ஓ தேசியவாதிகளே! தேசியப் பத்திராதிபர்களே!!
சுயமரியாதைப் பிரசாரங்கள் நடக்கின்ற பக்கங்களில் கலகங்கள் நடப்பதாகவும், அடிதடிகள் நடப்பதாகவும் கற்பனைகள் செய்தும் இழிபிறப்பு ரிபோர்ட்டர்களின் நிரூபங்களை நம்பியும் நடவாத சங்கதிகளை பத்திரிகைகளில் போட்டு “நேற்று” மகிழ்ந்தீர்கள்.
சுயமரியாதை இயக்கம் செத்தது என்று பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்தால் உலகத்தார் கண்களும் மூடப்பட்டிருக்கும் என்று கருதிய திருட்டுப் பூனைகள் போல் நடித்தீர்கள். முடிவில் என்ன நடந்தது? என்று பார்த்திருப்பீர்கள்.அதாவது உங்கள் வயிர் வளர்ப்புக்கு ஆதாரமாயிருக்கும் காங்கிரசின் யோக்கியதை - ஹரிஜன சேவையின் யோக்கியதை “இன்று” எப்படி இருக்கின்றது? எத்தனை பக்கம் கலகம்? எத்தனை பக்கம் தடியடி? எத்தனை பக்கம் கல்லடி? எத்தனை பக்கம் ரத்தக்காயம்? எத்தனை பக்கம் மண்டை உடை? எத்தனை பக்கம் விரட்டி அடித்தல்? எத்தனை பக்கம் காங்கிரஸ்காரரே கூட்டத்தை கலைத்துக் கொண்டு வாலை இடுக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தல்? எத்தனை பக்கம் புரட்டு? இவைகள் தேசீயப் பத்திரிகைகளிலிலேயே சேர்ந்த நிரூபர்கள் பேரால் காணப்படுகின்றதே, இவை பொய்யா? இதைச் செய்தவர்கள் எல்லாம் புத்திசாலிகளா? அல்லது மடையர்களா? மேன்மக்களா? அல்லது கீழ்மக்களா? தேசீயவாதிகளா? தேசத்துரோகிகளா? அல்லது இதைச் செய்தவர்கள் எல்லாம் வீரர்களா? அல்லது காங்கிரஸ்காரர்களுக்குப் புத்தி கற்பித்தவர்களா? யோசித்துப்பாருங்கள் தட்டிப் பேச ஆளில்லாத காரணத்தால்தானே சண்டப்பிரசண்டர்களாய் விளங்குகிறீர்கள்? “அளந்த வள்ளம் அட்டாலியில் இருக்கும்” என்பதை அறியாமல் தானே போக்கிரித்தனமாய் எல்லாம் எழுதிவிட்டீர்கள்.
மற்றும் செருப்படி ஜோட்டடி என்றெல்லாம்... ... ... தனமாய் எழுதி மகிழ்ந்தீர்களே! இப்பொழுது உங்களுக்கு உங்கள் சங்கதியே பட்டதெல்லாம் போதும் என்று ஆய்விட்டதே! ! இனியாவது புத்தியாய், யோக்கியமாய் பிழையுங்கள் என்று ஞாபக மூட்டவே இதை எழுதினேன். ஆத்திரப்படுவதில் பயனில்லை. முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் என்பது உண்மை அனுபவமாய் விடவில்லையா? மற்றும் தோழர் காந்திக்கு கொடும்பாவி சட்டி திருப்பூரில் இழுக்கப் படவில்லையா? தோழர் காந்திக்கு கருப்புப் புஷ்பம் கராச்சியில் கொடுக்கவில்லையா? தோழர் காந்திக்கு கருப்புக் கொடி பம்பாயில் பிடிக்கவில்லையா? தோழர் காந்தி மீட்டிங்குகளில் தமிழ் நாட்டில் குழப்பம் நடக்கவில்லையா? காந்தி ஒழிய! காந்தீயம் ஒழிய!! காங்கிரசு ஒழிய!!! என்று கராய்ச்சியில் ஆயிரக்கணக்கான பேர் கூப்பாடு போடவில்லையா? “கடவுள் சித்தமில்லாமல் காந்தியும் காங்கிரசும் ஒழியாது” என்று தோழர் காந்தி உலகத்தாருக்கு தைரியம் சொல்லவில்லையா? சுயமரியாதைக் கூட்டத்தில் காலித்தனம் செய்தது காங்கிரஸ்காரர்கள் என்பதை காங்கிரஸ்காரர்களே மறுக்க முடியாது. ஆனால் காங்கிரஸ் கூட்டத்தில் “காலித்தனங்கள்” செய்ய மேல் கண்ட நடவடிக்கைகளில் ஒரு சிறிதும் சுயமரியாதைக்காரர்களால் நடத்தப்பட்டது அல்ல என்பதை நீங்களே ஒப்புக் கொள்ளுவீர்கள்.
ஆகவே, ஜனங்களுக்கு காலித்தனங்கள் செய்ய இன்று உபாத்தியாயர்களாய் இருப்பது எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், யாருடைய சிஷ்யர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் என்பதை இப்போதாவது உலகம் உணரட்டும்.
(' சுமைதாங்கி' என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - கட்டுரை - 15.01.1933)
***
வருந்துகிறோம் - ராவ்பகதூர் அப்பாசாமி முதலியார் மரணம்
9-1-33 இரவு செங்கற்பட்டு பிரபல வியாபாரியும், ஜமீன்தாரும், நிலச்சுவான்தாருமான தோழர் ராவ்பகதூர் அப்பாசாமி முதலியார் அவர்கள் சென்னையில் உயிர் துரந்தார் என்ற சேதியைக் கேட்டு மிக வருந்துகிறோம். இவர் செங்கற்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மகாநாட்டிற்கு மூல புருஷராயிருந்து நடத்தினவர். சீர்திருத்தத் துறையில் வெகு தூரம் முற்போக்கு டையவர். ஏழைகளிடத்தில் மிகுதியும் அன்பும் இரக்கமும் உடையவர். இவர் இறந்தது அந்த ஜில்லாவாசிகளுக்கு ஒரு பெருங்குறைவேயாகும்.
(குடி அரசு - இரங்கல் செய்தி - 15.01.1933)