இயந்திர ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமானால் இன்றைய நிலையில் தொழிலாளிகளுக்கு வேலை நிறுத்தம் செய்யும்படி போதிப்பதிலேயே உண்மையான அனுகூலம் ஏற்பட்டு விடாது.

தொழிலாளிகளுக்கு, மில் ஏஜண்டுகளும், நிர்வாகிகளும் அடிக்கும் கொள்ளையைப் பற்றி விளக்கிக் காட்ட வேண்டும். ஏனென்றால் தொழிற் சாலைகளில் முதல் போட்ட முதலாளிகள் அடையும் லாபத்தைவிட நிர்வாகிகளும், உத்தியோகஸ்தர்களும் அடிக்கும் கொள்ளையே அதிகம். நிர்வாக ஏஜெண்டுகளுக்கு பொருப்புக் கிடையாது. உதாரணமாக ஒருவர் துணி நெய்யும் ஆலையையோ, ஒரு நூல் நூற்கும் ஆலையையோ ஏற்படுத்தி விட்டாரேயானால் அதன் நிர்வாக ஏஜெண்டு என்கின்ற முறையில் தனக்கு ஒருசம்பளம், கமிஷன் முதலிய லாபங்களை ஏற்படுத்திக் கொள்ளுகிறார். இவருக்கு இந்தச் சம்பளமும், கமிஷனும் மில்லுக்கு லாபம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் அதைப் பற்றி பொருப்பு இல்லாமல் கிடைத்து வரும்படி ஏற்பாடு செய்து கொள்ளுகிறார். இது தவிர சுயநலமாகவும், நம்பிக்கைத் துரோகமாகவும் மற்ற தனது நண்பர்களுக்கு அல்லது தனக்குப் பல பேர்களில் வேண்டியவர்கள் என்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், தாக்ஷண்யம் காட்ட வேண்டும் என்பதற்காகவும் நடந்துகொள்ளும் முறையில் ஆலைக்கு ஏற்படும் நஷ்டம் அதிகமாக ஏற்பட்டு விடுகின்றது. மில்லின் ஏஜண்டு தொழில் அனுபோகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொழில் பார்ப்பதில் தனக்கு அதிக தொந்திரவு இல்லாமலிருப்பதற்காக வேறு பல நிர்வாகஸ்தர்களை நியமிப்பதில் அதிக சம்பளம் கொடுத்து மில்லுக்கு நஷ்டம் உண்டாக்கி விடுகின்றார்.periyar with dogமற்றும் மானேஜர், இஞ்சினீயர் என்பவர்கள் போன்ற உத்தியோகஸ்தர்களுக்கும் அதிக சம்பளம் கொடுப்பதில் மில்லுக்கு நஷ்டம் உண்டாக்கி விடுகின்றார். மில் ஏஜண்ட் அதாவது மேனேஜிங் ஏஜண்டு என்பவர் உத்திரவாதம் இல்லாத நிலையில் தனக்கு ஏராளமான வருவாயை உண்டாக்கிக் கொண்டிருப்பதோடு சாயந்தரம் 4-மணிக்கு மோட்டார்காரில் ஆபீசுக்கு வந்து 4, 5 கடிதங்களில் கையெழுத் தைப் போட்டுவிட்டு நேரே அங்கிருந்து கிளப்புக்குப் (club) போய்விடுவார். அங்கு டென்னிஸ், சீட்டு (சூது) ஆட்டம் ஊர் பெரியதன உற்சாகப்பேச்சு மற்றும் சில காரியங்களில் கேளிக்கை முதலிய உல்லாச வாழ்க்கையில் அதிகக் கவலைகொண்டு வாழ்ந்துவருவார்.

மில் சம்மந்தமாகத் தனது சகல காரியங்களை ஆதரிக்கவும், தனது திறமையைப்பற்றி புகழவும் தன் இஷ்டப்படி சில டைரக்டர்களை தெரிந்தெடுத்து அவர்களில் சிலருக்கும் ஏதோ சிறிதளவு மில் ஆலையின் சம்மந்த மாக தாக்ஷண்யம் காட்டி வர வேண்டும். இவ்வளவு அக்கிரமச் செலவுகளும் பொருப்பற்ற காரியங்களும் நிர்வாக துஷ்பிரயோஜனங்களும் தாண்டி மில்லுக்கு பங்கு போட்ட முதலாளிமாருக்குப் போட்டி போட்டுக் கொண்டு லாபம் பங்கிட்டுக் கொடுக்க முயல வேண்டும். ஆகவே இவைகளுக் கெல்லாம் யார் தலையிலாவது கையை வைத்துத் தீர வேண்டியதாய் நேரிடுகிறது என்பதை விளக்கிக் காட்டி தொழிலாளர்களுக்குப் போதிக்க வேண்டும். தொழிலாளிகளே நேரில் சட்டசபை, ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியவைகளுக்குப் போய் அவர்களது நன்மைக்கு ஏற்ற சட்டங்களையும், சௌகர்யங்களையும் செய்து கொள்ளக் கற்பிக்கப்பட வேண்டும்.

முதலாளிகளுக்கும் - தொழிலாளிகளுக்கும் மத்தியில் இருக்கும் தரகர்களை ஒழிக்கும்படிக் கும், சர்க்காருக்கும்-தொழிலாளிகளுக்கும் மத்தியில் இருக்கும் தரகர்களை யும் ஒழிக்கும்படிக்கும் தொழிலாளிகளுக்கு கற்றுக் கொடுத்தால்தான் அவர்கள் தங்களுக்கும், தங்களால் செய்யப்பட்ட வேலையின் பயனாய் ஏற்பட்ட சாமான்களை வாங்கி அனுவிப்பவர்களுக்கும் இடையில் உள்ள தரகர்களை ஒழிக்கமுடியும். தொழிலாளர் நன்மை, தொழிலாளர் விடுதலை, தொழிலாளர் சுதந்திரம் என்பதின் ரகசியமெல்லாம் தரகர்களை ஒழிப்பதிலும் அழிப்பதிலுந் தான் இருக்கின்றதே யொழிய வேறு எதிலுமில்லை. இந்த உண்மையை அறிந்த தொழிலாளி தான் தனது உலகத்தை ஆளமுடியும். அப்படிக் கில்லாதவரையில் “சுயராஜ்யத்தில் தான்” அதாவது தேசீய முதலாளிகளின் ஆக்ஷியில்தான் தொழிலாளியாய் இருக்க முடியும்.

சமூகத்தொண்டு

நாம் ஏதாவது மனித சமூகத்துக்கு தொண்டு செய்யவேண்டுமானால் வைதீகர்களுடைய கொடுமைகளையும், பணக்காரர்களுடைய அக்கிரமங்க ளையும், பொது ஜனங்களுக்குள் (முக்கியமாய் ஏழைப்பாமரக் கூலி ஜனங் களுக்குள்) பிரசாரம் செய்ய வேண்டும்.

இதற்கு சர்க்காரை துவேஷிக்கவேண்டியதோ, அல்லது சட்டம் மீற வேண்டியதோ போன்ற அவசியம் ஒன்றும் இன்று இல்லை.

குறிப்பு:- இவைகளுக்கு உதாரணம் வேண்டுமானால் கீழே தருகிறோம்.

இங்கிலாந்தில், தொழிலாளிகளுடைய ஆட்சியே உலக ஆட்சியாய் இருக்க வேண்டுமென்கின்ற பொதுவுடமைக் கட்சியார் என்பவர்கள், அங்கு தொழில் கட்சி என்கின்ற அரசியல் கட்சியையும், டிரேட் யூனியன் என்னும் தொழிலாளர் கட்சியையும் முதலில் ஒழிக்க வேண்டும் என்று தான் பாடு படுகிறார்கள். ஏனெனில் இப்போது அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் கொடுமையும், அக்கிரமமும், தொழிலாளிகளுக்கு நேரே தெரிகின்றபடியால் அவர்களுக்கு அதைப்பற்றி எடுத்துச் சொல்லி விளங்க வைக்க வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை.

ஆனால் அதற்கு எதிர் கட்சியில் இருந்து அந்த அரசாங்கத்தைத் தங்கள் வசப்படுத்தி தாங்கள் ஆதிக்கம் செலுத்த சூழ்ச்சி செய்யும் அதே கூட்டத்தார்களின்-அதாவது இப்பொழுது ஆட்சியில் இருக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களுடைய சூழ்ச்சிகளாகிய “தொழிலாளர் இயக்கம்” “டிரேட் யூனியன் இயக்கம்” ஆகியவைகளின் சூழ்ச்சிகளால் தொழிலாளர்கள் ஏமாந்து போய் விடுகிறார்கள். ஆதலால் அவர்களின் சூழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டியதாகின்றது என்பது அவர்களது (பொதுவுடமைக்காரர்களது) கருத்து. இந்த வேலையைச் செய்வதில் அரசாங்கத்தாரோடு நேரே விரோதித்துக் கொண்டாக வேண்டும் என்கின்ற அவசியமில்லை. முதலாளி ஆதிக்கங்கள் ஒழியும்போது அவற்றுள் ஒரு உறுப்பாகிய முதலாளி வர்க்க ஆட்சி ஒழிந்தே தீரும். ஒரு சமயம் அரசாங்கத்தை நேரே தாக்க வேண்டி இருந்தாலும் அது முதலாளித்துவம் தடுத்துக் கொண்டிருக்கிறது என்கின்ற காரணத்துக்காகவும் ஏகாதிபத்திய தத்துவத்தைக் கொண்டிருக்கின்றது என்கின்ற காரணத்துக்காகவும், அந்த அளவுக்கு தாக்க வேண்டியதே ஒழிய அது இன்ன தேசத்து ஆட்சி, இன்ன ஜாதி ஆட்சி என்பதற்காக தாக்க வேண்டிய அவசியமே இல்லை.

இந்த விபரங்கள் எல்லாம் தொழிலாளர்கள் அறிந்து அவர்கள் வேலை செய்தாலொழிய தொழிலாளர் துயரம் ஒரு நாளும் தீர்ந்து விடாது.

வெள்ளையர் கையிலிருக்கும் ஆட்சியைப் பிடுங்கி கருப்பர்கள் கையில் கொடுத்து விடுவதாலும் சாத்தியப்பட்டு விடாது. இந்தக் கொள்கையால் வெள்ளை முதலாளிக்கு பதிலாக கருப்பு முதலாளிதான் ஆட்சி செய்யக்கூடிய நிலைமை வந்துவிடும்.

முதலாளித் தன்மையில் கருப்பு முதலாளியைவிட வெள்ளை முதலாளியே மேலானவன். அவனுக்கு அற்பபுத்தி கிடையாது. எப்படி என்றால் தொழிலாளி பிறவியில் கீழ்ஜாதி என்று கருத மாட்டான். சமமாய் இருக்க உரிமை இல்லை என்று சொல்ல மாட்டான். மேலே வேஷ்டி போடக் கூடாது, குழந்தைகளுக்கு கீழ் வேஷ்டி கட்டக்கூடாது என்பதுபோன்ற “வேத” விதிகள் “தர்ம சாஸ்திர” நிபந்தனைகள் வெள்ளையனுக்கு கிடையாது.

ஆகையால் தொழிலாளிகளுக்கு முதலாளி ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்கின்ற ஒரு நோக்கம்தான் இருக்க வேண்டும்.

(குடி அரசு - கட்டுரை - 13.08.1933)

Pin It