மார்க்சின் இன / வர்க்கம் இயங்கியல்

1850களில் பல ஐரோப்பிய நாடுகளில் எழுந்த புரட்சிகள் அடக்கி ஒடுக்கப்பட்டன. பிற்போக்கான பத்தாண்டுகள் என்று அக்காலத்தை மார்க்ஸ் மதிப்பிட்டார். 1860கள் மார்க்சிற்கு படைப்புத் தன்மை கொண்ட காலம். இவ்வாண்டுகளில் மார்க்ஸ் மூலதனம் நூலின் முதல்பகுதியை எழுதி முடித்து 1867-இல் வெளியிட்டார். நூலின் இரண்டாம் மூன்றாம் பாகங்களும் இக்காலத்தில் பெருமளவு எழுதி முடிக்கப்பட்டன. இதே கால கட்டத்தில் மார்க்ஸ் முதலாம் கம்யூனிஸ்ட் அகிலம் எனப் பின்னால் அழைக்கப்பட்ட அமைப்பினை நிறுவினார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவில் 1861-65 ஆண்டுகளில் நிகழ்ந்த கறுப்பின மக்களின் விடுதலைக்கான எழுச்சிகள் மார்க்சிற்கு பெரும் உற்சாகத்தை வழங்கின. ஐம்பது களில் நிலவிய தேக்கத்தைக் கடந்து மார்க்ஸ் முன்னேறினார். நீக்ரோ அடிமைமுறைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளெங்கிலும் ஆதரவைத் திரட்டு வதில் மார்க்ஸ் முன்னிலை வகித்தார். கோட்பாட்டு ரீதியாக, வர்க்கமும் இனமும் என்ற பிரச்சினையை மார்க்ஸ் இக்காலத்தில் இணைத்துச் சிந்தித்தார். இந்த நூற்றாண்டில் மானுட விடுதலைக் கான மிகப்பெரும் எழுச்சிகளில் ஒன்று இது என மார்க்ஸ் அமெரிக்க நீக்ரோக்களின் எழுச்சியை மதிப்பிட்டார். இந்த சமூகப் புரட்சி அரசியல் மாற்றங்களை மட்டுமல்லாமல், வர்க்க மற்றும் உடைமை உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று மார்க்ஸ் எழுதினார்.

அமெரிக்க நீக்ரோ மக்களின் எழுச்சிகள் 1861-65ஆம் ஆண்டுகளில் வடமாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் என்ற வடிவில் நிகழ்ந்தது. கருப்பின அடிமை முறையை ஒழிக்கவேண்டும் எனத்தொழில் வளர்ச்சி பெற்ற வடமாநிலங்கள் கோரின. 50 லட்சம் கருப்பின மக்களை அடிமைகளாகக் கொண்டிருந்த தென் மாநில நில உடைமையாளர்கள் அடிமை முறையைத் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண் டிருந்தனர். அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற ஒன்றிணைந்த நாடு வடக்கு/தெற்கு என இரண்டாகப் பிளந்துவிடுமோ என்ற நிலை உருவானது. தென் மாநிலங்களின் கருப்பின மக்கள் தமது உடைமை யாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினர்.

W.E.B. துபோய் என்ற மூத்த கறுப்பினச் சிந்தனையாளர். மேற்கத்திய வெள்ளை மூலதனம் கருப்பினத்தவரது அடிமை உழைப்பின் மீது கட்டி யெழுப்பப்பட்டுள்ளது என்பதை மார்க்ஸ் இக் காலத்தில் புரிந்துகொண்டார் என எழுதுகிறார். “நிறவெறிச் சாதிமுறை” இல்லாமல் வெள்ளை மூலதனம் இத்தனை திமிர் கொண்டதாக உருவாக்கியிருக்க முடியாது என்று அவர் குறிப் பிடுவார். நவீன காலம் உருவாக்கிய சனநாயக மாற்றங்களை நிறவெறி அடிமைமுறை சிதைத்து விட்டது என்று அவர் மேலும் எழுதுவார். அமெரிக்க உள்நாட்டுப் போர் குறித்த மார்க்சின் எழுத்துக் களை சி.எல்.ஆர்.ஜேம்ஸ், ரயா துனயேவ்ஸ்கயா போன்ற மார்க்சியர்களும் பெரிதும் பாராட்டிப் பேசுவர். இக்கால மார்க்சின் எழுத்துக்களில் இனம், வர்க்கம் ஆகியவற்றின் இயங்கியல் என்ற புதியதொரு சிந்தனைப்போக்கு தொடக்கம் பெற்றிருப் பதாக அவர்கள் கருதுகின்றனர். போலந்தின் தேசிய விடுதலை, கருப்பின மக்களின் போராட்டம் ஆகிய வற்றிற்கு ஆதரவு திரட்டுவதற்காகவே மார்க்ஸ முதலாம் கம்யூனிஸ்ட் அகிலத்தைக் கூட்டினார் என்று அவர்கள் கூறுகின்றனர். கறுப்பின மக்களுக்கு மார்க்சின் அமோக ஆதரவு தாராளவாத வகைப் பட்டது என்று சில கறாரான கம்யூனிஸ்டுகள் அவரைக் குறை கூறியதும் உண்டு.

மார்க்ஸ் 1846-இல் அவரது ரஷ்ய நண்பரான அனென்கோவிற்கு எழுதிய ஒரு கடிதத்தில் முதல் முறையாக அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவு களிலும் கறுப்பின அடிமைமுறை வழக்கில் இருப் பதைச் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய தொழில் முதலாளியம் நேரடியாக அடிமைமுறைக்குக் கடன் பட்டிருக்கிறது. அடிமைமுறை இல்லையெனில், பருத்தி உற்பத்தி இல்லை. பருத்தி இல்லையெனில் நவீன ஆலைகள் இல்லை. எனவே காலனிகளில் அடிமை முறையைக் கொண்டே நவீன தொழில் துறையும் சர்வதேச வர்த்தகமும் உருவாக்கப்பட்டு உள்ளன. எனவே அடிமைமுறை என்பதை அதி முக்கியமான ஒரு பொருளாதார நிறுவனமாகக் கொள்ளவேண்டும் என்று அக்கடிதத்தில் மார்க்ஸ் எழுதினார். மார்க்சின் எழுத்துக்களே அடிமை முறைமைக்கும் தொழில் முதலாளியத்திற்கும் இடை யிலான உறவுகளை முதலில் வெளிப்படுத்தின. நீக்ரோ அடிமை உருவாக்கம் என்ற விசயத்தை அம்பலப்படுத்தியவரும் மார்க்சே என்று செட்ரிக் ராபின்சன் என்ற சிந்தனையாளரும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க நீக்ரோக்கள் குறித்த மார்க்சின் எழுத்துக்களில் முக்கியமான திருப்புமுனை 1806-இல் நிகழ்ந்தது என கெவின் ஆன்றர்சன் கருதுகிறார். ஆப்பிரிக்க அமெரிக்கர்களைத் தன்னிலை கொண்ட புரட்சிகர சக்திகளாக மார்க்ஸ் இவ்வாண்டிலேயே அடையாளம் கண்டார் என்று கெவின் குறிப்பிடுகிறார். அமெரிக்கக் கண்டத்திலிருந்து மிகவும் குறிப்பிடத்தக்க தகவல் கிடைத்திருப்பதாக மார்க்ஸ் எழுதினார். அடிமைகள் புரட்சித் தோற்றம் பெற்று வருவதாக மார்க்ஸ் அதனைக் கணித்தார். தெற்கு மாநிலத்தவர் நிறவெறி அடிமை முறையை ஆதரிப்பது மட்டு மல்ல, அது தமது அடிப்படை உரிமை எனக் கோருகின்றனர். இன்னும் கூடுதலாக, தமது அடிமைமுறைக்கு அவர்கள் வடக்கிலும் நிலம் தேடுகின்றனர். நிற அடிப்படையிலான அடிமை முறையைத் தென்மாநில உடைமையாளர்கள் பரப்ப முனைகின்றனர், இந்த முயற்சி வெற்றி பெற்றால் நிறம்/இனம் அடிப்படையிலான ஒரு புதுவகை முதலாளியம் இனி உருப்பெறும் என்று மார்க்ஸ் எச்சரிக்கிறார். நிற அடிமைத்தனத்திற்கு அவர்கள் தெய்வீக அங்கீகாரம் தேடுகின்றனர், அது நாகரிகத்தின் அடையாளம் என நிரூபிக்க முனைகின்றனர். இங்கிலாந்து போன்ற நாடுகளின் முதலாளிகளும் தென்மாநிலங்களை ஆதரிக்கின்றனர், ஏனெனில் உருளைக்கிழங்கு, பருத்தி ஆகிய உற்பத்திப் பொருட்களுக்கு அவர்கள் அம்மாநிலங்களைச் சார்ந்திருக்கின்றனர். எனவே அமெரிக்காவில் நீக்ரோக்களின் சனநாயகப் புரட்சிக்கான சர்வதேச ஆதரவைத் திரட்டியாக வேண்டும் என மார்க்ஸ் எழுதுகிறார். இது அமெரிக்காவின் இரண்டாவது சுதந்திரப்போர், தென்மாநிலங்களின் கருப்பின மக்களை ஆயுதபாணிகளாக்க நாம் உதவ வேண்டும். இது ஓர் அறவியல் மற்றும் அரசியல், ராணுவத் தேவை என்று மார்க்ஸ் அறைகூவல் விடுத்தார்.

கறுப்பின மக்களின் விடுதலையை ஆதரித்து வந்த அதிபர் அப்ரகாம் லிங்கன் மிதமான முறையில் அதனைக் கையாளுகிறார் என மார்க்ஸ் கருதினார். அடிக்கடி ஆமை போல் அவர் தன்னை உள்ளிழுத்துக் கொள்கிறார் என்று மார்க்ஸ் ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். பல்வேறு அரசியல் குழுவினரும் அக்காலத்தில் சட்டபூர்வமான வழிகளின் மூலமாகவே பிரச்சினையை எதிர்கொள்ள முடியும் எனக் கூறி வந்தனர். ஆயின் இம்மாதிரியான பிரச்சினைகள் புரட்சிகரமான வழிமுறைகளால் நேரடியாகக் கையாளப்படவேண்டும் என்று மார்க்ஸ் எழுதினார். விடுதலை பெற்ற ஹாய்த்தி, லிபேரியா போன்ற புதிய நீக்ரோ குடியரசுகளுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் வழங்கி, அந்நாடுகளின் கறுப்பினப் போராளிகளைத் தென்மாநிலங்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று மார்க்ஸ் எழுதினார். 1863-இல் அதிபர் லிங்கன் வெளியிட்ட கறுப்பர் விடுதலைப் பிரகடனத்தை இப்போதைய பிரகடனம் பலவகைகளில் விஞ்சிவிட்டது என்று மார்க்ஸ் லிங்கனைப் பாராட்டினார். முந்திய அமெரிக்க சுதந்திரப்போர் மத்தியதர வர்க்கத் தினரின் தொடர்ந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியது; இப்போதைய கறுப்பின எழுச்சிகள் உழைக்கும் வர்க்கத்தினரின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்று மார்க்ஸ் எழுதினார். 1865-இல் அப்ரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்டபோது மார்க்ஸ் பெரிதும் வருந்தினார். அடுத்து வந்த அதிபர் ஜான்சன் தென்மாநிலங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட போது மார்க்ஸ் அவரைக் கண்டித்து “அமெரிக்க மக்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்” எழுதினார். “கறுப்புத்தோலின் மீது பதிக்கப்பட்டுள்ள அடிமை முத்திரை அகற்றப்படும் வரை, வெள்ளைத்தோலின் உழைப்பிற்கு விடுதலை கிட்டாது” என்று மார்க்ஸ் பிரான்கோ லஃபார்க் என்ற தனது நண்பருக்கு எழுதினார். இந்த நண்பரின் மகனான பால் லஃபார்க் என்பாரே மார்க்சின் மகளான லௌரா மார்க்சை மணம் முடித்தார். பிரெஞ்-க்யூப கலப்பினத் திருமணமான இது 1868-இல் நடந்தேறியது.

அயர்லாந்து: தேசிய இனப் பாட்டாளிகள்

1870-ஐ ஒட்டிய மார்க்சின் எழுத்துக்களில் வர்க்கம், கறுப்பினம், தேசிய இனம் ஆகியவற்றிற் கிடையிலான இயங்கியலின் முதிர்ச்சியைக் காண முடிகிறது என்று கெவின் ஆன்றர்சன் குறிப்பிடு கிறார். குறிப்பாக 16-ஆம் நூற்றாண்டிலிருந்தே பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகப் போராடி வந்த அயர்லாந்து மக்களைப்பற்றிய எழுத்துக்களில் இம்முதிர்ச்சியைத் தெளிவாகக் காணமுடிகிறது என்று அவர் கூறுகிறார். அயர்லாந்து தேசிய இனப் போராளிகளை மார்க்ஸ் உபபாட்டாளிகள் என்று மதிப்பிட முன்வருகிறார். இச்சொல்லை இக்கட்டுரையில் நாம் தேசிய இனப் பாட்டாளிகள் என மொழிபெயர்த்துக் கொள் வோம். ஒரு பேரரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் உண்மையில் ஒரு முதலாளிய நாட்டின் பாட்டாளி வர்க்கத்தை விட அதிகமாக உரிமைகளை இழந்து, அப்பட்டமான சுரண்டலுக்கு ஆட்படுகிறது என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

அயர்லாந்து மக்களின் போராட்டங்கள் குறித்து முதலில் ஏங்கெல்ஸ் எழுதத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1843-இல் இன்னும் அவர் மார்க்சை சந்திக்காத நாட்களிலேயே அயர்லாந்து பற்றி எழுதத் தொடங்கிவிட்டார். ஏங்கெல்சின் கட்டுரைகளில் அயர்லாந்து மக்களை அவர் “இழப் பதற்கு ஏதுமில்லாதவர்கள்”, “உண்மையான பாட்டாளிகள்”என்பது போன்ற சொற்களால் அடையாளப் படுத்துகிறார். 1845-இல் ஏங்கெல்ஸ் “இங்கிலாந்து தொழிலாளர் வர்க்கத்தின் இன்றைய நிலைமை” என்றொரு நூல் எழுதினார். இந்நூலில் அவர் தொழில்புரட்சியின் விளைவாகத் தோன்றியுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமை களைப் பற்றி எழுதுகிறார். அப்போது, இங்கிலாந்து நாட்டில் மிக அதிகப்படியான சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தொழிலாளர் வர்க்கம் அயர்லாந்தினரே என்று குறிப்பிடுகிறார். இந்நூல் வர்க்கச் சுரண்டலோடு தேசிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மக்கள் பகுதியினர் பற்றிய நுட்பமான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அயர்லாந்து தொழிலாளரின் கழி-மண் குடிசைகள், அவற்றின் முன்னும் பின்னும் தேங்கி நிற்கும் சாக்கடை நீர், அழுகி நாற்றமெடுக்கும் கழிவுகள், அவற்றினூடாக வெறுங்காலுடன் நடந்து செல்லும் தொழிலாளர் குடும்பத்தினர், ஆலைகள் உமிழும் புகையால் விஷமாகி இருண்டு போகும் பகல் நேரங்கள், வெறும் உருளைக்கிழங்குகளை மட்டும் தின்று பட்டினியில் வாழும் குழந்தைகள் போன்ற சொற் களால் ஏங்கெல்ஸ் அயர்லாந்து தொழிலாளர் வாழ்விடங்களைச் சித்திரிக்கிறார். அயர்லாந்து விவசாயப் பாட்டாளிகள் பற்றியும் ஏங்கெல்ஸ் அந்நூலில் விரிவாக எழுதுகிறார். 1845-49 ஆண்டுகளில் அயர்லாந்தில் பரவிய பஞ்சத்தில் 15 லட்சம் விவசாயிகள் செத்து மடிந்த தையும் இன்னும் பத்து லட்சத்தினர் பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்து சென்றதையும் ஏங்கெல்ஸ் பதிவு செய்கிறார்.

1848-இல் மார்க்ஸ் ஆற்றிய ஓர் உரையில் அயர்லாந்து பற்றிய அவரது முதல் குறிப்பு இடம் பெற்றுள்ளது. அயர்லாந்தின் தேசிய விடுதலையும் அந்நாட்டின் விவசாயப் புரட்சியும் ஒன்றிணைய வேண்டும் என்று அவ்வுரையில் மார்க்ஸ் வலியுறுத்து கிறார். அதாவது, அயர்லாந்து தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமை அந்நாட்டின் நில உடைமையாளர்களிடமிருந்து கைமாறி விவசாயி களின் கைகளில் வந்து சேரவேண்டுமென்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். 1853-இல் மார்க்ஸ் அயர்லாந்து நாட்டின் கிராமப்புற சமூக முரண்பாடுகளில் அக்கறை காட்டுகிறார். அம்மக்களின் நில உரிமைப் போராட்டங்களில் கவனம் செலுத்துகிறார். அப் போராட்டங்கள் நிலஉடைமையாளர்களை ஆதரித்து வரும் கத்தோலிக்க மதகுருமார்களுக்கும் அடித்தள விவசாயிகளுக்கும் இடையில் விரைவில் பிளவு களை ஏற்படுத்தும் என மார்க்ஸ் மதிப்பிடுகிறார். அயர்லாந்தின் கிராமப்புறங்களை ஊடுருவி வரும் பிரிட்டிஷ் முதலாளிகள் அந்நாட்டு விவசாயிகளைப் பஞ்சைப்பராரிகளாக ஆக்குவது மட்டுமல்ல. அயர் லாந்தின் விவசாய மூலதனத்தையும் கைப்பற்றி வருகின்றனர் என்பதை மார்க்ஸ் கணித்துச் சொல் கிறார். சமூகரீதியாக அயர்லாந்து மக்கள் தாழ் வானவர்களாக நடத்தப்படுவதால், புரட்சிகரப் போராட்டங்களுக்கான தன்னுணர்வை அவர்கள் இன்னும் ஈட்டாமல் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கிறார். அயர்லாந்து மக்களின் மீது இங்கிலாந்து முழு அடக்குமுறையைக் கையாண்டு வருவதால், அயர்லாந்து மக்களின் சமூகமாற்றத் திற்கான சின்னஞ்சிறு அசைவும் கூட தேசிய இன எழுச்சியின் வழியாகவே சாத்தியப்படும் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

மார்க்சின் மேற்கூறிய மதிப்பீடுகளின்படியே, 1858-இல் அயர்லாந்தில் ஃபெனியன் எனப்பட்ட புரட்சிகர தேசிய இன அமைப்பொன்று உருவானது. இங்கிலாந்து ஆட்சியை ஆயுதப் போராட்டங்களின் வழியாகத் தூக்கியெறிவதற்கான ரகசிய அமைப்பாக அது வடிவம் பெற்றது. “அயர் லாந்தில் ஒரு புத்தெழுச்சி” எனத் தலைப்பிட்டு மார்க்ஸ் 1857-இல் அது குறித்து ஒரு கட்டுரை எழுதினார். முந்திய தலைமுறையைச் சார்ந்த ஒ கோன்னல் போன்றோரின் கத்தோலிக்கத் தேசியத்தை ஃபெனியன் அமைப்பினர் தாண்டிச் சென்று விவசாயி களையும் தொழிலாளர்களையும் ஆதாரமாகக் கொண்டனர்.

1867-இல் மார்க்ஸ் மூலதனம் நூலின் முதல் பகுதியை வெளியிட்ட போது, அயர்லாந்து குறித்த அவரது பார்வை தீவிரமடைந்தது என கெவின் ஆன்றர்சன் குறிப்பிடுகிறார். அயர்லாந்தின் விடுதலைக்கு மேட்டுக்குடி மக்களை நாங்கள் இனியும் நம்ப மாட்டோம், மக்கள் தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அயர்லாந்து மண்ணை நிலத்திருடர்களிடமிருந்து மீட்கப் பாடு படும் விவசாயிகளே அதனைக் கையகப்படுத்த வேண்டும், புரட்சி ஒன்றே இதற்கான வழி என்று அப்போது ஃபெனியன் அமைப்பின் பத்திரிகை ஒன்று எழுதியது. இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் அகிலம் ஃபெனியன் அமைப்பிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது. இங்கிலாந்திலும் கனடாவிலும் ஃபெனியன் அமைப்பிற்கு ஆதரவாகத் தொழிலாளர் அமைப்புக்களை மார்க்ஸ் திரட்ட முனைந்தார். இக்காலகட்டத்தில் ஃபெனியன் விவசாயிகள் நடத்திய ஆயுதம் தாங்கிய எழுச்சிகளை பிரிட்டிஷ் ராணுவம் அடக்கியொடுக்கியது. மூன்று ஃபெனியன் போராளிகள் மான்செஸ்டர் நகரில் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர். தொடர்ந்து பல ஃபெனியன் போராளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டனர். 1870-இல் மார்க்ஸ் எழுதினார்: “இங்கிலாந்தி லிருந்து அயர்லாந்து தனிநாடாகப் பிரிவது சாத்திய மில்லை என்று நான் ஒரு காலத்தில் நம்பிக்கொண் டிருந்தேன்; ஆனால் இப்போது அது தவிர்க்க இயலாதது எனக் கருதுகிறேன்”. ஃபெனியன் போராளிகளைப் பகிரங்கமாகத் தூக்கிலிட்டதன் மூலம் இங்கிலாந்து அரசு தனி அயர்லாந்து உருவா வதை உறுதிப்படுத்திவிட்டது. ஆங்கில அரசு ஃபெனியன் இயக்கத்திற்கு ரத்த முழுக்குடன் ஞானஸ்நானம் வழங்கிவிட்டது என்று மார்க்ஸ் எழுதினார்.

அயர்லாந்தில் ஆங்கில முதலாளிகள் விவசாயி களை மரண எல்லைக்கு விரட்டுகிறார்கள். நிலங் களைக் கையகப்படுத்துகிறார்கள். அந்நிலங்களில் ஆங்கிலேயர்களைக் குடியமர்த்துகிறார்கள். அயர் லாந்தின் இயற்கைச் சூழல்களைப் பாழ்படுத்து கிறார்கள் என்று மார்க்ஸ் எழுதினார். அயர்லாந்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதை இங்கிலாந்து எப் போதுமே அனுமதித்ததில்லை, ஆங்கில மூலதனத் திற்குத் தேவையான மலிவு உழைப்பு மற்றும் மலிவான விவசாய கச்சாப் பொருட்களுக்குரிய சந்தையாகவே அது அந்நாட்டை இதுவரையிலும் வைத்திருந்தது என்று மார்க்ஸ் எழுதுகிறார். இவற்றிற்கு எதிராகச் செயல்படும் ஃபெனியன் இயக்கம் தனித்தன்மைகள் கொண்டது. அது சோசலிசப் பண்பு கொண்டது, அது ஓர் அடித்தள மக்கள் இயக்கம் என்று மார்க்ஸ் மதிப்பிட்டார். அயர்லாந்து மக்களுக்கு என்ன வேண்டும்? 1. இங்கிலாந்தி லிருந்து விடுதலை பெற்ற சுய அரசாங்கம் 2. விவசாயப் புரட்சி

3. இங்கிலாந்திற்கு எதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பொருளாதார ஏற்பாடுகள் என்று மார்க்ஸ் மிகவும் வரையறுக்கப்பட்ட வடிவில் எழுதினார்.

1869 அக்டோபர் 24-இல் ஃபெனியன் இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு லட்சம் மக்களைக் கொண்ட மாபெரும் பேரணி ஒன்று லண்டனில் நடத்தப் பட்டது. மார்க்சின் குடும்பத்தினர் அனைவரும் இப்பேரணியில் பங்கேற்றனர். “ஆங்கிலேய அரசு இப்போராட்டத்தை ஓர் இனப் போராட்டமாகவே இதுவரை சித்திரித்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த பேரணி இது வர்க்கப் போராட்டம் என்பதை எடுத்துக்காட்டியது” என்று மார்க்சின் நண்பர் ஒருவர் எழுதினார். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் உழைக்கும் வர்க்கங்களும் ஓரணியில் திரளுதல் என்ற வேலைத் திட்டம் கனிந்து வருவதை மார்க்ஸ் விருப்புடன் நோக்கினார்.

அயர்லாந்து விவசாய சமூகத்தின் அடிப் படையாக ஆசிய உற்பத்தி முறை போன்ற கம்யூன்கள் அமைந்திருப்பதை மார்க்ஸ் கவனத்திற்குக் கொண்டு வந்தார். 1850 வரையில் ஆசியப்பண்பு கொண்ட கம்யூன்களை மார்க்ஸ் கீழை எதேச்சாதிகாரம் என்ற அரசியல் வடிவத்தின் அடிப்படையாகக் கருதியதுண்டு. ஆயின் 1868-க்குப் பிறகு அவர் ஆசிய வடிவிலான கம்யூன்களை சோசலிசத் தடயங்களாகப் பார்க்கத் தொடங்கினார். அவை கீழைநாடுகளில் மூலதனப் பரவலைத் தடுக்கும் எதிர்ப்பு மையங்களாக உருவாக முடியும் என மார்க்ஸ் கருதினார். அயர்லாந்தில், நிலத்தில் தனி உடைமையைப் பரப்பியவர்கள் ஆங்கிலேயர்களே என எழுதும் மார்க்ஸ், அயர்லாந்தின் தேசிய உணர்வு விவசாயிகள் சார்ந்ததாக அமையும் பட்சத்தில் அது முதலாளியத்திற்கு எதிரான அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் என எழுதினார். 1869 இல் ஏங்கெல்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்: “ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியே அயர்லாந்து விடுதலையைச் சாதித்துக் கொடுக்கும் என நான் நீண்ட நாட்களாக நம்பியிருந்தேன். எனது நியூயார்க் டிரிப்யூன் கட்டுரைகளிலும் அப்படியே எழுதினேன். ஆனால் ஆழமான ஆய்வுகள் நேர் எதிரான முடிவுகளுக்கு என்னை இப்போது இட்டு வந்துள்ளன. அயர்லாந்து விடுதலை பெறாமல் ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கம் எதனையும் சாதிக்கப்போவதில்லை. எல்லா விசையையும் நாம் இப்போது அயர்லாந்தில் தான் செலுத்தவேண்டும். எனவேதான் அயர்லாந்தின் தேசிய விடுதலையை இன்றைய சமூக இயக்கத்தின் மிக முக்கியமான பிரச்சினையாகக் கருதுகிறேன்.”

பிரிட்டனில் வளர்ச்சியடைந்த தொழில் முதலாளிகள் உள்ளனர், உண்மைதான். ஆயின் அவர்களது மூலதனத்திற்குப் பின்புலமாக உள்ள நில உடைமையாளர்கள் தமது நில ஆதாரங்களை அயர்லாந்திலும் பிற காலனிகளிலும் கொண்டு உள்ளனர். ஆங்கிலேய நில உடைமையாளர்களுக்கு எதிரான விவசாயிகளின் எழுச்சிகள் ஆங்கிலேய மூலதனத்தைத் தகர்க்கும். இது அயர்லாந்தில் நிகழமுடியும். ஏனெனில் அயர்லாந்தியர்களுக்கு இது பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, தேசிய பிரச்சினையும் கூட என்று மார்க்ஸ் அப்போது எழுதினார். வளர்ச்சியடைந்த முதலாளியத்தை அதன் மையத்திலேயே தாக்குவது ஒருபுறமிருக்க, மார்க்ஸ் அதனை அதன் பின்புலங்களில் தாக்குவது குறித்து இங்கு எழுதுகிறார். லெனின் ரஷ்யப் புரட்சியின்போது ஏகாதிபத்தியத்தை அதன் பலவீனமான கண்ணியில் தாக்கவேண்டும் என்று கூறியதைப் போன்ற வேலைத்திட்டம் இது. தேசிய உணர்வும் மூலதன எதிர்ப்பும் ஒன்றுபடும் இடத்தில் தாக்கவேண்டும் என்ற வேலைத்திட்டம் 1869-70 ஆண்டுகளில் மார்க்சிடம் உருவாகியிருக்கிறது என கெவின் ஆன்றர்சன் எழுதுகிறார்.

ஆசிய உற்பத்தி முறை குறித்த விவாதங்கள்

1857-58 ஆம் ஆண்டுகளில் மார்க்ஸ் மூலதனம் நூல் எழுதுவதற்காக மிக விரிவான தயாரிப்பு களில் ஈடுபட்டபோது கீழைச் சமூகங்கள்பற்றிய ஏராளமான குறிப்புகளைத் தனது கையெழுத்துப் பிரதிகளில் விட்டுச்சென்றுள்ளார். அக்கையெழுத்துப் பிரதிகள் Grudrisse 1857-58 என்ற தலைப்பில் தனியாகப் பிரசுரம் ஆகியுள்ளன. இவை தவிர “1861-63 பொருளாதாரக் கையெழுத்துப் பிரதிகள்” என்ற பதிப்பும் வெளியாகியுள்ளது. “விளிம்பு நிலை மார்க்ஸ்” நூலின் பிற்பகுதியில் அதன் ஆசிரியர் கெவின் ஆன்றர்சன் இக்கையெழுத்துப் பிரதிகளை விரிவான ஆய்விற்கு உட்படுத்துகிறார். மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இக்கையெழுத்துப் பிரதிகளில் ஒற்றை வடிவம் கொண்டதாக இல்லாமல் வரலாறு குறித்த பன்மீய வளர்ச்சிப் போக்குகள் கொண்டதாக இருப்பதை கெவின் சுட்டிக்காட்டுகிறார். மேற்கு ஐரோப்பா குறித்த வரலாற்றுத் தகவல்களைத் தாண்டி, ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நிலவும் சமூக அமைப்புகளைக் குறித்த தகவல்களை மார்க்ஸ் தேடி அடைந்ததினாலேயே மேற்குறித்த பன்மீய வளர்ச்சிப் போக்குகள் என்ற முடிவுக்கு மார்க்ஸ் வந்துசேர முடிந்தது என்று கெவின் வாதிடுகிறார். மார்க்சின் மீது குற்றச்சாட்டாக வைக்கப்படும் “பொருளாதார நிர்ணயவாதத்தைத்” தாண்டிய சித்திரிப்புகள் மார்க்சின் கையெழுத்துப் பிரதிகளில் விரிந்து கிடக்கின்றன என்றும் கெவின் ஆன்றர்சன் குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் மூலதனம் நூலுக்காகத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டபோது, மிக விரிவாக நூல் களைச் சேகரித்து வாசித்தார். குறிப்பாக மேற் கல்லாத நாடுகளின் சமூக அமைப்புகள் பற்றிய அவரது வாசிப்புகள் பிரும்மாண்டமானவை. முதலாளியத்தின் தோற்றத்தில் காலனியத்தின் பங்கு. காலனிய ஆதிக்கம் நிலவிய நாடுகளில் முதலாளியப் பரவலை எதிர்கொண்ட சமூகங்களின் தனித்தன்மைகள், அந்நாடுகளின் பூர்வீக சமூக அமைப்புகளிலிருந்து முதலாளியம் / முதலாளிய எதிர்ப்பு உருவாவதற்கான சாத்தியங்கள் என்ற பல்வேறு பிரச்சினைகளை மார்க்ஸ் அக்காலத்தில் யோசித்திருக்கிறார். இப்பிரச்சினைகளெல்லாம் மார்க்சிடம் ஏற்கனவே இருந்த வரலாற்றுப் பொருளாதாரச் சிந்தனையில் கணிசமான மாற்றங் களை ஏற்படுத்தியிருக்கின்றன. அதாவது மேற்கல்லாத நாடுகள்பற்றிய சிந்தனை மார்க்சின் முந்தைய கருத்தாக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக் கின்றன. நூலின் பிற்பகுதியில் கெவின் ஆன்றர்சன் இது குறித்து விரிவாகப் பேசுகிறார்.

மேற்கல்லாத நாடுகள் பற்றிய மார்க்சின் இக் சிந்தனையில் முக்கியமான இடம் வகிக்கும் ஒரு கருத்தாக்கம் ஆசிய உற்பத்தி முறை ஆகும். ஐரோப்பியத் தொழிலாளர்களைப் பற்றி மார்க்ஸ் சிந்தித்த போது, அவர்கள் ஐரோப்பியச் சமூகத்தின் வளர்ச்சி யடைந்த தனிஉடைமையின் காரணமாகவும் தனி மனித சுதந்திரம் என்ற கருத்தியலின் காரணமாகவும் அணுத்துகள்கள் போல் தனித்தனியானவர்களாக உள்ளார்கள் என்ற விசயத்தை அவர் கவனிக்க நேர்ந்தது. ஆயின் ஆசிய சமூகங்களில் நீண்ட நெடிய காலமாக, சில பகுதிகளில் இப்போதும் கூட, கூட்டுச் சொத்து வடிவங்கள் நிலவி வருவதால், அங்குள்ள மக்கள் கூட்டுணர்வுகளை எளிதில் ஏற்றுக்கொள்பவர்களாக உள்ளார்கள் என்பதை மார்க்ஸ் கண்டுணர்கிறார். ஆசிய வகைப்பட்ட சமூகங்களில் அதன் உறுப்பினர்கள் உண்மையில் தனிமனிதர்களாக இல்லாமல் ஏதாவதொரு (Community of blood, language, customs) கூட்டு அடையாளத்தின் வழியாகக் குறிக்கப்படுகின்றனர். உடைமை சார்ந்த உறவுகளில் மட்டுமல்லாமல், சமூகக் கட்டமைப்பிலேயே அத்தகைய கூட்டு அடையாளங்கள் முன்னுரிமை பெறுகின்றன. கூட்டுக் குழுமம் என்ற அமைப்பு உடைமை உறவு களால் உருவான ஒரு விளைவாக இல்லாமல். எல்லா வகைச் சமூக உறவுகளுக்குமான முன் நிபந் தனையாகக்கூட அமைகிறது. இவ்வகைச் சமூகத்தில் பொருளாதார உற்பத்தியின் இலக்கு வணிகமோ பண்டப்பரிமாற்றமோ அல்ல. மாறாக கூட்டுப் பயன்பாட்டு மதிப்புகளை உற்பத்தி செய்வது மட்டுமே. இவையெல்லாம் (இன்னும் கூடுதலாக) மார்க்ஸ் அவரது கையெழுத்துப் பிரதி களில் ஆசிய வகைப்பட்ட சமூகங்கள்பற்றிப் பேசும் கருத்துக்களாகும்.

ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தாக்கத்தின் கீழ் மார்க்ஸ் இந்தியாவைப்பற்றி மட்டும் பேச வில்லை. இன்னும் ரொமேனியா, மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளிலும் அது நீண்ட காலமாக வழக்கிலிருந்ததாகக் குறிப்பிடுகிறார். எனவே அந்நாடுகளைப் பற்றியும் மார்க்ஸ் வாசிக்கிறார். கூட்டு உடைமையும் கூட்டு அடையாளங்களும் வாழ்விடம் சார்ந்து உருவாகாமல், மூதாதையர் அல்லது பிறப்பு அடிப்படையில் உருவாகியமையைச் சுட்டிக் காட்டுகிறார். (இந்திய/ தமிழ்ச் சூழல்களில் திணைக் கோட்பாடு வாழ்விடம் சார்ந்ததெனவும் அதனை அழித்துப் பரவிய சாதி அமைப்பு பிறப்பு அடிப்படையில் உருவானதெனவும் தோராயமாகக் கொள்ளலாம். நாடோடி மக்களாக அலைந்த ஆரியர்களுக்கிடையில் வாழ்விடத்தை விட மூதாதையரும் பிறப்பு அடிப்படையுமே முக்கிய ஆதாரங்களாயின.) மார்க்சின் கணக்குப் படி, பிறப்பு அடிப்படையிலான குழுமங்கள் கால அடிப்படையில் பழமையானவை. எனவே மிகப் பழங்காலச் சமூகப் பழக்கவழக்கங்களை வாய்வழி மரபுகளாகவும் நம்பிக்கைகளாகவும் வகுத்தளித்த மதங்களோடு அவைதொடர்பு கொண்டவை. இந்தியச் சாதிச் சமூகம் இதன் எடுத்துக்காட்டு.

ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தாக்கத்தைக் கூட மார்க்ஸ் ஒற்றையான வடிவில் கருதவில்லை. இந்தியாவில் மிகப் பழங்காலத்திற்குச் சொந்தமான கிட்டத்தட்ட எல்லாவகையான கூட்டு உடைமை மற்றும் கூட்டு வாழ்க்கை வடிவங்களையும் காண முடியும் என்று மார்க்ஸ் எழுதுகிறார். இப்பழங் கால வடிவங்களை சமத்துவப் பொற்காலம் என சிலாகிக்குமாறு மார்க்ஸ் கூறவில்லை. மாறாக, கூட்டு உடைமை, கூட்டு உணர்வு ஆகியவற்றோடு கூட்டுத்தன்மை கொண்ட சுரண்டல் முறை, எனவே கூட்டு அடையாள வடிவிலான எதிர்ப்பு வடிவங்கள் என்பதாக விரித்துப் பொருள் கொள்ளவேண்டும்.

காலனிய முதலாளியத்தின் செல்வாக்கால் இப்பழஞ்சமூகங்கள் மாற்றமடைகின்றன என்ற அடுத்த பிரச்சினைக்கு மார்க்ஸ் நகர்கிறார். காலனிய முதலாளித்துவம் பழஞ்சமூக வடிவங்களை அடித்து நொறுக்குகிறது என்பதை மார்க்ஸ் ஒத்துக் கொள்ளுகிறார். ஆயின் இப்பழஞ்சமூகங்கள் காலனியத்தையும் முதலாளித்துவ வகைப்பட்ட மாற்றங்களையும் தமக்கே உரிய முறையில் எதிர்க் கின்றன என்ற விசயத்தில் மார்க்ஸ் கவனம் செலுத்து கிறார். எனவே உலகின் எல்லா நாடுகளும் ஒரே விதமாக முதலாளியமாக மாற்றம் பெற்று, அதன் பின்னரே சோசலிசத்தை நோக்கி நகர முடியும் என்ற ஒற்றைப்பாதையை மார்க்ஸ் அவரது கை யெழுத்துப் பிரதிகளில் முன்மொழியவில்லை. மாறாக, ஆசிய உற்பத்தி முறையின் வடிவங்கள் எப்படி பலதரப்பட்டவையோ, அவை எப்படி பிரத்தியட்சமாக மிகச் சிக்கலானவையோ, அவற்றிற் கேற்ப, அச்சமூகங்களின் அடுத்தகட்ட நகர்வுகளும் பலதரப்பட்டவையாக, சிக்கலானவையாக இருக்கும் என்று மார்க்ஸ் கருதுகிறார். பழஞ்சமூக அமைப்புகள் சிதையும் என்பது உண்மை. ஆயின் அச்சிதைவுகள் முற்போக்கானவையாக அல்லது பிற்போக்கான வையாக அமைய முடியும். அச்சமூகங்களினுள் தொழில்படும் சமூக அரசியல் சக்திகளின் பரஸ்பர நிலைப்பாடுகளைப் பொறுத்து அவை அமையும்.

இக்கையெழுத்துப் பிரதிகளை எழுதும்போது, மார்க்சின் முதலாளிய எதிர்ப்புணர்வு மிகத் தீவிரமாகச் செயல்படுகிறது. முதலாளியம் காலனிப் பழஞ் சமூகங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களெல்லாம் முற்போக்கானவை என்று அவர் கருதவில்லை. மாறாக, காலனிய முதலாளியத்தைப் பழஞ்சமூகங்கள் எவ்வகைகளிலெல்லாம் எதிர்க்கின்றன என்ற விசயத்தில் அவர் தனது ஆர்வத்தை வெளிப்படுத்து கிறார். இக்கட்டுரையின் முற்பகுதியில் நாம் பேசி யுள்ள சீனாவில் தைபிங் எழுச்சி, இந்தியாவில் சிப்பாய்கள் எழுச்சி, போலந்தின் தேசிய விடுதலை, அமெரிக்காவில் கறுப்பின விடுதலை, அயர்லாந்து மக்களின் போராட்டங்கள் ஆகியவற்றோடு இப் போது நாம் பேசிக் கொண்டிருக்கும் பழஞ்சமூக எதிர்ப்புக்களையும் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். முதலாளியம் நவீன காலத்தில் ஏற்படுத்தி வரும் காலனிய அடிமைத்தனம் பழைய காலங்களின் அடிமைத்தனத்தைவிட மிகக் கொடூரமானது என்று மார்க்ஸ் எழுதுகிறார். எனவே காலனிய முதலாளியச் சூழல்களில் மேற்கல்லாத விளிம்பு நிலை நாடுகளில் தோன்றும் முதலாளிய எதிர்ப்பு இயக்கங்களை மிகக் காத்திரமானவையாக மார்க்ஸ் கொள்ளுகிறார். மேற்கு நாடுகளில் தோன்றும் தொழிலாளர் வர்க்க வகைப்பட்ட எதிர்ப்புகளுக்கு எந்த வகையிலும் குறையாத காத்திரம் கொண்ட வையாக மேற்கல்லாத நாடுகளில் தோன்றும் எதிர்ப்புகளைக் கருத மார்க்ஸ் தலைப்படுகிறார். மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்த மூலதனம் நூலின் பிரெஞ்சுப் பதிப்பில் மார்க்ஸ் ஏற்படுத்திய சில மாற்றங்கள் மேற்கல்லாத நாடுகளின் சுயாதீனமான புரட்சி ஆற்றல்களை அங்கீகரிப்பதாக அமைந் திருந்தன என்று கெவின் ஆன்றர்சன் எடுத்துக் காட்டுகிறார்.

முடிவுரையாக

மார்க்சியம் என்பது எந்த வகையிலும் முடிந்து போன கதையல்ல. சார்த்தர் சொன்னது போல, மார்க்சியத்தை உருவாக்கிய வரலாற்றுச் சூழல்கள் (முதலாளியம்) இன்னும் கடக்கப்படாமல் இருக்கும் வரை மார்க்சியத்தைக் கடந்துபோவதும் சாத்திய மல்ல. நமது காலத்தில் உருவாகியுள்ள பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனியம், பெண்ணியம், தலித்தியம் போன்ற சிந்தனைப் போக்குகள் மார்க் சியத்தின் உள்ளுறை ஆற்றல்களை மேலும் பளிச் செனத் தெளிவாக்குகின்றனவே அன்றி அவற்றை மங்கச் செய்வன அல்ல. இந்த நூலின் ஆசிரியரான கெவின் ஆன்றர்சன் சமகாலச் சிந்தனைப் போக்கு களோடு அடிப்படையான மார்க்சியப் புலமையும் பெற்றவர். தொட்டனைத்தூறும் மணற்கேணி போல மார்க்சியத்தை அணுகியுள்ளார். கீழைச் சமூகங்கள் கடுமையான வர்க்க, சாதி, இன வகைப் பட்ட சிக்கல்களின் ஊடாக, சமூக மாற்றம் குறித்த பார்வையோடு, மார்க்சை மறுவாசிப்புக்கு உட் படுத்தும்போது நமக்கான ஆயுதங்களை அவரில் கண்டுகொள்ளமுடியும் என்பதை கெவின் ஆன்றர்சன் இந்நூலில் நிரூபித்துக்காட்டியுள்ளார்.

அன்று முதலாளியத்தின் கொடுமுடியாக இருந்த மேற்கு ஐரோப்பாவை மையப்படுத்தி மார்க்ஸ் சிந்தித்தபோது, வளர்ச்சியடைந்த தொழிலாளி வர்க்கமே புரட்சியை வழிநடத்தும் என மார்க்ஸ் மதிப்பிட்டார். ஆயின் ரஷ்யா, சீனா, இந்தியா, அயர்லாந்து, போலந்து ஆகிய நாடுகளை முன் வைத்து அவர் சிந்தித்தபோது அந்நாடுகளில் வரலாற்று ரீதியாகக் குவிந்துள்ள பலதரப்பட்ட சமூக முரண்களின் ஆழமும் அடர்த்தியும் புரட்சிக்கான ஆதாரங்களாக முடியும் என அவர் கண்டுணர்ந்துள்ளார். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலை ஒருபுறமிருக்க, சமூக முரண்களின் தீவிரம் புரட்சியை வேகப்படுத்தும் என்ற முடிவுக்கு அவரால் வரமுடிந்திருக்கிறது. ஐரோப்பா கடந்து சென்ற வரலாற்றை அதே தடங்களின் வழி கீழை நாடுகளும் கடக்கவேண்டும் என்ற பார்வையிலிருந்து அவர் விலகிச் சென்று மேற்கல்லாத நாடுகளின் மார்க்சியத்திற்கான விரிந்த வெளியைத் தனது எழுத்துக்களின் ஊடாக உருவாக்கியுள்ளார். மார்க்ஸ் உருவாக்கித் தந்துள்ள அவ்வெளியைப் பயன்படுத்திக் கொள்ளும் போதே விளிம்புநிலை மார்க்ஸ் என்ற ஒரு கருத் தாக்கம் நம்மை வந்தடைகிறது.