periyar 221பொதுவுடமைக்கும் சுயராஜ்யத்துக்கும் சம்மந்தமில்லை

சுயராஜ்யம் என்பது அரசியலைப் பொருத்தது. அது எந்த தேசத்தை, யார் ஆளுகிறது என்பதையே முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுடமை என்பது பொருளாதாரத்தையே முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுட மைக் கொள்கையைப் பற்றிய விஷயத்தில் ஆட்சி செய்பவர்கள் யார் என் பதைப் பற்றியோ, எந்த தேசம் ஆதிக்கமுள்ளதாய் இருக்க வேண்டுமென்று எல்லை கட்டுவதிலோ பிரவேசிக்க வேண்டிய அவசியமே இல்லை. பொது உடமை என்பது மேல் குறிப்பிட்டபடி வெறும் பொருளாதாரப் பிரச்சினையே ஆகும். அதுவொரு கணக்குப் பிரச்சினை என்றும் சொல்லலாம். உலகத்தை ஒரு குடும்பமாக்கி உலக மக்களை ஒரு குடும்ப மக்களாக்கி உலக செல்வத்தையும் சுக துக்கத்தையும் அக்குடும்பத்துக்குப் பொதுவாக்கி அக்குடும்ப மக்கள் எல்லோரும் அக்குடும்ப சொத்துக்களை சரிசமமாய் அனுபவிக்கும்படி செய்யும் முறையே பொது உடமைத் தத்துவமாகும்.

இதனால் யாருக்கும் ஏற்றத்தாழ்வோ ஜாஸ்தி கம்மியோ இல்லாமல் இருக்கும் என்கின்ற முடிவின்பேரிலும் உலக வாழ்க்கையில் மக்கள் உயர்வு தாழ்வும் ஜாஸ்தி கம்மியும் அனுபவிப்பது மனித இயற்கை என்றும் இந்தப் படி இருக்கவே மனிதன் ஏற்பட்டவன் என்றும் இந்தப்படியான வித்தியாச வாழ்வு அமைப்பு அவனவன் முன்ஜன்ம கர்மப்படியும் கடவுள் சித்தப்படியும் ஏற்பட்டதென்றும் சொல்லும் கொள்கையை அடியோடு தப்பு என்கின்ற முடிவின் பேரிலும் இப்பொதுவுடமைக் கொள்கை கண்டுபிடிக்கப்பட்டு அது சில இடங்களில் அனுபவத்தில் இருந்து வருகின்றது.

ஆகையால் இக்கொள்கையை வற்புறுத்துகின்றவர்கள் இன்னார் ஆள வேண்டும் என்கின்ற பிடிவாதம் இல்லாமல் இன்ன கொள்கையின் மீது ஆளப்பட வேண்டும் என்கின்ற பிடிவாதத்துடன் கிளர்ச்சியோ புரட்சியோ செய்து புரட்சி ஏற்படுத்த வேண்டியது வாலிபர் கடமையாகும்.

(குடி அரசு - கட்டுரை - 17.09.1933)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.