மதுரை ஸ்ரீமான் குப்புசாமி ஐயர் என்கிற ஒரு பிராமணர் சென்னை கவர்னரின் மனைவியாரை, மதுரை மீனாக்ஷியம்மன் கோவிலுக்குள் அழைத்துப்போய் எல்லா இடங்களையும் கூட்டிக்காட்டினதாகவும், மிகுந்த மரியாதை செய்ததாகவும் அதற்கு நன்றியறிதலாய் அம்மையார், கோவிற்புத்தகத்தில் தம்மை மிக்க மரியாதையாக கோயிலுக்குள் அழைத்துச்சென்று பல இடங்களையும், நகைகளையும், பொக்கிஷங்களையும் காட்டின ஸ்ரீமான் குப்புசாமி ஐயர் முதலியோருக்கு நன்றி செலுத்துகிறேன் என்று எழுதி நற்சாக்ஷிப் பத்திரமும் கொடுத்துவிட்டுப் போனார்களாம்.

இதை நாம் ஆக்ஷபிக்கவில்லை. ஆனாலும், அந்த அம்மையார் எவ்வளவு பெரிய அந்தஸ்து உடையவரானாலும், அந்நிய நாட்டார் - அந்நிய மதஸ்தர்- நமது மதத்தையும் சாமிகளையும் பார்த்து பரிகாசம் பண்ணுகிறவர்கள்- நமது மதத்துக்கு விரோதமாய் பிரசாரம் செய்து நம்மவர்களை தங்கள் மதத்துக்குச் சேர்க்கிறதை ஆதரிப்பவர்கள்- நம்மை அஞ்ஞானிகளென்று சொல்லுகிறவர்கள் - நம்மை அடக்கியாண்டு நமது இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படியிருக்க, இப்படிப்பட்ட ஒருவரை நாம் நமது கோவிலுக்குள் மரியாதை விருதுகளுடன் கூட்டிக்கொண்டு போய்க்காட்டி நற்சாக்ஷிப் பத்திரம் பெறுகிறோம். அதே

கோவிலுக்குள் நமது நாட்டார், நமது மதஸ்தர், நமது தெய்வத்திலும் மதத்திலும் நம்பிக் கைக் கொண்டு கண்டு தரிசிக்க ஆசைப்படுகிறவர்கள் - நமது நாட்டின் க்ஷமத்தையும், மதத்தின் க்ஷமத்தையும் சதாகாலமும் கோருகிறவர்கள் - நீ கோயிலுக்குள் பிரவேசிக்கக் கூடாது; நீ தாழ்ந்த ஜாதி என்று உதைத்துத்தள்ளினாலும், உங்கள் மதத்தை விட்டு வேறு மதத்திற்குப் போகேன்; உங்கள் சுவாமியை விட்டு வேறு சுவாமியைக் கும்பிடேன் என்று சொல்லிக்கொண்டு நம்மை விட்டுப் போகாமல் நம்மையே வந்து கெஞ்சுகிறவர்கள் - நமது நாட்டின் க்ஷமத்துக்கு உழைக்கிறவர்கள் ஆகிய ஒரு பெரிய சமூகத்தாரான நமது நாடார் சகோதரர்களை மாத்திரம், அதே மீனாக்ஷியம்மனுக்கு உன்னுடைய பணம் உதவும் ; உன்னுடைய பால் உதவும் ; உன் பேரால் கட்டளை அர்ச்சனை செய்து பணம் வாங்கிப் பிழைக்கலாம்; உன் வீட்டுக்குச் சமீபத்தில் மீனாக்ஷி வந்து நின்று கொண்டு தீபார்த்தனை செய்யலாம்; உன் மண்டபத் திற்கு மீனாக்ஷி வந்து மண்டபக்கட்டளைசெய்து கொள்ளலாம்; ஆனால் நீ கோவிலுக்கும் - கோவில் வெளிச்சுற்றுப் பிரகாரத்துக்குள்கூட நுழையக் கூடாது; நீ நுழைந்தால் எங்கள் சுவாமிக்குச் சக்தி குறைந்துபோகும், கோவில் கெட்டுப்போகும், இந்து மதம் போய்விடும், வேதத்திற்கும் சாஸ்திரங்களுக்கும் விரோதமாய்விடும் என்று சொல்லுவோமானால் நாமும் மனிதர்கள் தானா?

தெய்வம் ஒன்றிருக்குமானால், சத்தியம் ஒன்றிருக்குமானால், தர்மம் ஒன்றிருக்குமானால் நம்மை அவைகள் வாழ விடுமா? நமது நாடார்கள் கோவிலுக்குள் போவதனால் இந்து மதம் கெட்டுப் போகுமானால், அதுவும் ஒரு மதமாகுமா? அம்மாதிரியான மதம் நமக்கு எதற்கு? நமது சகோதரர்களான நாடார்கள் கோவிலுக்குள் போவதனால் நமது சுவாமியின் சக்தி குறைந்து போகுமென்று சொல்லுவோமேயானால், அம்மாதிரியான சுவாமியும் சுவாமியாகுமா? தன்னைக் கும்பிடாதவர்களும் பரிகசிக்கிறவர்களும் கோவிலுக்குள் வருவதினால் தன் சக்தி குறைந்து போகாது; தன் பக்தன் கோவிலுக்குள் வருவதனால் தன்னைக் கும்பிடுவதனால் தன் சக்தி குறைந்து போகுமென்பதானால், அம்மாதிரியான சுவாமியைக் கும்பிடுவதில் என்ன பிரயோஜனம்?

வேதங்களும் சாஸ்திரங்களும் நாடார் சகோதரர்கள் கோவிலுக்குள் போய் தங்கள் தெய்வங்களை வணங்குவதற்கு அநுமதிக்கவில்லையென்று சொன்னால், அவைகளை நாம் வேதமென்றும், சாஸ்திரமென்றும் சொல்லலாமா? வெள்ளைக்காரர்கள் எப்படி நம்மைப் பிரித்து வைத்து ஒருவருக்கொருவர் ஒற்றுமைப்படாமலிருக்கும்படி செய்து வைத்திருக்கும் தந்திரத்தால், 33 கோடி ஜனங்களுக்குள்ள தேசத்தை, துப்பாக்கியையும், பீரங்கியையும் காட்டிக்கொண்டு அடக்கி ஆண்டு, நமது செல்வத்தைக் கொள்ளையடித்து வருகிறார்களோ அதுபோலவே பிராமணர்களும் நம்மைப் பல ஜாதிகளாகப் பிரித்து ஒருவருக்கொருவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கிற வித்தியாசங்களைக் கற்பித்து நம்மிலேயே ஒருவருக்கொருவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று சண்டையிட்டுக் கொள்ளும்படியாகச் செய்வித்து வேதம், சாஸ்திரம், புராணம், வழக்கம் என்கிற ஆயுதங்களால் நம்மை அடக்கி ஆண்டு தாழ்மைப்படுத்தி, நமது இரத்தத்தை உறிஞ்சிப் பிழைத்துக்கொண்டு வருகிறார்கள்.

இதை அறியாமல் பிராமணரல்லாத சகோதரர்களும் தங்கள் புத்தியை, தங்கள் சுயநலத்திற்காகவோ அறியாமையினாலோ பறிகொடுத்து விட்டு, வெள்ளைக்காரர்களின் அக்கிரமத்திற்குப் பிராமணர்கள் உதவி செய்வது போல் இம்மாதிரி பிராமணர்களின் அக்கிரமத்திற்குப் பிராமணரல்லாதாரில் சிலரே இரகசியத்தில் உதவி செய்து கொண்டு தங்கள் மானத்தையும் வெட்கத்தையும் விட்டு பிராமணரல்லாதாருக்குத் துரோகம் செய்து வருகிறார்கள். இம்மாதிரி குணம் நமது சமூகத்திலிருந்து என்றைக்கு விலகுமோ அன்றுதான் நமது நாடு சமத்துவமடையும்; சுயமரியாதை யுமடையும்.

(குடி அரசு - கட்டுரை - 17.01.1926)

Pin It