சென்ற இரத்தாஷி வருடம் தை µ 24-ந் தேதி விதேகமுக்தி எய்தின, ஸ்ரீ காசிவாசி சிதம்பர சுவாமிகளின் குருபூஜை மகோற்சவம், நாளது தை 13 - தேதி மங்களவாரம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருட குருபூஜை வைபவத்திருநாள் நடைபெறும். அன்பர்கள் யாவரும் வந்திருந்து இருமை நலன் பெற்று உய்ய திருவருளை விழைகின்றோம் என ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடத்து ஸ்ரீபரஞ்சோதி சுவாமிகள் எழுதுகிறார்.

நமதுகுறிப்பு:-

தென்னாட்டிலுள்ள பல்வேறு மடங்களிலும் ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடமானது வைதீகப்போர்வை போர்த்த லௌகீக மடமாயிராமல், உண்மையில் ஜீவன்களிடத்தில் அன்பும், சமரசத்தன்மையும் கொண்டு விளங்குவதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். அதற்குத் தற்கால மடாதிபதியாயிருக்கும் ஸ்ரீ பரஞ்ஜோதி சுவாமி அவர்கள் நமது மகாத்மா அவர்களின் கொள்கையைச் சிரமேற்கொண்டு அநுபவத்தில் நடைபெற உழைத்து வருபவர். அத்துடன் மடத்தில் கதர் உற்பத்தியும், பிரசாரமும் நடைபெற்று வருகிறது.

 வருடத்தில் லக்ஷக்கணக்காய் வரும்படியுள்ள பல மடங்கள் சோம்பேறி மடங்களாய் விளங்குவதை நாம் நேரில் பார்க்கிறோம். அவைகள் நமது ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடத்தையும், ஸ்ரீ பரஞ்ஜோதி சுவாமிகளின் உள்ளத்தையும் பின்பற்றினால் தமிழ்நாடும் ஜீவன்களும் முக்தியடைய ஏற்ற சமயமாய் விளங்கும்.

(குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 24.01.1926)

Pin It