அத்தைமகன் முத்தனும் ஆளிமகள் தத்தையும்
ஒத்த உளத்தால் ஒருமித்து - நித்தநித்தம்
பேசிப் பிரிவார் பிறரறியா மற்கடி
தாசி எழுதியே தாமகிழ்வார் - நேசம்
வளர்ந்து வருகையீலே, மஞ்சினி, தன் மைந்தன்
குளிர்ந்த பெருமாளைக் கூட்டி - உளங்கனிந்தே
ஆளியிடம் வந்தான்; அமர்ந்தான்; பின்பெண்கேட்டான்
ஆளி சிரித்தே அவனிடத்தில் - 'கேளண்ணா
தத்தை விதவைப்பெண் சம்மதமா?' என்றுரைத்தான்.
'மெத்த விசேட' மெனச்சொல்லி மஞ்சினி தான் - ஒத்துரைத்தான்.

'சாதியிலே நான்மட்டம் சம்மதமா?' என்றே
ஓதினான் ஆளி. 'ஒருபோதும் - காதில்நான்
மட்டம் உயர்வென்ற வார்த்தையையும் ஏற்பதில்லை
இட்டந்தான்' என்றுரைத்தான் மஞ்சினி - 'கிட்டியே
ஊர்ப்பானை தன்னை உருட்டி உயிர்வாழும்
பார்ப்பானை நீக்கிப் பழிகாரர் - தீர்ப்பான
நையும் சடங்ககற்றி நற்றமிழர் ஒப்பும்மணம்
செய்வாயா?' என்றாளி செப்பினான் - 'ஐயோ என்
உத்தேசம் பார்ப்பானைத் தேடேனே! - சத்தியமாய்ச்
சொன்னேன்' என உரைத்தான் மஞ்சினி சொன்னதும்
பின் ஆளி சம்மதித்தான் பெண்கொடுக்க! - அந்தேரம்
வந்த தொருதந்தி! வாசித்தான் ஆளிஅதை;

கந்தவேள் பாங்கில்நீர் கட்டிய - சொந்தப்
பணம்இல்லை, பாங்கு முறிந்தது, யாதும்
குணமில்லை, என்றிருத்தல் கண்டு - திணறியே
'வீடும் எனக்கில்லை வெண்ணிலையும் ஒன்றுமில்லை
ஆடுவிற்றால் ரூபாய்ஓர் ஐந்நூறு - கூடிவரும்
மஞ்சினி யண்ணா மணத்தை நடத்துவோம்
அஞ்சாறு தேதிக் கதிகமாய் - மிஞ்சாமல்
நாளமைப்போம்' என்றந்த ஆளி நவிலவே
தோளலுத்த மஞ்சினி, "ஆளியண்ணா - கேளிதை
இந்த வருடத்தில் நல்லநாள் ஏதுமில்லை
சிந்திப்போம் பின்" என்று செப்பினான் - "எந்த
வருடத்தி லே? எந்த வாரத்தில்? எந்தத்
தெருவில்? திருமணம் என்ற - ஒருசொல்
நிச்சயமாய்ச் சொல்லண்ணா நீ என்றான் ஆளிதான்!
பச்சோந்தி மஞ்சினி பாடலுற்றான் :- "பச்சையாய்த்
தாலி யறுத்தவளைத் தாலிகட்டினால்ஊரார்
கேலிபண்ண மாட்டாரா கேளண்ணா மேலும்
சாதியிலே மட்டமென்று சாற்றுகின்றாய். அம்மட்டோ
வேதியனை நீக்கிடவும் வேண்டுமென்றாய் - ஏது
முடியாதே" என்று முடித்தெழுந்து சென்றான்.
படியேறி நின்றமெய்க் காதல் - துடிதுடிக்கும்
முத்தன் அங்குவந்தான் "முகூர்த்தநாள் நாளைக்கே.
தத்தையை நீமணக்கச் சம்மதமா? - மெத்த
இருந்த சொத்தும் இல்லையப்பா ஏழைநான் நன்றாய்த்
தெரிந்ததா முத்தா? செலவும் விரிவாக
இல்லை மணந்துகொள்" என்றுரைத்தான் ஆளி! அந்தச்
சொல்லால் துளிர்த்துப்பூத் துக்காய்த்து - நல்ல
கனியாய்க் கனிந்திட்ட முத்தன் உளந்தான்
தனியாய் இராதே - "தடைஏன் - இனி" என்றான்
முந்திமணம் ஆயிற்றாம். பாங்கு முறியவில்லை.
தந்திவந்து சேர்ந்ததாம் பின்பு!

Pin It