நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பல மொழிகளுக்குப் பெற்ற தாயாகவும், பல மொழிகளுக்கு வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது. தமிழ்மொழி இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப் பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி. மறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி.

bharathidasanஆயினும், தமிழை ஒழிப்பதன் மூல மாகத் தான் தமிழரை ஒழிக்க முடியும் என்ற முடிவோடு அதன் வளர்ச்சியில் எதிரிகள் தலையிட்டதில் அதன் வளர்ச்சி குன்றிற்று என்பது மறுக்க முடியாது.

தமிழ்மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி. அவ்வி லக்கிய விளக்குகள், உலகை மூடியிருந்த இருளை ஓட்டியது என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. நடு நிலை உலகமே சொல்லும்.

தமிழிலக்கியங்கள் தம் வேலையை மன நிறைவு உண்டாகும்படி முடித்த பின்னரே அது எதிரிகளால் குன்றும் நிலையை அடைந்தது என்பது கருதிநாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

தமிழ் மொழியில் - தமிழ் இலக்கியங் களில் அயலார் புகுந்தனர் என்பதும், புகுந்து கை வைக்கவும் அவர்கட்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் துன்புறத் தக்கதேயாகும்.

நம் தாய்மொழி இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது என்பதை நாம் நினைக்கும் தோறும் அந்நினைப்பு நம் நெஞ்சுக்கு நெருப்பாகி விடுகின்றது.

தமிழை ஒழிக்கும் நோக்கமுடைய வர்க்கு இத்தமிழ் நாட்டில் சலுகை மிகுதி, அவர்கள் தமிழரின் அண்டை யிலேயே குடித்தனம் பண்ணுகின் றார்கள். தமிழ்த் தாயை ஒழிக்கச் சொல் லித் தமிழரையே பிடிக்க அவர்கட்குச் செல்வாக்கு உண்டு.

தாய்மொழியை எதிர்க்கும், அதைக் கொல்ல நினைக்கும், கொல்ல நாடோ றும் ஆவன செய்து வரும் ஒரு கூட் டத்தை நம் தமிழரிற் சிலரே நடத்து கிறார்கள். அவர்கள் சொன்னபடி இவர்கள் ஆடுகின்றார்கள். மானத்தை விடுகின்றார்கள். வயிறு வளர்ப்பதே நோக்கம் என்கிறார்கள்.

எதிரிகளைக் கொண்டே எதிரிகளின் கண்ணைக் குத்த வேண்டும் என்று எண்ணும் நம் இன எதிரிகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள். அன்னை நாடோறும் பட்டுவரும் பாடுஇது. கன்னல் தோறும் கண்டு வரும் இன்னல் இது. என் அன்புத் தமிழர்கள் தம் நெஞ்சு அரங்கிற்குத் திருப்புக முகத்தை, அழ வேண்டாம் எழுக!

அந்தத் தீயர்களை வாழ்த்த வேண் டும் அவர்கள் தீச்செயலுக்கு நன்றி கூற வேண்டும். தமிழுக்குத் தமிழர்க்கு இந் நாள் வரை அவர் செய்த தீமையால் தான் நம் இன்றைய எழுச்சி உணர்ச்சி ஏற்பட்டது.

நல்ல வேளையாக அவர்கள் தம் போக்கினின்று திருந்த மாட்டார்கள் அவர்கள் தீமை வளர்க தமிழர்கள் எழுக. உணர்ச்சி பெறுக.

தமிழ்

தமிழிலக்கியங்களில் - _ இன்று உள்ள தமிழிலக்கியங்களில் ஒன்றேனும் தனித் தமிழில் இல்லையாம். தமிழ்க் கோட்டையிற் புகுந்து கன்னம் வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கை வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கைவைத்த கன்னக்கோல்காரர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.

வளர்ந்துவரும் தனித்தமிழையும் கலந்து வரும் தமிழாக்கிக் கொண்டே இருப்பவர்களாகிய பேடிகள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

இழிந்த கருத்துள்ள செய்யுட்களை உயர்ந்த கருத்துள்ள செய்யுட்களிடையே புகுத்திய மனச்சான்றில்லாத கயவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

தமிழர்களே நம் கடமை என்ன? நாம் இந்நாள் அன்னைக்குச் செய்ய வேண்டிய அருந்தொண்டு என்ன?

தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவா இருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும். தமிழை எதிர்ப்பவன். தமிழைக் கெடுப்பவன் எவனானாலும் அவனைத் தலை தூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும்.

தமிழர்கள் அரசியல் கட்சிகளில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். விட்டு விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்ப் பற்றுக் காவிரிப் பெருக்காகி விட்டது. தமிழர்களைத் தாழ்வாகக் கணக்கிடக் கூடாது எவரும்!

சென்னைத் தமிழ் அமைச்சர்களிற் சிலர் தமக்கு ஆட்களைச் சேர்க்க இப்போதே தமிழின் பகைவர்களின் காலை நக்கத் தொடங்கி விட்டார்கள் அந்த நொள்ளைகளுக்கு இப்போதே சொல்லியனுப்பி விட வேண்டும்.

ஐயா நீவிர் எந்தத் தொகுதியில் நின்றாலும் நீவிர் ஏந்தும் கப்பறையில் கல்லே விழும் என்று. இந்த அமைச்சரவை, இந்தக் கட்சி. இந்த ஆள், நல்ல அவை. நல்ல கட்சி. நல்ல ஆள் என்று தமிழர்கள் மதிப்பிடுவது தமிழுக்கு அவர்கள் செய்த நன்மையை எடை போட்டே.

அவன் எனக்கு வேண்டியவன் என்பதல்ல இப்போது தமிழர்களின் எண்ணம். அவன் தமிழுக்கு வேண்டி யவனா என்பது ஒன்றுதான்.

தமிழர்களின் மதிப்புப் பெற்றவன் இன்று பெற்ற தாயல்லள். தந்தையல் லன். உறவினன் அல்லன். தமிழரின் மதிப்பைப் பெற்றுத் திகழ்வது தமிழரின் தாயாகிய தமிழ்மொழி ஒன்று தான். நீ ஒரு மதத்தவனா? நீ ஒரு சாதியினனா? நீ வேறு இனத்தவனா? இரு!

அந்தப் பற்றுக்களையெல்லாம் விடுவது நல்லது. விடவில்லை. இரு. ஆனால் தமிழ்ப் பற்றுள்ளவனாயிரு., தமிழின் நலன் கருதிப் போராடுகின் றவனாயிரு! அந்தப் போரில் தலை போவதாயினும் அஞ்சாதிரு!

நீ ஒரு அரசியல் அலுவல்காரன்! இரு! ஆனால் தமிழுக்குப் போராட அஞ்சாதே. வயிறு ஒன்றையே கருதித் தமிழைக் காட்டிக் கொடுப்பாரின் தெருவில் திரிவாரின் நண்பரையும் அணுகாதே!

போர்! தமிழ்ப் போர். தமிழ்த் தாய்க்காக! அவள் படும் இன்னலைத் தீர்ப்பதற்காக - தமிழர் தமிழராக மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக போர்!

தமிழ்த் தாய் வெல்க!

தமிழர்கள் விடுதலை எய்துக!

குயில் 23.2.1960

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It