காரிருள் அகத்தில் நல்ல
       கதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
       பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்த
       உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்
       பிறந்த பத்திரிகைப் பெண்ணே

அறஞர்தம் இதய ஓடை
       ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
       செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
       குவலயம் ஓங்கச் செய்வாய்!
நறுமண இதழ்ப் பெண்ணேஉன்
       நலம்காணார் ஞாலம் காணார்.

கடும்புதர் விலக்கிச் சென்று
       களாப்பழம் சேர்ப்பார் போலே
நெடும்புவி மக்கட்கான
       நினைப்பினிற் சென்று நெஞ்சிற்,
படும்பல நுணுக்கம் சேர்ப்பார்
       படித்தவர். அவற்றை யெல்லாம்
'கொடும்' என அள்ளி உன்தாள்
       கொண்டார்க்குக் கொண்டு போவாய்!

வானிடை நிகழும் கோடி
       மாயங்கள், மாநிலத்தில்
ஊனிடை உயிரில் வாழ்வின்
       உட்புறம் வெளிப்பு றத்தே.
ஆன நற்கொள்கை, அன்பின்
       அற்புதம் இயற்கைக் கூத்துத்,
தேனிதழ் தன்னிற் சேர்த்துத்
       தித்திக்கத் தருவாய் நித்தம்!

சிறுகதை ஒன்று சொல்லிப்
       பெருமதி யூட்டும் தாளே!
அறைதனில் நடந்தவற்றை
       அம்பலத்திழுத்துப் போட்டுக்
கறையுளம் தூய்மை செய்வாய்!
       களைப்பிலே ஊக்கம் பெய்வாய்!
நிறைபொருள் ஆவாய் ஏழை
       நீட்டிய வெறுங்கரத்தே.

ஓவியம் தருவாய்! சிற்பம்
       உணர்விப்பாய்! கவிதை யூட்டக்
காவியம் தருவாய்! மக்கள்
       கலகல வெனச் சிரிப்பு
மேவிடும் விகடம் சொல்வாய்!
       மின்னிடும் காதல் தந்து
கூவுவாய்! வீரப் பேச்சுக்
       கொட்டுவாய்க் கோலத் தாளே!

தெரு பெருக் கிடுவோ ருக்கும்
       செகம்காக்கும் பெரியோர்க் கும்,கை
இருப்பிற் பத்திரிகை நாளும்
       இருந்திடல் வேண்டும்! மண்ணிற்
கருப்பெற் றுருப்பெற் றிளநடை
       பெற்றுப் பின்னர் ஐந்தேஆண்டு
வரப்பெற்றார், பத்திரிகை நாளும்
       உண்டென்றால் வாழ்க்கை பெற்றார்!

Pin It