இந்துக்கள் மாயவலை

பொதுவாக உலகில் வாழும் ஜீவப் பிராணிகளெல்லாம் இன்பத்தையே அடைய விரும்புகின்றன. இது உலக சுபாவமாகும். இது போலவே அறிவில் சிறந்தவர்கள் என்று கருதப்படும் மனிதர்களும் இன்பத்தோடு வாழ விரும்புவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் மற்ற ஜீவப் பிராணிகளுக்கும், மனிதர்களுக்கும் தாங்கள் சௌக்கிய மடையும் விஷயத்தில் ஒரு வித்தியாசம் மாத்திரம் உண்டு. மற்றய பிராணிகள் வேறுள்ள ஜீவன்களையெல்லாம் தங்களுக்கு அடிமையாக வைத்துக் கொண்டு, அவைகளின் உழைப்பால் தாங்கள் கஷ்டப்படாமல் சௌக்கியமாக ஜீவிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒவ்வொரு ஜீவப் பிராணி வகையும் தாமே உழைத்து வருந்திச் சௌக்கியமடைகின்றன. ஆனால் மனிதன் மாத்திரம் பிற மனிதன் தமக்குக்கீழ் அடங்கி நடக்கும்படி செய்து, அவர்கள் உழைப்பைக் கொண்டு, தான் சிறிதும் கஷ்டப்படாமல் சுகம் அனுபவிக்க ஆசைப் படுகின்றான். இக்குணம் முற்காலத்தில் ஒரு மனிதனிடம் உற்பத்தியாகி, பின்பு அது பல மனிதர்களிடம் பரவி, கடைசியில் ஒரு கூட்டத்தினரிடம் நிலைத்து விட்டது என்று யூகித்துக் கூறுவது பொருத்தமாக இருக்கலாம். இக்குணத்திற்கே ‘சுயநலம்’ என்று சொல்லப்படுவது. இக்குணத்தையே தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக உலகில் இருந்து கொண்டுதான் வருகிறது.

இக்கூட்டத்தினரின் சூழ்ச்சியினால் தான் உலகில் தற்போது நமது கண்முன் காணப்படும் எண்ணற்ற சாதிப் பிரிவுகளும், மதவேற்றுமைகளும், கொடுமைகளும், குருட்டுப் பழக்க வழக்கங்களும் ஏற்பட்டு நிலை பெற்று வருகின்றன.periyar and karunanidhi 3எங்கும் “சமத்துவம்” “சகோதரத்துவம்” “விடுதலை” “சுதந்திரம்” என்னும் வார்த்தைகள் தோன்றி சுயநலக்கூட்டத்தாரின் சூழ்ச்சியால் அடிமைப்பட்டு மனிதத் தன்மையை மறந்து கிடந்த மக்களை விழிக்கச் செய்கின்ற இக்காலத்திலும் பரம்பரையாக கஷ்டமின்றிச் சுகம் அனுபவித்து வந்த கூட்டத்தார் தங்கள் சுயநலத்தை விட்டுக் கொடுக்கச் சம்மதிக்காமலிருப்பதில் ஆச்சரியமில்லை. நெடுங்காலமாக அனுபவித்து வந்த சௌக்கியத்தைத் திடீரென்று எப்படி தியாகம் பண்ணிவிட முடியும்? தங்கள் சமத்துவத்திற்குப் போராடத் தூக்கத்தினின்று எழுந்து புதிய ஊக்கத்துடன் முன்வந்திருக்கும் மக்களை மீண்டும் அடிமைப் படுகுழியில் வீழ்த்தவே முயற்சி செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் “மனுதருமத்தை”ச் சட்டமாகவும், அதை ஆக்கிய பார்ப்பனர்களை மந்திரிகளாகவும், குருமார்களாகவும் வைத்துக் கொண்டு அரசாண்ட இந்திய மன்னர்களின் அரசாட்சி ஒழிந்து “பிரிட்டிஷ்” அரசாட்சி ஏற்பட்டதின் பலனாக, இன்று மனிதத் தன்மையை மறந்து அடிமையாகக் கிடந்த மக்கள், தங்கள் மனிதத் தன்மையைப் பெற முயற்சிக்கின்றனர். பழய இந்து மன்னர்களின் அரசாங்கம் இப்பொழுதும் நமது நாட்டில் நிலைத்திருக்குமாயின் இன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் விரும்புவது போலவும், கிளர்ச்சி செய்வது போலவும், சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் கிளர்ச்சி செய்வார்களானால் கட்டாயம் அச்சமூகத்தார் முழுவதும் சித்திரவதைக்கும் சிரச் சேதத்திற்கும் உட்படுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டபின் தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் கொஞ்சம் கல்விப் பெற்றதன் பயனாலும், தாங்களும் மற்றவர்களைப் போல் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்ததன் பயனாலும், தாங்கள் உழைக்க பிறர் அதைக் கொண்டு உயிர் வாழ்ந்து, தங்கள் தலை மேலேயே உட்கார்ந்து கொண்டு அமிழ்த்திக் கொண்டிருக்கும் கொடுமையை உணர்ந்ததன் பயனாலும், தாங்கள் இந்துக்களினின்றும் தனியாகப் பிரிந்தாலொழிய தங்களுக்கு ஒருவித விமோசனமும் ஏற்படாது என்பதை அறிந்து அதற்காகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இக்கிளர்ச்சி சமூகத்திலிருந்து ஆரம்பித்து அரசியலிலும் நுழைந்து விட்டது.

இந்துக்களின் அரசாட்சி ஒழிந்துவிட்ட கால முதலே அவர்கள் ஆதிக்கமும் குறைந்து விட்டது. ஆகையால் எப்பொழுதும் அடக்கி ஆண்டு வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை மதத்தைக் கொண்டாவது. வேத சாஸ்திரங்களைக் கொண்டாவது, பலாத்கார அதிகாரத்தைக் கொண்டாவது இனியும் அடக்கி வைத்திருக்க முடியாது என்பது நிச்சயம். ஆகவே அரசியல் ஆதிக்கம் பெற்றால் தான் அவர்களை முன்போல அடக்கி ஆளமுடியும். இந்தக் காரணத்தால் தான் வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து தங்கள் கையில் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் வைத்துக் கொள்ளக் கூடிய “சுயராஜ்ய”த்திற்காகச் செய்யப்படும் கிளர்ச்சியில், உயர்ந்த சாதிக்காரர்களும், வைதீகர்களும், மத பக்தர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

திரு. காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்காரர்களும், பண்டித மாளவியா, திரு மூஞ்சே யுள்ளிட்ட இந்து மகாசபைக்காரர்களும் தாழ்த்தப்பட்ட கூட்டத்திற்குத் தனித் தொகுதி ஏற்படுத்தக் கூடாது என்று பலமாக எதிர்ப்பதற்குக் காரணம் இதுவேயாகும். முஸ்லீம்கள் தனித் தொகுதி வேண்டிப் பிரிந்து நிற்கும் காலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும், மற்ற சிறுபான்மைச் சமூகத்தாரும், தனித்தொகுதி பெற்றுப் பிரிந்து நிற்பார்களாயின் இந்து சமூகத்தாரின் கூட்டம் சட்டசபைகளில் மைனாரிட்டியாகி விடும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறாகி விட்டால், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தமக்கு வேண்டிய சௌகரியங்களை முஸ்லீம்களுடையவும் மற்றச் சிறுபான்மைச் சமூகத்தினருடையவும் பிரதிநிதிகளின் உதவி பெற்றுச் சட்ட சபைகளின் மூலம் செய்து கொள்ளலாம் என்பதில் சந்தேகமில்லை. இவ்வகையாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறக்கூடிய சந்தர்ப்பம் பெற்று விட்டால் அது, இதுவரையிலும் அவர்களைக் கொடுமைப் படுத்தி அடக்கியாண்டு வந்த உயர்ந்த சமூக இந்துக்களின் சுயநலத்திற்குப் பாதகம் உண்டாக்காமற் போகாது. இக் கருத்துகளைக் கொண்டுதான் “காங்கிரஸ்” பிரதிநிதி என்ற பெயரோடு “வருணாச்சிரம தரும”த்தின் பிரதிநிதியாகச் சென்ற திரு. காந்தி யவர்களும் மற்ற இந்து மகாசபையைச் சேர்ந்தவர்களுமான வட்டமேஜை மகாநாட்டுப் பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி ஏற்படுத்துவதை ஒரே அடியாக எதிர்த்தார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆனால் இச்சூழ்ச்சியை அறிந்த தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களுக்குத் தனித் தொகுதியே வேண்டுமென விரும்புகின்றனர். அச்சமூகத்தின் தலைவர்களாகிய திருவாளர்கள் டாக்டர் அம்பெட்கார், ஆர். சீனிவாசன், எம், சி. ராஜா, வி. ஐ. முனுசாமி பிள்ளை போன்ற தலைவர்களெல்லாம் தங்களுடைய சமூகத்திற்குத் தனித் தொகுதியே வேண்டுமென்று கிளர்ச்சி செய்தனர். இவர்களில் திரு. எம். சி. ராஜா அவர்களைத் தவிர மற்றவர்கள் இன்றும் தனித் தொகுதி வேண்டுமென்பதிலேயே உறுதியாக இருக்கின்றனர்.

திரு. எம். சி. ராஜா மட்டிலும், எவ்வித சூழ்ச்சியினாலோ ஏமாற்றப்பட்டு இந்து மகாசபையைச் சேர்ந்த திரு. மூஞ்சே அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தனித் தொகுதியை எதிர்த்தும், கூட்டுத் தொகுதியை ஆதரித்தும் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார். உண்மையில் இப்பிரசாரத்திற்கு காரணம், இந்துக்களின் சூழ்ச்சி என்பதில் சிறிதும் ஐயமில்லை. .இந்துக்களின் வலையிற் சிக்கி இருக்கும், திரு, எம். சி. ராஜா அவர்களைப்போல் அவர்களுடைய வலையிற் சிக்கிய வெகு சிலரே ராஜாவின் பேச்சை ஆதரிக்கின்றார்கள்.

ஆனால் திரு. ராஜா அவர்களின் அபிப்பிராயந்தான் தாழ்த்தப்பட்டவர்களின் அபிப்பிராயம் என்று நினைக்குமாறு, இந்துக்களின் ஆதிக்கத்திலிருக்கும் தேசீயப் பத்திரிகைகள் எனப் பெயர் வைத்துக் கொண்டிருப்பவை, திரு. ராஜாவை ஆதரித்து விளம்பரம் பண்ணிக் கொண்டு வருகின்றன.

உண்மையில் தாழ்த்தப்பட்ட சமூகம் சமத்துவம் பெற வேண்டுமானால், அவர்கள் இந்துக்களினின்றும் பிரிந்து தங்கள் கால்பலத்தில் நின்று கொண்டே கிளர்ச்சி செய்தால் தான் முடியும் என்பதை நாம் அடிக்கடி எடுத்துக் காட்டியிருக்கிறோம். ஆகவே டாக்டர். அம்பெட்கார், சீனிவாசன், வி. ஐ. முனிசாமி பிள்ளை ஆகியவர்கள் விரும்புகிறபடி அரசியல் சீர்திருத்தத்தில் தனித் தொகுதி பெற்றால் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெற முடியும். இவர்கள் கூறுவது தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயம் என்பதையும், திரு. எம். சி. ராஜாவின் அபிப்பிராயம் இந்துக்களின் அபிப்பிராயமே தவிர தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயம் அல்ல வென்பதையும் சென்ற 5-5-32ல் கமிட்டியில் திரு. வி.ஐ. முனுசாமி பிள்ளை அவர்கள் தலைமையின் கீழ் கூடிய அகில இந்திய தாழ்த்தப்பட்டார் காங்கிரஸ் தீர்மானத்தைக் கொண்டும், சென்ற 10-7-32ல் பம்பாயில் திரு. எம். சி. ராஜா அவர்கள் தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டார் மகாநாட்டைக் கொண்டும் அறியலாம்.

டாக்டர் அம்பெட்கார் கட்சியை ஆதரிப்போரால் கூட்டப்பட்ட கமிட்டி காங்கிரசுக்கு, பல மாகாணங்களிலிருந்தும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் வந்திருந்தனர். தனித் தொகுதியை எதிர்க்கும் கட்சியினரும் வந்திருந்தனர். அவர்கள் மிகச் சிலராக இருந்த காரணத்தால் மகாநாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஆகவே தனித்தொகுதியை ஆதரிப்பதாகவும், இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டின் போது இங்கிலாந்தில் செய்து கொள்ளப்பட்ட சிறுபான்மையோர் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மகாநாட்டிற்கு இந்துக்களின் எதிர்ப்பு இருந்ததே தவிர ஆதரிப்பு சிறிதும் இல்லை. ஆகவே இம் மகாநாட்டுத் தீர்மானங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் உண்மையான அபிப்பிராயம் என்று கூறுவதற்கு என்ன தடையுண்டு?

பம்பாயில் திரு. எம். சி. ராஜா கட்சியினரால் கூட்டப்பட்ட மகாநாட்டிற்கு சுமார் 200 பிரதிநிதிகளே வந்திருந்தனர். மகாநாட்டிற்கு எதிராகத் தனித் தொகுதியை ஆதரிக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் 250 பேர்கள் மகாநாட்டுக் கொட்டகைக்குள் விடப்படாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர். 250 என்னும் எண்ணிக்கை, பொதுத் தொகுதியை ஆதரிக்கும் தேசீயப் பத்திரிகைகளில் காணப்படுகின்றதாதலால், இது உண்மையாக இருக்க முடியாது. 250க்கு மேல் அதிகமாகத்தான் இருக்க வேண்டும். அன்றியும் இம் மகாநாடு இந்துக்களின் ஆதரவின் மேல்தான் கூட்டப்பட்டதாகும். ஆகவே இம் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானங்கள் இந்துக்களின் அபிப்பிராயத்தைச் சேர்ந்தனவே யொழிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயத்தைச் சேர்ந்தவை யென்று கூற முடியாது என்பது நிச்சயம். இம் மகாநாட்டில் தான் கூட்டுத் தொகுதியை ஆதரிப்பதாகவும், “ராஜா - மூஞ்சே ஒப்பந்த”த்தை ஆதரிப்பதாகவும், வட்டமேஜை மகாநாட்டில் செய்யப்பட்ட ‘சிறுபான்மையோர் ஒப்பந்த’த்தை எதிர்ப்பதாகவும் தீர்மானித்திருக்கிறார்கள்.

இந்து மகாசபைக்காரர்களின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த மகா நாட்டில் தலைமை வகித்த திரு. எம். சி. ராஜா அவர்கள் பேச்சில் காணப்படும் வாதங்களிலும் ஒரு புதுமையும் தோன்றவில்லை. வழக்கம்போல் இந்துக்களை ஆதரித்தால்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு அரசாங்கத்தில் மந்திரி முதலிய உத்தியோகப் பதவி கிடைக்குமென்றும், இந்துக்களின் துணையோ, உதவியோ இல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தார் சமத்துவமோ, சுதந்திரமோ பெற முடியாதென்றும் கூறியிருக்கிறார்.

அடிக்கடி இவர் மந்திரி பதவியையே கூட்டுத்தொகுதிக்கு உதாரணமாகக் கூறி வருவதைக் கொண்டு, மந்திரிப் பதவி மோகத்தினாலேயே இந்து மகாசபைக்காரரின் பாட்டுக்குத் தாளம் போடுகிறார் என்று கூறுகிறார்கள். அது எப்படியாவது இருக்கட்டும். இந்து சமூகத்தினரின் உதவியோ, துணையோ இல்லாமல், தாழ்த்தப்பட்டார் சமத்துவம் பெற முடியாது என்னும் வாதத்தை மாத்திரம் கவனிப்போம்.

இது வரையிலும் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்துக்களின் தயவை எதிர்பார்த்து வாழ்ந்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அவர்கள் செய்த நன்மை என்ன? தாழ்த்தப்பட்டவர்களைக் கல்வி கற்க அனுமதிக்காமலும் தெருவில் நடக்க அனுமதிக்காமலும், நல்ல உடை உடுத்த அனுமதிக்காமலும், கிணறு குளங்களில் தண்ணீர் எடுக்க அனுமதிக்காமலும் செய்ததுதான் கிடைத்த பலன். பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கின்ற இக்காலத்தில் கூட தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பொது இடங்களில் சமத்துவம் கொடுக்க மறுக்கிறார்கள் என்றால் பிரிட்டிஷ் அரசாங்கமில்லாமல் தங்கள் கையிலேயே எல்லா அதிகாரமும் இருக்குமானால் என்னதான் செய்ய மாட்டார்கள் என்று கேட்கிறோம். இதைப் பற்றி நாம் அதிகமாக விரித்துக் கூற வேண்டியதில்லை. “இந்துக்களின் தயவை எதிர்பார்த்துக் கொண்டும், தங்களையும் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டும் இருக்கும் வரையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விமோசனமே உண்டாகப் போவதில்லை” யென்று கோபுரத்தின் மேல் நின்றும் கூறுவோம்.

ஆகையால் இந்து மகாசபைக்காரர்களின் வலையிற் சிக்குண்டு கிடக்கும் திரு எம். சி. ராஜா கூட்டத்தாரின் பேச்சைக் கேட்டு ஏமாறக்கூடாது என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

கொடுமைபடுத்தப்பட்டு, நசுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டுக் கிடக்கும் சமூகத்தின் சமத்துவத்திற்கும், முன்னேற்றத்திற்கும், உண்மையாகப் பாடுபடுகின்றவர்கள் யார் என்பதை வெகு சுலபமாகத் தெரிந்து கொள்ள ஒரு வழியுண்டு. அவ்வழியாவது:-

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விடுதலைக்கு உண்மையாக பாடுபடுபவர் அச்சமூகத்தைத் தாழ்த்தி வைத்திருக்கும் கூட்டத்தினரால் கட்டாயமாக எதிர்க்கப்படுவார்கள், தூஷிக்கப்படுவார்கள். பல விதமான பழிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பது நிச்சயம். ஆதலால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பரம்பரை விரோதிகளாகிய உயர்ந்த சமூகத்தினரால் ‘தேசத்துரோகி’ என்றும் ‘சமூகத்துரோகி’ ‘தேசாபிமான மில்லாதவர்” என்றும் தூற்றப்படுகின்றவர்கள் யாரோ அவர்களே அச்சமூகத்தின் உண்மையான சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் பாடுபடுகின்றவர்கள் என்பதை உணரலாம்.

இப்படி இல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விரோதிகளாகிய உயர்ந்த சமூகத்தினரால், தாழ்த்தப்பட்ட சமூகத்தலைவர்கள் என்றும் விடுதலைக்குப் பாடுபடுகிறவர்கள் என்றும், “தேசாபிமானிகள்” என்றும், இவர்கள் பேச்சைக் கேட்டால்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு விடுதலை உண்டு என்றும் பிரசாரம் செய்யப்படுபவர்களால் அச்சமூகத்திற்கு உண்மையான விடுதலை ஏற்பட முடியாது என்பது நிச்சயம், ஆகையால் எவர் தங்கள் சமூகத்தின் உண்மையான விடுதலைக்குப் பாடுபடுகின்றவர் என்பதை அறிந்து அவர்களைப் பின்பற்றுமாறு தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எச்சரிக்கின்றோம்.

இந்து மகாசபைக்காரர்களின் சூழ்ச்சி வலையிற் சிக்கியும், தேசாபிமான வேஷக்காரர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும், தட்டிக் கொடுத்தலுக்கும் ஏமாற்றமடைந்தும், தங்கள் சமூக நன்மையை, இதுவரையிலும் விரோதிகளாகவே இருந்து வரும் சமூகத்தார் கையிலேயே ஒப்படைக்க வேலை செய்யும் ஏமாந்தவர்களின் பேச்சைக் கேட்டு மோசம் போகாமலிருத்தலே தாழ்த்தப்பட்டார் கடமையாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 17.07.1932)

Pin It