய மொழியும் தேவை என்ற கருத்தில் இந்தி, சமசுகிருதம், உருது, இந்துஸ்தானி என வட இந்தியப் பகுதில் பேசப்படும் மொழிகள் முன்னிறுத்தப்பட்டன என்பதுடன் இந்தியாவிலிருந்து ஆங்கிலம் அகற்றப் படவேண்டும் எனவும் பெருமளவில் விவாதிக்கப் பட்டது. ஆங்கிலத்தை அய்ந்து ஆண்டுகளில் அகற்றவா? அல்லது பதினைந்து ஆண்டுகள் காலவரையரை செய்வதா? என்பதோடு இல்லாமல் இந்தி மொழியா இந்துஸ்தானி மொழியா? என்பதைச் சுற்றியே விவாதங்கள் நடைபெற்றுள்ளன. பின்னர் ஒரு கட்டத்தில் இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் தேவநாகரி எழுத்துருவில் எழுதப்பட வேண்டும் எனவும் விவாதிக்கப் பட்டன. அதற்கும் ஒரு படி மேல் சென்று இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியைப் பயன் படுத்துவதென்று தீர்மானிக்கப் பட்டதுடன், தேவநாகரி எண்களையே நாம் பயன்படுத்த வேண்டும் என்று வட இந்தியர்களால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்துத் தான் அதிக நேரம் செலவிடப்பட்டுள்ளது. அதில் ஒரு சிலர் தேவநாகரி எண்களுடன் உருது எண்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விவாதித்துள்ளனர்.. சமஸ்கிருத மொழியா அல்லது இந்தி மொழியா? எனச் சிலரும், இந்தி மொழியா அல்லது இந்துஸ்தானி மொழியா எனச் சிலரும், உருது மொழியும் வேண்டும் எனச் சிலரும், இந்தி மொழியுடன் தேவநாகரி எண்களும் பயன்படுத்தப்பட வேண்டும் எனச் சிலரும் வாதாடினார்களேயொழிய இந்திய நாட்டின் பன்முகத் தன்மை குறித்து யாரும் சிந்தித்தாகத் தெரியவில்லை. இவர்கள் யாரிடமும் ஒரு தொலை நோக்கான பார்வை இருந்ததில்லை.

அன்றைய மதாராஸ் மாகாணத்திலிருந்து பங்கேற்ற உறுப்பினர்கள் கூட இதற்கு மாற்றாக ஒரு முன்னெடுப்பை மேற்கொள்ளவில்லை மாறாக இந்தியை ஏற்றுக் கொள்கின்ற எங்கள் தியாகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனப் பதிவு செய்துள்ளனர். காந்தியால் முன்வைக்கப் பட்ட இந்துஸ்தானி மொழிக்காக வாதாடியுள்ளனர். பெரும்பாலான விவாதங்களில் என்.ஜி.ரங்கா, கோபாலசாமி அய்யங்கார், டி.ஏ. இராமலிங்கம் செட்டியார், டாக்டர் பி. சுப்பராயன், முகம்மது இஸ்மாயில் (காயிதே மில்லத்) டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பாக டி. ஏ. இராமலிங்கம் செட்டியார் எடுத்து வைத்தக் கருத்துகள் கவனிக்கத் தக்கவை.

“இந்தி தேசிய மொழி என்றச் சொல்லைப் பயன்படுத்தாதீர்கள். ஆங்கிலம் அல்லது வேறு எந்த மொழியை விட இந்தி எந்த அளவிற்குத் தேசியம் ஆகும். எங்களுக்கு எங்கள் மொழிகள் இருக்கின்றன. அவைகளும் தேசிய மொழிகள் தான். தெற்கு ஏமாற்றம் அடைந்திருக்கிறது என்று சொல்வேன். தன்னுரிமை, விடுதலை போன்றவை பெற்று விட்டதாக உணர்ச்சி இருந்தாலும் அதில் மிகச் சிறிதளவே தெற்கில் உணரப்படுகிறது. நாட்டின் வடகோடியில் உள்ள தலைநகருக்கு வந்து இந்த நாட்டில் தாங்கள் புதியவர்களாக உணருவதால் நாங்கள் இந்த நாட்டைச் சார்ந்தவராகவும், இந்த நாடு எங்களுடையதாகவும், இங்கிருப்பவையெல்லாம் எங்களுக்குச் சொந்தமானவை என்றும் எம்மால் உணர முடியவில்லை. தெற்கில் உள்ள மக்கள் இந்த நாட்டிற்குரியவர்கள் என்றும் இந்த நாட்டில் ஒற்றுமை இருக்கிறது என்றும் அவர்களுக்கு உணர்த்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தெற்கிலுள்ளவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள் என எண்ணுகின்றேன். கசப்பான உணர்வுகளே மிதமாக இருக்கும். இது எதிலே போய் முடியும் என்பதை இப்பொழுது சொல்வது எளிதல்ல! அது மட்டுமல்ல; நிரந்தரமாகவே எங்களைக் கட்டிப்போடுகிறீர்கள்.”

மேலும் ஆட்சி மொழி குறித்த விவாதங்களில் பண்டித் லஷ்மி காந்த மைத்ரா அவர்களின் பேச்சும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவருடைய விவாதம் ஒரு மாநில மொழியை ஏன் தேசிய மொழியின் உயரத்துக்கு தூக்குகின்றீர்கள் என்றும் ஒரு மொழியைப் பேசுகின்ற அல்லது புரிந்து கொள்கின்றவர்களின் எண்ணிக்கையை வைத்து ஆட்சி மொழி ஆக்காதீர்கள். இது பிற்காலத்தில் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார். மொழி பற்றிய கேள்விகளுக்கு தீர்வு காணும் போது மக்களாட்சிக் கோட்பாடுகளைக் கவனிக்கக் கூடாது. ஒரு நாட்டில் அதிகமான நபர்களால் பேசப்பட்டால் அல்லது புரிந்து கொள்ளப் பட்டால் அந்த மொழிதான் பெரும்பான்மையான மக்களுடைய மொழி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் பேசுகையில்...

“மொழியைப் பொறுத்தவரையில், எந்த அளவிற்கு உணர்ச்சி கொந்தளிக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூற விரும்புகிறேன். கிழக்குப் பாகிஸ்தானில் சென்ற ஆண்டு என்ன நடந்தது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானை நிறுவியவர் பாகிஸ்தான் முழுமைக்கும் உருதுதான் ஆட்சி மொழி என்று ஆணையிட்டார். இந்த ஆணைக்குக் கிழக்கு பாகிஸ்தானின் எதிர்ச் செயல் என்ன தெரியுமா? கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த வங்காள முஸ்லீம்கள் இந்தத் திணிப்பைக் கண்டு கொதிப்படைந்து “நீங்கள் எங்களுடைய வங்காள மொழியை அழிக்கப் பார்க்கின்றீர்களா?” என்றார்கள். பாகிஸ்தான் என்ற இசுலாமிய நாட்டை உருவாக்குவதில் நாங்கள் முழுமனதுடன் ஒத்துழைத்தோம். எங்கள் மொழியை எந்த தைரியத்தில் தொடுகிறீர்கள் ! கிழக்குப் பாகிஸ்தான் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பெற்று அதற்கு எதிராகக் கண்ணீர்ப் புகை, தடியடி போன்றவை நிகழ்த்தப்பட்டன. இந்தப் போராட்டங்களுக்கு இந்துக்களின் ஐந்தாம் படையே பொறுப்பு என பாகிஸ்தானின் அதிகார வர்க்கம் பயமுறுத்தியது. முஸ்லீம் அறிஞர்களும் கல்வியாளர்களும் “ரவீந்திரநாத் தாகூரின் மொழியை அழிக்கின்றீர்கள்; நாங்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்றனர். டாக்காவில் நடந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட்டத்தில் ஜின்னா அவர்கள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய நாட்டில் தங்களுடைய மொழியாக அராபிய எழுத்தில் உள்ள உருதுவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய பொழுது “இல்லை; இல்லை” என்று குரல் எழுந்தது. கூச்சல் அதிகமானது. அமைதிப்படுத்த இயலவில்லை.அவர் தொடர்ந்து பேச இயலாமல் கராச்சிக்குத் திரும்ப வேண்டியதாயிற்று.”

(இவர் இந்திக்குப் பதில் சமஸ்கிருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று வாதிட்டவர் என்பதும் இவண் நோக்கத் தக்கது)

எனினும் வங்காள மொழியுணர்வு பின்னர் 1952ல் பெரும் மாணவர் போராட்டமாக உருவெடுத்தது. அது முதல் நீறு பூத்த நெருப்பாக இருந்த உணர்வு 1972 ஆம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தான் வங்காள தேசம் என்ற ஒரு தனி நாடாக விடுதலை பெற்றது என்பது வரலாறு.

வட இந்தியர்களின் வல்லாண்மைப் போக்கு

பெரும்பாலான வட இந்திய மக்களும் ஒன்றிய அரசில் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அடிக்கடி குறிப்பிடுகின்ற ஒன்று - பிற நாடுகள் தனக்கென ஒரு பொது மொழியைக் கொண்டிருக்கும் போது இந்தியா ஏன் தனக்கென ஒரு பொது மொழியை (இந்தி மொழியை) மேற்கொள்ளக் கூடாது? என்று துடிக்கின்றனர். இவ்வுணர்ச்சியை மேலோட்டமாகப் பார்க்கையில் இயல்பான. ஒன்றாகத் தோன்றினாலும் இது பகுத்தறிவுச் சிந்தனையடிப்படையில் எழுந்த ஒன்றாக இல்லை.

நம் நாட்டில் அரசியல் காரணங்களுக்காகவும் வட இந்திய வல்லாண்மையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் இந்தித் திணிப்பு தொடர்ந்து புகுத்தப் பட்டுவருகிறது. இதன் மறைமுகத் திட்டம் என்பது இந்தி பேசாத தென்மாநிலங்கள், வட மாநிலங்களைப் போல ஆங்கிலம் பயன் படுத்துவதை முற்றாகத் துறந்து விட்டால் இந்தியா முழுமைக்கும் இந்தியைப் புகுத்துவது அல்லது இந்தி என்ற பெயரில் சமற்கிருததைப் புகுத்துவது எளிதாகும் என்று கருதுகின்றனர். இதன் வெளிப்பாடுதான் செம்மொழிகளாக விளங்கும் வட்டார மொழிகளை மாற்றான் தாய் மனப்பான்மையில் அணுகுவதும், இந்தி மற்றும் சமசுகிருத மொழிகளுக்குக் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்வதும் ஆகும்.

பேச்சு வழக்கற்ற சமசுகிருத மொழியினை இந்தியாவின் ஆட்சி மொழியாகக் கொண்டு வரவேண்டும் என இந்து மகாசபை மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தனர். எனினும் அவர்கள் கனவு இன்று வரை நிறைவேறாமல் தென் மாநிலங்கள் தடுத்து வருகின்றன.

1960களில் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று மிகத் தீவிரமாகப் போராடிய சேத் கோவிந்ததாஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் 1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு மாணவர்கள் நடத்திய இந்தித் எதிர்ப்புப் போராட்டக் காலகட்டத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பியேனும் இந்தியைத் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளச் செய்வோம் என கொக்கரித்தார். பின்னாளில் அதுவும் நடந்தேறியது, நூற்றுக் கணக்கான இந்தி எதிர்ப்பாளர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்கள்.

வட இந்தியாவின் ஒரு வட்டார மொழியான இந்தி மொழி போதிய வளமையோ, சொல்லாட்சியோ பெற்றிராத காரணத்தால் அரசின் அலுவல் மொழியாக ஆங்கில மொழி 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று சொல்லப்பட்டு பின்பு அதன் தேவைக்கேற்ப திருத்துவதற்கு வழிகோலியது. அது கூட ஆட்சி மொழி விவாதிக்கப் பட்டபோது ஆங்கிலம் - இந்தி ஆகியவற்றிற்கு ஆதரவாக 77-77 வாக்குகள் என்ற சம நிலை உண்டானது. பிறகு குழுவின் தலைவர் வாக்கு இந்தி மொழிக்கு ஆதரவாக அளிக்கப் பட்டுப் பெரும்பான்மையென ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்தி மொழியால் ஆங்கிலத்தின் இடத்தைப் பிடிக்க இயலவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்ட அலுவல் மொழி விதிகளைச் சுட்டிக் காட்டி இந்தி பேசாத மாநில அரசின் அலுவல்கள், கல்வி, வணிகம், நிருவாகம், செய்தித் தொடர்பு, வானொலி, தொலைக்காட்சி, தொடர்வண்டி, வங்கிகள் மற்றும் அஞ்சல்துறை என அனைத்திலும் இந்தியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசின் போக்கு பகுத்தறிவின் பாற்பட்டதல்ல !

இன்று அந்த ஆங்கிலத்திற்குப் பதில் இந்தியாவின் ஒரு வட்டார மொழியான இந்தியே பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசின் சார்பில் பெரும் அழுத்தம் தரப்படுகிறது. அதற்காக இந்திய ஒன்றிய அரசு கோடிக்கணக்கான மக்கள் வரிப் பணத்தையும் செலவிடுகிறது. இந்த மொழி மாற்றச் சிந்தனைக்கு அவர்கள் விடுக்கும் காரணங்கள்:

(1) ஆங்கிலம் ஓர் அயல் மொழி

(2) இந்தியாவின் நிருவாகப் பயன்பாட்டுக்கு ஒரு தேசிய மொழி இன்றியமையாதது

(3) கிராம மக்களையும் அறிவாற்றல் மிக்கவர்களையும் அம்மொழி பிரிக்கிறது

(4) இந்திய அரசமைப்புச் சாசனத்தின் 343 வது பிரிவு இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக இந்தியை முதன்மைப் படுத்துகிறது.

இதில் நமது முதல் கேள்வி ஆங்கிலம் ஓர் அயல் மொழியா? மொழி என்பது கருத்தை வெளியிடும் ஒரு தொடர்புக் கருவி; மொழிக்கு இனம், மதம், பாலினம் என்ற தன்மை ஒன்று கிடையாது. இந்துக்கள் பல மொழிகள் பேசுகின்றனர்; ஒரே நாட்டைச் சார்ந்த மக்கள் பல மொழிகளைப் பேசுவது; பல நாடுகளைச் சார்ந்த மக்கள் ஒரே மொழி பேசுவது என்பவையெல்லாம் இன்று நாம் கண்கூடாகக் காணும் உண்மையாகும். எனவே ஒரு நாட்டின் Caren எல்லைக்குள் தோன்றியதால் அம்மொழியின் பிறப்பிடம் குறிப்பது ஒரு அளவையாயின் சமசுகிருதம், இந்தி, சிந்தி உட்பட வட இந்தியாவில் பேசப்படும் பெரும்பாலான மொழிகள் அனைத்தும் தென்னிந்திய மக்கள், வடகிழக்கு மக்கள் அனைவருக்கும் அயல் மொழிகளே. ஒரு நாட்டின் மொழித்தூய்மை அல்லது பிறப்பிட மூலம்தான் அளவு கோல் எனில், டாக்டர் அம்பேத்கர் சுட்டிக் காட்டியிருப்பது போல, தமிழ் மொழி ஒன்றுதான் இந்தியாவின் ஒரே மொழியாக எண்ணத் தக்கது என்பதை ஒப்புக் கொள்ள முன்வருவார்களா?

மொழிக் கொள்கையில் மேலை நாடுகளின் பார்வை

செருமனி, பிரான்சு, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின், சீனம் போன்ற நாடு அல்ல இந்தியா. இந்தியா என்பது ஐரோப்பியக் கண்டத்தைப் போன்றது. சற்றொப்ப 8 கோடி மக்கள் தொகை கொண்ட அய்ரோப்பிய நாடுகளில் 287 மொழிகள் பேசப் பட்டாலும் அதில் ஆங்கிலம், ஜெர்மனி, இத்தாலி உட்பட 24 மொழிகள் அய்ரோப்பிய ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன. அங்கு ஒரு பொது மொழி கிடையாது. கிரேக்கம், ரஷ்யா நீங்கலாக எல்லா மொழிகளுக்கும் அங்கு பொது எழுத்து வடிவம் இருந்த போதிலும், அய்ரோப்பியக் கண்டம் முழுமைக்கும் ஒரு பொதுவான நாணயத்தை உருவாக்க முயன்று வெற்றி கண்டாலும், ஒரு பொது மொழி ஏற்படுத்த முயன்று அது தோல்வியைத் தழுவியது என்பது வரலாறு.

தென் அமெரிக்கக் கண்டத்திலுள்ள பொலிவியா என்ற நாட்டில் பெரும்பாலான மக்கள் ஸ்பானிஷ் மொழியைப் பேசினாலும் அங்கு 37 மொழிகள் அலுவல் மொழிகள் என அந்நாட்டின் அரசமைப்புச் சாசனம் வகுத்துள்ளது. காரணம் பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டில் பொது மொழி சாத்தியமில்லை என்பதை இது உணர்த்துகிறது.

இந்திய அரசமைப்பு மற்றும் நிருவாக நடைமுறை மொழி

இந்திய நாடு பன்முகத் தன்மை கொண்ட மொழி வழி பண்பாடுகளயும் நாகரிகக் கூறுகளையும் கொண்டிருப்பதால் இந்திய நாட்டுக்கு அதன் அரசமைப்புச் சட்டப்படி தேசிய மொழி என்ற ஒன்று கிடையாது. எனினும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 343 ஆம் விதி இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக தேவநாகரி எழுத்துருவில் எழுதப் படும் இந்தியும், அதனுடன் ஆங்கிலமும் பயன்படுத்தப் படுவதை உறுதி செய்கிறது.

இவை தவிர இந்திய நாட்டின் வட்டார மொழிகளாக அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணை 8 இல் 14 மொழிகள் வரிசைப் படுத்தப் பட்டிருந்தன. அதன் பின் இந்திய அரசமைப்புச் சட்டம் பல முறை திருத்தப் பட்டு தற்போது இந்தப் பட்டியலில் அஸ்ஸாமி, வங்காளம், போடோ, டோக்கிரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காசுமீர், கோங்கணி, மைதிலி,மலையாளம், மணிப்பூரி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமற்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியல் விரிந்து கொண்டு போகின்றது என்பதை இந்தி வெறியர்கள் சிந்திக்க மறுக்கின்றனர். மேலும் இந்த அட்டவணையில் ஆங்கிலத்துக்கு இடமளிக்கவில்லை.

நாட்டு மக்களிடையே ஒரு மொழி உருவாக்கும் ஏற்பிசைவு, எளிமை, நடைமுறைப் பயன்பாடு ஆகியவையே அம்மொழியின் செல்வாக்கை நிலை நிறுத்தும். இன்று உலக மக்கள் தொகையில் ஆங்கிலம் பேசுவோர் அதிகம் உள்ள நாடு என்ற பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பது இந்தியாவாகும். இந்திய மக்கள் தொகை எண்ணிக்கையில் 25 விழுக்காடு ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் என்பதை உலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே நிலவியல், தோற்றம், பயன்பாடு என எவ்விதமான காரணிகள் கொண்டு அளந்தாலும் ஆங்கிலம் இந்திய வட்டார மொழிகளுக்கு இணையாகவே உள்ளது.

1951 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில் 750 வட்டார மொழிகள் இருப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது. இவற்றில் சில மொழிகள் மிகச்சிறிய எண்ணிக்கை மக்களால் பேசப்படும் மொழிகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக அவ்வறிக்கையில் 555 இந்திய மக்களே சமசுகிருதம் பேசுபவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் தொகைப் பெருக்கத்துக்கொப்ப சில ஆயிரங்களாகப் பெருகி உள்ளது. தென்னிந்தியாவிலும் வட இந்தியப் பெரு நகரங்களிலும் பெரும்பாலான மக்கள் ஆங்கிலத்தப் புரிந்து கொள்ளும் தகுதி படைத்தவர்களாக உள்ளனர் என்பதையும் 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைச் சுட்டிக் காட்டியது. எனினும் அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தப் பட்டபோது அதில் அஸ்ஸாமி, பெங்காலி, இந்தி, சமற்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது உட்பட 14 மொழிகள் மட்டுமே அட்டவணை 8-இல் இடம் பெற்றன. பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இன்று பல இலட்சக்கணக்கில் உள்ளனர். இன்று 8வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன. எனினும் ஆங்கிலம் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியைப் பேசுபவர்களுக்கு மீதியுள்ள 21 மொழிகளும் அயல் மொழிகளே. எனவே ஆங்கிலம் ஓர் அயல் மொழி என்ற வாதம் ஏற்புடையது அல்ல.

மேலும் ஆங்கிலம் இயல்பாகவே இந்திய நாட்டின் தவிர்க்க இயலாத ஒரு மொழியாகி விட்டது. ஆங்கிலத்தின் மூலமே நாம் அரசியல் உணர்வு, விடுதலை உணர்வு பெற்றோம். செய்திதாள்கள், ஒன்றிய, மாநில சட்ட அவைகள், நாடு முழுவதும் நடைபெற்ற சொற்பொழிவுகள், எழுத்துகள் என அனைத்திலும் மகாத்மா காந்தியும் மற்ற தலைவர்களும் ஆங்கிலத்தையே கையாண்டனர். இந்திய நாட்டின் விடுதலைக்கு ஆங்கிலம் வழியாகத்தான் போரிட்டனர். இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆங்கிலமே துணை நிற்கிறது. அம்மொழியின் சொல் நுட்பமானது, தொழில், மருத்துவம், சட்டம், இலக்கியம், பொருளியல், வணிகம் ஆகியவற்றிற்கு ஏற்றதாக உள்ளது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் அதுவே இணைப்பு மொழியாகவும் வணிக மொழியாகவும் பயன் படுத்தப் பெறுகிறது.

இந்தியாவில் சற்றேறக்குறைய 250 ஆண்டுகளாக பணித்துறை அலுவலகங்கள், சட்டம், மருத்துவம், உயர் கல்வி ஆகியவற்றில் அதுவே பயிற்று மொழியாகவும் இந்திய ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கிடையே ஓர் இணைப்பு மொழியாகவும் விளங்கி வருகிறது.

ஆங்கிலத்தை நீக்கி விடுவதால் நிருவாகம் செம்மையுறுமா? உண்மையில் ஆங்கில மொழியை ஒரு கருவியாகக் கொண்டே இந்திய நாட்டில் ஒரு நல்ல நிருவாக அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்றபோது ஒரு தலை சிறந்த நிருவாக அமைப்பை இந்தியா பெற்றிருந்தது. ஆனால் அது இன்று சீர்கேடடைந்து இந்தியப் பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனி மனிதர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அந்த தனியார் நிறுவனங்கள் மேலாண்மையில் இந்தி மொழியைப் பயன் படுத்துகின்றனரா அல்லது ஆங்கிலத்தைப் பயன் படுத்துகின்றனரா? என்பதுவும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட நாட்டின் முதன்மைப் பணி யாதெனின் நடைமுறையில் உள்ள தனிநல முரண்பாடுகளை அகற்றி இணங்கச் செய்வதும், எதிர்காலச் சிக்கலைப் போக்குவதற்கு வழி செய்வதும் ஆகும். அதைப் போல ஜனநாயக மரபு என்பது பெரும்பான்மையோர் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதல்ல ! சிறுபான்மையோரும் அச்சமின்றி அரசியல் களத்தில் பங்கேற்கவும், அவர்களின் உரிமைகளும் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் இன்றைய அரசியல் மேற்சொன்ன அனைத்திற்கும் முரணாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் எதிர்கால இந்தியாவின் ஒற்றுமை என்பது கேள்விகுறியாகி விடும்.

அரசமைப்புச் சட்டம் உருவான போது குறிப்பாகச் சட்டம், நீதித்துறை, கல்வி முறை என முப்பிரிவுகளாக பிரித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஆட்சி மொழி ஒன்றிய அரசு, மாநில அரசுப் பணித்துறை, தொடர்பு மொழி குறித்தும் வரையரை செய்துள்ளது, குறிப்பாக மாநிலக் கல்விக் கொள்கை, தாய்மொழி, பயிற்று மொழி குறித்தும் அரசமைப்பின் திருத்தங்கள் தெளிவு படுத்தியுள்ளன.

இந்திய அரசமைப்புச் சாசனத்தின் 343 வது பிரிவு ஒன்றிய அரசின் அலுவல் மொழிகள் குறித்தும், 345 வது பிரிவு மாநில வட்டார மொழிகள் குறித்தும் 346 வது பிரிவு ஒன்றிய மாநில அரசுகளின் தொடர்பு மொழி குறித்தும் விளக்குகின்றன. அரசியல் சாசனப் பிரிவு 348 உச்சநீதி மன்ற, உயர் நீதி மன்ற வழக்காடு மன்ற மொழியாக ஆங்கிலம் மட்டுமே திகழும் எனவும் வகைப்படுத்தியுள்ளது. இன்று வரை ஆங்கிலம் மட்டுமே நீதி மன்ற மொழியாக உள்ளது. இந்தி உட்பட வேறு எந்த வட்டார மொழிகளும் ஆங்கிலத்தின் இடத்தை எட்டவில்லை. மேலும் கல்வி நிலையங்கள் மொழி தொடர்பாக எந்த விதமான ஆணையும் இந்திய அரசமைப்புச் சாசனத்தில் இடம் பெறவில்லை. 1956 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியில் தாய்மொழி மூலம் பாடம் கற்பிக்க அந்தந்த மாநில அரசுகள் வகைசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வந்து 350A பிரிவு சேர்க்கப்பட்டது.

ஆங்கில மொழி இந்திய மக்கள் மீது கட்டாயமாகத் திணிக்கப் பட்ட ஒன்று அல்ல. விடுதலைக்கு முன்பு இந்தியாவில் ஆங்கில அறிந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 2% மட்டுமே, அனால் இன்று அது 25% அளவுக்கு உயர்ந்துள்ளது. அறிவியல், கணிதம், மருத்துவம், அணு ஆய்வு, மின்னியல், எண்ணியல் துறைகளில் ஆங்கிலத்தின் பரந்து பட்ட சொல்லாட்சியும் பயன் பாடும் உலக மக்களை அதன் பால் ஈர்த்துள்ளன. ஒரு மொழிக் கொள்கையைப் பின்பற்றிய ஜப்பான், சீனம், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கூடத் தாய்மொழிக்கு அடுத்து ஆங்கில மொழி கற்பதில் பேரார்வம் காட்டுகின்றன.

நாம் ஆங்கில மொழியை இந்திய மொழிகளில் ஒன்று என்று ஒப்புக் கொண்டு விட்டால் ஆங்கிலத்தின் மீதுள்ள வெறுப்புணர்ச்சி மறைந்து விடும். ஆனால் ஆளும் ஒன்றிய வர்க்கம் அந்த உணர்வைப் பெற மறுக்கிறது என்பதோடல்லாமல், ஆங்கிலத்தை அகற்றி விட்டால் தென் மாநிலங்களில் எளிதாக இந்தியைப் புகுத்தி விடலாம் என்ற கனவிலேயே உள்ளனர்.

மொழிவாரி மாநிலங்கள்

இந்திய அரசமைப்புச் சட்டம் வரையறுக்கப் பட்டபோது நிலவியல் அடிப்படையில் இந்திய ஒன்றியத்தில் மூன்று வகையான மாகாணப் பிரிவுகள் மட்டுமே இருந்த நிலையில் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு, கலாச்சார மற்றும் மொழி அடையாளங்களின் அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பு செய்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

1956 நவம்பர் 1-ல், ஃபசல் அலி கமிஷன் பரிந்துரையின்படி, 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களாக இந்தியா அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்டது. இது பொட்டி சிறீராமலுவின் ஈகத்தால் உருவான ஆந்திர மாநிலப் பிரிவினைக்குப் பின் (1953) நடைமுறைக்கு வந்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு, மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது, ஆனால் தொடக்கத்தில் காங்கிரஸ் தலைமை தயங்கியது. ஜவகர்லால் நேரு இதற்கு உடன்படவில்லை.

1956 மொழிவாரி மறுசீரமைப்பு எல்லை மாற்றியமைக்கப் பட்ட பின்பு 14 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் அமைந்தன. இதை அரசமைப்புச் சட்ட அட்டவணை 1 பட்டியலிடுகிறது.

ஆனால் இன்று அந்த அட்டவணையில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. இந்திய மாநிலங்களின் எண்ணிக்கைப் பெருக்கமும், எட்டாவது அட்டவணை மொழிகள் நீட்சியும் உணர்த்தும் செய்தி என்ன என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இன்றும் கூட போடோ மொழி பேசும் மக்கள் தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடுகின்றனர். சீக்கியர்கள் பஞ்சாப் மாநிலக் கோரிக்கையை வைத்த போது இந்தி பேசும் இந்து மக்கள் அரியானா என்ற மாநிலத்தைக் கோரியதும் இந்த அடிப்படைதான். அதே போல சத்தீஸ்கர் மொழி பேசும் மக்கள் தனக்கென்று தனி மாநில உரிமை வேண்டி பீகாரிலிருந்து பிரிந்தவர் ஆவர். இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை மக்கள் பேசும் மொழி அடிப்படையில் இன்னும் பிரிந்து கொண்டே போகும். காரணம் அதிகமான மக்கள் பேசும் மொழி இந்தி என்று கூறி ஆரியக் கோட்பாடுகளை இந்திய மாநிலங்கள் எங்கும் பரப்ப நினைக்கும் சிந்தனையின் விளைவாக இந்தி பேசாத பகுதியில் உள்ள மக்கள் குறிப்பாகத் தென் மாநில மக்கள், வடகிழக்கு மாநில மக்கள் தொடர்ந்து ஓர் அச்ச நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகலாந்து மாநிலத்திற்குச் சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. அதாவது நாகலாந்து மக்கள் தங்கள் மொழியை தேவநாகரி வடிவில் எழுத வேண்டும் என்று பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. அது எங்கள் கலாச்சாரத்தின் மீதி திணிக்கப் படும் ஒன்று என மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். (The Hindu February 22, 2026)

முடிவுரை

ஆட்சி மொழி விவாதத்தில் பங்கேற்ற முகமது இசுமாயில் (காயிதே மில்லத்) அவர்கள்...

“பழமையிலும் மிகவும் பழமையான காலத்திற்கும் செல்ல வேண்டும் என்று சொல்வதைப் பொருத்த வரையில் நாம் கடந்த காலத்திற்குச் செல்ல வேண்டுமானால் அதிலே நியாயம் இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்புகிறேன். நாம் எதற்காகப் பின்னோக்கிச் செல்ல வேண்டும்? ஏனென்றால் நம் நண்பர்களில் சிலர் பழமையான மொழி (சமஸ்கிருதம்) வேண்டும் என்கிறார்கள்- அது இந்திய மொழியாக மட்டுமின்றி: நம் நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்; அது மத்திய ஆட்சி மொழியாகவும் இருக்க வேண்டும் என வற்புறுத்துகிறார்கள். அப்படித்தான் நடக்க வேண்டுமென்றால் நான் துணிவுடன் சொல்வேன் திராவிட மொழிகள்தான் இந்த நாட்டில் பேசப்பட்ட மொழிகளாகும். தமிழ் மொழியில் உயர்ந்த வளமான இலக்கியங்கள், தொன்மை, வரலாறு புதைந்து கிடக்கிறது. அது தான் மிகவும் தொன்மையான மொழி; இன்னும் சொல்லப் போனால் அது தான் என் தாய்மொழி. அந்த மொழிக்காக நான் பெருமைப்படுகிறேன். கடந்த காலத்திற்குச் சென்றால் இந்த மொழி தான் ஆட்சி மொழியாக ஆக முடியும். ஆனால் அதைப் பேசக்கூடியவர்கள் அந்த உரிமையை முன்வைக்கவில்லை. ஒரு பரந்த பார்வையில் நாம் வட இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். கடந்த காலம் என்ற சங்கிலியால் பிணைக்கப் பட்டால் அந்த சங்கிலி அசைவற்றதாகவும், விறைப்பானதாகவும் இருக்கக் கூடாது. அது வளையும் தன்மையுடன் இருக்க வேண்டும். நாம் வேர்களாக மட்டும் இருக்கக் கூடாது; நாம் கிளைகளாகவும், எப்போதும் புதுமையோடிருக்கும் இலைகளாகவும், பூக்களாகவும், பழங்களாகவும் இருக்க வேண்டும். அது தான் வளர்ச்சி. எனவே நாம் தற்கால நிலைமைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.”

ஆங்கிலேயர்களிடமிருந்து அரசியல் விடுதலை பெற்றாலும் இந்தியக் குடிமக்கள் பரந்து பட்ட அளவில் விடுதலைக் காற்றை இன்னும் சுவாசிக்கவில்லை என்பதை இன்றைய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலை உணர்த்துகின்றது. ஒரு நாட்டின் ஒற்றுமை, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, சம ஈவு, சம உரிமை என்பவைகள் இந்தி ஆதிக்கவாதிகளுக்கு முதன்மை அல்ல. மாறாக இந்தி பேசாத மக்கள் மீது ஆரியக் கலாச்சாரத்தை, மொழியை, பண்பாட்டுக் கூறுகளைத் திணித்து அவர்களை நிரந்த அடிமைகளாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. வரலாற்றைப் படிக்க மறுக்கிறார்கள்; படிப்பினைகளை ஏற்க மறுக்கிறார்கள்.

வரலாறு நமக்குச் சில படிப்பினைகளை விட்டுச் சென்றிருக்கிறது. தடைகள் உடையும்; தளங்கள் மாறும்.

(Image courtesy: The Indian Express)

- குமணராசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.