மிகச் சிறப்பான தங்கம் வியாபித்த புவியியல் கட்டமைப்பைக் கொண்டது என்று சிலாகிக்கப்பட்ட தங்கவயலுக்கு தங்களைத் தாரை வார்த்துக் கொடுத்த, தங்கள் உயிர்களைப் பற்றிச் சிறிதளவேனும் கவலை கொள்ளாத, தங்கத்தைக் கண்டெடுக்கும் மூலதன மனிதர்களாக தொல் தமிழர்களே முற்றுப் பெற்றிருந்தனர். பிற மனிதர்கள் தங்கம் எடுக்கும் தொழிலைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கியதில், தொல் தமிழர்களின் தங்கம் நோக்கிய அணிவகுப்பு, வாழ்க்கைப் போராட்டமாக வசப்பட்டு, தங்கச் சுரங்கத் தொழில் வாய்க்கப்பட்டு வளர்ந்தோங்கும் நிலை ஏற்பட்டது. தங்கச் சுரங்கத் தொழில் ஆரம்பமாகிய முதல் இருபதாண்டுக் காலத்தில் (1880 - 1900), தங்கவயல் உத்வேகமான வளர்ச்சி நிலையை அடைந்தபோது, தொல் தமிழர்கள் மதங்களில் மயக்கம் ஆகிவிடாதபடி உரிய கவன ஈர்ப்போடு அவர்களை மார்க்க மனிதர்களாக்கியது பவுத்தமாகும்.

தங்கவயலில் பவுத்தம் வேரூன்ற கனவு கண்டு, நனவாக்கியவர்களில் பண்டிதர் அயோத்திதாசரே முன்மனிதராவார். தங்கவயலில் தாழ்த்தப்பட்டத் தமிழர்கள், கொத்துக் கொத்தாகப் பற்றிப் படர்ந்த தகவமைப்பைப் பெரும் வாய்ப்பாகக் கொண்ட அயோத்திதாசர், தங்கவயலுக்கு அடிக்கடி வருகை புரிந்தார். பூர்வீகக் குடிகளிடம் நேர்முகத் தொடர்பு கொண்ட பண்டிதர், நாம் பிறவிப் பவுத்தர்கள் என்பதை முன்மொழிந்து, புதியதாக உருவாகி வரும் பொன்விளையும் பூமி பவுத்தமயமாகும் பொருட்டு, அந்நாளில் மைசூர் மைன்ஸ் பகுதியில் சமூக மனிதராக உயர்ந்து நின்ற எம்.ஒய். முருகேசம் அவர்களை தோழராக வாய்க்கப் பெற்றார்.

சமூக ஆளுமையான எம்.ஒய். முருகேசம், அறிவாசான் அயோத்திதாசரோடு உறவாடி, உரையாடி பவுத்தத்தை உள்வாங்குவதற்கு முன்பு, பார்ப்பனியத்தின் மீள் வடிவமான "அத்வைதம்'தான் ஆன்மீகச் சுய இன்பத்தின் உச்சம் என மார்தட்டி வாழ்ந்தவர்; "சிவகேசவ அத்வைத சபை'யினூடே சைவ சித்தாந்த வளர்ச்சிப் பணிக்கு பறிபோய்க் கொண்டிருந்தவர்; பணம் சேரச் சேர எவருக்கும் பார்ப்பனியக் கலாச்சாரம் வந்து சேரும் ஆபத்தில் மீள முடியாதவராய், ஆதிசங்கரனின் பவுத்த அழிப்பு வாளும் கேடயமான அத்வைதத்தில் மயங்கி, ஆழ்ந்து, அடங்கி, தொல் தமிழர்களுக்கு ஒவ்வாத ஆன்மீக அளப்பரைகளில் ஈடுபட்டவர்.

அயோத்திதாசருடைய பவுத்த ஆற்றல், முருகேசம் அவர்களின் மானிட வாய்ப்பிற்கு வலுவூட்டுவதாக அமைந்தது. தனக்குள் ஒரு பூரணத்துவம் பூத்ததை அவரால் உள்வாங்க முடிந்தது. வாழ்விலே ஒரு வெளிச்சம்; மூச்சுக் காற்றிலே ஓர் உத்வேகம் வந்து சேர்ந்தது. இந்து மதக் குப்பைகளில் மேடான அத்வைதத்தில் வீணான முருகேசம், தனிமனித, சமூக வாழ்வின் மீதான தீராத வேட்கைக்கு பவுத்தத்தினுள் அர்த்தம் கண்டு, அயோத்திதாசரால் பவுத்தத்தை நோக்கி வளர்ப்பவர் ஆனார். இதன் மூலம், பார்ப்பனியத்தால் அழிபட்ட ஓர் உயரிய சமூகத்தின் எழுச்சிக்கான உந்துவிசையைப் பெற்று, தன்னை நவீனத்துவத்தோடு பொருத்திக் கொள்ளும் பாங்கில் மானுட அழகியலை அடைந்தார். பண்டைய பவுத்த வளத்துடன் தொல் தமிழர்களை தலை நிமிரச் செய்த அயோத்திதாசர் என்ற அறிவு இமயத்திற்கு உச்சத் தோழமையாக வாய்த்தார்.

எம்.ஒய். முருகேசம் அவர்கள், எல்லோரும் நோயற்றிருக்கவே இவ்வுலகு எனும் முறைமைகளில் ஊறித் திளைத்த சிறந்த சித்த மருத்துவக் குடும்பத்தில், 1869 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றவர். முருகேசம் அவர்கள் தந்தையார் பண்டிதர் எம். ஏகாம்பரனார், மனித இனத்தை நோயிலிருந்து விடுபடச் செய்து, உயிர் வாழ்வதற்கான நம்பிக்கைகளைத் தம் மருத்துவ ஞானத்தால் கட்டியெழுப்பி வந்தவர். மனித உடல்களின் சீரான அசைவியக்கத்திற்கு சுபீட்சத்தைத் தந்து வந்தவர். முருகேசம் அவர்களுக்கு நோயிலிருந்து மீளும் புத்துயிர்ப்புக்கும், ஆரோக்கிய இளைப்பாறலுக்குமான தளமான குடும்பப் பட்டறையிலிருந்து வந்ததால், புகழ் என்பது குடும்ப வழியோடு பின் தொடர்ந்து கொண்டிருந்தது.

மானுடத்தில் தன் சித்த மருத்துவப் படைப்பாற்றலை நிறுவுதல், மானுடப் பெருக்கினை நோய் குறையவிடாது காத்தல் எனும் வடிவமைப்பில் பொருந்திப்போன முருகேசத்தின் தந்தையார் பண்டிதர் எம். ஏகாம்பரனார், காசுக்கு ஒரு போதும் தன்னை விற்றுக் கொண்டவர் அல்ல. மனித நேயம், தொன்ம மருத்துவ ஆற்றலும் அவரை மருத்துவராக்கிய ஊடேதான் அவர் செல்வந்தராக உயர்ந்து நின்றார். நோயைக் கட்டிப் போடும் கலையில் தம் தந்தையார் தேர்ந்து விளங்கியதில், முருகேசத்தின் இருப்பையும் உறவையும் செல்வம் புகழுமே பகிர்ந்து கொண்டது.

உலகிலேயே அதிக அளவு தங்கமுள்ள, மேலும் பல படிவங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டுப் பெரிய அளவினதான "கராக்கர்ஸ்', "ப்ளம்மர்ஸ்', "பிள்ஸ் டேல்ஸ்' போன்ற பெரிய கெணிகள் அமைக்கப்பட்டுத் தங்கச் சுரங்கத் தொழில் விரிவடைந்தது. இந்நிலையில், சுரங்கத் தொழிலுக்கான தொழிற்சாலைக் கட்டடங்கள், காயாலயங்கள், பங்களாக்கள் முதலியனவற்றைக் கட்டும் ஒப்பந்தத் தொழில் நடத்திய எம்.ஒய். முருகேசம், பெரும் செல்வத்தைத் திரட்டினார். பெரும் செல்வந்தராக உயிர்த்து உந்தும் மேல்நிலையாக்கத்தினூடே முருகேசம் அவர்கள், தன் சொந்தச் சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு விடாமல், தாழ்த்தப்பட்ட தலைறைகளின் கூட்டு மனங்களையே பிரதிபலித்தார். பொருளாதாரப் பகட்டுகளை அண்டவிடாமல், தன் லட்சிய மனிதர்களாய் தாழ்த்தப்பட்டோரையே கொண்டார். முருகேசம் தன் மனத்தையும் பணத்தையும் சமூகத்திற்கே செலவிட்டார். மக்களுடன் என்றுமே இணைந்து நின்ற இணை கோடாகவே ஆகிப் போனார்.

உலகம் தழுவிய தமிழ்ச் சமூகத்தில் மானுட மேன்மையை பவுத்தத்தின் மூலம் உறுதிசெய்த அயோத்திதாசர், பி. கிருஷ்ணசாமியார் அவர்களை பர்மாவுக்கும், தனது ஒரு மகனான அ. ராசாராம் அவர்களை தென் ஆப்பிக்காவுக்கும் அனுப்பி வைத்தார். மேலும் அவர், தங்கவயலின் அதிகூடிய மக்கள் திரள் கொண்ட தொல் தமிழர்மயமான தங்கநிலம் உயர் பண்புக் கூறுகளால், சிறந்த விழுமியங்களால் உள்வாங்கப்பட எம். ராகவரை தேர்ந்தெடுத்தார். இவர்களில் பவுத்தத்தை நிலை நாட்டும் பணியில் ராகவர்தான் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.

கோலார் தங்கவயலில் இந்து மதம் கிறித்துவ மதம் தொடர்ந்து நீடிப்பதற்கு, ராகவன் சகவாசம் தீங்கு உண்டாக்கும் எனக் குலைநடுங்கிய மதவெறியர்கள், தொடர்ச்சியாக ராகவர் மேல் மூர்க்கத்தனமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்தனர். அவர் வீட்டைத் தீயிற்கு தின்னக் கொடுத்தனர். இருந்தாலும் ராகவன் உயிரோட்டமான பவுத்த ஈடுபாடும், விடாப்பிடியும் விரைவிலேயே பவுத்தம் படரும் முயற்சிக்கு உரிய பலன்கள் கிடைத்தது. இப்பலன்களுக்கு மூலாம்பரமாக அமைந்தவர் எம்.ஒய். முருகேசம். ராகவன் (1903 1907) மொழிக்குள் இயங்கிய மானுட வழி பவுத்தம் அலாதியானது. அது, முருகேசம் அவர்களின் உணர்வாங்கியில் குவிமய்யமாகி, அவன் மனிதத் தருணங்களை நிகழ்த்த அறைகூவல் விடுத்தது. முருகேசத்தின் திசைகம் பவுத்தம் ஆனதில் அயோத்திதாசர் ஆதாரமானவர் என்றால், ராகவர் கிரியா ஊக்கியாவார்.

தங்கவயலில், மனிதகுலம் தம் சுயத்தைக் கண்டடையவும், மனிதரைச் சகமனிதரோடு இசைவிக்கவும், சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் எனும் ஆற்றல் மிகு சக்திகளைக் கொண்டு வாழ்வைக் கடக்கவும் பவுத்தம் தொழிற்படுகிறது என்பதை நிலைநாட்ட, எம்.ஒய். முருகேசம் அவர்கள், சி. குருசாமி, ஏ.பி. பெரியசாமிப் புலவர் ஆகியோருடன் சென்னை ராயப்பேட்டை தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்திற்குச் சென்றார். சங்கத்தின் தலைவர் அயோத்திதாசரின் நல்வரவேற்புடன், 1907 அக்டோபர் 20 அன்று, பர்மாவைச் சேர்ந்த பிக்கு வி. விலாசன் உபதேசத்துடன் பஞ்ச சீல உறுதி மொழியினை எடுத்துக் கொண்டார். முருகேசத்தைத் தொடர்ந்து சி. குருசாமியும், ஏ.பி. பெரியசாமிப் புலவரும் முறைப்படி பவுத்தரானார்கள்.

அத்வைத ஆன்மீகராய் வாழ்ந்த முருகேசத்தின் அச்சாணியை அயோத்திதாசரும், ராகவரும் மாற்றிப் போட்டதில், வாழ்தலின் வெளியை பவுத்த உன்னதங்களால் நிரப்பிய முருகேசம் அவர்கள், தன் தலைமையில் இயங்கி வந்த மாக்குப்பம் ஹான்காக்ஸ் பிளாக் அருகிலிருந்த சிவகேசவ அத்வைத சபையைத் தன் பொருளுதவியுடன் சாக்கிய பவுத்த சங்கமாக மாற்றியமைத்தார். அத்வைதத்தை வழித்துப்போட்ட இடத்தில் புத்தன் ஞானங்களை வைத்தார். இதுவரை புழங்கிய அத்வைதம் என்பது, மானுடத்தாகம் தீர்க்காத கானல் நீரென்று தங்கவயல் முழுவதும் பறை சாற்றப்பட்டது.

பவுத்தத்தின் முதல் நிபந்தனை "ஞானதான'மானதால், முருகேசம் அவர்களின் பொருளாதார பலத்துடன் 18.11.1907 அன்று, தென்னிந்திய கவுதம பவுத்த தொடக்கப் பள்ளி நிறுவப்பட்டது. இந்த தமிழ்ப் பள்ளியோடு, "வித்யாபிவர்த்தினி' என்ற பெயரில் பொதுப் படிப்பகம் திறக்கப்பட்டது. 1908 இல் இ.நா. அய்யாக்கண்ணு புலவர் ஓர் ஆசியராக அமர்த்தப்பட்டதும், பள்ளியானது பவுத்த மார்க்க கல்வி நடவடிக்கைகளின் செயலூக்கமான மய்யமாக ஆயிற்று. இங்கு பள்ளிநேரம் முடிந்த பிறகும் சரியாகப் படிப்பு வராத மற்றும் ஏழைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கல்வி கற்பிக்கப்பட்டது. இ.நா. அய்யாக்கண்ணு புலவரின் கல்விசார் முயற்சிகளின் ஒரு கிளையாக, முருகேசம் அவர்களின் உதவியுடன் பவுத்த இசை சபாவும் நிறுவப்பட்டது.

கோலார் தங்கவயலில் நடந்த இந்தப் பண்பு மாற்றம், இன்னும் குறிப்பாக முருகேசம் பவுத்தம் தழுவியதும், பொதுவாக இயக்கம் வளர உறுதிப்படி பரவ மிகுந்த உதவியாயிற்று. சாக்கிய பவுத்த சங்கத்தின் மாக்குப்பம் கோலார் கிளையானது, மிகுந்த ஈடுபாடும் அதே அளவுக்கு கொடை வள்ளலாகவும் இருந்த எம்.ஒய். முருகேசம் மற்றும் சி.குருசாமி, ஏ.பி. பெயசாமிப் புலவர், எம். ராகவர் ஆகியோரை மய்யக் குழுவாகப் பெற்றிருந்தது உண்மையாகவே அதன் நற்பேறு ஆனது.

பவுத்தத்திற்கு வேரும் வேரடி மண்ணுமாய் பொறுப்பேற்க வேண்டியவர்கள், தாழ்த்தப்பட்ட முதற்குடிகள் என்பதால் முருகேசம் அவர்கள், 1908 ஆம் ஆண்டு பிக்கு யு. விசுத்தா அவர்களைத் தங்கவயலுக்கு வரவழைத்து, ஏறத்தாழ ஆயிரம் பேர்களுக்குப் பஞ்சசீல உபதேசம் செய்வித்து தங்கவயலில் பவுத்தம் தழைத்தோங்க வழியமைத்தார். பிக்குகள் யு. விசுத்தா, யு. தேதோ வன்சா ஆகியோரைக் கொண்டு முறையான வகையில் போதனைகளை ஏற்படுத்தினார். அயோத்திதாசப் பண்டிதர் அவர்களையும், இலங்கை, பர்மா பவுத்த சங்கங்களின் பிக்குகளையும், மார்க்க அறிஞர்களையும் அழைப்பித்து பவுத்த சங்கக் கூட்டங்கள், பவுத்த கருத்துப் பொழிவுகளை நடத்தித் தொண்டாற்றினார்.

மாரிக்குப்பம் ஹான்காக்ஸ் பவுத்த சங்கத்தில் 1907 ஆம் ஆண்டு முதல் 1917 ஆம் ஆண்டு வரையில் பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து முருகேசம் அவர்களின் ஏற்பாட்டால் தங்கவயலுக்கு வந்து பவுத்த தொண்டாற்றிய "குருமார்கள்' என்றழைக்கப்பட்ட பிக்குகளில் யு. விசுத்தா (அயரீஷ்குரு), யு. விலாசா (பர்மா), தேஜோவன்சா, ஜெயந்தா, இந்திரவன்சா, பிங்கா, வன்னா, டீஜி, சில்வன்சா, மாலா, சூளசுமணா(சிங்களம்) மற்றும் அயா, ஜன்னா, சுந்திரா, அபிவன்சா ஆகியவர்களை முக்கியமானவர்களாகக் குறிப்பிடலாம். தமிழ் நாட்டிலிருந்து தங்கவயலுக்கு அடிக்கடி வந்து புத்த தர்ம்ம சேவையில் பங்கேற்றவர்களுள் அயோத்திதாசப் பண்டிதர், தன்ம பிரவர்த்தனர் எம். ராகவர், பவுத்த அறிஞர் பி. லட்சுமிநரசு, வி. முத்துக்குமாரசாமி, டி. வகுளாபரணம் பந்தலு ஆகியோர் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.

1911 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன்பு "தாய் சங்கத்' துடையவும் குறிப்பாக அயோத்திதாசருடையவும் முதன்மையான முழுக் கவனம் பவுத்தர்களுக்கு ஒரு தனி அடையாளத்தை நிறுவுவது மற்றும் அது அதிகாரப் பூர்வமாக ஏற்கப்படும்படிச் செய்வது என்பதாகத் தோன்றியது. இந்த நோக்கத்துக்காக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையரிடம் பேசுவதற்காக, சங்கத்தின் வெவ்வேறு கிளைகளின் பிரதிநிதிகளை அழைத்தார். இக்கூட்டத்தில் கோலார் தங்கவயல் சார்பாக முருகேசம் பங்கேற்றார். தம்மை இந்துக்களிடமிருந்து பிரித்து, இந்திய பவுத்தர்கள் எனக் காட்டுமாறு இக்கூட்டத்தின் தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Buddha
கோலார் தங்கவயல் கிளையில் அங்கம் வகித்த சி. லிங்கையா, முருகேசம் அவர்களின் உதவியால், மாலிக கண்ட வித்யோதயா கல்லூரியில் சேர்ந்து பாலிமொழி படிக்கவும், பிக்கு ஆகவும் சங்கத்தால் 1914 ஆம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பிக்கு ஆவதற்காக, பவுத்தம் பிறந்த நாட்டிலிருந்து ஒருவர் இலங்கைக்குச் சென்றது இதுவே முதல் நிகழ்வாகும். மாரிக்குப்பம் பவுத்த சங்கத்தில் 1917 இல் எம்.ஒய். முருகேசம், சாசன தாயகர் சபாநாயகராகவும், சி. குருசாமி காரியதரிசியாகவும், ஜி. அப்பாதுரையார் உதவி சபாநாயகராகவும், ஆர்.எல். உமாபதியார் உதவிக் காரியதரிசியாகவும் தொண்டாற்றிய காலத்தில் பவுத்தம் உன்னத நிலையிலிருந்தது.

1918 இல் தங்கவயலில் கொடிய நோயான பிளேக் பரவியது. இந்நோயைத் தடுக்க எம்.ஒய். முருகேசம் அவர்களின் தந்தையார் பண்டிதர் எம். ஏகாம்பரனார் கடும் முயற்சி செய்து, நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினார். அவருக்கு மாரிக்குப்பம் பவுத்த சங்கத்தின் சார்பில் பாராட்டுப் பத்திரம் வாசித்தளிக்கப்பட்டது. எம்.ஒய். முருகேசம் அவர்களை மூலவராகவும் புரவலராகவும் கொண்ட கோலார் தங்கவயல் கிளைத் தலைமையானது, பிற கிளைகளுக்கும் உதவிக்கரம் நீட்ட மிக ஆவலாகவும் ஆயத்தமாகவும் இருந்தது. இதற்காக 1910 இல் ஒரு "தம்ம ஆதரவு நிதி' அமைக்கப்பட்டது. இதற்கும் முன்பே அயோத்திதாசரின் "தமிழனு'க்கு அச்சு எந்திரம் வாங்குவதற்காக சென்னைக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது. சாக்கிய பவுத்தர்களின் வாழ்வில் முக்கியமான நிகழ்வை 1912 ஆம் ஆண்டு கண்டது. அதுதான், கடந்த காலத்தைப் புதிய முறையில் கட்டமைப்பதன் பகுதியாக, புத்தன் வாழ்வையும் பணியையும் செய்தியையும் பெயர்த்துரைத்த அயோத்திதாசரின் "ஆதிவேதம்' வெளியிடப்பட்டதாகும். கோலார் தங்கவயலின் தம்ம ஆதரவு நிதியில் கிடைத்த தாராளமான பொருளுதவியால் இந்நூல் வெளிவந்தது.

அயோத்திதாசரின் அனைத்து எழுத்தோவியங்களும் கவுதம சித்தார்த்தா அச்சகத்தில் பிரசுத்து வெளிக்கொணரக் காரணமானவர் எம்.ஒய். முருகேசம் ஆவார். அவரது கருத்துப்பரவல் வேட்கையால்தான் "தமிழன்' தங்கவயலிலிருந்தும் தமிழ் நாடு, இலங்கை, பர்மா, மலேசியா, தென் ஆப்பிக்கா முதலிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. மற்றும் கோலார் தங்கவயல் பவுத்த சங்கத்தின் பெருமுயற்சியாலும், பண உதவியாலும் 1909 இல் திருப்பத்தூரிலும், 1913 இல் ஜோலார்பேட்டையிலும், 1915 இல் சாம்பியன் முபிலிலும் பெங்களூர், குடகு, கள்ளிக்கோட்டை, செகந்திராபாத், ஊப்ளி, புனா, வன்னிவேடு, அழிஞ்சிக்குப்பம், பள்ளிகொண்டா முதலிய இடங்களில் பவுத்த கிளைச் சங்கங்கள் நிறுவப்பட்டன.

அயோத்திதாசர் காலம் தொடங்கி, "தமிழன்' ஏடு அயோத்திதாசன் குமாரர் பட்டாபிராமன், ஜி. அப்பாதுரையார், இ.நா. அய்யாக்கண்ணு புலவர் ஆகியோர் வெளிவந்ததற்கு, முருகேசம் அவர்களின் பொருளாதாரப் பின்புலமே முக்கியக் காரணம் ஆகும். அயோத்திதாசர் நூல்கள் மட்டுமின்றி, பவுத்த ஆளுமைகளான ஜி. அப்பாதுரையார், இ.நா. அய்யாக்கண்ணு ஆகியோரின் நூல்கள் வெளிவருவதற்கும் முருகேசம் அவர்களே உதவி செய்தார். அயோத்திதாசருக்குப் பிறகு 1917இல் தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கங்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஒய். முருகேசம், தன் பொருள் செல்வத்தைத் தேவைப்படுவோருடன் பகிர்ந்து கொள்வதே பவுத்தத்தின் ஓர் அடிப்படையான நெறி என்பதை நிறைவேற்றுபவராகவே தன் பவுத்த வாழ்க்கையைத் தொடர்ந்தார். தன் சக மனிதர்கள் மீதான தீராத அவரின் பிடிப்பே அவரை பவுத்தராக உயிர்த்தெழச் செய்தது.

முருகேசம் தன் மன, மொழி, மெய்களால் பவுத்தத்திற்கு வலுவூட்ட தன் வாழ்க்கையை சுவாசப்படுத்தினார். பவுத்தத் தளத்திலேயே தன் இருப்பைத் தீவிரமாய் நிலைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உள் வெளி சமூகத்திலும் பவுத்தப் போக்குகளை உருவாக்கி வெற்றியடைந்தார். தன் உழைப்பை, அறிவை, ஆற்றலை, செல்வத்தைச் செலவிட்டு பவுத்தத்தை வளர்த்த முருகேசம், பவுத்தம் மூலம் தன் சொந்த சமூகத்தவருக்கு அறிவு, திறமை பற்றிய விழிப்புணர்வை ஊட்டி, அவர்கள் தாம் வாழ்ந்து சமூகத்திற்காகவும் வாழ ஆயத்தப்படுத்தினார்.

தன்னை தன்மைப்படுத்தாமல், பவுத்தத்தை தன்மைப்படுத்தியவர்களை தன்மைப்படுத்திய முருகேசம், தனது பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கமின்றி, பவுத்த வளர்ச்சியினுள் உட்கருவாகவே சமைந்து நின்றார். பவுத்த செயல்பாடுகளில் சோர்ந்து போகாத ஆளுமைகளை உருவாக்குவதில் எவ்விதச் சோர்வையும் அவர் எப்பொழுதும் பெற்றதில்லை. அயோத்திதாசரைத் தொடர்ந்த பவுத்த மூலகங்களில் முதன்மையானவர்களில் முழு முக்கியமானவரான எம்.ஒய்.எம். தன் 52ஆவது வயதில், 1921இல் இயற்கை எய்தினார். பிரபஞ்ச ஞானத்தின் ஆகச் சிறந்த தளங்கள், பவுத்தத்தில்தான் உள்ளது என்ற முடிவுக்கு வந்த முருகேசத்தை, மரணம் முடித்து வைக்க முடியவில்லை. ஏனென்றால், அவர் அங்கத்தில்தான் நேற்றைய, இன்றைய, நாளைய பவுத்தம் நடைபோட்டுக் கொள்கிறது.
Pin It