kuthoosi gurusamy 268இதிலிருந்து பார்-அட்-லா பட்டம் பெற்றவர்களெல்லாம் பெரிய நிபுணர்கள் என்று கருதிவிட வேண்டாம்! படிப்பு வேறு! பட்டம் வேறு! புத்திவேறு! பணம் வேறு! எல்லாத் துறைகளையும் கவனித்து வந்தால் இந்த உண்மை விளங்கும்! தம் குமாஸ்தாவுக்குத் தெரிந்த சட்ட நுணுக்கம் கூடத் தெரியாத வக்கீல்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர்!

வக்கீல் தொழில் ஒரு அருமையான தொழில்! அதாவது ஐ.சி.எஸ். போல! ஐ.சி.எஸ். பட்டம் பெற்றவர்கள் அடுப்பங்கரை வேலை முதல் அரசியல் சிக்கல் வரையில் எதிலும் தலையிட்டுக் கொள்வார்கள்! அவர்களுக்குத் தெரியாத சங்கதி, அவர்களால் முடியாத காரியம் இந்த உலகத்திலேயே கிடையாது என்பது வெள்ளைக்காரர் எண்ணம்! அந்த வர்க்கம் இப்போது நசித்துப் போய் விட்டது! இன்னும் சில ஆண்டுகளில் இந்தப் பெயரே மறந்து போகும். “அன்னப் பறவை” என்பதுபோல் ஆகி விடும்!

வக்கீல் தொழில் ஒரு மாதிரியான தொழில்! டாக்டரைப் போல் பட்டம் பெற்ற பிறகு கட்டாயமாக அந்த வேலை பார்த்துத் தீர வேண்டுமென்ற கட்டாயமே யில்லை! டாக்டர் பட்டம் பெற்றவர் குமாஸ்தா வேலை செய்வதைக் காண முடியாது!

சட்டக் கல்லூரியில் சேரும்போது ஒவ்வொருவரும் வக்கீலாகத் தொழில் பார்த்து ஏராளமாகச் சம்பாதிக்க வேண்டும் என்று தான் திட்டம் போடுகிறார்கள்!

ஆனால் அந்த மாதிரியே நடக்கிறதா? வாழ்க்கை வெள்ளத்தில் எதிர்த்து நீந்த முடியாமல் எப்படியோ உயிர் தப்பினால் போதும் என்று முடிவு செய்து, கைக்கு எட்டிய ஏதோ ஒரு கரையில் ஏறிப் போய் விடுகிறார்கள்!

புரோகிதம்! பள்ளி ஆசிரியர்! வக்கீல்!

இம்மூன்று தொழில்களும் நம் பிராமணத் தோழர்களை மட்டும் பயமுறுத்துவதில்லை. எப்படியோ தத்திக் குத்திக் தலையெடுத்து விடுகிறார்கள்! ஆனால் நம்மவர்கள் மட்டும் திக்குமுக்காடித் திகைத்துப் போய் ஓட்டமெடுக்கிறார்கள்! ஏன்?

இத்தொழில்களுக்கு வேண்டிய தனிப்பட்ட குணங்கள் சில நம்மவர் எல்லோருக்கும் சாதாரணமா யிருப்பதில்லை.

வக்கீல் தொழிலில் ஒரு வசதி உண்டு என்று கூறினேனல்லவா? பட்டம் பெற்ற பிறகு சிலகாலம் தொழில் செய்து பார்க்கலாம். அதில் வெற்றி கிடைக்கா விட்டால் அதற்காக மனம் உடைய வேண்டியதில்லை.

மந்திரியாகப் போகலாம்! கடை வைக்கலாம்! ஒன்றுமில்லா விட்டாலும் தேவாரம் - திருவாசகம் - திருப்புகழ் பிரசாரம் செய்து கொண்டிருக்கலாம்! சாதாரண பஜனைக்காரர்களுக்கும் பி. ஏ., பி. எல். பஜனைக்காரர்களுக்கும் எப்படியும் வேற்றுமை இருக்குமல்லவா?

இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி முதல் கதா காலட்சேபம் செய்கிற தொழில் வரையில், வக்கீல்கள் இல்லாத இடமே இல்லை.

தஞ்சை சப் மாஜிஸ்ட்ரேட் ஒருவர், “கம்பன் ஒரு சிறந்த வக்கீல் என்று பேசியிருக்கிறார். “ராமன், ராவணன், அனுமான், வாலி முதலியவர்களை யெல்லாம் சிறந்த வழக்கறிஞர்களாகவே கற்பித்துக் காட்டி இருக்கிறார்,” என்று மேற்படி சப் மாஜிஸ்ட்ரேட் குறிப்பிடுகிறார்.

ஆதலால் சட்டக் கல்லூரியில் கம்பராமாயணத்தைக் கட்டாய பாடமாக வைத்தால் நல்லது என்று நான் கூறினால் யார் ஒப்புக் கொள்வார்கள்? சி.ஆர். முதல் டி.கே.சி. வரையில் நூற்றுக்கணக்கான வக்கீல்கள் (ரா.பி.சே. அவர்கள் உட்பட) கம்ப ராமாயணத்தை ஏன் புகழ்கிறார்கள் என்பதை இப்போதுதான் கண்டு கொண்டேன்!

இங்கிலீஷில் ஒரு எழுத்துக் கூடத் தெரியாத எண்கண் வெங்கிடாசல முதலியார் என்று ஒருவர் இருந்தார். கம்ப ராமாயணப் பாட்டுக்கள் அத்தனையும் அவருக்கு மனப்பாடம்! பல பாட்டுக்களுக்கு 4-5 விதமான பொருள் கூறுவார், இலக்கண ஆதாரங்களோடு! கம்ப ராமாயணம் முழுவதையும் அவர் மூலமாகவே தொடர்ந்து கேட்டிருக்கிறேன், பள்ளிப் பருவத்தில்! ஆனால் அவர் மட்டும ஒரு வக்கீலாக இருந்திருந்தால் எவ்வளவோ செல்வாக்குடன் இருந்திருப்பார்! கம்பன் புலமை பற்றி வாரா வாரம் எழுதிக் கொண்டுமிருப்பார்! வக்கீல் பட்டத்தை வைத்துக் கொண்டு வேறு எந்தத் தொழிலைச் செய்தாலும் அதற்கு ஒரு தனி மதிப்புத்தான்! என் வக்கீல் நண்பர் ஒருவருக்குத் தேவார நிபுணர் பட்டம் கிடைத்திருப்பதாகப் படித்தேன். எனது “சைவ உள்ளம்” புளகாங்கிதம் அடைந்தது! வக்கீல் தேவாரம் என்றாலே ஒரு தனிப் பெருமை தான்!

“கம்பர் ஒரு வழக்கறிஞர்” என்பது பற்றிப் பேசி விட்டார், மாஜிஸ்ட்ரேட்!

“கம்பர் ஒரு சங்கீத நிபுணர்” என்பது பற்றி சாம்பமூர்த்தி அய்யர் அடுத்தபடி பேசுவார் என்று எதிர்பார்க்கிறேன்!

சட்டக் கல்லூரியில் கட்டாய கம்ப ராமாயண வகுப்பு நடத்துவதற்கு டி.கே.சி. அவர்களை நியமிப்பார்களென்றும் எதிர் பார்க்கிறேன்!

- குத்தூசி குருசாமி (05-10-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It