கதரின் பேரால் நமது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு இடையூறு அதாவது அரசியலின் பேரினாலும் கடவுள், மோக்ஷம், மதம், என்னும் பேரினாலும் எவ்வளவு கொடுமையும், சூழ்ச்சிகளும் செய்து வந்தார்களோ வருகிறார்களோ, அதுபோலவே ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியார் முதலிய பார்ப்பனர்களும், அவருடைய பார்ப்பன சிஷ்யர்களும், பார்ப்பனரல்லாத சில கூலிகளும் சூழ்ச்சி செய்து வருவதாக நாம் நினைப்பதற்கு இடமேற்பட்டு வருவதற்கு தகுந்தாற்போல் பல இடங்களில் இருந்து சமாச்சாரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இச்சூழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் மகாத்மா வரவை ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்றும் தெரிய வருகிறது.
“மகாத்மாவின் தென்னாட்டு விஜயம்” என்னும் பேரால் கதர் பண்டை செலவு செய்து ஆங்காங்கு போய் பார்ப்பனீய விஷங்களைப் பரப்ப உபயோகித்துக் கொள்ளுவதாகவும் தெரிகிறது. ஆன போதிலும் நமக்கு அதைப் பற்றிப் பயம் ஒரு சிறிதுமில்லை என்றே சொல்லுவோம். மகாத்மாவை நாம் எல்லோரும் சேர்ந்து வரவேற்க வேண்டியதுதான். நாம் எல்லோரும் அவரது வருகையின் கருத்துக்கு ஆதரவளிக்க வேண்டியது தான். தாராளமாய்ப் பணமும் கொடுக்க வேண்டியதுதான். அதைப் பற்றி நாம் ஒரு சிறிதும் பின் வாங்கக்கூடாது என்பதே நமது கெட்டியான அபிப்பிராயம். அப்படி நம்முடைய பணமும் நம்முடைய ஆதரிப்பும் நமது கெடுதிக்கும் இழிவுக்கும் சுயமரியாதை அழிவுக்கும் உபயோகப்படுமானால் நாம் என்ன செய்ய வேண்டியது என்பது நமக்குத் தெரியும். கதர் என்பதாக குருட்டு நம்பிக்கையில் விழுந்து உழன்று கொண்டு நமது சுயமரியாதை பறிபோவதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதாக உறுதி கூறுகிறோம்.
பார்ப்பனர்களின் அரசியல் புரட்டுகளையும் மதப் புரட்டுகளையும் கண்ட கண்டவிடங்களில் எல்லாம் நாம் அவற்றை தாராளமாய் கண்டிக்கவில்லையா? நமது எதிரிகளும், அறிவிலிகளும் நம்மை தேசத் துரோகி என்கிறார்கள் என்றோ மதத்துரோகி என்கிறார்கள் என்றோ நாஸ்திகர்கள் என்கிறார்கள் என்றோ பயந்து நமது மனச்சாக்ஷியை எங்காவது மாற்றிக் கொண்டோமா? அது போலவே கதர் இயக்கத்திலும் பார்ப்பனப் புரட்டுகளைக் கண்டோமானால் நம்மை கதர் துரோகி என்று பிறர் சொல்வார்களே எனப் பயந்துகொண்டு ஒருக்காலும் வாயை மூடிக் கொண்டிருக்க மாட்டோம். “தேசத் துரோகி, ராஜத் துரோகி, தெய்வத் துரோகி, மதத் துரோகி, பிராமணத் துவேஷி, காங்கிரஸ் துரோகி, சுயராஜ்யக் கட்சித் துரோகி” முதலிய எத்தனையோ “துரோகியும் துவேஷியும்” ஆகி ஜெயிலுக்கும் நரகத்திற்கும் போனாலும் சரி நமது சுயமரியாதையே நமது பிறப்புரிமை என்று நமக்குப் பட்டதைச் சொல்லி வரும்போது கதர்த் துரோகிப் பூச்சாண்டிக்கு ஒருக்காலமும் பயந்து விடமாட்டோம்.
இப்பொழுது தமிழ்நாடு கதர் ஸ்தாபனத்தில் 100 - க்கு 75 பேருக்கு மேலாகவே பார்ப்பனர்கள் மாதம் 30, 40, 50, 75, 100, 150 என்பதாக சம்பளம் பெற்றுக் கொள்ளை கொண்டு பார்ப்பன அக்கிரஹாரம் சத்திரம் போல் வாழ்ந்து வருவது நமக்குத் தெரியும். ஆனாலும் அதைப் பற்றி நமக்கு அவ்வளவு அதிகமான ஆத்திரமில்லை. ஆனால் அவர்கள் அதை நமக்கு கெடுதி செய்ய ஆதாரமாய் உபயோகித்துக் கொள்வதைத்தான் சகிக்க முடியவில்லை. “சுதேசமித்திரன்” எப்படி நமது பங்கு, நமது சந்தாப் பணம், நமது விளம்பரப் பணம் ஆகியதைக் கொண்டு நமது சமூகத்திற்குக் கேடு சூழும் காரியத்தையே “தேச சேவை”, “தேசீயப் பத்திரிகை” என்னும் பேரால் பரப்பி வருகிறதோ, அதுபோலவே நமது “ஏழை மக்களுக்கு சாப்பாடு” “குடியானவர்களுக்கு தொழில்” என்று சொல்லிக் கொண்டு செய்யும் கொடுமைகளை பார்த்துக் கொண்டும் நம்மை எவனாவது கதர் துரோகி என்று சொல்லி விடுவானே எனப்பயந்து வாயை மூடிக் கொண்டிருந்தால் அதைவிட பயங்காளித்தனமான காரியம் வேறில்லை என்பதே நமதபிப்பிராயம். ஆனால் மகாத்மா காந்தி அவர்கள் இவ்வியக்கத் தலைவராய் இருப்பதால் அப்படிச் சொல்லுவது மகாத்மாவை குற்றம் சொல்லுவதாகுமோ, அவருக்கு துரோகம் செய்ததாகுமோ என்பதாக சில மூட நம்பிக்கைக்காரர் பயப்படவும் கூடும். இப்படிச் சொல்லி சில பார்ப்பனர்கள் பாமர மக்களை ஏமாற்றவும் கூடும். ஆனாலும் அதற்கும் நாம் பயப்படக் கூடாது என்பதுதான் நமது அபிப்பிராயம்.
பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தாரின் அக்கிரமங்களை எடுத்துச் சொல்வது ராஜத் துரோகமாகாது. “பஞ்சாபில் டையர் ராக்ஷதத் தன்மையாய் நடந்து கொண்டார். அவரைத் தண்டிக்க வேண்டும். அவரைத் தூக்கிலிட வேண்டும்” என்று நாம் சொன்னதும் “லார்ட் செம்ஸ்போர்டை விசாரணை செய்து தண்டிக்க வேண்டும்” என்று நாம் சொன்னதும் ஜார்ஜ் மன்னரை வைததாகுமா? ஜார்ஜ் மன்னரைத் துவேஷித்ததாகுமா? அல்லது இது ஜார்ஜ் மன்னருக்கு துவேஷமாகுமா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகையால் நாம் ஒன்றுக்கும் பயப்பட வேண்டியதில்லை. மகாத்மா நம்மவர், அவர் கொள்கையாலல்லது நாட்டுக்கு சுயராஜ்யமோ சுயமரியாதையோ சமத்துவமோ விடுதலையோ கிடைப்பது என்பது முடியாத காரியம். மகாத்மா ஒரு வருஷத்தில் செய்த வேலை இந்த நாட்டில் இதுவரை தங்கள் தங்கள் ஆயுள் முழுவதும் செலவழித்தும் செய்தவர்களைக் காணோம். ஆதலால் அப்பேர்ப்பட்ட பெரியாரை வணங்குவதற்கும் வரவேற்பதற்கும் பின்பற்றுவதற்கும் இப்பார்ப்பனர்கள் சூழ்ச்சிக்கு பயந்து நாம் பின் வாங்கக் கூடாது.
தவிர மகாத்மா நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியை அறியாதார் என்று நினைப்பதும் அறியாமையாகும். அவரிடத்தில் உள்ள தயவினாலும் தாக்ஷண்யத்தினாலும் கருணையினாலும் சிற்சில சமயங்களில் இப்பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து விடப்படுகிறதே அல்லாமல் அவரை அவைகள் ஏய்த்து விட்டதாகவோ அல்லது அவர் அறியாமல் செய்து விடுகிறார் என்றோ ஒருக்காலும் சொல்ல முடியாது. அவருக்குச் சில பார்ப்பனர்களிடத்தில் இருக்கும் தாட்சண்ணியம் என்கிற பலஹீனத்தை சிலர் அதிகமாய் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். அதனால் நமக்கு சில சமயங்களில் கெடுதி நேரிடுவதுண்டு. ஆனாலும் அதுவும் அளவுக்கு மீறுகிற போது நாம் அதையும் எதிர்க்கத் தயாராயிருந்து வருகிறோமேயல்லாமல் அதற்காக நாம் அடியோடு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. இருக்கவும் மாட்டோம். தவிர மகாத்மாவிற்கு இந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதை நன்றாய்த் தெரியும் என்பதற்கு நாம் ஒரு உதாரணம் சொல்லுவோம்.
பெல்காம் காங்கிரசின்போது மகாத்மாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்த சமயம் (அதாவது கதர் போர்டு சம்பந்தமாகவே அதிலுள்ள உத்தியோகங்கள் மிகுதியும் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்பட்டு வருகிறது என்கிற காரணத்தால் கதர் போர்டு பிரசிடெண்டு என்கிற முறையில் நமக்கும் கதர் போர்டு காரியதரிசி என்கிற முறையில் ஸ்ரீமான் கே. சந்தானம் அவர்களுக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டு விட்டது. இதில் ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் ஸ்ரீமான் சந்தானத்திற்கு பக்கபலமாயிருந்தார். இது விஷயமாய் எங்களுக்குள் ஒரு முடிவும் ஏற்பட இடமில்லாமல் போகவே கடைசியாக காரியதரிசி ஸ்ரீமான் கே. சந்தானம் அவர்கள் ராஜீனாமாக் கொடுத்துவிட்டார். ராஜீனாமா கொடுத்து விட்டதோடு சும்மா இராமல் இந்த ராஜீனாமாவை மகாத்மா தகவலுக்கு கொண்டுபோய் ஸ்ரீமான் சந்தானத்தின் ராஜீனாமாவைப் பின் வாங்கிக் கொள்ளும்படி செய்ய மகாத்மாவையும் தூண்டப் பட்டது.) மகாத்மா நம்மை கூப்பிட்டு ஸ்ரீமான் சந்தானம் ஏன் ராஜீனாமாக் கொடுத்தார்? என்று கேட்டார்.
நான் கதர் போர்டு சம்பந்தமான உத்தியோகங்களை பெரிதும் பார்ப்பனர்களுக்கே அவர் கொடுப்பதால் அதன் தலைவர் என்கிற முறையில் பார்ப்பனரல்லாதாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதாகச் சொன்னதினால் அவருக்குத் திருப்தியில்லாமல் அவர் ராஜீனாமாக் கொடுத்து விட்டார் என்று சொன்னேன்.
மகாத்மா: இது ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாருக்குத் தெரியாதா? என்றார்.
நான் : இது விஷயத்தில் அவர்கள் எல்லோரும் ஒன்றுதான் என்று சொன்னேன்.
மகாத்மா: அப்படியானால் உமக்கு ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரிடம் கூட நம்பிக்கை இல்லையா? என்றார்.
நான் : பார்ப்பனர்களுக்கு அவர்களிடம் இருக்கும் நம்பிக்கை அவ்வளவு எனக்கு அவரிடம் இல்லை என்று சொன்னேன்.
மகாத்மா: அப்படியானால் பார்ப்பனர்களிடத்திலேயே உனக்கு நம்பிக்கையில்லையா என்றார்.
நான்: இந்த விஷயத்தில் நம்பிக்கையே உண்டாவதில்லையே என்றேன்.
மகாத்மா: அப்படியானால் உலகத்திலேயே நல்ல பார்ப்பனர் இல்லை என்பது உமது அபிப்பிராயமா என்றார்.
நான்: என் கண்ணுக்குத் தென்படுவதில்லையே நான் என்ன செய்யட்டும் என்றேன்.
மகாத்மா: அப்படிச் சொல்லாதீர்கள் நான் ஒரு நல்ல பார்ப்பனரைக் கண்டிருக்கிறேன். அவர்தான் கோக்கலே. அவர் தன்னை பிராமணன் என்று சொல்லிக்கொண்டதே கிடையாது, யாராவது அவரை பிராமணன் என்று கூப்பிட்டாலும், மரியாதை செய்தாலும் ஒப்புக்கொள்ளாததோடு உடனே ஆட்சேபித்துத் தனக்கு அந்த யோக்கியதை இல்லை என்பதை எடுத்துக் காட்டுவார்.
நான்: மகாத்மா கண்ணுக்கே ஒரே ஒரு யோக்கியமான பிராமணன் மாத்திரம் தென்பட்டு இருக்கும்போது என் போன்றவர்கள் கண்ணுக்கு எப்படி தென்படக்கூடும் என்றேன்.
மகாத்மா: (வேடிக்கையாய் சிரித்து விட்டு) மறுபடியும் ஸ்ரீமான் சந்தானம் ராஜீனாமாவை வாபீசு பெற்றுக்கொண்டு காரியதரிசி வேலை பார்க்கக்கூடாதா என்று என்னைக் கேட்டார்.
நான்: நன்றாய்ப் பார்க்கலாம் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் பார்ப்பனரல்லாதாருக்கு சரிபகுதி அதாவது 100-க்கு 50 உத்தியோகமாவது கொடுக்கப்பட வேண்டும் என்றேன்.
ஸ்ரீமான் பாங்கர் : ஆச்சரியப்பட்டு 100-க்கு 50 வீதம் போதுமா? அது கூடவா இப்போது கொடுக்கப்படவில்லை என்கிறீர் என்று கேட்டார்.
நான்: ஆம், என்றேன்.
சங்கர்லால் பாங்கர்: ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் 100-க்கு 50 போதுமென்கிறாரே இது என்ன அதிசயம் என்றார்.
மகாத்மா: நான் ஒருபோதும் சம்மதியேன். 100-க்கு 90 கொடுக்க வேண்டும்.
நான் : 100-க்கு 50 கொடுப்பதாய் தீர்மானம் போட ஒப்புக்கொள்ள முடியாது என்கிறவர்கள் 100-க்கு 90 கொடுப்பதெப்படி? என்றேன்.
மகாத்மா: தீர்மானம் போடவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் 100-க்கு90 கொடுக்கவேண்டியது கிரமம் என்று சொல்லுவேன் என்று சொல்லிவிட்டு, ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகம் கொடுப்பதில் உமக்கென்ன ஆட்சேபணை என்று கேட்டார்.
சந்தானம்: எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஒருவரும் வருவதில்லையே நான் என்ன செய்யட்டும் என்று சொன்னார்.
மகாத்மா: என்னைப் பார்த்து என்ன நாயக்கர் ஜீ? யாரும் வருவதில்லை என்கிறாரே என்ன சொல்லுகிறீர்?
நான்: அது சரியல்ல. ஏன் வருவதில்லை என்பதற்கே காரணம் வேண்டும். முதலாவது வேலை கொடுக்க வேண்டும். வேலை கொடுத்து அவனை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த இரண்டு காரியம்இருந்தால் எவ்வளவோ பேர் வேண்டுமானாலும் கிடைப்பார்கள்.
மகாத்மா: அப்படியானால் இனிமேல் உத்தியோகஸ்தர்களை நியமிக்கும் அதிகாரம் நீங்கள் வைத்துக் கொள்ளுகிறீர்களா?
நான்: ஸ்ரீமான் சந்தானம் அவர்கள் தன்னால் முடியாதென்றால் நானே பார்த்துக் கொள்ளுகிறேன்.
மகாத்மா: ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து இனி உத்தியோகஸ்தர்கள் நியமனம் நாயக்கரிடம் விட்டு விடுங்கள் என்றார்.
சந்தானம்: எனக்கு ஆட்சேபணையில்லை.
சி. இராஜகோபாலாச்சாரியார் : குறுக்கே தலையிட்டு அது முடியாத காரியம். ஏனென்றால் யார் வேலை வாங்குகிறார்களோ அவர்கள்தான் வேலைக்காரரை நியமிக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஒருவர் நியமிப்பது, ஒருவர் வேலை வாங்குவதுமாயுமிருந்தால் வேலை நடக்காது என்றார்.
மகாத்மா: உடனே சிரித்துக்கொண்டு நாயக்கர் சொல்லுவதில் ஏதோ உண்மை இருக்கும்போல் தோன்றுகிறது. இப்போது நான் காங்கிரஸ் பிரசிடெண்டு, ஸ்ரீமான் ஜவாரிலால் நேரு காரியதரிசி, நான் நியமித்த ஆளைக் கொண்டு ஜவாரிலால் வேலை வாங்க முடியாவிட்டால் நானாவது குற்றவாளியாக வேண்டும். அல்லது ஜவாரிலாளாவது குற்றவாளியாக வேண்டும். நியமிக்கப்பட்ட ஆளிடம் குற்றமிருக்க நியாயமில்லை. சர்க்காரில் கூட நியமிப்பவர் ஒருவர், வேலை வாங்குபவர் ஒருவர். அப்படிக்கிருக்க அதில் எங்கேயாவது வேலை வாங்குபவர் நியமிக்காததால் வேலைக்காரர்கள் சரியாய் நடக்கவில்லை என்று ஏற்பட்டிருக்கிறதா? என்று கேட்டார்.
சி. ராஜகோபாலாச்சாரியார்: வகுப்பு பிரிவினை பார்த்தால் போதுமா ? வேலை நடக்க வேண்டாமா? தகுதியும் கூட பார்க்க வேண்டாமா? என்றார்.
மகாத்மா: நாயக்கர் அதையும் பார்த்துக் கொள்வார் என்றே நினைக்கின்றேன். அப்படி பார்ப்பனரல்லாதாரை நியமித்ததன் மூலம் ஏதாவது வேலைகள் கொஞ்சம் கெட்டுப் போனாலும் குற்றமில்லை. இரண்டு காரியங்களும் நடக்க வேண்டியதுதான். அதாவது கதர் விஷயம் எப்படி முக்கியமானதோ அதுபோல வகுப்பு அதிருப்திகளும் நீங்க வேண்டியதும் மிக முக்கியமானது. ஆதலால் கதர் போர்டு சம்பந்தமான உத்தியோக நியமனம் நாயக்கர் கையில்இருக்கட்டும் என்று சொன்னார்.
பிறகு எல்லோரும் சரி என்று ஒப்புக்கொண்டதாக அவருக்கு ஜாடை காட்டிவிட்டு வந்துவிட்டோம். பிறகு எப்படி எப்படியோ பாடுபட்டு கதர் ஆதிக்கம் முழுவதும் தங்கள் கைக்கே வரும்படியாக பார்ப்பனர்கள் செய்துகொண்டார்கள். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. நாமும் கொஞ்சமும் லக்ஷியம் செய்யாமல் கதருக்காக எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவு உழைத்தோம்; உழைத்துக் கொண்டுமிருக்கிறோம்; இனியும் உழைக்கப் போகிறோம். எனவே மகாத்மா காந்தி இவர்களை சரியானபடி அறிந்து கொள்ளவில்லை என நாம் நினைப்பது தப்பு என்றே சொல்லுவோம். ஆதலால் மகாத்மாவை வரவேற்கும் விஷயத்திலும் பணம் கொடுக்கும் விஷயத்திலும் நம்முடைய பங்கை நாமும் சரியாக செலுத்த வேண்டும்.
சில இடங்களில் பார்ப்பனரல்லாதார் தனியாய் வசூல் செய்தோ தனியாய் வரவேற்றோ தங்கள் கடமையை செய்யலாம் என்பதாக சிலர் அபிப்பிராயப்படுவதாகவும் தெரிய வருகிறது. அது விஷயத்திலும் நமக்கு ஆnக்ஷபணை இல்லை. சென்னை, மதுரை, குடியேத்தம், வேலூர் முதலிய இடங்களில் நம்மை நேரிலும் கேட்டார்கள். நாம் அப்படியானாலும் சரி, எப்படியாவது நம் கடமையைச் செய்ய வேண்டும் என்றேதான் சொன்னோம். கடைசியாக சொல்லுவது என்னவென்றால், மகாத்மா வரவு நாள் சமீபத்தில் இருப்பதால் ஆங்காங்கு உள்ளவர்கள் தனியாகவோ, கலந்தோ தங்களுக்கு தோன்றுகிறபடி ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமாய்க் கோருகிறோம்.
(குடி அரசு - கட்டுரை - 06.03.1927)