பாசிசம் - நாசிசம் - பார்ப்பனியம்

முதல் உலகப் போர் (1914 -1918) மற்றும் இரண்டாம் உலகப் போர் (1939 -1945) ஆகியவற்றுக்கு இடையே ஐரோப்பாக் கண்டத்தில் எழுச்சி பெற்ற இரண்டு சர்வாதிகார வடிவங்கள் உலகையே திகைப்புற வைத்தன. அவை நிகழ்த்திய கொடுமைகள் இன்றளவும் பேசப்படுகின்றன. அவை நாசிசமும் பாசிசமும் ஆகும்.

இத்தாலியில் 1922 அளவில் எழுச்சி பெற்ற அரசியல் அதிகாரவெறி பிடித்த தேசிய பாசிசுடுகளின் தலைவர் பெனிடோ முசோலினி 1922 முதல் 1943 வரை இத்தாலியின் பிரதமராகவும், அதன் பிறகு டியூஸ் எனப்படும் தலைவராகவும் விளங்கிய சர்வாதிகாரி. முதல் உலகப்போரின் இறுதியில் இத்தாலியின் அதிதீவிர தேசியவாதம் பாசிசமாக எழுந்தது. வன்முறை மூலம் தொழிற்சங்கங்கள், இடதுசாரிகள், சோசியலிசுடுகள், கத்தோலிக்க நாடாளுமன்றவாதிகள் என அரசோடு முரண்படும் யாரையும், எதனையும் விட்டு வைக்காமல் அழித்தது. இத்தாலியின் சர்வாதிகாரியாகவும் பாசிசத்தின் முதன்மை நிறுவனராகவும் விளங்கிய பெனிடோ முசோலினி இத்தாலிய தேசியவாதத்தின் கொடூர வெளிப்பாடு. 1922ல் இத்தாலிய பிரதமராக ஆன முசோலினி, இத்தாலி நேச நாடுகளிடம் சரணடைந்த பிறகு, 1945 -இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதேபோன்று ஐரோப்பாவில் முதல் உலகப் போருக்குப் பிறகு எழுச்சி பெற்ற மற்றொரு பாசிச வடிவம் நாசிசம் ஆகும். தேசியம் என்ற பெயரில் எழுச்சி பெற்று, தன்னோடு முரண்படுகிற எவரையும் விட்டு வைக்காத பாசிசத்துடன் ஜெர்மானிய ஆரிய இனவெறியும் சேர்ந்து நாசிசம் என்ற வடிவம் பெற்றது. ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர், நாசி என்ற தேசியவாத கட்சியின் தலைவர். அவர் ஜெர்மனியின் பிரதமரானார். 1934 முதல் 1945 வரை ஜெர்மனியின் சர்வாதிகாரத் தலைவராக விளங்கினார். 1939இல் போலந்து மீது படை எடுத்து இரண்டாம் உலகப்போரைத் தொடங்கி வைத்தார். ஹிட்லரின் நாசிச கொள்கையாளர்கள் 6 மில்லியன் யூதர்களைப் படுகொலை செய்தார்கள். 1945 -இல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

ஹிட்லரின் நாசிசத்தையும், முசோலினியின் பாசிசத்தையும்தான் மிகப்பெரும் சர்வாதிகாரங்களாகவும், அதிகார வெறி, இனவெறிக் கொடூரங்களுக்கு சான்றுகளாகவும் உலகம் வியந்து பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் துணைக்கண்டத்தில் பார்ப்பனியம் இழைத்து வரும் விவரிக்க முடியாத கொடூரங்களைப் பற்றி அறியாதவர்கள்.

*            பாசிச பார்ப்பனியம் என்பது முசோலினியின், ஹிட்லரின் பாசிச நாசிசத்தை விடக் கொடுமையானது.

*            தேசியம், தேச நலன், தேசப் பெருமிதம், பாரம்பரியம் என்ற பெயரில் ஓர் அதிகார வர்க்கத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆதிக்கவாத கருத்தியலே பாசிசம்!

*            தனிமனித உரிமை, மக்கள் உரிமையை நாட்டு நலன் என்ற பெயரில் நசுக்குவது; முதலாளித்துவத்தை உயர்த்திப் பிடிப்பது; அரசின் மேன்மைக்கு குடிமக்கள் எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கற்பிப்பது; ஓர் அதிகார வர்க்கத்திடம் ஆட்சி அதிகாரங்களைக் குவித்துக் கொள்வது, பெருமுதலாளிய நலனுக்குப் பாதுகாப்பாக தொழிலாளர்களை, எளியோரை ஒடுக்குவது, உரிமைகளைப் பறிப்பது, அரசோடு முரண்படுபவர்களை இல்லாதொழிப்பது; இதுவே பாசிசம்...

*            பாசிசத்துடன் கூடுதல் கூறாக இனவெறியைச் சேர்த்தது நாசிசம்! ஆரிய இனமே உயர்ந்தது; உலகை ஆளத் தகுதியானது; ஆரிய மேன்மை நிறுவப்பட வேண்டும்; மற்ற இனங்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற ஹிட்லரின் ஆரிய இனவெறிக் கொள்கையே நாசிசம்.

*            நாசிசத்தின், பாசிசத்தின் சர்வாதிகாரத்தையும் ஒடுக்குமுறையையும் அதன் அதிகார இனவெறி தத்துவத்தையும்விட கூடுதல் கொடுமையானது பார்ப்பனியம்...

*            வேத சாத்திரங்களின் பெயரால், கடவுளின் பெயரால், புனித சாத்திரங்களின் பெயரால், மக்கள் அடிமைத்தனத்தை ஏற்கச் செய்யும் வஞ்சகம்...

*            வேதம் காட்டிய வழி, சனாதன சட்டம் வகுத்த வாழ்வுமுறை, வர்ண -சாதி சமூகக் கட்டமைப்பு குலையாமல் காக்கும் தந்திரம்;

சாதிய சனாதன அடுக்கமைவு படிநிலையின் நிரந்தர மேலடுக்காக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள மற்றவர்களை இந்துவாக உணரச் செய்யும் தந்திரம்;

சனாதனத்தை கட்டிக் காக்கும் பொறுப்பை அடுத்தடுத்த படிநிலைச் சாதிகளிடம் வழங்கியுள்ள சமூகக் கட்டமைப்பு ஏற்பாடு;

 ஒவ்வொருவருடைய தகுதி, வாழ்விடம், உண்ண அனுமதிக்கப்பட்ட உணவு, அணிய வேண்டிய உடை, செய்ய வேண்டிய தொழில், சமூகத்தில் வகிக்கும் பாத்திரம், அனுபவிக்கும் உரிமைகள், மறுக்கப்பட்ட உரிமைகள், திணிக்கப்பட்ட கடமைகள் என அனைத்தையும் பிறப்பின் அடிப்படையில் வகுத்து, சாத்திரங்களின் அடிப்படையில் சான்று காட்டி, புனிதம் என்று போதித்து, கடவுளின் பெயரால் அச்சுறுத்தி, காலங்காலமாக நடைமுறைப்படுத்தி வரும் நயவஞ்சகத் தந்திரத்துக்குப் பார்ப்பனியம் என்று பெயர்.

பாசிசத்தில் எளியவன் ஒருவன் அதிகார வர்க்கத்திற்கு மாற முடியும்! நாசிசம் தன் இனத்தவனைக் கொடுமைபடுத்தவில்லை; மாற்று இனத்தையே அழித்தது. ஆனால், பார்ப்பனியம் மாற்று இனம் -தன் இனம் என்று பார்ப்பதில்லை! பார்ப்பனர் தவிர வேறு எந்த வருணத்தாரையும் தனக்கு இணையாக வாழவிட்டதில்லை! எந்தக் கீழடுக்கு சாதியையும் மேன்மையுற அனுமதித்ததில்லை! வருண -சாதி அடுக்கில் உள்ள கீழ்நிலை வருணங்களையும் சாதிகளையும் தனக்குச் சேவை செய்ய வைப்பதில் பார்ப்பனியம் இன்றளவும் வெற்றி கண்டிருக்கிறது.

பார்ப்பனியம் தன் ஆரிய இனத்துக்குள்ளும் பார்ப்பனருக்குக் கீழ் உள்ள மூன்று வருணங்களையும், வருணங்களுக்குள் இருக்கும் சாதிகளையும் அடிமைப்படுத்தி சேவை செய்ய வைத்திருக்கிறது. பிறப்பிலேயே ஒருவனை ஆண்டான் என்றும், அடிமை என்றும் ஒரு காலத்திலும் மாற்ற முடியாதபடி வரையறுக்கிறது. இந்த வரையறுப்பு நிலையானது; மாறாதது; தெய்வீகமானது; புனிதத் தன்மையுடையது என்று கற்பிக்கிறது.

கடவுள், வேதம், சாத்திரத்தின் பெயரால் கொடுமைகளை ஆண்டாண்டுக் காலமாய் நிலைநிறுத்தி வருகிற சமூக ஒடுக்குமுறைத் தத்துவம்தான் பார்ப்பனியம்!

ஐரோப்பாவில் நாசிசமும் பாசிசமும் 25 ஆண்டுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்துப் பாசிச வடிவமான பார்ப்பனியம் 2000 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆரியப் பார்ப்பனியம் இன்று இந்தியத் தேசியமாக வடிவம் கொண்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பல தேசிய இன மக்களையும், இந்திய தேசப்பற்று என்ற பெயரில் மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுவழி வளர்ந்து தனித்தனி இன அடையாளங்களைக் கொண்டுள்ள 30-க்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் அடையாளங்களையும், மொழிகளையும் ஒழித்துக் கட்டுகிற வெறியோடு பார்ப்பனியம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே பண்பாடு என்று பேசுகிறது.

 இதற்காக, இனங்களின் வரலாறுகளை முற்றுமுதலாய்த் தலைகீழாகத் திரித்து, ஆரிய -பார்ப்பனிய வரலாறையே இந்திய வரலாறாக நிலை நிறுத்துகிறது.

 அனைத்துத் தேசிய இனங்களின் மொழிகளையும் அழித்துவிட்டு, சமசுக்கிருத - இந்தி மொழியை மட்டுமே அதிகார மொழியாக, "தேசிய மொழி"யாக நிலைப்படுத்தும் வேலையைச் செய்கிறது.

பார்ப்பனியத்தின் பாதுகாவலர்களான அம்பானி, அதானி உள்ளிட்ட பார்ப்பனச் சார்பாளர்களின் பொருளாதாரப் பேரரசுகளை நிறுவத் துணை நிற்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தின் அனைத்து வளங்களையும், இயற்கை வளங்களையும், தொழில்களையும், வணிகத்தையும், உழவையும், பார்ப்பனியப் பாதுகாவலர்களான பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கிறது! தேசிய இனங்களின் எளிய மக்களை, நேரடி வரி, சரக்கு -சேவை வரி, சுங்க வரி, நீருக்கும்,சோறுக்கும் மருந்துக்கும் வரி, வாழ்வியல் கூறுகளின் ஒவ்வொன்றின் மீதும் வரி என்று சாறு பிழிந்து, அவர்களை நிரந்தர ஏழ்மையில் நிறுத்துகிறது.

தேசிய இனத் தாயகங்களின் இருப்பையே மறுக்கிறது; வரலாற்றுவழி தேசிய இனத் தாயகங்களை சிதைக்கிறது; மாநில அரசுகளின் அனைத்து உரிமைகளையும் அதிகாரங்களையும் பறிக்கிறது; ஒன்றிய அரசு என்ற பெயரில் முற்றதிகாரத் திமிரோடு இயங்குகிறது.

ஆரியப் பார்ப்பனியத்தின் மேலாதிக்கத்தை நிரந்தரப்படுத்தும் நோக்கத்தோடு 1925 -இல் உருவாக்கப்பட்ட அமைப்புதான் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் என்கிற ஆர்.எசு.எசு. ஹிட்லர் மற்றும் முசோலினியை ஆதரித்தவர்கள் இவர்கள். ஹிட்லரின் "சுவஸ்திக்" கொடியையே தமது கொடியாக ஏற்ற அந்த ஆரிய மதவெறி பார்ப்பன அமைப்பு, இன்று தன் நூற்றாண்டுக் கனவான இந்துராஷ்டிரத்தைப் படைக்கும் இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 1931 -இல், ஆர். எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான பி.எஸ். மூஞ்சே, இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டுக்குச் சென்றுவிட்டு, இத்தாலி சென்று முசோலினியைச் சந்தித்து 3 மணி நேரம் உரையாடியவர். 1934 -இல் "பாசிசமும் இத்தாலியும்" என்ற கருத்தின் அடிப்படையில் மாநாடு போட்டவர்கள் இவர்கள். பார்ப்பன மேலாண்மையை நிறுவும் அரசியல் திட்டமான இந்துத்துவம் என்னும் வன்கொடுமைத் தத்துவத்தை இந்தியாவில் உள்ள அனைத்து இந்து மக்களுக்கான தத்துவமாகக் காட்டி, இந்துத்துவ இந்தியாவைப் படைக்கக் காய்களை நகர்த்தி வருகிறது. ஆர்.எசு.எசு. இந்துராஷ்டிரத்தைப் படைக்க, இவர்களுடைய குருஜி கோல்வால்கர் கூறியதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறது. "இனம், பண்பாடு ஆகியவற்றின் தூய்மையைக் காப்பாற்றுவதற்காக ஜெர்மனி யூதர்களை அழித்தொழித்தது போல", இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என்ற சிறுபான்மை மதத்தவர்களை அழித்தொழிப்பதை ஆர்.எசு.எசு நியாயப்படுத்துகிறது. இசுலாமிய, கிறித்தவர்கள் "இந்து" என்ற தேசிய இனத்தோடு ஒன்றிணைந்து, அதன் பண்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது அனுமதிக்கும் வரை இங்கே வாழ்ந்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அறிவிக்கிறது. "தாய் மதத்திற்குத் திரும்பு" என்று எச்சரிக்கை செய்கிறது.

ஆரியப் பார்ப்பனியத்தின் இந்தக் குரல் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கிறது. ஆரியப் பார்ப்பனியத்தின் ஆர்.எசு.எசு-இன் முகவர்கள் "தாய் மதம்" திரும்பக் கோருகிறார்கள். 1925 -இல் ஆர்.எசு.எசு எந்த இலக்குக்காக நிறுவப்பட்டதோ, அந்த இலக்கான இந்துராஷ்டிரத்தை, அதன் நூறாவது ஆண்டாகிய 2025க்குள், அல்லது ஆர்.எசு.எசு.-இன் தலைவர் மோகன் பகவத் கூறுவதைப் போல, இன்னும் 15 ஆண்டுகள் கூடுதலாக எடுத்துக் கொண்டு, நிறுவ இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.

இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவினரையும் தன்னுடைய திட்டத்தை ஏற்கச் செய்ய அனைத்துத் தளங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் கல்வி -ஆராய்ச்சி -மற்றும் பயிற்சிக்கான தேசியக் கவுன்சில் (NCERT), இந்திய வரலாற்று மன்றம் (ICHR), இந்திய பல்கலைக்கழக நல்கைக் குழு (UGC) ஆகியவை ஆர் எசு எசு -இன் தலைமையின் கீழ் நடக்கின்றன.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்துக் கொண்டிருக்கக் கூடிய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் முழுமையான சங்கிகளாக வெளிவரும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வருணாச்சிரம கல்விக் கொள்கை புகுத்தப்பட்டுவிட்டது. இந்தியும் சமசுகிருதமும் மூன்றாம் வகுப்பிலிருந்து மூளைக்குள் புகுத்தப்படுகின்றன.

இந்திய இராணுவத்தின் தலைமை, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல்துறையில் முக்கிய பொறுப்புகள் அனைத்தும் ஆர்.எசு.எசு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. நீதித்துறையிலும் கூட ஆர்.எசு.எசு. ஊடுருவி விட்டது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்று ஆர்.எசு.எசு சார்பாளர்களாக மாறி இருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில், ஆர்.எசு.எசு ­இன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் 303 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சர்வாதிகாரச் சட்டங்களை ஜனநாயக முறையைப் பயன்படுத்தியே இன்று கொண்டு வர முடியும் என்ற வலுவான நிலையில் ஆர்.எசு.எசு இருக்கிறது.

இந்தியப் பண்பாடு என்ற பெயரில் ஆரியப் பண்பாட்டு வல்லாண்மை நிறுவப்படுகிறது. ஆரிய இன மேலாதிக்கத்தை, மேல்சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் கருத்துகள் பல்வேறு ஊடகங்கள் மூலம் ஊட்டப்படுகின்றன. வர்ண ­சாதி அடுக்குமுறையை ஏற்கும் உள நிலை இடைநிலைச் சாதிகளிடம் தோன்றியிருக்கிறது. சாதிப் பெருமை ஊட்டப்படுகிறது., அரிவாள்களால் சக மாணவர்களைத் தாக்கும் அளவிற்கு பள்ளிச் சிறுவர்கள் சாதிய உணர்வால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பார்ப்பனியத்தின் முகவர்களாக பல்வேறு சாதித்தலைவர்களும், அரசியல் தலைமைகளும் மாறி இருப்பதைக் காண முடிகிறது. வர்ணாச்சிரமம், சாதிப் படிநிலை என்ற பெயரில் ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்குமுறைக்கு உள்ளான பல்வேறு சாதிகளைப் பார்ப்பனியம் தன் போர்ப்படையாக மாற்றி வருகிறது.

இந்திய பெருமுதலாளிய சந்தை வேட்டையும், ஆரிய இனவாதமும் கைகோர்த்து இந்திய ஏகாதிபத்தியமாக வளர்ந்து நிற்கிறது. பார்ப்பனியத்தின் அரசியல் வடிவம் இந்தியத் தேசியம்; அதன் பண்பாட்டு முகம் இந்தியம். இந்தியத் தேசியத்தை ஏற்க மறுத்தால் அதைத் தேசத் துரோகம் என்கிறது பார்ப்பனியம். பார்ப்பனியத்தை இயல்பாகவே எதிர்க்கும் தமிழினத்தை வேரறுக்கத் துடிக்கிறது. எப்படியாவது தன் நூற்றாண்டுக் கனவாகிய இந்து இராஷ்டிரத்தைப் படைத்துவிட வேண்டும் என்று பார்ப்பனியம் முயற்சிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் "இந்துராஜ்ஜியம் என்பது உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டின் பேரழிவில் முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. எந்த விலை கொடுத்தாயினும் இந்து ராஜ்யத்தைத் தடுத்தாக வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

ஆன்மீகத்தின் பெயரால், வேல் யாத்திரை என்ற பெயரால், தெய்வீக தமிழ்ச் சங்கம் என்ற பெயரால், பெண்களுக்கான கும்மி முதல், ஆண்கள் பங்கேற்கும் வீர விளையாட்டுகள் வரை அனைத்தையும் ஆர்.எசு.எசு கையில் எடுத்திருக்கிறது.

 2016-இல் ஈரோட்டில் ஆர்.எசு.எசு நான்கு நாட்கள் தேசிய மாநாடு நடத்திய பிறகு தமிழ்நாட்டில் ஜாகா (பயிற்சி நிகழ்வு) எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. பல்வேறு சமூகத் தலைவர்களும், அரசியல் ஆளுமைகளும் ஆர்எசுஎசு -இன் அன்பு வட்டத்துக்குள் வந்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் "இந்து" என்ற முகத்தோடு செல்லக்கூடிய ஆர்.எசு.எசு தமிழ்நாட்டில் "தமிழ் முகத்தோடு" வருகிறது. தமிழ்மொழியை முன்னிலைப்படுத்தி பேசுகிறார்கள். தமிழ்மொழியில் சிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் செயல்பாட்டாளர்களை ஆர்.எசு.எசு அமைப்பு கையகப்படுத்தியுள்ளது.

 2015-இல் 10,000 ஜாகாக்கள் திட்டமிடப்பட்டு 25 ஆயிரம் ஜாகாக்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் ஆர்.எசு.எசு பேரணிகள் நீதிமன்ற அனுமதியோடு நடத்தப்படுகின்றன.

2019 -இல், உத்தரப்பிரதேசத்தில் அலிகாரில் காந்தியார் படத்தைத் துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். காந்தியின் படம்மீது செருப்புப் பதிவு வைத்து மிதியடி தயாரிக்கப்பட்டிருக்கிறது. 2021 ஹரித்வார் சன்சத் மாநாட்டில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டது. பெண் சாமியார் சாத்வி விபாவோ இசுலாமிய பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்று இந்து ஆண்களுக்குப் பாலியல் அறிவுறுத்தல் செய்திருக்கிறார். உத்தரப்பிரதேசம் சோன்பத்ரா மாவட்டத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள், மற்றும் மகாராஷ்டிராவிலும், நாக்பூரிலும், டெல்லியிலும் மாணவர்கள் இந்து ராஜ்யம் படைப்போம் என்றும் இசுலாமியர்களைக் கொல்லுவோம் என்றும், 2022 ஜனவரி முதல் நாள் உறுதியேற்றனர். இந்தப் போக்கு நாடெங்கும் பரவி வருகிறது.

 தமிழ்நாட்டில் நகரங்களில் 1400 இடங்களில் ஜாகாக்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஆர்.எசு.எசு முழுநேரப் பிரச்சாரகர்கள் 146 பேர் வேலை செய்து வருகிறார்கள். 20 மாவட்டங்களில் 25 ஆயிரம் ஏ.பி.வி.பி மாணவர்கள் செயல்படுகிறார்கள். 19 மாவட்டங்களில் பாரதிய மஸ்தூர் சங் 82 கிளைகளைத் தொடங்கி இருக்கிறது. இதில் 70 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பெற்றிருக்கிறார்கள். பாரதிய கிசான் சங்கம் அமைப்பில் 10,000 பேர் உறுப்பு வகிக்கிறார்கள். வித்யா பாரதி 100 பள்ளிகளை நடத்துகிறது. சென்னையைச் சுற்றிலும் 15 பள்ளிகள் அவர்களால் நடத்தப்படுகின்றன. நாகர்கோயில், கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் பெருவளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

ஆர்.எசு.எசு. காரர்களின் முக்கிய செயல்பாட்டுத் தளமாக விவேகானந்தர் நினைவகம் விளங்கி வருகிறது. இந்தியாவில் 17 மாநிலங்களில் ஆர்.எசு.எசு.க்காரர்கள் ஆளுநர்களாக இருக்கிறார்கள். இந்துராஷ்டிரத்திற்குச் சார்பாகத் செயல்திட்டங்களும் பரப்புரைகளும் ஆளுநர் மாளிகையில் வகுக்கப்படுகின்றன. "இந்துச் சூழலை உருவாக்குவது" என்ற பெயரில் சிவகிரி, புளியங்குடி, ஆம்பூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் சாதிக் கலவரங்கள் தொடங்கி மதக்கலவரங்களாக மாற்றப்பட்டன. விளக்கு பூஷை என்ற பெயரில் மீனாட்சியம்மன் கோயிலில் பத்தாயிரம் பெண்கள் இந்துத்துவத் திட்டத்திற்கு இணக்கமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஜெபவேள்வி நடத்தப்படுகிறது. ஐயப்பன் இயக்கம் என்றும், ஆதிபராசக்தி இயக்கம் என்றும், பழனிக்குக் காவடி எடுப்பது என்றும், திருச்செந்தூர் யாத்திரை என்றும், மகரிஷி வழிபட்ட அருணாச்சலம் மலை கிரிவலம் என்றும், வேல் யாத்திரை என்றும் பல இலட்சம் பேர் இந்துத்துவ சக்திகளால் உள்வாங்கப் படுகிறார்கள்.

வள்ளி கும்மி என்ற பெயரில் சில ஆயிரம் பெண்களை கும்மியடிக்கக் கற்றுக் கொடுப்பது என்ற பெயரில் அழைத்து, அவர்களை இந்துத்துவமயப் படுத்துகிறார்கள். பலரை ஈஜா மையத்திற்கு அழைத்துச் சென்று மதவாதக் கருத்தியலுக்கு உள்ளாக்குவதும், அவர்களைக் காசிக்கு அழைத்துச் சென்று இந்துத்துவத் திட்டத்தோடு இணைப்பதும் என்ற செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. பல்வேறு நிறுவனங்களின் கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி ஃபண்ட் என்ற பெயரில் மக்களின் நலனுக்குச் செலவிடப்பட வேண்டிய பெருந்தொகைகள் ஆர்.எசு.எசு. இன் செயல்பாடுகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் மோடி வசம் அளிக்கப்பட்ட "பி.எம்.கேர்" என்ற கொரோனா பாதிப்புகளுக்கான பண உதவி என்ன ஆனது என்பது எவருக்கும் தெரியாது. அது ஒன்றிய அரசின் நிதியத்துக்கும் செல்லவில்லை. இந்துராஷ்டிரத்தைப் படைத்துவிடச் செலவிடப்படுவதாகக் கருதப்படுகிறது.

பார்ப்பனியத்தின் எதிர் கருத்தியலாக விளங்கிய திராவிடம் என்பதைத் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானது என்று ஆர்.எசு.எசு தன் முகவர்கள் மூலமாகப் பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. "ஆரியர் அல்லாதவர்" என்ற பொருளில் பயன்படுத்திய "திராவிடர்" என்ற சொல் தெலுங்கர்களைக் குறிப்பதாக ஆர்.எசு.எசு -இன் மறைமுக மற்றும் நேர்முகக் கூட்டாளிகள் கற்பிக்கிறார்கள். 1929 -இலிருந்து கழற்றி வீசப்பட்டுக் கிடந்த சாதிப் பெயர்களெல்லாம் இப்பொழுது மீண்டும் பெயருக்குப் பின்னால் சூட்டப் படுகின்றன. சாதிகளுக்குத் தமிழ்க் குடிகள் என்று நல்ல பெயர் சூட்டப்படுகிறது. சாதி ஆணவக் கொலைகளுக்குக் குடிப்பெருமைக் கொலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தன் பெயருக்குப் பின்னால் தன் சாதியைப் போட்டுக் கொள்வதில் அடுத்தவருக்கு என்ன பிரச்சனை என்று ஆர்.எசு.எசு. ஆதரவு தலைவர்கள் மூலம் மக்களிடையே கருத்துப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. யோகா என்றும், தெய்வ பக்தி என்றும், தேசபக்தி என்றும், ஆர்.எஸ்.எஸ் என்றும், சங்பரிவார் அமைப்புகள் என்றும், வெவ்வேறு பெயர்களில் பார்ப்பனிய சக்திகள் மக்களை அணிதிரட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவையும் இந்து மதத்தையும் தமிழ்த் தேசிய ஆளுமைகள் கடந்த காலத்தில் எதிர்த்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்திய ஏற்பு, இந்து ஏற்பு, சாதி ஏற்பு என்ற தலைகீழ் மாற்றங்களுடன், இந்துத்துவ ஒட்டுரகமாகப் புதியவகைத் தமிழ்த்தேசியம் இங்கே பேசப்படுகிறது.

இந்துராஷ்டிரத்தை நிறுவுதல் என்பதற்குச் சனாதன வருணாச்சிரமக் கட்டமைப்பு நிறுவப்படுதல் என்று பொருள். அதன் பொருள் புரியாமல் பலர் பார்ப்பனியத்திற்குத் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பாசிச -பார்ப்பனியத்தை வீழ்த்தாமல் எந்த தேசிய இனமும் வாழாது!

 இந்நிலையில், பார்ப்பனியத்தின் நாசக்காரத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும், ஆரிய பார்ப்பனிய இந்தியத் தேசியத்துக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும், தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசியலை முன்னெடுக்கவும், பார்ப்பனியம் பற்றிய புரிதலை உருவாக்கக்கூடிய கருத்தரங்குகளையும், மாநாட்டையும் நடத்துவது உடனடித் தேவையாகும்.

- பேராசிரியர் த.செயராமன், நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்