“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஓர் பழமொழி. அத்தகைத்தே நமது பார்ப்பனர்களின் தன்மையாகும். பல நூறு ஆயிர ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, தூர்த்தர்களான பார்ப்பனர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பைக் கருதி உண்டாக்கிய சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு அட்டை போல் உறிஞ்சி வந்தனர் - வருகின்றனர். எத்தகைய கேவலத் தொழிலையும் செய்யப் பின் வாங்காத இழிதகைமை படைத்த இப்பார்ப்பனக் கூட்டம் இந்துக்களின், அதாவது பார்ப்பனரல்லாதாரின் மதகுருவென்றும் சுபா சுபகாரியங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களென்றும் மக்களை ஏமாற்றி ஆதிக்கஞ் செலுத்தி வந்தனர் - வருகின்றனர். இவர்களின் பஞ்சதந்திரக் கொடுந்தன்மைகளை பார்ப்பனரல்லாதார் அறியவே சுபா சுபகாரியங்களில் இவர்களை விலக்க வேண்டுமென்ற பரபரப்பும் துடிதுடிப்பும் அதிவேகமாக நாடெங்கும் பரவி வருகிறது.

periyar 355சென்னை மாகாணத்திலே பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றிய சின்னாளுள் இந்து சமூகத்தாருள் எவ்வளவோ பல சமூக சீர்திருத்தங்களும் மாறுதல்களும் நடந்து வருகின்றன. அவற்றுள் பார்ப்பனரல்லாதார்கள் சுபா சுப காரியங்களுக்கு பார்ப்பனர்களைப் புரோகிதர்களாகத் தருவிக்காது தங்கள் சமூகப் பெரியோர்களைக் கொண்டே நடத்திவர முற்பட்டு விட்டமை ஒன்றாகும். சென்னை மாகாணத்தில் இந்துக்கள் ஒவ்வொரு கிரிகைகளுக்கும் பார்ப்பனர்களை வைத்தே அதை நடத்த வேண்டுமென்ற விதி சட்டமூலமாகக் கிடையாது. அவரவர்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு நடத்திக் கொள்ளலாமென்று இருப்பதால் மேற்கூறிய காரியங்கள் எளிதிலே நடாத்தற்கு இலகுவாகிறது. ஆனால் பம்பாய் மாகாணத்திலோ அப்படியில்லை. பம்பாய் பார்ப்பனரல்லாதார் தங்கள் சுபா சுபகாரியங்களுக்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் அவர்களுக்கு தட்சணை என்னும் கட்டாயப் பிச்சை கொடுத்தே தீர வேண்டுமென்று சட்ட வாயிலாக ஏற்பட்டிருக்கிறது. சென்னையிலே தோன்றிய பார்ப்பனரல்லாதாரியக்கம் இந்தியாவெங்கும் பரவி வருகின்றமையான் ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார் தங்கள் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்ற முனைந்து வருகின்றனர். பம்பாய் மாகாணத்திலே உள்ள அத்தகைய கொடிய சட்டத்தை அறவே ஒழிப்பான் வேண்டி சின்னாட்களுக்கு முன் கூடிய பம்பாய் சட்டசபைக் கூட்டத்தில் பார்ப்பனரல்லாதாரின் தலைவர்களும் ஒருவரான திரு. எஸ். கே. போலே என்பார் ஓர் திருத்த மசோதா கொண்டு வந்தார். ஒவ்வொரு மனிதரும் தத்தம் மனச்சாக்ஷிப் படியும் விருப்பப்படியும் மத அனுஷ்டானங்களை நடத்த உரிமையிருக்க வேண்டுமென்பதே இம்மசோதாவின் முக்கியக் கருத்து.

திரு.எஸ்.கே. போலே அவர்களின் திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கென்றே சுயராஜ்யக் கட்சி சட்டசபை அங்கத்தினர்கள் அக்கூட்டத்திற்கு வந்திருந்ததாக ‘சுதேசமித்திரன்’ நிருபர் எழுதியிருக்கிறார். சுயராஜ்யக் கட்சியினரென்பது யார்? என்றும், அவர்கள் நாட்டிற்கு எத்தகைய ராஜ்யம் வேண்டுமென்கிறார்கள்? என்பதும் இவற்றினின்று நன்கு அறிந்து கொள்ளலாம். அதாவது சுயராஜ்யக் கட்சியார் பார்ப்பனக் கட்சியேயென்பதும் அக்கட்சியார் கோருவது பார்ப்பன ராஜ்யமே என்பதும் இவற்றினின்று தெள்ளிதிற் புலனாகும் என்பதே. திரு. போலே அவர்களின் திருத்த மசோதா சுயராஜ்யக் கட்சியினரால் மிகுந்த பலத்தோடு தாக்கப்பட்டதாகத் தெரிகிறோம். அக்கட்சியார் புரோகிதர்கள் சார்பாய் வாதாடும் போழ்து அத்திருத்த மசோதா போல்ஷ்விக் கொள்கை உடையதாயிருக்கிறதென்றும் பிராமண துவேஷத்தை வளர்க்கக்கூடியதென்றும் கூறி அம்மசோதாவைத் தனிக் கமிட்டிக்கு அனுப்புமாறும் வாதம் நிகழ்த்துவதானால் அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்குமாறும் பல திருத்தங்களும் மாற்றங்களும் கொண்டு வரப்பட்டன. எவ்வளவோ சூழ்ச்சி செய்தும் சுயராஜ்யக் கட்சியினரின் திருத்தத்தின்மேல் வந்த திருத்தங்கள் முற்றும் தோற்கடிக்கப்பட்டன.

இவ்வாறு புரோகிதர் கட்சி வீழ்ச்சி பெறுவதைக் கண்ட டாக்டர் பரஞ் சப்பே அவ்விரு கட்சிக்கும் ஒரு ராஜி செய்ய முயன்றார். இவரது ராஜியின் தோரணையைக் கவனித்தால் பூனைகள் திருடிக்கொண்டு வந்த அப்பத்தைப் பங்கிடப் புகுந்த குரங்கின் கதையாகவே யிருக்கிறது. ஏனென்றால் சாதி அபிமானம் சந்நியாசிக்கும் போகாது என்பது போல் டாக்டர் பரஞ்சப்பே பார்ப்பனரானதால் அவர் தம் இனத்தவராய பார்ப்பனப் புரோகிதர்களின் சார்பிலேயே பஞ்சாயம் செய்தார். அதாவது பரம்பரையாக இருந்துவந்த பாத்தியதையை இழக்க நேரும் புரோகிதர்களுக்கு ஒருவகை நஷ்டஈடு கொடுத்துவிடுமாறும் சிவிலியன்கள் சீர்திருத்தம் வழங்கப்பட்டவுடன், வீதாச்சாரப் பென்ஷன் பரிகாரம் முதலியவற்றிற்காகப் பிரமாதக் கிளர்ச்சி செய்ததை கவர்ன்மெண்டின் ஞாபகத்துக்குக் கொண்டு வருவதாகவும் அதே போல் ஆயிரக்கணக்கான வருஷங்கள் அனுபவித்து வந்த பாத்தியதைகளைப் புரோகிதர்கள் இழப்பதற்குப் பரிகாரமளிக்க வேண்டாமா என்றும் பேசியிருக்கிறார். மற்றொருவர் புரோகிதரைக் கூப்பிட விரும்பாதவர்கள் அனைவரும் அதற்குப் பதிலாக தடவை ஒன்றுக்கு ரூபாய் ஒன்று வீதம் கொடுக்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார். கல்வி மந்திரி கனம் யாதவ் டாக்டர் பரஞ்சப்பே அவர்கள் பேசியதை எதிர்த்து “மசோதாவின் உத்தேசம் கிராம ஜனங்களுக்குப் பூரா விடுதலையளிப்பதாகையால் நஷ்டயீடு அளிப்பது அந்தத் தீய முறையை இன்னும் நீடிக்கச் செய்வதாகும்” என்று அழுத்தமாகப் பேசியிருக்கிறார்.

பார்ப்பனரல்லாதாரிடம் புரோகிதர்கள் நஷ்டஈடு கேட்டதற்கு எத்தகைய உரிமை உண்டு என நமக்கு விளங்கவில்லை. இவர்கள் பார்ப்பனரல்லாதாரின் பின் வழித்தோன்றிய சந்ததியாரா? பார்ப்பனரல்லாதாரின் வாழ்வை அழியாது நிலை நிறுத்திய வீரர்களா? எனக் கடாவுகின்றோம். பார்ப்பனர்களின் எதிர்ப்பைத் தாக்கிய திரு. சூர்வே, “பார்ப்பனப் புரோகிதர்கள் ஜனங்களுடைய விருப்பப்படி சடங்குகளை நடத்தி வைக்காததால்தான் மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது” என்று கூறியதிலிருந்து அப்புரோகிதர்களே கிரிகைகளை நடத்தி வைக்கவும் அவற்றிற்கு கௌரவப் பிச்சை பெறவும் எவ்வாறு உரிமை உடையார் என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.

முதற்கண் மேற்கண்ட கிரிகைகள் எதற்காக என்ன பலனைக் கருதி, பார்ப்பனர்களைக் கொண்டும் அக்காரியங்கள் நடத்தி வைக்க வேண்டுமென்பது நமக்குத் தெரியவில்லை. வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு கூட்டத்தார் செய்த அக்கிரமத்திற்குப் பார்ப்பனரல்லாத சமூகம் நஷ்டயீடு கொடுக்க வேண்டுமாம். இவ்வரசாங்கம் பார்ப்பனர்களுடையதாயிருக்குமேயாகில் புரோகிதர்களை விலக்கும் பார்ப்பனரல்லாதாரை ஸார் சக்கிரவர்த்தியின் தலையை வாங்கியதைப் போன்றே அப்பார்ப்பனரல்லாதாரின் தலையை வாங்கும்படி தீர்மானம் செய்வார்களென்பதில் சந்தேகமில்லை.

ஜனங்களுடைய விருப்பப்படியும் கிரிகை செய்வதில்லை. இதற்குப் புரோகிதர்களை வேண்டாமென்று நிறுத்தினாலும் அதற்குத் தண்டவரி கொடுக்க வேண்டுமென்றால் இந்த அக்கிரமத்திற்கு எங்கு போய் முறையிடுவது? இவற்றினின்று சுயராஜ்யக் கட்சி பார்ப்பனக் கட்சி என்பதையும் அக்கட்சி பாடுபடுவதனைத்தும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே என்பதையும் நமது வாசகர்கள் உணர்ந்து கொள்வார்களென்று நம்புகிறோம்.

பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களை நம்பியிருந்த காலத்தில் பார்ப் பனர்கள் பம்பாய் அரசாங்கத்தில் புகுந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி புரோகிதர்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டுமென்ற இவ்வித சட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது பார்ப்பனரல்லாதார் விழித்துக் கொண்டு தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள முன் வந்தது போற்றத்தக்கதாகும். இவர்களது முயற்சி வெற்றி பெறுமென்று திரு.போலேயின் மசோதாவின் பேரில் நடைபெறும் விவாதத்திலிருந்து அறிகிறோம். அவர்களது முயற்சியை நாம் போற்றுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.08.1926)

Pin It