kuthoosi guruஇது என்ன புள்ளி என்று கேட்கிறீர்களா?

இதுதான் காருண்யமுள்ள காங்கிரஸ் சர்க்கார் நமது போலீஸ் கான்ஸ்டபிள்களுக்குக் கொடுக்கின்ற தாராள சம்பளம்!
கான்ஸ்டபிள் மகன் காலேஜ் பிரின்ஸ்பாலாகவோ, எஞ்சினியராகவோ வந்திருப்பதாகக் கேள்விப்பட்டிருபீர்களா? எப்படி வர முடியும்?

ஆனால் புரோகிதன் மகன்? எல்லா உத்யோகங்களிலுமிருக்கிறான்!

“அய்யா! குத்தூசியாரே எங்கள் வயிற்றெரிச்சலைக் கேட்கவே நாதியில்லையே! ஒரு ரயில்வே தோட்டிக்கு 50 ரூபாய் ஆரம்பச் சம்பளம் தருகிறார்கள்! எங்களுக்கு 30 ரூபாய்தானே இது எப்படி போதும்?”-

என்று கேட்டார், என்னைப் பார்க்கவந்த கான்ஸ்டபிள் ஒருவர். (நோய் வாய்ப்பட்டிருந்த போது என்னைப் பார்க்கவந்த பல முக்கியஸ்தர்களில் ஏழை கான்ஸ்டபிள்களை மட்டும் நான் மறக்கமாட்டேன்!)

“போதாதுதான்! எனக்குத் தெரியாதா? என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? 3 வருஷமாக நான் இதைப்பற்றிப் பேசாத பொதுக் கூட்டமே இல்லை! எங்களை யார் சட்டை பண்ணுகிறார்கள்?” என்று பதில் கூறினேன்.

1. போலீஸ் சேவகர்கள்
2. பள்ளி ஆசிரியர்கள்
3. பத்திரிகை எழுத்தாளர்கள்

- இம்மூன்று இனமும் ஒரு மாதிரியான “விடியா மூஞ்சிகள்”! அதாவது ஓடத்தைப் போல! மற்றவர்களைக் கரையேற்றும்; தான் மட்டும் கரையேறாது; தண்ணீரில் (அதாவது கவலைக் கண்ணீரில்) கிடந்து தவிக்கும்!

போலீஸ் சேவகர் எப்பேர்ப்பட்ட மந்திரியின் காரையும் நிறுத்தி விடுவார்! எவ்வளவு பெரிய பணக்காரனையும் கைது செய்துவிடுவார்!

பள்ளி ஆசிரியர், “அந்தக் கலெக்டர் என் “ஸ்டூடண்ட்”; இந்த மந்திரி என்னிடம் நாலாம் கிளாசில் படித்தான்; அத்துடன் படிப்பதையே நிறுத்திக் கொண்டான்!” என்று பெரிய பெரிய ஆசாமிகளைப் பற்றி யெல்லாம், அவன்- இவன் என்று பெருமையாகப் பேசிக்கொள்வார்!

பத்திரிகை எழுத்தாளனோ மகாத் தலைக் கிறுக்குப் பிடித்தவன் (என்னை விலக்கியல்ல!)

“நான் எழுதித்தான் அந்த ஊருக்கு ரோடு போட்டார்கள்; நான் எழுதாவிட்டால் அவர்களுக்கு அதிகச் சம்பளம் கிடைத்திருக்காது; என் கண்டனத்தனால்தான் “பஸ்ஸின் டாப்” மீது ஆட்களை ஏற்றி உட்கார வைப்பது நின்றது; இந்த ஆறவுன்ஸ் அரிசியாவது கிடைப்பது என்னால் தான்; நெசவாளிக்கு அதிக நூல் கிடைப்பதே நான் மந்திரிகளைப் போட்ட போட்டினால்தான்!” - என்றெல்லாம், இந்த உலகில் நடக்கின்ற அத்தனையும் தன்னாலே தான் நடப்பதாகச் சரடு விடுவார்கள்!

ஆனால் அவர்களுடைய சொந்த சங்கதிகளைக் கேட்டுப் பாருங்கள். அனேகமாக அத்தனை பேரும் கடனாளிகள்தான்! இன்றைக்கு வேலையை விட்டுப் போனால் நாளைக்கு அடுப்புக்குள்ளே பூனைக் குட்டி புகுந்து படுத்துக்கொள்ளும்!

“நல்ல காலம் வருது! நல்ல காலம் வருது!” - என்று சொல்கின்ற குடுகுடுப்பைக்காரன் தனக்கு எப்போது நல்ல காலம் வருது என்பதைக் கூறமுடியாமல் நிரந்தரப் பிச்சையெடுப்பது மாதிரி!

இந்த மூன்று திருக்கூட்டத்தாரும் மற்றவர்களுக்காக உழைக்க வேண்டியதுதான்! அதில் பெருமைப்பட்டுக் கொண்டே யிருந்துவிட்டு மடியவேண்டியதுதான்! செத்த பிறகு இவர்கள் உடலை எரிப்பதற்குக் கட்டை வாங்குவதற்குக் கூட வீட்டில் பணமிருக்காது!

நாட்டிலே ஏதாவதொரு தலைகீழ் மாறுதல் (சிலர் இதைப் ‘புரட்சி’ என்று சொல்லிப் பயமுறுத்துகிறார்கள்!) வராதா? - என்று ஏங்கிக் கிடப்பவர்களில் மேற்படி மூன்று திருக்கூட்டத்தாரையும் முன்னணியில் நிறுத்தலாம்! ஆனால் இச்சமயம் புதருக்குள் பதுங்கியிருக்கும் புலிபோலக் கிடக்கிறார்கள் - பாவம்!

நான் சொல்கிறேன்! விரைவில் நாட்டுக்கே நல்ல காலம் வருது! நல்ல காலம் வருது! அக்கிரமம் செய்கிறவனெல்லாம் அய்யோண்ணு போகப் போறான்கள்!

- குத்தூசி குருசாமி (22-11-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It