ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியாவை நேயர்கள் நன்கறிவார்கள். இவர் உத்தம தேசாபிமானி. அரிய தியாகம் பல நம் நாட்டிற்கென்று செய்தவர். இவர் சமீபத்தில், சென்னை “ஜஸ்டிஸ்” பத்திரிகையின் நிருபருக்குப் பேட்டி கொடுத்து தம் அபிப்பிராயத்தை வியக்தமாகக் கூறியிருக்கின்றார். இதன் சாராம்சத்தை வாசகர்கள் நமது பத்திரிகையின் வேறொரு பக்கத்தில் காணலாம். பிராமணரல்லாதாரின் இப்போதுள்ள தற்கால நிலைமை எதுவோ, இனி நாம் செய்யவேண்டிய வேலை என்னவுண்டோ, அவைகளை நன்றாய் ஆராய்ச்சி செய்து தீர்க்கதரிசனத்துடன் ஸ்ரீமான் ஆரியா அவர்கள் கூறியிருப்பதை நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிராமணரல்லாதாரும் கவனிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

வைதீகப் பிராமணர்கள் ஜாதிச் செருக்குக்கொண்டு மதவிஷயத்திலும், தேசீய பிராமணர்கள் அரசியலிலும் பிராமணரல்லாதாரை தாழ்த்திவைத்து பொய்ப்பிரசாரம் செய்வதையும், இதில் தங்கள் காரியம் வெற்றி பெருவதற்கு அநுசரணையாக, இரண்டொரு பிராமணரல்லாதாரை சேர்த்துக்கொள்வதையும் நாம் வன்மையுடன் பலதடவைகளில் கண்டித்து வருகின்றோம்.

கடவுளால் படைக்கப்பெற்றுள்ள மாந்தரில் ஒருசாரார் மட்டும் ஏகபோகமாக சுதந்தரங்களை அனுபவித்துக்கொண்டு, பிறரை தாழ்த்தி மோசமான நிலைமையில் வைத்திருப்பதைக் காண, ரோஷமுள்ள தாழ்த்தப்பட்டவர்களின் மனம் ஏன் துடியாது?

ஸ்ரீமான் ஆரியா பிராமணருக்காக உழைத்து பெற்ற பலனை நன்கு கூறியிருக்கின்றார். நன்றி கெட்டவர்களும், ஜாதிக்கெர்வம் படைத்தவர்களும் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள இழிவான முறைகளைக் கைக்கொள்ள சற்றேனும் பின் வாங்காதவர்களுமான, சில தேசீய பிராமணரை ஆரியா போன்ற அநேகர் நம்பி மோசம் போனது பிரத்தியக்ஷம்.

“இக்கொடுமைகளை உணர்ந்தே டாக்டர். நாயர் அவர்கள், ஜஸ்டிஸ் கட்சியைத் தோற்றுவித்தனர். அக்கட்சியானது, இதுவரையிலும் எவ்வித வேலை செய்து கொண்டிருந்தபோதிலும் சரியே. இனியேனும் ஓர் கட்டுப் பாடான முறையைக் கொண்டு, தேசீய பிராமணரல்லாதாருடன் சேர்ந்து இந்நாட்டின் க்ஷமத்திற்கென்றும், பிராமணரல்லாதாரின் விடுதலைக்கென்றும் உழைக்க வேண்டுமென” ஆரியா அவர்கள் கூறியிருப்பதை நாம் முற்றிலும் ஆதரிக்கிறோம்.

ஜஸ்டிஸ் கக்ஷியானது அதிகாரவர்க்கத்தாரை ஆதரிக்கும் கக்ஷியாகவே இராமல் பிராமணரல்லாதாரின்  க்ஷமத்துக் கென்று உழைக்கக்கூடியதாயுமிருப்பதுடன் முற்றிலும் தேசீயமயமாக்கப்படவேண்டும். அதற்காக காங்கிரஸில் பிராமணரல்லாதார் எல்லாரும் சேர்ந்து, சுயநலப் பற்றுடன் செய்யும் சூழ்ச்சிகளை ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம். மகாத்மாவின் நிர்மாணங்களாகிய கதர், மது விலக்கு, தீண்டாமை, ராட்டினம் முதலியவை களில் தீவிர முன்னேற்றமடைவார்களானால் அன்றே பிராமணர்களின் ஆதிக்கம் அடங்கி விடுமென ஆரியா அவர்கள் கூறுவதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.

அன்றியும், பிராமணரல்லாதார் ஒரு விஷயத்தை நன்றாய் கவனிக்க வேண்டும். அதாவது ஜஸ்டிஸ் கட்சி என்று சொன்னால், திடீரென்று தம் மனதில் ஓர்வித வெறுப்பை உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள். அக்கட்சி என்ன பாவத்தைச் செய்துவிட்டது? சர்க்காரோடு ஒத்துழைப்பதே ஓர் பெரிய பாவமென்று சொல்லுவோமானால் பிராமணர்கள், தங்களுக்குள் சர்க்காருடன் ஒத்துழைக்கும் மிதவாதிகளிடமும் மிதவாத கக்ஷியிடமும் அவ்வளவு வெறுப்பு கொள்ளுகின்றார்கள்? மிதவாத பிராமணர்களும், தேசீய பிராமணர்களும், மாறுதல் வேண்டாத ஒத்துழையாத பிராமணர்களும், ஒத்துழைப்பையும், உத்தியோகத்தையும் இரகசியமாக விரும்பிக்கொண்டு, காங்கிரசை அதற்காக உபயோகப்படுத்திக்கொள்ளும் சுயராஜ்யக்கக்ஷி பிராமணர்களும் தங்கள் பிராமணாதிக்கம் நிலைபெறுவதற்காக வேண்டி வர்ணாசிரம தர்மசபை என்று ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு எல்லா பிராமணர்களும் ஒன்றாய்க் கலந்து வேலை செய்யவில்லையா?

 தங்கள் ஜாதி நன்மையின் பொருட்டு ஸ்ரீமான்கள், ரங்காச்சாரியாரும், எம்.கே. ஆச்சாரியாரும், ஸர். பி.எஸ்.சிவசாமி ஐயரும், மகாகனம் ஸ்ரீனிவாச சாஸ்த்திரிகளும், ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ஸி.பி.இராமசாமி ஐயர், ஏ.ரங்கசாமி அய்யங்கார், சக்ரவர்த்தி ஐயங்கார் முதலியோரும் ஒன்றுகூடிப் பேசுவதில்லையா? ஸ்ரீமான் ரெங்காச்சாரியார் சர்க்காருக்கு அனுகூலமாய் இருந்துகொண்டு தன் பிள்ளைகளுக்கு உத்தியோகம் சம்பாதித்துக்கொடுத்துக் கொண்டாரென்றாவது, ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி ஐயங்கார் ஒத்துழையாமையை ஒழித்துவிடப் பாடுபட்டதின் பலனாக தன் மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்தாரென்றாவது இருவர்களையும் எந்த ராஜீய சபையாவது தள்ளிவைத்து விட்டதா? இவைகளைப் பார்த்தாவது, பிராமணரல்லாதாருக்குப் புத்தி வரவேண்டாமா?

எந்த பிராமணனாவது எந்த சந்தர்ப்பத்திலாவது ஓர் பிராமணன் மீது குற்றத்தைச் சொல்லவோ, அவன் ராஜீய அபிப்ராயத்தில் தப்பு வியாக்கியானம் செய்யவோ, ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கவோ ஒருவருக்கொருவர் விரோதமான பிரசாரம் செய்யவோ முதலிய தங்கள் சமூகத்தாருக்கு விரோதமான காரியங்களைச் செய்கின்றார்களா? பிராமணரல்லாதாரிடம் கூலி பெற்று பிராமணர்களை வைகிறார்களா? இவற்றையெல்லாம், பிராமணரல்லாதார் கொஞ்சமும் கவனிப்பதேயில்லை. நாமும் ஏன் அம்மாதிரியான நமது சமூக முன்னேற்றத்திற்கென்று, அரசியல் வித்தியாசங்களைக் கவனியாமல், ஒன்றுபட்டிருக்கக் கூடாது?

 பெரும்பாலும், பிராமணர்கள், சில பிராமணரல்லாதாரைத் தாங்கள் வசப்படுத்திக்கொண்டு அவர்கள் கையைக் கொண்டே ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்களின் கண்ணைக் குத்தச்செய்து ஜஸ்டிஸ் கக்ஷியென்றால் தீண்டாத வகுப்பைவிட கேவலமானது என எண்ணும்படி செய்துவிட்டார்கள். அரசியல் முன்னேற்றத்திற்கு ஒத்துழையாமை அன்றி வேறொரு சாதனத்தால் பலனில்லையோ, அதுபோல் சமூக முன்னேற்றத்திற்கு, பிராமணரல்லாதார் ஏதாவது செய்யவேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியின் ஒத்துழைப்பில்லாமல், ஒரு காரியமும் செய்யமுடியாது. காங்கிரஸ் காரர்கள், சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகவும், ஜெயிலுக்குப் போனதாகவும் சொல்லிக்கொண்ட போதிலும், உண்மையில் ஜஸ்டிஸ் கட்சியே சமூக முன்னேற்றத்தில் கண் விழிப்புக்கான வேலைகளைச் செய்திருக்கிறது.

ஆனாலும் சுயராஜ்யக் கட்சியினிடமிருக்கும் குற்றங்கள், ஜஸ்டிஸ் கட்சியில் இல்லையென்று சொல்லமுடியாது. சுயராஜ்யக் கட்சியார், தந்திரமாகவும், மறைவாகவும் சூழ்ச்சியாகவும் செய்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் வெளிப்படையாகச் செய்கிறார்கள். ஆதலால் அரசியல் விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சியார், காங்கிரஸ்காரர்களின் ஒத்துழைப்பை விரும்புவார்களானால் தங்களுக்கும் சர்க்காருக்குமுள்ள சம்மந்தங்களில் சில மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சுயராஜ்யக் கட்சியைவிட, ஜஸ்டிஸ் கட்சி யார் மோசமில்லையென்று சொல்வதினாலேயே அதன் அரசியல் கொள்கைகளை நாம் கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளமுடியாது. சுயராஜ்யக் கட்சி அரசியல் கொள்கையை நாம் வெறுப்பது போலவே இதையும் வெறுப்பதாயிருந்தாலும் பிராமணரல்லாதார் சுயராஜ்யக் கட்சியாயிருந்தபோதிலும், ஒத்துழையா கக்ஷியாயிருந்தபோதிலும் இரண்டுக்கும் மத்தியிலுள்ள வெளவால் கக்ஷியாயிருந்த போதிலும் சமூக முன்னேற்றத்திற்காக ஜஸ்டிஸ் கக்ஷியைப் பலப்படுத்துவதில் யாரும் பின்வாங்கவே கூடாது. எப்படி சில தேசீய பிராமணரல்லாதார் அரசியல் விஷயத்தில் சுயராஜ்யக்கட்சிதான் சர்க்காரை எதிர்க்கிறது என்பதாகக் கூறிக் கொண்டு சுயராஜ்யக் கட்சியாரை ஆதரிப்பது தங்கள் கடமையெனச் சொல்லுகிறார்களோ அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சிதான் பிராமணரல்லாதாரின் நன்மைக்காக வேலை செய்கிறது என்று சமூக முன்னேற்றத்தை உத்தேசித்து அதை ஆதரிக்க வேண்டியது நம்முடைய கடமையென்று ஒவ்வொருவரும் எண்ண வேண்டும்.

 சமூகவியலும் அரசியலும் ஒன்றுக்கொன்று அதிகார தம்மியமுடையதல்ல. மனிதனுக்கு எப்படி இரண்டு கைகளும் அவசியமோ அதுபோலவே ஓர் நாட்டுக்கும் சமூக முன்னேற்றமும் அரசியலும் முக்கியமானதுதான். அதிலும் தமிழ்நாட்டுக்கு அரசியலைவிட சமூகமுன்னேற்றம்தான் முதலாவதானது. இவற்றைக் கவனியாமல் வெறும் அரசியல் அரசியலென்று கூறிக் கொண்டு பிராமணர்களின் பின்னால் திரிந்து கொண்டு பெருமை பெற்றதின் பலன், இன்றைத் தினமும். பிராமணரல்லாதார் சூத்திரரென்றும், பஞ்சமரென்றும் பார்க்கக் கூடாதவரென்றும், தீண்டக்கூடாதவரென்றும், தெருவில் நடக்கக் கூடாதவரென்றும் சொல்லத் தகுந்த இழிவான நிலையில் இருந்து கொண்டிருப்ப தோடல்லாமல், ஸ்ரீமான்கள் ஆரியா, கல்யாணசுந்திர முதலியார், ராமசாமி நாயக்கரவர்களை காங்கிரசிலிருந்து வெளியாக்க வேண்டியதவசியமாய்விட்டது. இக்கொடுமைகள் நம் நாட்டிலிருந்து ஒழிந்து, நாமும் பிராமணர்களென்போரும், பஞ்சமர்களென்போரும், கிறிஸ்தவர்கள், முகம்மதியர்களென்போரும் சகோதரர்கள், நம்மில் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வில்லை.

நாம் எல்லோரும் சமம் என்கிற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பிராமணரல்லாதார் எல்லோரும் ஒன்றுகூடி தங்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபடும்படியான ஓர் பிராமணரல்லாதார் சங்கத்தை பலப்படுத்தவேண்டியதோடு தங்கள் முன்னேற்றத்துக்காக ஒழுங்கான எழுத்துக்களை ஒற்றுமையுடன் தெரிவிப்பதற்கும் பிராமணர்கள் இடம் துவேஷமில்லாமல் கட்டுப்பாடாய் பிரசாரம் செய்வதற்கும் ஓர் பிராமணரல்லாதார் பத்திராதிபர் சங்கமும் காலதாமதமில்லாமல் உடனே ஏற்பாடு செய்ய வேண்டியது பிராமணரல்லாத அறிவாளிகளினுடையவும், தலைவர்கள் என்று சொல்வோருடையவும் முக்கியமான கடமையென்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.10.1925 )

Pin It