கிருஷ்ண ஜயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜயந்தி தோன்றி விட்டது. “தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன.

தோழர் காந்தியவர்கள் இந்திய அரசியலில் தலையிட்டு இன்றைக்கு ஏறக்குறைய 15 வருஷங்கள் ஆகின்றன. இந்தப் பதினைந்து வருஷ காலங்களில் அவர் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து செலவு செய்யச் செய்தார். பதினாயிரக்கணக்கான நபர்களை அடி, உதை, வசவு முதலியவைகள் படச்செய்தார். 40 ஆயிரம் 50 ஆயிரக்கணக்கான பேர்களை சிறை செல்லச் செய்தார். இந்திய அரசியல் உலகில் மிதவாதிகள், அமிதவாதிகள், ஜஸ்டிஸ்காரர்கள், இந்து, முஸ்லீம்கள், சீக்கியர்கள் முதலிய எல்லாக் கூட்டத்தாரிடமும் சர்வாதிகாரப் பட்டமும் பெற்றார். மேல்ஜாதிக்காரர்கள், ஏழைகள், பணக்காரர்கள் முதலிய எல்லோருக்கும் தாமே தர்மகர்த்தாவாக கருதப்பட்டார். காங்கிரஸ் ஸ்தாபனம் என்பதைத் தனது கால் சுண்டுவிரலால் மிதித்து அடக்கித் தனது இஷ்டம் போல் ஆட்டி வைத்தார் என்கின்றதான பெருமைகளை எல்லாம் பெற்றவர் என்பவராவார்.

gandhi 246அன்றியும் (ஆத்மா என்பதாக ஒன்று உண்டா? இல்லையா? என்கின்ற வாதம் தலை நிமிர்ந்து நிற்கின்ற காலத்தில்கூட) பெரும்பான்மை மக்களால் மகாத்மா என்று கொண்டாடப் படும்படியாகவும் செய்து கொண்டார்.

இன்னும் அநேக காரியம் செய்தார் என்றும் வைத்துக் கொள்ளலாம். இவையயெல்லாம் சாதாரண (அதாவது சராசரி) மனிதனால் செய்துகொள்ள முடியாத காரியம் என்றும் ஒப்புக்கொள்ளுவோம். ஆனால் இவ்வளவு செய்தும் இவ்வளவு சக்தி உடையவராய் இருந்தும், இவ்வளவு பெருமை பெற்றும் இவரால் மனித சமூகத்துக்கு நடந்த காரியம் என்ன? இதனால் எல்லாம் ஏற்பட்ட பலன் என்ன? என்பதே அறிவியக்கக்காரர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். இது ஒரு புறமிருக்க,

இப்போது அப்படிப்பட்ட காந்தியாரின் ஆட்ட பாட்டமெல்லாம் அடங்கி கடைசியில் “எல்லாம் கடவுள் செயலில்” வந்து நின்று “எனக்கு ஒன்றும் புரியவில்லையே” “என்னை இருள் சூழ்ந்து கொண்டதே” “மேலால் என்ன செய்வது என்பது எனக்கு விளங்கவில்லையே” “கடவுள் ஒரு வழிகாட்ட வேண்டியிருக்கிறதே” என்கின்ற பல்லவியில் வந்து விட்டார்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் அவரிடம் உள்ள கடைசி ஆயுதத்தையும் காட்ட ஆரம்பித்து விட்டார். அதாவது பொதுவுடமைப் பூச்சாண்டியைக் காட்டுவது. எப்படியெனில் தன் வாயால் ஒன்றும் சொல்லாமல் தன்மீது எவ்வித பொறுப்பும் போட்டுக் கொள்ளாமல் தோழர் ஜவகர்லால் அவர்கள் வாயினால் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம் பொதுவுடமையை ஜாடை காட்டச் செய்து ஓரளவுக்கு அதை ஒத்துக்கொள்ளுவது போல் (பின்னால் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு இடம் வைத்துக் கொண்டு) பேசி சர்க்காரை மிரட்டுகிறார்.

அதாவது தன்னுடன் சர்க்கார் ராஜிக்கு வரவில்லையானால் “பொதுவுடமைக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்து விடுவேன்” என்கின்ற ஜாடை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

இதை ஏன் அடிக்கடி சொல்லுகிறோம் என்றால் தோழர் காந்தியார் முன்பு பட்டினியினிமித்தம் வெளி வந்து பூனா மகாநாடு நடத்தி விட்டு மறுபடியும் தனிப்பட்ட சத்தியாக்கிரகம் செய்து சிறை செல்லும் போது சர்க்காருக்குக் கொடுத்த ஒரு ஸ்டேட்மெண்டில் இதே மாதிரி சர்க்காரை மிரட்டுவதற்குப் பொதுவுடமை ஜாடையை உபயோகித்துக் கொண்டார்.

அதாவது “ஜனங்களிடம் நான் கலந்து பார்த்ததில் மேல் ஜாதிக்காரருக்கும், கீழ்ஜாதிக்காரருக்கும், பணக்காரருக்கும், ஏழைகளுக்கும், பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையில் சீர்கெட்டு இருக்கிறதாக அறிந்தேன். இதனால் சொத்துக்கும், உயிருக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று அவரவர்கள் பயப்படுகிறார்கள். இந்த சமயத்தில் அஹிம்சாவாதியான நான் ஜெயிலில் இருப்பதே முறை” என்று சொல்லியிருக்கிறார். இதற்கு ராஜ கோபாலாச்சாரியாரும் ஒத்துப்பாடி இருக்கிறார்.

இப்பொழுது ஜெயிலில் இருந்து வந்த பிறகும் முன்காட்டியபடி தோழர் ஜவகர்லாலின் பொருளாதாரத் திட்டத்தை ஒப்புக்கொள்ளுவதாகவும் ஆனால் அவ்வளவு தூரம் போக முடியாதென்றும் சொல்லுகிறார். எவ்வளவோ முக்கியமானதும் அவசியமானதும், கட்டாயம் நடந்து தீர வேண்டியதுமான ஒரு கொள்கையைக் காரியத்தில் நடத்துவிக்கின்றதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யாமல் அல்லது அது செய்ய முடியாவிட்டால் பேசாமல் வாயை மூடிக் கொண்டாவது இருக்காமல் அதை வீண்மிரட்டலுக்கும் தனது சுயநலத்துக்கும் உபயோகப்படுத்தி “அதில் பலாத்காரம் வந்து விடும் ரத்தக்” களரி ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் பேசி கெடுக்கச் செய்வது என்றால் யார் தான் இச்செய்கையை பொறுக்க முடியும்?

அன்றியும் மனித சமூகத்திய இயற்கை சக்திகளையெல்லாம் பாழாக்கி இயற்கையான வழிகளையெல்லாம் அடைத்துச் செல்வவான்களையும், சூட்சிக்காரர்களையும் (பார்ப்பனர்களையும்) சுவாதீனப்படுத்திக் கொண்டு காரியத்துக்கு உதவாத வழிகளில் மக்களைத் திருப்பி மனித சமூகத்தைப் பாழாக்கி வைத்த பெருமையை என்றென்றும் கொண்டாடுவதற்கு அறிகுறியாய் காந்தி ஜயந்தி வருஷா வருஷம் கொண்டாடுவதென்றால் இதன் அக்கிரமத்திற்கு எப்படித்தான் பரிகாரம் செய்வது என்பது நமக்கு விளங்கவில்லை.

தோழர் காந்தியாருக்கு இன்று ஜயந்தி கொண்டாடுவதற்கு வேண்டிய யோக்கியதை வந்ததற்குக் காரணம் (இவரால் இதுவரை மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படவில்லை என்றாலும்) பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் இருந்து வந்த காரணமே ஜயந்தி கொண்டாடும் யோக்கியதையை சம்பாதித்து கொடுத்து விட்டது. நமது நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கும் அபார சூழ்ச்சித் தன்மைக்கும் அற்புத புரட்டுத் தன்மைக்கும் இந்த காந்தி ஜயந்தி ஒரு பெரும் உதாரணமாகும். இன்று ஜயந்தி கொண்டாடத்தக்க “பெரியார்கள்” எல்லாம் இந்த யோக்கியதை அடைந்தவர்கள் தான் என்பதும் விளக்க இது ஒரு உதாரணமாகும்.

கம்ப ராமாயணத்தில் ஆரம்பத்தில் கம்பன் பார்ப்பனர்களுக்குச் சொன்ன காப்பு விருத்தத்தின்படியே தோழர் காந்தியாரும் பார்ப்பனர்களை உயர்த்தி அவர்களுக்கு அடி பணிந்து வந்ததாலேயே இன்று காந்தி ஜயந்தி நடந்து வருகிறது. அதாவது,

“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்,

நிலை பெறுத்தலும் நீங்கலு நீங்கிலா,

அலகிலா விளையாட்டுடையா ரவர்,

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”

என்ற பாட்டுப்பாடியே தூணைத் துரும்பாக்கவும், துரும்பைத் தூணாக்கவும் உள்ள பார்ப்பன சக்தியில் இன்று எவ்வளவோ காரியங்கள் அஸ்திவாரம் சிறிதுகூட இல்லாமல் நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த காந்தி ஜயந்தி. இதுபோலவே மற்றொரு விஷயம் என்னவென்றால், தோழர் அன்னிபெசண்டம்மையார் செத்து பத்து நாள்கூட ஆக வில்லை. ஆனாலும் அந்தம்மையாரின் சூக்ஷம சரீரம் அதற்குள் பூலோக ஜனங்களோடு பேச ஆரம்பித்து விட்டது. இந்த அம்மையாருக்கும் இவ்வளவு யோக்கியதை ஏற்பட்டதின் காரணம் அந்தம்மாளும் பார்ப்பனீய தாசராய் இருந்து பார்ப்பனப் பிரசாரம் செய்து வந்து செத்ததேயொழிய வேறு ஒன்றுமில்லை.

தவிர, தோழர் காந்தியாருக்கு ஜெயந்தி கொண்டாடும் விஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இதில் கலந்து கொள்ள முடியுமா? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும். ஜாதி பாகுபாடு (வருணாச்சிரமம்) விஷயத்தில் தோழர் காந்தியவர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு நிரந்தர இழிவை உண்டாக்கி இருக்கும் விஷயமும், ஹரிஜன இயக்கம் என்னும் பேரால் செய்துவரும் சூட்சியும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. வருணாச்சிரம தர்மத்தை ஆதரிப்பதினாலும் உறுதிப்படுத்துவதினாலும் பார்ப்பனரல்லாதார் நிலை என்னவாகின்றது?

அன்றியும் “ஹரிஜன முன்னேற்ற” விஷயத்தில் காந்தியார் தனது வாக்கு மூலத்தில் குறித்தது என்னவென்றால்,

“கோவில், குளம், கிணறு, பள்ளிக்கூடம் முதலியவைகளில் பிராமணரல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் தீண்டப் படாதவர்களுக்கு ஏற்படவேண்டும்”.

“இதுவரை தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுபவர்கள் இனி சூத்திரராகக் கருதப்படுவார்கள்”

“தீண்டாமை ஒழிந்தபின் பிராமணர்களுக்கும் தீண்டாதவர்களுக்கும் எப்படிப்பட்ட சம்மந்தம் எப்படிஇருக்குமென்றால் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாதார்களுக்கும் இருந்து வரும் சம்மந்தம் போலிருப்பார்கள்”.

“வருணாச்சிரமதர்மத்தை மதத்தின் தத்துவக் கொள்கைகளுக்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்”

என்று சொல்லியிருக்கிறார்.

இது “ஜெயபாரதி” என்னும் பத்திரிகையின் காந்தி ஜெயந்தி மலர் 9ம் பக்கத்தில் காந்தியாரின் வாழ்க்கைச் சம்பவ நிகழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இதைப் பற்றி முன்பு ஒருதடவை எழுதியும் இருக்கிறோம். பார்ப்பன ரல்லாத தேசீயவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இரண்டொருவர்கள் இடமும் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்தும் இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேசம் பெரியதேயொழிய தேசத்தில் தன்னுடைய நிலைமை எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் போலவே காட்டிக் கொண்டார்கள்.

மானத்தை விற்று மனிதத் தன்மையை இழந்து வாழ்ந்து தீர வேண்டிய அளவு சோம்பேறிகளும், கோழைகளுமானவர்களுக்குத் “தேசம் பெரிது” என்கின்ற சாக்கு ஒரு உற்ற தோழனாய் இருந்து வருகின்றது, வந்தும் இருக்கிறது என்று கருதிக்கொண்டு அந்த சம்பாஷணையை நிறுத்திக் கொண்டோம்.

ஆகவே இப்படிப்பட்ட நிலையில் பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப் பாடுபட்ட ஒரு “மகானின்” ஜெயந்திக்குப் பார்ப்பனரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்ன பேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. விஷயம் இவ்வளவோடு முடியவில்லை. ஏனென்றால் காந்தி ஜயந்தியை விட மானமற்றதும், இழிவானதும் மடமையானதுமான ஒரு காரியமாகிய தீபாவளி என்னும் ஒரு பண்டிகையையும் நாளை கொண்டாடப் போகும் சுயமரியாதை அற்ற தன்மை, காந்தி ஜயந்திக்கு ஒரு உதாரணமாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 15.10.1933)

Pin It