இயற்கைக்கு விரோதமாயிருப்பதில் மக்களுக்கு ஒரு தனி ருசி! சினிமா நடிகர்களும் நடிகைகளும் கிரிக்கெட் விளையாடுகிறார்களே! எதற்காக?

kuthoosi gurusamyஅது ஒரு தனி வேடிக்கை! அதைப் பார்ப்பதற்காகவே (கிரிக்கெட் விளையாட்டுக்காக அல்ல) பலர் செல்கிறார்களல்லவா?

நான் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் திருச்சியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது, தலை சிறந்த “பாட்மிண்டன்” விளையாட்டுக்காரர்களைக் கொண்டு இரவு எட்டு மணிக்கு மேல் ரயில்வே இன்ஸ்டிட்யூட்டில் ஒரு விளையாட்டுப் பந்தயம் நடத்தினார்கள்! பல “கியாஸ்லைட்” கள் வெவ்வேறான உயரத்தில் கட்டியிருந்துங்கூட, அதில் கலந்து கொண்ட நாங்கள் பகலில் விளையாடுவதில் பாதி கூட விளையாட முடியவில்லை. பலவர்ணமான பந்துகளை மாற்றியுங்கூட எங்களால் பந்தை நன்றாகப் பார்க்கவே முடியவில்லை. ஆனாலும் அதற்கு டிக்கெட் பெற்றுக்கொண்டு வந்தக் கூட்டம் உண்டே! அடாடா! ஆயிரக் கணக்கில்! இடமில்லாமல் திரும்பியவர்கள் பலர்!

ஆண் நடிகர் பெண் வேஷம் போட்டு நடித்தாலும், பெண் நடிகர் ஆண் வேஷந் தாங்கி நடித்தாலும், அதில் ஒரு தனி ருசி! இது மட்டுமா? அரசியல் வாதிகள் நாடக மேடைமீது தோன்றினால் அதில் ஒரு தனி ருசி!

திரு. ராஜகோபாலாச்சாரியாரும், பெரியாரும், காமராசரும், பி. டி. ராஜனும் ராமமூர்த்தியும், வெங்கட்ராம சாஸ்திரியும் ஒரு நாடகத்தில் நடிக்கின்றார்கள் என்றால், அந்த நாடகத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்புகிறவர் எண்ணிக்கை மட்டும் பல்லாயிரம் இருக்குமே!

நடிப்புக் கலையில் இவர்கள் சிறந்தவர்கள் என்பதற்காகவா? அல்லவே அல்ல! இயற்கைக்கு விரோதமான நிகழ்ச்சியல்லவா? அதனால்!

பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருப்பவர்கள் அத்தனை பேரையும் சென்னை சட்ட சபைக்குள் உட்கார வைத்தால் எப்படியிருக்கும்? அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எவ்வளவு பெரிய கூட்டம் வரும்? மனித உணர்ச்சிகளில் இதுவுமொன்று, விநோத நிகழ்ச்சியில் ஒரு தனி விருப்பம்!

ராஜா சர். முத்தய்ய செட்டியார், “ஹிந்து” சீனுவாசன், கோயங்கா, சங்கராச்சாரியார், பண்டார சந்நிதி, ஏ. வி. தாமஸ், டி. வி. சுந்தரமய்யங்கார், ஹார்வி துரை, வடபாதி மங்கலம் முதலியார், - ஆகியோர் மாலை 6 மணிக்கு மவுண்ட்ரோடில் தெருக் கூட்டுகிறார்கள் என்றால், அங்கு எப்போர்ப்பட்ட கூட்டமிருக்கும்? இவர்கள் நகர சுத்தித் தொழிலில் நிபுணர்கள் என்பதற்காகவா? அல்ல! செய்யாத தொழிலைச் செய்கிறார்கள் என்பதற்காகத்தான்!

ஏதாவதொரு பொது நன்மைக்கோ, அல்லது சொந்த வசதிக்கோ அல்லது இரண்டுங் கலந்த காரியத்துக்கோ பெரு நிதி திரட்ட வேண்டுமானால் மேற்கண்ட முறைகளில் ஒன்றைக் கையாளலாம்! இவைகளைப் போன்ற வேறு ஏதாவது புது அதிசய முறையையும் கையாளலாம்.

சினிமா நடிகரின் கிரிக்கெட் பந்தயத்தைப் போலவே அரசியல் நடிகர் சடுகுடுப் பந்தயம் நடத்தலாம்!

பல அரசியல் தலைவர்களில் முக்கியமான 20 பேரைப் பொறுக்கியெடுத்து இரண்டு கட்சிகளாகப் பிரித்து (இருபது கட்சிகளை இரண்டாகப் பிரிப்பது மகா வேதனைதான்! என்ன செய்வது?) சடுகுடு விளையாட்டுப் பந்தயம் நடத்தலாம்!

இந்த விளையாட்டில் காலைப் பிடித்து இழுத்துக் கோட்டைத் தொடாமற் செய்வது தானே முக்கியம்? காலை வாரி விடுவதில் கைதேர்ந்த அரசியல் வாதிகளுக்கு இது ஒன்றும் பிரமாதமல்ல! ஒருவர் காலைப் பிடித்து இழுத்தவுடனே அவரைச் சேர்ந்த மற்ற விளையாட்டுக்காரர்கள் விழுந்தவர் மார்பில் உட்கார்ந்த அழுத்துவதும் சர்வ சாதாரணமாகப் பழக்கமான வேலைதானே!

சிறப்பாகத் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த விளையாட்டுத் தான் ரொம்பப் பிடித்தமாகவும் பொருத்தமாகவும் இருக்கும்! பெருங் கூட்டமும் வரும்! இரண்டு ஆண்டுகளாக நின்று போயிருக்கின்ற சுதேசிப் பொருட்காட்சிக்குக் கிடைத்ததைவிட அதிகமான நிதியும் வசூலாகும்; கணக்கும் அதுபோலவே காட்டிவிடலாம்!!

- குத்தூசி குருசாமி (06-03-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It