வேதகாலம் முதல் மாமிசப்பிரியர்களாய் இருந்த பார்ப்பனர்கள் மாட்டுக்கறியையும். மற்ற இறைச்சிகளையும் உண்ணும் பழக்கததை கைவிட்டு அதன் மூலம், சமண, புத்தத்துறவிகளைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லத்துணிந்தார்கள் என்பதற்கு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய ஆதாரங்களைப் பார்த்தோம். இவ்வாறு பார்ப்பனர்கள் சைவமாகி அதனடிப்படையில் சமூகத்தில் உயர்ந்த இடத்தைக் கைப்பற்றியதால் அவர்களைப் போல நடந்த கொள்வதன் மூலம் தங்களது உயர்சாதித் தன்மை பாதுகாக்கப்படும் என்று நம்பிய பார்ப்பனரல்லாத சில உயர் சாதியினர் தாங்களும் சைவ உணவர்களானார்கள். அடுத்த நிலையில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட (சூத்திர) மக்களோ மற்ற இறைச்சிகளைத் தவிர்க்க முடியாமல், மாட்டுக்கறியை மட்டும் உண்ணாமல் இருந்தால் உயர்சாதிக்கு இணையாகிவிடுவோம் என்று நம்பினார்கள். மாடுகள் அவர்களது விவசாயத்திற்குத் தேவை என்பதும் அதனுடனான உணர்வு ரீதியான பிணைப்பும் அவர்கள் மாட்டுக்கறியைத் தவிர்ப்பதற்கான கூடுதல் காரணங்களாகச் சொல்லப்பட்டன. ஆனால் அத்தகைய பாசமும் பிணைப்பும் அன்புடன் வளர்க்கும் ஆடுகள் மீது வராமல் போனதற்கு என்ன காரணம்?. மாடு தான் பார்ப்பனருக்கு செல்வம். ஆடு அல்ல. பார்ப்பனருக்கு எது உயர்ந்ததோ அதனை வணங்குவதே அடிமைச் சாதிகளுக்கு வழக்கம். அப்படி மாட்டுக்கறியை மட்டும் உண்ணாமல் தவிர்ப்பதன் மூலம் தனது விவசாயச்சாதிக்கான (சூத்திர சாதிகளின்) பெருமையையும், தாழ்த்தப்பட்ட பஞ்சம் சாதிகளிடம் இருந்து தன்னை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பையும் சூத்திரர்கள் தக்க வைத்துக் கொண்டார்கள். அதே நேரத்தில் தான் வளர்த்த மாட்டை அடிமாடாக விற்பனை செய்வதில் எந்த விவசாயிக்கும் தடையில்லை. அது ஒரு முதலீடும் லாபமும் சேர்ந்த வணிகமாகவே பார்க்கப்படுகிறது. மாட்டுப் புனிதம் தான் உண்ணாமல் இருப்பதுதான். மற்றவர்கள் உண்பதற்காக தன் மாட்டை விற்பதில் அது குறுக்கிடுவதில்லை.

சாதியின் ஏணிப்படியில் அனைத்து பாரத்தையும் சுமக்கும் நிலமற்ற கூலிச் சமுதாயமாக வாழ்கின்ற (தலித்துகளின்) பொருளாதார நிலை, ஆடு வளர்க்க முடியாத அதிக விலை கொடுத்து ஆட்டுக்கறி வாங்க முடியாத நிலை, மாட்டுக்கறியின் இயல்பான சத்தும் கொழுப்பும் தேவைப்படும் கடுமையான உழைப்பு இவை அனைத்தும் சேர்ந்து மாட்டுக்கறி மட்டுமே உண்ணும் சமூகச் சூழலை உறுதி செய்தது. மேலிருக்கும் மூன்று சாதிக்கும் மாடு வேண்டும், ஆனால் மாட்டின் உடல் வேண்டாம். மாட்டை பார்த்துக்கொள்ளஅதற்கு மருத்துவம் பார்க்க, செத்தால் சுமந்து செல்ல ஆட்கள் தேவை. அதில் பண லாபமும் பார்க்கும் வாய்ப்பை இழந்து விடாமல் செத்த மாட்டினை வாரி வழங்கும்வள்ளலாகக் காட்டிக் கொண்டு, அம்மாட்டின் இறைச்சியை உண்ணும் பழக்கத்தை இழிவானதென்று கட்டமைப்பு கருத்து ரீதியாகக் கட்டமைத்துக் கொண்டார்கள். மாட்டுக்கறி உண்பதால் தான் தீண்டாமை ஏற்பட்டது என்று வியாக்கியானங்கள் பிறந்தன. இந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் கேளுங்கள்.

‘மாடு தின்பதும் மதுவருந்துவதும் நீங்கள் பறையர்களாக இருப்பதற்குக் காரணமென்று சொல்வது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக்கொண்டும், மதுவருந்திக்கொண்டும் இருப்பவர்கள் தான் இன்று உலகத்தையே ஆண்டுகொண்டிருக்கிறார்கள். தவிரவும் நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சார்ந்ததல்ல. உங்களை, மற்றவர்களைப் போல சரியானபடி சம்பாதிக்கவும் தாராளமாயச் சாப்பிடவும், தெருவில் நடக்கவும், தாராளமாய் எங்கும் போய் வேலைசெய்து சம்பாதிக்கவும் வழியில்லாமல் செய்துவிட்டதால், கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக்கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று, மாட்டு மாமிசத்தை அனுமதிக்கும் மதத்தைச் சேர்ந்த முகமதியரிலும் கிறிஸ்தவரிலுங்கூட சிலர் கைப் பணந்தாராளமாயக் கிடைப்பதாயிருந்தால், 'நாங்கள் மாட்டு மாமிசம் சாப்பிடும் வழக்கம் இல்லை" என்று சொல்லி விடுகின்றார்கள், ஆதலால், நமது நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்குத் தரித்திரந்தான் முக்கிய காரணம். அல்லாமலும், மாட்டு மாமிசம் சாப்பிடுவது ஆடு, கோழி, மீன் பன்றி இவைகளை விட என்ன அவ்வளவு அதிகமான பாவமாய்ப் போய்விட்டது? கோழியும் மீனும், பன்றியும், எச்சிலையும் பூச்சி புழுக்களையும் அழுக்களையும் மலத்தையும் தின்கின்றன. இப்படி இருக்க, இதைச் சாப்பிடுகிற வடநாட்டு 'பிராமணர்கள்" முதல் தென்னாட்டு சூத்திரர்கள் வரை, நல்ல சாதியும் தொடக்கூடியவர்களாயும் இருக்கும்போது, புல்லும் பருத்திக்கொட்டையும் தவிடும் பிண்ணாக்கும் தின்கிற மாட்டின் இறைச்சி சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான்? அப்படிப் பார்த்தாலும் மாடு சாப்பிடுகிறவர்களை யெல்லாம் 'தொடாதே: தெருவில் நடக்காதே: குளத்தில் தண்ணீர் சாப்பிடாதே: ஊருக்குள் குடி இருக்காதே" என்று சொல்லுகிறார்களா? இது வேண்டுமென்றே வீணாய் உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் ஒரு யோக்கியப் பொறுப்பற்ற காரணமேயல்லாமல் உண்மையான காரணமல்ல என்பதுதான் எனது முடிவு.”

இது எவ்வளவு உண்மையான கூற்று.

இனி பார்ப்பனர்கள் உட்பட சங்ககாலத் தமிழர்கள் எப்படி மாட்டுக்கறி உண்டார்கள் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்”.

புறநானூற்றுப் பாடல்கள்

  1. (புறம் 14:12-19)

சேரமான் செல்வக்கடுங்கோ வாழயாதன் கபிலர் கையைப் பிடித்து, ‘உம் கை மெல்லிதாயிருக்கிறதே! காரணம் என்ன?” என்று கேட்டதற்கு

"புலவு நாற்றத்த பைந்தடி

பூநாற் றத்த புகைகொளீஇ ஊன்றுவை

கறிசோறுண்டு வருந்துதொழி லல்லது

பிறிதுதொழி லறியா வாகலின் நன்றும்

மெல்லிய பெரும தாமே.....

செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே.”

என்று அவர் கூறிய விடையால், கடைக்கழகக் காலத்துப் பிராமணனும் ஊனுண்டமை அறிப்படும்.

  1. புறநானூறு : 384

கரும்பனூர் கிழான் என்னும் சிற்றூர்த் தலைவன் வழங்கிய விருந்து குறித்து நன்னாகையர் என்னும் புலவர் புறநானூற்றில் குறிப்பிடுவது...

"நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை

மண்ணாணப் புகழ் வேட்டு

நீர்நாண நெய் வழங்கிப்

புறந்தோனெந்தை யாமெவன்றொலைவதை

அன்னோனையுடைய மென்ப வினிவறட்கி

யாண்டு நிற்க வெள்ளி மாண்டக

உண்டநன்கலம் பெய்து நுடக்கவும்

தின்ற நன் பல் ஊன் தோண்டவும்

வந்தவைகலல்லது

சென்ற வெல்லைச் செலவறியேனே”.....

கரும்பனூர்க்கிழான் வழங்கிய ஊன் கலந்த சோற்றுணவில் நீரை விட அதிகளவு நெய்யிட்டுச் சுவை மிகக் கூட்டி சூடு குன்றாது நாள்தோறும் தானும் உண்டு மற்றவர்களுக்கும் தந்தான். உண்ணமுடியாமல் மீதமான உணவை இலையோடு மடித்து எறிந்த நாட்களையும், பல்லில் சிக்கிக்கொண்டவற்றைத் தோண்டி எடுப்பதற்குமாகக் கழிந்த நாட்களையும் எண்ண முடியாது.

புறநானூறு: 113

  1. மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும்,

அட்டுஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்

பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி

நட்டனை மன்னோ முன்ன: இனியே,

பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று

நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்

சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே:

கோல்திரள் முன்கைக் குநற்தொடி மகளிர்

நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே

(பறம்பு மலையே முன்பு, உன்னிடத்துக் கள் நிறைந்த தாழியின் வாய் திறந்தே இருந்தது. ஆட்டுக் கிடாவை வெட்டிச் சமைத்த கறியுடன் கூடிய கொழுமையான துவையலும் சோறும் குறையாது விரும்பிய அளவு அளிக்கும் முதிர்ந்த வளமும் இருந்தது. அவை மட்டுமல்லாமல் எம்மோடு நட்பாகவும் இருந்தாய, பெரும் புகழ் பெற்ற பறம்பு மலையே! இப்பொழுது, பாரி இறந்துவிட்டதால் கலங்கிச் செயலற்று நீர் வடியும் கண்ணோடு உன்னைத் தொழுது வாழ்த்தி, அழகிய திரண்ட முன்கைகளில் சிறிய வளையல்களை அணிந்த பாரி மகளிரின் மணமுள்ள கரிய கூந்தலுக்கு உரிமையுடையவரை தேடிச்செல்கிறோம்.)

அகநானூற்றுப் பாடல்கள்

  1. குடவாயில் கீரத்தனார்: அகநானூறு (129):

‘கலங்கு முனைச் சீறூர் கை தலை வைப்பக்

கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்”

கொழுப்பு ஆ தின்ற”-கொழுத்த மாட்டினை (ஆ) மழவர்கள் சாப்பிட்டார்கள் என்கிறது அகநானூறு

  1. கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார். அகநானூறு (309)

‘வயவாள் எறிந்து வில்லின் நீக்கி

பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்

அம்பு சேண் படுத்து வன் புலத்து உய்ததெனத்

தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்

கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்ப்

புலவுப் புழுக்குண்ட வான் கண் அகல் அறைக்”

கொழுத்த மாட்டினை வெட்டி வேப்ப மரத்தின் அடியில் கடவுளுக்கு காணிக்கையாக்கி அதன் ரத்தத்தை கீழே விட்டு, மாட்டுக் கறியை மழவர்கள் உண்டனர்.

  1. சான்று (1) ‘பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்”. தேவநேயப் பாவாணர் (2) புறநானூறு புலியூர் கேசிகன் உரை (3) தமிழர் வரலாறு. புலவர் கா.கோவிந்தன்.

- நேர்காணல் தொடரும்

Pin It