‘குலாம் காதருக்கும் கோகிலாஷ்டமிக்கும் உள்ள சம்பந்தம் போல’ என்று இனிமேல் பரிகாசத்துக்குக்கூட யாரும் சொல்லக் கூடாது! தெரியுமா? எங்களூர் குலாம் காதர் இனி கோகிலாஷ்டமி கொண்டாடுவதாக முடிவு செய்து விட்டாராம்!

“ஏனய்யா திடீரென்று இப்படி மாறிவிட்டீர்?” என்று கேட்டேன்.

kuthoosi gurusamy“மாறுவது ஒன்றுமில்லை. உங்களில் எத்தனைபேர் நாகூருக்கு மொட்டையடித்துக் கொள்கிறார்கள்? எத்தனைபேர் மசூதி வாசலில் காத்து நின்று குழந்தைகளுக்கு ஊதிக் கொள்கிறார்கள்? எத்தனை பேர் தர்காவுக்குப் போய் சர்க்கரை போடுகிறார்கள்? எத்தனை பேர் மயில் தோகையால் மந்திரித்துக் கொள்கிறார்கள்? எத்தனை பேர் அல்லாசாமி பண்டிகையில் வேஷம் போட்டு ஆடுகிறார்கள்? நாங்கள் மட்டும் ஏன் உங்கள் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது? உரிமை என்பது பொது தானே?” என்று கேட்டார் என் நண்பர்.

“எனக்கு எந்தப் பண்டிகையும் கிடையாதய்யா! பார்ப்பார பண்டிகைகள் என்று சொல்லுங்கள்!” என்றேன்.

“எப்படியோ வைத்துக்கொள்ளுங்கள். நான் இனிமேல் தீபாவளி கூட கொண்டாடப் போகிறேன். அதிலே தப்பென்ன? ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை வேறு எப்படித்தான் ஏற்படும்? சரஸ்வதி பூஜைகூட செய்யப் போகிறேன், தெரியுமா? நான் ஒரு தேசீய முஸ்லிம். இனி எல்லா முஸ்லிம்களுமே தேசீய முஸ்லிம்களாவதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் ராஜாஜி என்ன சொல்கிறார் தெரியுமா?" என்று மார்பை நிமிர்த்திக் கேட்டார்.

“என்ன சொல்கிறார், எனக்குத் தெரியாதே,” என்று கேட்டேன்.

“கிறிஸ்துவப் பண்டிகைகள், முஸ்லிம் பண்டிகைகள், இந்துப் பண்டிகைகள் எல்லாமே எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் சந்தர்ப்பங்கள். அது அவர்கள் பண்டிகை, இது இவர்கள் பண்டிகை என்கிற வித்தியாசமில்லாமல் எல்லாவற்றிலும் எல்லாரும் கூடியமட்டில் கலந்து கொண்டு நம் நாட்டில் மகிழ்ச்சியடைந்து வருகிறோம். இதுவே நல்லமுறை,” என்கிறார், எங்கள் ராஜாஜி இது அவருடைய சொந்த வாசகம். பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் கண்டபடியே சொல்கிறேன்.”

“இந்துக்கள்தான் வேளாங்கண்ணிக்கும் (கிருஸ்துவ nக்ஷத்திரம்) நாகூருக்கும் போகிறார்களே ஒழிய முஸ்லிம்களில் யாரும் ஸ்ரீரங்கம் சுவர்க்க வாசலுக்கோ, சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்துக்கோ, காஞ்சிபுரம் கருடசேவைக்கோ வருவதில்லையே! இந்துக்களில்கூட யார் அல்லாசாமி பண்டிகையில் வேஷம் போட்டுக் கொள்கிறார்கள்? ஆச்சாரியாரா போட்டுக் கொள்கிறார்? அல்லது அவர் இனத்தில் யாராவது நாகூருக்கு மொட்டையடித்துக் கொள்கிறார்களா? எழுதப் படிக்கத் தெரியாத திராவிட இன சிப்பந்திகள் தானே இப்படி வெறி பிடித்து அலையுதுகள்?" என்று கேட்டேன்.

“திராவிடனோ, ஆரியனோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. இனிமேல் முஸ்லிம்கள் பழைய மாதிரியே இருக்கப் போவதில்லை. திடீரென்று ஒரு நாளைக்கு எல்லோரும் பிராமணர்களாக ஆனாலும்கூட ஆகிவிடுவோம். இதோ, ஒரு உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள். சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஷாபி முகமது சாகிபு சமஸ்கிருதத்தின் உயர்வைப் பற்றி பேசியிருக்கிறாரே, படித்துப் பார்த்தீர்களா? 'சமஸ்கிருத உச்சாரணத்தின் அழகு, அர்த்தபுஷ்டி முதலியவைகள் வேறு எந்தப் பாஷையிலும் இருக்க முடியாதென்றும், குறுகிய நோக்கத்தைவிட்டு எல்லோரும் சமஸ்கிருதம் கற்கவேண்டும் என்றும்' பேசியிருக்கிறாரே! இனிமேல் என் பிள்ளையைக்கூட சமஸ்கிருதம் படிக்க வைக்கலாமென்றிருக்கிறேன். ‘குலாம் காதரும் கோகிலாஷ்டமியும்’ என்று யார் சொன்னாலும் இனிமேல் என்னால் பொறுக்க முடியாது. 'ஷாபி முகமதும் சமஸ்கிருதமும்' ஒன்று சேரும் போது, ஏன் நான் கோகிலாஷ்டமி கொண்டாடக் கூடாது? அதுவும் தேசீய முஸ்லிமாயிருக்கும்போது இந்து மார்க்கத்தை ஏன் வேறாகக் கருத வேண்டும்? என் பையனைக் கூட வேத பாடசாலைக்கு அனுப்பிவிடக் கருதியிருக்கிறேன்,” என்றார் நண்பர் குலாம் காதர்.

“ஆஹா! பேஷாகச் செய்யுமய்யா! விபூதிப் பட்டை வேணுமானாலும் அடித்துக் கொள்ளும்! உம் இஷ்டத்தை நான் எப்படித் தடுக்க முடியும்? ஆனால் ஷாபி முகமது சமஸ்கிருதத்தின் உயர்வைப் பற்றிக் கூறினாரே, அவர் எத்தனை பாஷை படித்திருக்கிறார்? அதை மட்டும் சொல்லுமே! தன்னை எல். டி. சாமிக்கண்ணு பிள்ளையென்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ? சரி! அவருக்கு காங்கிரஸ் சர்க்காரில் ஏதாவது நல்ல வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லுமே! அவ்வளவுதான்! பணமிருந்தாலும் ஒரு பதவியும் இருந்தால் ஒன்றுக்கொன்று எவ்வளவு ஒத்தாசையாயிருக்கும்?"

இந்த உரையாடலுக்குப் பிறகு எனக்கு ஒருவிதமான மனத் தெளிவு எற்பட்டது. பண்டிகைகளைக் கொண்டாடுவதில் வேற்றுமை பாராட்டக் கூடாதா? என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். பின் வரும் காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை:-

1. உஸ்மான் சாகிபும் உபயதுல்லாவும் விநாயக சதுர்த்தி அன்றைக்கு ஆளுக்கொரு களிமண் பிள்ளையாரை வாங்கி பலகையில் வைத்துக்கொண்டு கடைத் தெருவில் போவது.

2. ஆச்சாரியாரும் அல்லாடி அய்யரும் ஆளுக்கொரு துருக்கி குல்லாய் அணிந்து கொண்டு, இடுப்பில் லுங்கி அணிந்து, மண்டியிட்டுக் கொண்டிருப்பது.

3. ரெத்தினசாமியும் ரோச் விக்டோரியாவும் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, மார்பில் பூணூல் அணிந்து பஞ்சகச்சம் கட்டி, நெற்றியில் திருமண் தரித்து, அக்குளில் விசிறியுடன் கை கோர்த்துக் கொண்டு “பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே,. . . . . .” என்று திருவாய்மொழி பாடிக் கொண்டு பார்த்தசாரதி சுவாமி ஊர்வலத்தின் முன்பு செல்வது!

கனம் ஆச்சாரியார் புண்ணியத்தில் இம்மாதிரி யெல்லாம் நடக்குமேயானால் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை உடைக்க அமெரிக்க அணுக்குண்டால்தான் முடியுமா?

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It