periyar 350 copyஒற்றுமைத் தீர்மானத்தின் யோக்கிதை

43-ம் வருஷத்திய காங்கிரஸ் என்னும் இவ்வருஷத்திய ஏமாற்றுத் திருவிழா ஒருவாறு முடிவு பெற்று விட்டது. இந்நாடகம் இந்நிலையில் முடிவு பெற முக்கிய வேஷதாரியாய் திரு. காந்தியே நடித்திருப்பது மிகுதியும் குறிப்பிடத்தக்கது.

எனவே அம்முக்கிய நடிகராகிய திரு.காந்தி இந்நாடகத்தில் கலந்து கொண்டதற்கு அவர் (திரு.காந்தி) சொல்லும் முக்கிய காரணம் என்னவென்றால்:- ‘ஒற்றுமையின் அவசியத்தைக் கோரியே’ இம்மாதிரி கலந்து கொண்டாராம். உண்மையில் ஒற்றுமை ஏற்பட்டதா? அல்லது ஒற்றுமை வாசனை சிறிதாவது அங்கு ஏற்பட்டதா? திரு. காந்தியின் ஒற்றுமைத் தீர்மானத்திற்கு முன்னும் சர்வ கட்சி மகாநாட்டின் ஒற்றுமைத் தீர்மானத்திற்கு முன்னும் நாட்டில் எத்தனை கட்சியும் வகுப்புப் பிரிவும் இருந்ததோ அதைவிட அதிகமான கட்சியும் பிரிவினைகளும் தீர்மானத்திற்குப் பின் ஏற்பட்டிருப்பது காங்கிரஸ் நடவடிக்கையைக் கவனித்தவர்களுக்கு தெள்ளென விளங்காமல் போகாது. இந்த இடத்தில் நமது (இந்தியர்களின்) லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அதாவது, நமது லட்சியம் ஒற்றுமையா, விடுதலையா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படாமல் மாறி மாறி பேசப்பட்டே வந்திருக்கின்றது.

சாதாரணமாய் நமக்குத் தெரிந்து 1907-ஆம் வருஷத்திய சூரத்து காங்கிரசில் ஒருவருக்கொருவர் கலகமும் அடிதடியும் நடந்து கலைந்தது முதல் இதுவரையில் அரசியல் ஒற்றுமையைப் பற்றிப் பேசாத நாள்கள் மிக சொற்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒற்றுமையைப் பற்றி பேச ஆரம்பித்த பிறகே மிதவாதி, அமிதவாதி, சுயேச்சைவாதி, சுயராஜ்யவாதி, இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய பல கட்சிகள் தோன்றி யதுடன் சமீபகாலத்தில் ஒத்துழைப்பவர்கள், ஒத்துழையாதார்கள், சுயராஜ்யக் கட்சிக்காரர்கள், குடியேற்ற நாட்டு அந்தஸ்துக்காரர்கள், பூரண சுயேச்சைக்காரர்கள் என்பவர்களாகிய எத்தனையோ வித கட்சிகளும் அபிப்பிராய பேதங்களும் வளர்ந்து கொண்டே வந்தும், வந்து கொண்டும் இருக்கின்றதை யாரும் மறைத்து விட முடியாது.

இதுதவிர, சமய சமூக இயலிலும் பல கட்சிகளும் அபிப்பிராய பேதங்களும் இருந்து கொண்டு வருகிறது. சுமார் 20 வருஷ காலமாக ஒற்றுமை! ஒற்றுமை! என்று பேசிக் கொண்டு அதற்காக செலவழித்த நேரமும் அறிவும் ஊக்கமும் இதுவரை நாட்டுக்கு என்ன பலனைக் கொடுத்தது அல்லது எவ்வித வெற்றியை அளித்தது என்பதை யோசித்துப் பார்க்கும் படி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

ஒற்றுமையைப் பற்றி பேசும் எல்லோரும் அநேகமாய் மனதிலொன்றும் வாக்கிலொன்றும் நடவடிக்கையிலொன்றுமாக யோக்கியப் பொறுப்பற்ற தன்மையில் தங்கள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு பிறரை, சிறப்பாக இந்திய நாட்டு பாமர மக்களாகிய 100-க்கு 99 பேரை ஏமாற்றித் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள செய்த சூழ்ச்சியே அல்லாமல் வேறு என்ன நல்லெண்ணம் இவ்வொற்றுமை முயற்சியில் இருந்து வந்தது என்று யாராவது சொல்ல முடியுமா என்று அதட்டியுடன் கேட்கின்றோம்.

இதற்கு ஆதாரம் கண்டுபிடிக்க நாம் அதிக தூரம் போக வேண்டியதில்லை. உயர்ந்த தத்துவம் என்று கருதப்பட்ட ஒத்துழையாமை இயக்க சம்மந்தமாகவும் உண்மையான மனிதர் என்று கருதப்பட்ட திரு.காந்தி சம்மந்தமாகவும் ஏற்றபட்ட ஒற்றுமைகளின் யோக்கியதைகளைப் பற்றி கவனித்துப் பார்த்தாலே போதுமானது.

அதாவது திரு.காந்தி சிறையில் இருக்கும்போது டில்லி, அலகாபாத், நாகப்பூர், காகிநாடா முதலிய இடங்களில் ஏற்பட்ட ஒற்றுமைகளும், திரு. காந்தி வெளிவந்த பிறகு சுமார் 4, 5 தடவை ஏற்பட்ட ஒற்றுமை ஒப்பந்தங்களும், ஒற்றுமைத் திட்டங்களும் அதாவது காந்தி தாஸ் நேரு ஒப்பந்தமும், காந்தி தாஸ் ஒப்பந்தமும் திரு.காந்தி தானாகவே தனியாக ஒற்றுமைக்காக என்று திட்டங்களை மாற்றிக் கொண்ட வகையிலும் பெல்காம் காங்கிரசில் செய்து கொண்ட ஒப்பந்தமும் மற்றும் இந்து முஸ்லீம் ஒப்பந்த ஒற்றுமைகளும், பட்டினி கிடந்ததின் மூலம் செய்து கொண்ட ஒற்றுமைகளும் மற்றும் “எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப் போகிறேன்”, “இமயமலைக்குப் போய் விடுவேன்” என்று மிரட்டி செய்த ஒற்றுமைகளும், கடைசியாக ‘ராட்டினம் தான் கதி’ என்று சொல்லி அரசியலில் இருந்து விலகிக் கொண்டதாய் விளம்பரப்படுத்தியதின் மூலம் செய்த ஒற்றுமைகளும் இதுவரை என்ன பலனைக் கொடுத்தன?

கொள்ளைக்காரர்கள் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒற்றுமை போலவும், போலீசாரும் திருடர்களும் செய்து கொள்ளும் ஒற்றுமை போலவும் கருதி செய்யப்பட்டு வந்திருக்கின்றதே யல்லாமல் நாட்டின் நன்மையைக் கருதி இதுவரை எந்த விதமான ஒற்றுமையாவது செய்யப் பட்டிருக்கின்றதா? என்று கவனித்துப் பார்க்க வேண்டுகின்றோம். அது போலவே இவ்வருஷ காங்கிரஸ் ஒற்றுமைத் தீர்மானத்தையும் சற்று கவனிப்போம்.

அது, திரு. காந்தி பிரேரேபிக்கிறார் என்கின்ற சலுகையின் பேரில் ஏழில் நாலு பங்கு ஓட்டுகளால் நிறைவேறி இருக்கின்றது. இது ஒற்றுமைத் தீர்மானமாகுமா? சாதாரணமாய் ஒத்துழையாமையின் போது இம்மாதிரியும் இதைவிட இன்னும் குறைந்த மைனாரிட்டியுமாக ஏற்பட்டு நிறைவேறிய அநேக தீர்மானங்களை இதே திரு. காந்தி ஏற்றுக் கொள்ளாமல் மைனாரிட்டியாரின் லட்சியத்தையே மிகுதியும் கவனித்து மைனாரிட்டியாருக்கு இணங்கியே வந்திருக்கின்றார். கடைசியாக ஒத்துழையாமையை சித்திரவதை செய்த பெல்காம் காங்கிரசின்போது கூட ஒத்துழையாமைக்கு விரோதமாய் இப்போது கல்கத்தாவில் இருந்த மைனாரிட்டி விகிதத்தில் நாலில் ஒரு பங்குகூட இல்லாத நிலையில் எப்படியாவது தான் தப்பித்தால் போதும் என்று கருதி அடியோடு விட்டுவிட்டு ஓடிவிட்டார். நாமே நேரில் அதன் காரணம் கேட்டபோது, மூன்று மாதம் வாய்தா கொடுத்திருக்கின்றேன், அது கழிந்த பிறகு மணலைக் கயிராகத் திரித்து விடுகிறேன். பயப்பட வேண்டாம் என்று சொன்னார். மூன்று மாதம் கழிந்த பிறகு இவ்விஷயமே அவருக்கு ஞாபகமில்லாமல் போய்விட்டது. அப்படியிருக்க இப்போது நிறைவேறிய இவ்வளவு பெரிய மைனாரிட்டி உள்ள தீர்மானம் ஒற்றுமைத் தீர்மானமாகுமா?

திருவாளர்கள் சிந்தாமணி, சாப்ரு, சிவசாமி அய்யர், ராமசாமி அய்யர் ஆகிய சென்னை அய்யர் பார்ப்பனர்களும், மாளவியா, நேரு முதலிய வட நாட்டுப் பார்ப்பனர்களும் மற்றும் சில சூழ்ச்சிக்காரப் பார்ப்பனர்களும், இந்திய மக்களில் பல்வேறு வகுப்புகளையும், வகுப்பு சமத்துவத்தையும், சமசந்தர்ப்பத்தையும் ஒழிப்பதற்கும், பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கும் ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள். எனவே அந்தக் கைதான் இப்போது வலுத்த கையாதலால் அவர்களுக்கு நல்ல பிள்ளையாய் நடந்தால்தான் தனது மடாதிபதிப் பட்டம் நிலைக்கும். இல்லாவிட்டால் ஆட்டம் கொடுத்துவிடும் என்கின்ற ஒரே ஒரு எண்ணமில்லாமல் இத்தீர்மானத்தை பிரேரேபித்ததில் திரு.காந்திக்கு வேறு ஏதாவது எண்ணமிருந்திருக்கக் கூடும் என்று யாராவது முன்வந்து சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்?

உண்மையாக அத்தீர்மானத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை உண்டா? பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை உண்டா? சீக்கியர் ஒற்றுமை உண்டா? அல்லது குடியேற்ற நாட்டு அந்தஸ்து - பூரண சுயேச்சை என்கின்ற கட்சிகள் ஒற்றுமையாவது உண்டா? என்று கேட்பதுடன் மற்றும் புதிதாக எத்தனை மாகாணப் பிரதிநிதிகள் மனவருத்தமும், வகுப்பார்கள் மன வருத்தமும் ஏற்பட்டது என்பதை காங்கிரஸ் நடவடிக்கைகளை படித்தவர்களுக்கு விளங்காமல் போகாது. இதுதவிர, இவ்வொற்றுமைத் தீர்மானத்தால் சுயேச்சைக் கட்சிக்காரர்களுக்குள்ளாகவே இரு பிரிவினைகளும், முஸ்லீம்களுக்குள்ளாகவே பல பிரிவினைகளும் ஏற்பட்டிருப்பதோடு, மிதவாதிகளுக்குள்ளும், சுயாட்சிவாதிகளுக்குள்ளும் தீர்மானத்தின் பகுதி பாகம் ஒப்புக் கொள்ளவும் பகுதி பாகம் தள்ளப் படவுமாய் ஏற்பட்டிருக்கிறதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு ஊரில் இரண்டு பைத்தியக்காரர்கள்

இது மாத்திரமல்லாமல் ‘ஒரு ஊரில் இரண்டு பைத்தியக்காரர்கள்’ என்பது போல் காங்கிரசின் பேரால் பாமர மக்களிடம் போய் ஒரு கூட்டம் வெள்ளைக்காரர்களின் ஆட்சியை அடித்துத் துரத்தி ஒழித்துவிட வேண்டும் என்றும், மற்றொரு கூட்டம் வெள்ளைக்காரர்கள் நமக்கு இன்னின்ன விதமான சீர்திருத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பிரசாரம் செய்யவும், இதன் மூலம் சிலர் ஜெயிலுக்குப் போகவும் உதைபடவும், சிலர் அவர்கள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றவும் தாராளமாய் வேண்டுமென்றே இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வளவு வித அபிப்பிராய பேதக்காரர்களையும் கட்சிக்காரர்களையும் நாம் ஒன்று கேட்கின்றோம். இவ்வபிப்பிராய பேதங்களும் கட்சிகளும் பொது நலத்தை உத்தேசித்தா? அல்லது எந்த அபிப்பிராயம் கொண்டால் எந்தக் கட்சியில் சேர்ந்தால், நமது வகுப்பு நலமோ நமது தனி சுயநலமோ ஏற்படும் என்கின்ற எண்ணத்தைக் கொண்டா? என்று கேட்கின் றோம். உதாரணமாக முகமதியர்களில் ஜனாப்கள்  ஜின்னா, மகமதலி, ஷெளக்கத்தலி, சர்அப்துர்  ரஹீம், மகமதபாத் ராஜா, டாக்டர் அன்சாரி, சர் ஷாபி, ஆகாகான் முதலியோர்கள் பொதுவாக இந்தியா முழுவதுக்கும் பிரயத்தனப்படுகின்றார்களா அல்லது தங்கள் வகுப்புக்கு மாத்திரம் பிரயத்தனப்படுகின்றார்களா அல்லது தங்கள் சுயநல வாழ்வுக்கே பிரயத்தனப்படுகின்றார்களா அல்லது தங்கள் பெயரும் பொதுவாழ்வில் அடிபடட்டும் என்கின்ற ஆசையின் மீது பிரயத்தனப்படுகின்றார்களா என்று பார்த்தால் மகமதிய கனவான்களின் பொதுநல அபிப்பிராய பேதத்தின் யோக்கியதை விளங்காமல் போகாது.

இதுபோலவே, திருவாளர்கள் மாளவியா, நேரு, சிந்தாமணி, சாப்ரு, சர். சிவசாமி, சர். ராமசாமி, அன்னிபெசண்டு, ஜவாரிலால், சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ஊ. ராஜகோபாலாச்சாரி, ஏ. ரங்கசாமி அய்யங்கார், சாம்பமூர்த்தி, அரிசர்வோத்தமராவ், பட்டாபி சீதாராமய்யா முதலிய பார்ப்பனர்களின் யோக்கியதைகளை கவனித்துப் பார்த்தால் இந்த தியாகிகளுக்குள் பொதுநல அபிப்பிராய பேதத்தின் மூலம், கக்ஷியா அல்லது சுயவகுப்பு நலம், சுயவாழ்வு நலம் ஆகியவைகளின் மூலம் அபிப்பிராய பேதமா என்பவைகள் விளங்காமல் போகாது.

மற்றபடி காங்கிரசில் அதிகமாக அடிபட்ட பெயர்களில் முக்கியமானவைகள் திருவாளர்கள் காந்தி, போஸ், பெசண்டு அம்மாள் ஆகிய பார்ப்பனரல்லாதார்களாகும். இவர்களில் திரு.காந்தியைப் பற்றியோ என்றால், ஏதாவது ஒரு கொள்கை திரு.காந்தியை நடத்துகின்றதா, அல்லது திரு காந்தியால் ஏதாவது ஒரு கொள்கை நடத்தப்படுகின்றதா என்பதைக் கண்டுபிடிப்பதே கஷ்டமாயிருப்பதுடன் அவருடைய இப்போதைய கொள்கையாவது என்ன என்பதே நம்மால் கண்டுபிடிக்க முடியாததாயிருக்கின்றது.

திரு.போஸ் அவர்களுக்கு, எந்த விதத்திலாவது தான் ஒரு பெரிய வீரன் ஆகிவிட வேண்டுமென்கின்ற ஆசையைத் தவிர வேறொன்றும் இருப்பதாய்க் காணமுடியவில்லை. திரு. பெசண்டம்மையோவென்றால், அவரது கொள்கையும் கண்டுபிடிக்க முடியாததாயிருப்பதுடன் தனது மடமும் மடாதிபதித் தன்மையும் இருப்பதாகக் காட்டிக் கொண்டால் போதும் என்கின்ற கவலையே அதிகமாய் இருப்பதாகக் காண்கின்றது. எனவே இந்தக் கூட்டங்கள், அதாவது உலகத்தில் கஷ்டம் என்ன? தொழிலாளர்கள், கூலிக்காரர்கள் நிலைமை என்ன? தாழ்ந்த ஜாதியார் என்பவர்கள் அனுபவிக்கும் துன்பம் என்ன? என்கின்ற விஷயங்களை ஒரு சிறிதும் அறியாதவர்களும் அறிய சந்தர்ப்பமில்லாதவர்களுமான இவர்கள் இந்திய மக்களுக்காக என்று அபிப்பிராய பேதப்படுவதும் கக்ஷி பிரிந்து நிற்பதும் மறுபடியும் ஒற்றுமை படுவதுமான காரியங்களால் ஏதாவது பலன் உண்டாக முடியுமா அல்லது பாமரமக்கள் லக்ஷியம் செய்யக் கூடியதாயிருக்குமா என்று கேட்கின்றோம்.

ஒரு வருஷத்தில் ஒத்துழையாமை

நிற்க, ஒரு வருஷத்தில் ஒத்துழையாமை ஆரம்பிக்கப்படுமாம். அதாவது சர்க்கார் குடியேற்ற நாட்டு அந்தஸ்து ஒரு வருஷத்தில் கொடுக்காவிட்டால் ஒத்துழையாமை ஆரம்பிக்கப்படுமாம்.

சர்க்கார் ஒரு வருஷத்தில் குடியேற்ற நாட்டு அந்தஸ்து நமக்குக் கொடுக்கப் போவதில்லை என்பது உறுதி. அதில் சிறிதும் சந்தேகமில்லை. ஒரு சமயம் சர்க்கார் பகுதி கொடுத்தாலும் ஒன்றும் கொடுக்காவிட்டாலும் வேறு ஏதாவது சில மாறுதல் செய்தாலும். “அதுதான் நாங்கள் குடியேற்ற நாட்டு அந்தஸ்து என்று நினைத்துக் கேட்டோம்” என்று சொல்லிக் கொண்டால் கொள்ளலாமே ஒழிய உண்மையில் இந்த நிலைமையில் அந்த நிலைமை நமக்கு கொடுக்கப் போவதும் இல்லை. அதையடைய நம் நாட்டுக்கு இப்போது சக்தியும் இல்லை.

ஆகவே யோக்கியமான முறையில் நடப்பதாயிருந்தால் அடுத்த வருஷம் அதாவது 1930 ஜனவரி 1- தேதி ஒத்துழையாமை ஆரம்பித்தாக வேண்டும். எனவே, திரு.காந்தி இத்தீர்மானத்தை பிரேரேபிக்கும்போது உண்மையாகவே ஒத்துழையாமை ஆரம்பிக்கலாம் என்று உறுதி கொண்டு இதை பிரேரேபித்தாரா அல்லது சர்க்காரை மிரட்டவோ அன்றி பாமர மக்களுக்கு ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றவோ கருதி இதை பிரேரே பித்தாரா என்பதை ஒவ்வொருவரும் நடுநிலையிலிருந்து கவனித்துப் பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது.

அன்றியும் அப்படியே ஒரு சமயம் ஒத்துழையாமை ஆரம்பிப் பதாகவே வைத்துக் கொண்டால், திரு. சத்தியமூர்த்தி, சாப்ரூ, சிந்தாமணி, சீனிவாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், ராமசாமி அய்யர், பெசண்டு, மாளவியா ஆகியவர்கள் ஒத்துழையாமைக்கு தயாராயிருப்பார்களா?

எனவே, காங்கிரசும் ஒற்றுமையும் ஒத்துழையாமையும், எவ்வளவு கேலிக் கூத்தும் நாணயமற்றதும் சூழ்ச்சி நிறைந்ததுமான தன்மைகள் கொண்டதாய் இருக்கின்றது? என்பதை ஞாபகப் படுத்திப் பார்த்தால் நமது நாட்டிற்கு எப்போதாவது விடுதலை உண்டாகுமா என்று கூட எண்ண இடமில்லாமல் போவதாயிருக்கின்றது.

சைமன் பகிஷ்காரம்

அடுத்தபடியாக சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப் பற்றி ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது. இது, இதுவரை நடந்த பகிஷ்காரங்கள் தோல்வியுற்றதையும் பகிஷ்காரக் கூச்சல் சைமன் கமிஷன் நடவடிக் கைகளை கிஞ்சிற்றும் அசைக்கச் செய்யாமல் போனதோடு பகிஷ்காரத்தால் பலாத்காரங்கள், உயிர்ச்சேதங்கள்  முதலியவை ஆங்காங்கு ஏற்பட்டிருப்ப தையும், பகிஷ்கார வேஷக்காரர்கள் பாமர மக்களை முன்னணியில் தள்ளி விட்டுவிட்டு தாங்கள் ஒளிந்து கொண்டும் பின்னணியில் நின்று கொண்டும் பொது மக்களை ஏமாற்றிய பயங்காளித்தனமான இழி தன்மைகளையும் காட்டவில்லையா? திரு.காந்தியும் காங்கிரசும் இவைகளை நன்றாய்த் தெரிந்து கொண்ட பிறகும், இம்மாதிரியான ஒரு ஏமாற்றுத் தீர்மானத்தை தீர்மானித்த தானது, இந்தியாவில் நடைபெறும் தேசீய அயோக்கியத் தனத்தை வெளிப் படுத்தத் தக்க சான்றாக வில்லையா?

பகிஷ்காரத்தைப் பற்றிப் பேசும் போது “இங்கிலாந்து முதலிய தேசங்களில் இம்மாதிரி பொதுமக்களால் வேண்டப்படாத ஒரு கமிஷன் இவ்வளவு கட்டாயத்துடனும் செல்வாக்குடனும் நடைபெறுமா” என்று சொல்லப்பட்டது.

இங்கிலாந்து முதலான மற்றும் அநேக இடங்களில் இம்மாதிரியான அக்கிரமம் நடவாது என்பது உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். ஆனால் இந்தியா தவிர மற்ற இடங்களில் இம்மாதிரி கீழ் ஜாதி மேல் ஜாதி வித்தியாசமும், கீழ் ஜாதிக்காரரின் மீது மேல் ஜாதிக்காரர் என்பவர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக சூழ்ச்சிகளும் நடைபெறு கின்றதா? நடைபெற பாமர மக்கள் விட்டுக் கொண்டிருப்பார்களா என்று கேட்கின்றோம்.

இந்தியா பராதீனப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்ன? இந்திய மக்களிலேயே ஒருவருக்கொருவர் கீழ் ஜாதி மேல் ஜாதி என்கின்றதான ஒரு அக்கிரமமான கொள்கையாலல்லவா? எனவே அதை ஒழிக்காமல் ‘இந்தியா பூரண சுயேச்சை அடையப் பாடுபடுகின்றேன்’ என்பதும் பாடுபடுவதும் காரியத்தில் ஆகக் கூடிய காரியமா? அன்றியும் அது புத்திசாலித் தனமான காரியமா?

ஒரு நாடோ ஒரு சமூகமோ மாத்திரமல்லாமல் ஒவ்வொரு தனி வகுப்பும் ஒவ்வொரு தனிமக்களும் பூரண சுயேச்சை அடைய வேண்டும் என்பது தான் நமது கருத்தாகும். ஏனென்றால் அதுதான் மனிதவர்க்கத்தின் பிறப்புரிமையாகிய சுயமரியாதை என்று நாம் முடிவு செய்து கொண்டிருக் கின்றோம். ஏனெனில் மானத்தோடு வாழக்கூடியதான அடிமைத் தனத்தைப் பற்றி நமக்கு ஒரு சிறிதும் கவலையில்லை என்பதோடு மானமற்றதாயிருக் கும் படியான பூரண சுதந்திரமானாலும் அதை நாம் சிறிதும் லக்ஷியம் செய்ய மாட்டோம். இக்கருத்தையே முன் ஒரு சமயத்தில், அதாவது கிலாபத் அநீதிகளுக்காக என்று ஒத்துழையாமையை திரு.காந்தி மக்களிடையில் உபதேசித்த காலத்தில் சில சென்னைத் தலைவர்கள் “ஒத்துழையாமையின் லக்ஷியம் சுயராஜ்யம்” என்று குறிப்பிட வேண்டும் என்று சொன்னபோது திரு.காந்தி, “பஞ்சாப் அநீதிக்குப் பரிகாரம் கிடைக்காமல் எவ்வித சுயராஜ்யம் வருவதானாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்; ஏனெனில் மானம் என்னும் சுயமரியாதை பெரியதே ஒழிய சுயராஜ்யம் பெரியதல்ல” என்று பிராட்வே 8 நெம்பர் கட்டடத்தில் சொன்னார்.

சென்னை அய்யர் பார்ப்பனர் கள் தவிர மற்றப்படி அது சமயம் அங்குள்ளவர்கள் எல்லோரும் கை தட்டினார்கள். எனவே பூரண சுயேச்சை விரும்புகின்றவர்களாகட்டும் குடியேற்ற நாட்டு அந்தஸ்துக்கு குறைந்த எதையும் ஒப்புக் கொள்ளாதவர்களாகட்டும், சைமன் பகிஷ்காரக் கூப்பாட்டுக்காரர்கள் ஆகட்டும் இதுவரை யில் மனிதனின் பிறப்புரிமையாகிய சுயமரியாதைக்காக என்ன ஏற்பாடுகள் செய்திருக்கின்றார்கள் என்று கேட்கின்றோம். பொதுவாகவே சைமன் கமிஷன் நாளை கப்பலிலேயே திரும்பிப் போய் விட்டதாகவோ இந்தியா வுக்கு நாளைய தினமே குடியேற்ற அந்தஸ்து வந்துவிட்டதாகவோ அல்லது பூரண சுதந்திரம் வந்து விட்டதாகவோ அதாவது வெள்ளைக்கார ஆதிக் கம்மாத்திரமல்லாமல் அந்த சமூகமே இந்தியாவை விட்டு ஒரே அடியாய் ஓடிப்போனதாகவோ வைத்துக் கொள்ளுவோமானால் இந்திய மக்களுக்கு ஏற்படும் நன்மை என்ன? அவற்றால் இப்போதைய நிலைமையைவிட வேறு எந்த வித மாறுதல்கள் உண்டாகக் கூடும் என்பதை சற்று யோசிப்போம்.

இந்திய மக்களில் 100க்கு 90 பேர்களைப் பொருத்தவரை அவர்கள் அனுபவிக்கும் இழிவுக்கு-அடிமை நிலைக்கு சுயமரியாதையற்ற தன்மைக்கு - வெள்ளைக்காரர்களுடைய ஆட்சி காரணமா அல்லது உள்நாட்டு ஆரியப் பார்ப்பனீயமும் அதன் ஆதிக்கமும் காரணமா என்று ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நெஞ்சில் கையை வைத்துப் பார்க்கட்டும். அன்றியும் எந்த விதத்திலாவது வெள்ளைக்கார ஆட்சியே தானா நம்மைப் பிரித்து வைத் திருக்கின்றதென்பதை நடுநிலையில் இருந்து யோசித்துப் பார்க்கட்டும். அப்போது என்ன பதில் கிடைக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டுமா? ஆனால் நமக்குள் ஏற்பட்ட பிளவை வெள்ளைக்காரர்கள் தங்கள் கொடுங் கோன்மை ஆட்சிக்கு அனுகூலமாக உபயோகித்துக் கொள்ளுகின்றார்கள் என்பதை நாம் சிறிதும் ஆnக்ஷபிப்பதில்லை. ஆனால் அதற்கு வெள்ளைக் காரர்களே முழு ஜவாப்தாரிகளாவார்களா? ஏனெனில் நாம் அந்த நிலையில் இருந்தால் வேறு என்ன செய்வோம். அதைத் தான் செய்வோம். சைமன் கமிஷன் பகிஷ்காரத்திற்காக செலவழித்த தந்திரமும் நேரமும் கஷ்டமும் நஷ்டமும் மக்களின் உண்மையின் ஒற்றுமைக்கும் சமத்துவத்திற்கும் பரஸ்பர நம்பிக்கைக்கும் செலவிட்டிருந்தால் சைமன் கமிஷனுக்கு நமது நாட்டில் வேலை இருந்திருக்குமா? அவர்கள் திரும்பிப் பார்க்க ஆள்கள்தான் இருந்திருக்குமா?

மக்களின் ஒற்றுமையிலும் சமத்துவத்திலும் பரஸ்பர நம்பிக்கையிலும் சற்றும் கவலையில்லாது மூன்று வருஷத்திற்கு முன்பிருந்தே “சைமன் கமிஷன் வரப் போகிறது, வரப் போகின்றது; உண்மையான இந்திய தேசீய வாதிகள் அதில் சாட்சி சொல்ல வேண்டும்; ஆதலால் ஓட்டர்களே நீங்கள் தக்க தேசீய வாதிகளைத் தெரிந்தெடுங்கள்” என்று ஓட்டுப் பிச்சைப் பிரசாரம் செய்துவிட்டு ஓட்டர்களும் தங்கள் பிரதிநிதிகள் சைமன் கமிஷனிடம் சாட்சி சொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே தங்கள் ஓட்டுகளைக் கொடுத்து தெரிந்தெடுத்திருக்க, இப்போது தங்களைத் தெரிந்தெடுத்த ஓட்டர்களுக்கு விரோதமாய் “சைமன் கமிஷனைப் பகிஷ்கரிக்கின்றேன்” என்பது ஒரு யோக்கியமான பிரதிநிதிக்கு நாணயமான காரியமாகுமா?

பிரதிநிதிகள் அயோக்கியராக இல்லாமல், ஓட்டர்களின் துரோகியாக இல்லாமல், நல்ல சுத்த ரத்த ஓட்டமுள்ள நாணயக்காரராயிருப்பார்களானால் உடனே தமது பதவியை ராஜீனாமா கொடுத்துவிட்டு, மறுபடியும் தேர்தலுக்கு நின்று தாம் பகிஷ்காரம் செய்யப் போவதாய் ஓட்டர்களுக்கு சொல்லி, ஓட்டு கேட்டு, அவர்களால் தெரிந்தெடுத்த பிறகு பகிஷ்காரம் செய்தால் அது ஆண்மையும் நாணயமுமான காரியமாகும். அப்படிக்கில்லாமல் ‘காணாமல் பேசுபவர்கள் எதற்கோ சமானம்’ என்பது போல் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் போய் நின்று கொண்டு உண்மையான விஷயங்களைச் சொல்லாமல் தமிழ்மக்கள் மீது வீண்பழி சுமத்துவதில் என்ன லாபம் வரும்? எனவே வீணான பகிஷ் காரக் கூச்சல் போடுவதும் கமிஷனை பகிஷ்கரிப்பதும் இந்திய தேசீய அயோக்கியத்தனத்திற்கு மற்றொரு உதாரணமாகும் என்று தைரியமாய்ச் சொல்லுவோம்.

கதர்

கதரைப் பற்றியும் ஒரு தீர்மானம் காங்கிரசில் நிறைவேற்றப் பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. இது ஓட்டுப் பறிக்கும் தந்திரமே ஒழிய இதனால் நாட்டிற்கு எவ்வித பலனும் உண்டாகப் போவதில்லை என்று துணிந்து சொல்லுவோம்.

காங்கிரஸ் தீர்மானத்தில் கதர் இல்லாமலிருக்கும் போதே கதரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களில் ஒரு பகுதியார் வயிறு வளர்ப் பதோடு மாத்திரம் நில்லாமல் பார்ப்பனரல்லாதாருக்கு  பல வழிகளிலும் தொல்லைகள் விளைவித்துக் கொண்டு வருகின்றார்கள் என்பதைப் பற்றி பல தடவை வெளிப்படுத்தி இருக்கின்றோம். இப்போது காங்கிரசில் தீர்மானிக் கப்பட்டுவிட்டதால் இனி முன்னிலும் அதிகமாக வெறும் ஆகாசப் பேர் வழிகள் எல்லாம் வெளியே கிளம்பி கதர்! கதர்! என்று கூச்சல்போட ஆரம்பித்து விடுவார்கள்.

ஆகவே, கதரின் யோக்கியதையைப் பற்றி இந்தச் சமயத்திலேயே சற்று வெளிப்படுத்தி விடுவது சரியான காரியமாகும்.

அதாவது கதர் இயக்கம் ஏற்பட்டு நமக்குத் தெரிய சுமார் 8 வருஷ மாகின்றது. அதில் இதுவரையில் எத்தனை லக்ஷ ரூபாய்க்கு அல்லது எத்தனை கோடி ரூபாய்க்கு கதர் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றதோ அதில் சரியாக மூன்றில் இரண்டு பங்கு ரூபாய் அதை வாங்கிக் கட்டிய மக்கள் நஷ்டப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் அவற்றில் 5-ல் ஒரு பங்கோ 6-ல் ஒரு பங்கோ தான் ஏழைகளான நூற்புக்காரர்களுக்குச் சேர்ந்திருக்கும். நெசவுக் காரர்களுக்கு இந்தக் கதரினால் எவ்வித லாபமும் ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது. நூல் நூற்பவர்களுக்கு மேற் சொன்னபடி சிறிது பாகம் சேர்ந்திருந்தாலும் அது அவர்களுக்குத் தினம் ஒன்றிற்கு 10 மணி அல்லது சில சமயங்களில் 12 மணி நேரத்திற்கும் குறையாமல் வேலை செய்வதற்கு 6 தம்பிடி முதல் 9 தம்பிடி அல்லது (ரொம்பவும் அதிகமாயிருந்தால்) 10-தம்பிடி வீதம் தான் பெரும்பாலும் கிடைத்திருக்கும். ஒரு அணாவுக்கு மேல் அடைந்திருக்கவே முடியாது.

அதாவது ஆறு முழமுள்ள ஒரு ஜதை கதர் வேஷ்டி சாதாரண பஜார் ரகமானால் ரூ.4-2-0 கொடுத்து வாங்க வேண்டும். இதே ஆறு முழ வேஷ்டியை மில் வேஷ்டியாக வாங்கினால் ரூ.1-10-0 அல்லது ரூ. 1-12-0. கொடுத்தால் போதுமானது. ஒரு ஜதை வேஷ்டிக்குக் கதரை உத்தேசித்து வாங்குகின்றவர்கள் குறைந்தது 2-4-0 அல்லது 2-8-0 ரூபாய் நஷ்டப் பட வேண்டியிருக்கிறது. சற்று நல்ல வேஷ்டியாய் பார்த்து வாங்க ஆசைப் படுகின்றவர்கள் சில சமயங்களில் இதற்கு இரட்டிப்பாயும் கொடுக்க வேண்டி வருகின்றது. பொதுமக்கள் இவ்வளவு நஷ்டமடைந்த பணத்தில் நூற்பவர்களுக்குப் போய்ச் சேரும் பணம் எவ்வளவு என்று பார்ப்போ மானால் சற்று விவரமாய் கூறுவோம்.

அதாவது இந்த வேஷ்டி, எடை போட்டுப் பார்த்தால் இரண்டே காலே அரைக்கால் பவுன் எடையாயிருக்கும். இந்த பஞ்சுக்கு நூற்பவர்களுக்கு கூலி ராத்தலுக்கு 4-அணா கூலி வீதம் சராசரி 0-9-6 அணா தான் போய்ச் சேரக்கூடும். அதுவும் ஒரு வாரத்திற்கு ஒரு பெண் இரவும் பகலும் வேலை செய்தால் தான் மேற்கண்ட இரண்டே காலே அரைக்கால் ராத்தல் நூலை நூற்று மேல்கண்ட ஒன்பதரை யணா கூலி பெற முடியும். இதற்கு ஒவ்வொரு பெண்மணியும், சராசரி 3 மைல் முதல் 6  மைல் வரை நடந்து வந்து பஞ்சு வாங்கிக் கொண்டு போய் நடந்து வந்து நூலை கொடுத்து கூலி வாங்கிக் கொண்டு போக வேண்டும்.

சாதாரணமாய் 8 வருஷ காலமாய் பல லக்ஷ ரூபாய்கள் பொது மக்களிடமிருந்து வசூல் செய்து பிரசாரம் செய்து ஆராய்ச்சி செய்த கதர் இயக்கத்தின் யோக்கியதை இதுவானால் இதை இனியும் எத்தனை வருஷ காலம் பிரசாரம் செய்வது? இனி எத்தனை லக்ஷம் ரூபாய் பொது மக்களிடமிருந்து பிடுங்குவது? இனி எத்தனை லக்ஷ மக்கள் இம்மாதிரி 100க்கு 200-வீதம் சதா வரி கொடுத்து சதா வாங்கிக் கட்டிக் கொண்டு வருவது என்பனவைகளை யோசித்தால் கதர் இயக்கம் ஜீவகாருண்யமும் புத்திசாலித் தனமானதும் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

உலகம் புதிய முறைகளையும் புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடித்து அதனாலே மேன்மை அடைந்து வருகின்றது. தினத்திற்குத் தினம் புதுமை புதுமையான சக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் சுகமும் நாகரீகமும் அடைந்து வருகின்ற காலத்தில் நமது நாடும் அப்பதவியை அடைய ஏன் முயற்சிக்கக் கூடாது. இப்படி பொதுமக்களிடம் கோடிக்கணக்காய் பணம் வசூலித்து அவை முழுவதும் ஒரு கூட்டத்தார் வயிற்றில் போய் விழும்படி - அதுவும் பணம் கொடுத்த கூட்டத்தாருக்கு துரோகம் செய்யச் செய்து கொண்டு ஒரு நாளைக்கு 10 மணி 12 மணி நேரம் வேலை வாங்குவதன் மூலம் முக்கால் அணாவும் ஒரு அணாவும் கூலி கிடைக்கும் படியான வேலைகளை ஆதரித்துக் கொண்டு வருவது ஒருநாளும் இனி பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடிய காரியமல்ல என்பதோடு அவ்வியக்கம் ஒரு பெரிய சமூகத் திற்கு தொல்லை செய்யக் கருவியாயிருக்க விட்டுக் கொண்டிருப்பதும் அதற்காக தொல்லைப்படும்  மக்களே 100க்கு 200வீதம் வரி கொடுத்து வரவும் சகித்துக் கொண்டிருப்பது என்பதும் இனி அரை க்ஷணமும் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடியதல்லவென்றே சொல்லுவோம்.

ஆதலால் இனி பொதுமக்கள் கதரில் செலுத்தும் நேரத்தையும் பணத்தையும் அறிவையும் பிரயாசையையும் அதற்காக செலுத்தும் வரியை யும் வேறு ஏதாவது ஒரு தக்க ஆராய்ச்சியில் செலவு செய்து ஏழைகளுக்கு விமோசனம் உண்டாகும்படி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான காரியமாகும்.

அன்றியும் பாமர மக்கள் இக்கதர்ப் புரட்டினால் ஏமாந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் பொது மக்களின் கடமையாகும். இதனா லேயே நாம் கதரைக் கட்டாமலிருக்கப் போகின்றோம் என்றாவது மற்றவர் களைக் கட்ட வேண்டாம் என்று சொல்வதாகவாவது யாரும் நினைத்துவிடக் கூடாது. இந்த முயற்சி பலனளிக்கவில்லை என்றும் சூழ்ச்சிக்கு உபயோகப் படுத்தப் படுகின்றது என்றும், சொல்லுவதுடன் இதையே நம்பிக்கொண்டிருக் காமல் ஏழைமக்களின் பொருட்டு வேறு முயற்சி கண்டு பிடிக்கவேண்டும் என்றும் பொது ஜனங்களுக்குத் தெரிவிக்கவும், இந்த எட்டு வருஷகாலம் கதருக்காக பாடுபட்டு கதருக்காக ஜெயிலுக்குப் போய் கஷ்ட நஷ்டப்பட்டு கதர் இயக்கத்திற்கு ஓரளவு பொறுப்பாளியாய் இருந்து வந்ததின் மூலம் அறிந்த அனுபவத்தையுமே நாம் எழுதுகின்றோம். இப்போது ஏன் இதை எழுத வேண்டியதாயிற்று என்றால் வர வர கதர்புரட்டு சகிக்கக் கூடியதா யில்லை என்பதோடு, தமிழ்நாடு கதர் இலாக்காகாரர்களான திரு.சி. ராஜ கோபாலாச்சாரியாரும் அவர்களது சிஷ்யர்களும் அடுத்த தேர்தலில் பார்ப்பனரல்லாதார்களை ஒழிக்க இக்கதர் புரட்டையே முக்கிய கருவியாய் கருதியிருக்கின்றார்கள் என்றும் அதை உத்தேசித்தே காங்கிரசில் கதர் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள் என்றும் உறுதியாய் நம்புவதால் தான்.

உதாரணமாக சென்ற தேர்தலில் பார்ப்பனரல்லாதாரை ஒழிக்க மதுவிலக்குப் புரட்டுகளை ஆயுதமாக வைத்துக் கொண்டு இதே திரு. சி.ராஜகோபாலாச்சாரியாரும் அவரது சிஷ்ய கோடிகளும் பிரசாரம் செய்த தையும் கோடுகட்டிய குறள்கள் எழுதினதையும் கருப்பாயி சொக்காயி சம்பாஷணைகள் எழுதினதையும் இவற்றை எல்லாம் இதே திரு. காந்தியும் ஆமோதித்து மதுவிலக்குக்காரர்களுக்கே ஓட்டுக் கொடுக்கும்படி சிபார்சு செய்ததையும் ஞாபகப்படுத்திக் கொண்டால் போதுமானது. எலக்ஷன் நடந்த பிறகு இந்த திரு. காந்தியாவது திரு. ஆச்சாரியாராவது ஒரு கடுகளவாவது தங்கள் பொறுப்புகளை உணர்ந்தார்களா என்று கேட்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 06.01.1929)

Pin It