செட்டியார் நாட்டில் திரு. அ. பொன்னம்பலனார் ஆசிரியத் தலைமையில் சண்டமாருதம் பத்திரிகையும், பிரஞ்சு இந்திய நாட்டில் திரு.எஸ். குருசாமி அவர்கள் ஆசிரியத் தலைமையில் புதுவை முரசுப் பத்திரிகையும் துவக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு, உண்மைச் சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்று சுயமரியாதை இயக்கத்திற்கு சில பத்திரிகைகளே இருக்கின்றன.
அதாவது “குடி அரசு” “குமரன்” “நாடார் குலமித்திரன்” “முன்னேற்றம்” “தமிழன்” “புதுவை முரசு” “சண்டமாருதம்” ஆகிய வாரப் பத்திரிகைகளேயாகும். “திராவிடன்” தினசரி ஒன்று இருந்தாலும் அது இருக்குமோ, போய் விடுமோ; இருந்தாலும் சுயமரியாதைக் கொள்கைக்கே உழைக்குமோ என்பது பற்றி பலருக்கு சந்தேகமும் ஏற்பட்டு விட்டது.
ஆனாலும் அதையும் சேர்த்தே பார்த்தாலும் இவை மாத்திரம் போதாதென் போம். சீக்கிரத்தில் சுயமரியாதைத் தொண்டனும் கிளம்பி விடுவான் என்றே தெரிகின்றது. ஏனெனில் அதன் ஆசிரியர் தனக்கு மறுபடியும் வேலையும் அவசியமும் வந்துவிட்டதாகக் கருதி முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார். இனியும் ஜில்லாதோறும் ஒரு பத்திரிகை சுயமரியாதை இயக்கப்பிரசாரத்திற்கு ஏற்பட வேண்டும் என்பதே நமதாசை.
அன்றியும் நமதியக்கத்தால் பலருக்கு வயிற்றுப் பிழைப்புப்போய் புஸ்தக வியாபாரமும், கேட்லாக் வியாபாரமும் போய் யோக்கியதையும் போய் திண்டாட ஏற்பட்டு விட்டதாலும் அப்படிப்பட்டவர்களுக்கு நமது இயக்கம் “எமனாய்” தோன்றி விட்டதாலும் தங்கள் ஜீவ வாழ்வை உத்தே சித்து எதிர்க்க வேண்டிய அவசியமுள்ள பத்திரிகைகள் பல இன்னும் தோன்றலாம் தோன்றியும் இருக்கின்றன.
ஆதலால் அதனதன் யோக்கியதைக்குத் தகுந்தபடி அதனதன் பாஷா ஞானத்தில் நடைபெற இன்னும் பல பத்திரிகைகள் வேண்டியது அவசியமுமேயாகும். ஆதலால் சுயமரியாதை மக்கள் இவைகளை ஆதரிப்பார்கள் என்றும் இன்னும் பல பத்திரிகைகள் தோன்ற உதவி அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.01.1931)