இங்குதான் திரைப்படத்தை இலக்கியத்தின் தொடர்ச்சி என்றோ, நகல் என்றோ நினைக்கிறார்கள். நல்ல படமா இல்லையா என்பதை கதையை வைத்து மட்டுமே தீர்மானிக்கிறார்கள். உண்மை என்னவென்றால், திரைப்படம் என்பது நகரும் ஓவியமும் கூட(moving painting). நீங்களும் நானும் திரையரங்கில் உட்கார்ந்து பார்ப்பதற்கு ஒரு கதை வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் கதையே தவிர, அதுவே திரைப்படம் அல்ல. வார்த்தைகளால் புரிய வைப்பது, காட்சிகள் மூலமாக உணர்வை உண்டு பண்ணுவது, இசைக் கோர்வையால் ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவது என்று திரைப்படம் தனக்கு சாத்தியமான அனைத்துக் கலைகளையும் உள்வாங்கி இயங்குகிறது. ஆனால் தமிழ் சினிமா மட்டும்தான் வாயால் சொல்லப்படுகிறது. வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள் மட்டுமே தமிழ் சினிமாவை எப்போதும் ஆக்ரமித்திருக்கிறது.
நானே சில தயாரிப்பாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். "இயக்குனர் கதையை சொல்லும்போது நல்லாத்தான் இருந்தது; ஆனால் திரைப்படம் ஆக்கப்பட்டபோது அப்படி வரவில்லை". இதன் அர்த்தம் கதையைச் சொல்லத் தெரிந்தவர்களுக்கு காட்சி வடிவில் திரையில் சொல்ல போதுமான பயிற்சி இல்லை என்பதுதான்.
எழுதுவதையெல்லாம் திரைப்படமாக்கக் கூடாது. திரைப்படம் ஆக்குவதற்காக எழுதப்பட வேண்டும். திரைக்கதை காட்சிப்படுத்தலையும் உள்ளடக்கியது. காட்சிப்படுத்தும்போதே ஒரு கட்டம் (frame) வந்துவிடுகிறது. எந்த இடத்தில் ஒளி இருக்க வேண்டும், எந்த இடத்தில் ஒளி விலக வேண்டும், எந்த இடத்தில் எந்த பாத்திரம் நிற்க வேண்டும் என்பதெல்லாம் வந்துவிடுகிறது. 25 பக்கம் எழுதி வைத்ததை மூன்று துல்லியமான ஓவியங்களால் சொல்லிவிட முடியும்.
***
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் அதிகம் கொண்டாடப்படாத, ஆனால் எல்லோராலும் பாராட்டப்பட்ட மிகச் சிறந்த படம் தேவர்மகன். திரைமொழியில் உச்சத்தைத் தொட்ட மிக முக்கியமான படம். அந்தக் கதை தேவர்மகனாகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை; நாயர்மகனாகக் கூட இருக்கலாம். சிவாஜி, கமல், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் என பெரிய ஆளுமைகள் இருந்தாலும் - அந்தப் படம் வெற்றி பெற்றதற்குக் காரணம் இயக்குனர் பரதன் தான். இவர்கள் தனித் தனியாய் இயங்கியதைக் காட்டிலும் பரதன் என்ற – திரைமொழி தெரிந்த - ஒரு கலைஞனுக்குக் கீழே இயங்கியதுதான் முக்கியம்.
அண்மையில் நான் பார்த்த ‘தென்மேற்குப் பருவக்காற்று’ ஒரு நல்ல அனுபவம். 80% படம் இதுவரை தமிழ்த் திரைப்படம் வழியாக காட்டப்படாத வாழ்க்கையைக் காட்டுவதாக இருக்கிறது. ஆனால் படத்தில் அந்த அம்மாவின் அறிமுகம் அவ்வளவு சிறப்பாகப் படவில்லை. ஏனென்றால் படத்தின் Title வரும்போதே ஒரு 40 அம்மாவுக்கு மேல் காண்பிக்கிறார்கள்.
உலகம் முழுவதிலும் அம்மாவைக் கொண்டாடுகிறார்கள். இந்த வறண்ட பூமியில் இருந்து, தன்னுடைய வாழ்வையெல்லாம் அழித்துக்கொண்டு, கஷ்டப்பட்டு தன் மகனை வளர்க்கிற ஒரு தாயைப் பாருடா என்பதுதான் இந்தப் படம். அதனால் இப்படியான பூமி என்று அந்த Landscape தான் காட்டப்பட வேண்டும். அதிலிருந்து தான் அந்த அம்மாவை நோக்கிப் படம் நகர வேண்டும். அதைவிடுத்து எடுத்தவுடனே எல்லா அம்மாக்களையும் காட்டிவிட்டு, அடுத்து நாம் சந்திக்கவிருக்கும் அம்மாவைக் காட்டினால், அவரும் அந்த நாற்பதில் ஒருவராகத் தெரிகிறார். எல்லா அம்மாவும் நல்ல அம்மாதானே என்ற அயற்சி வந்துவிடுகிறது; படத்தின் நோக்கம் ஆரம்பத்திலேயே சிறிது நீர்த்து விடுகிறது. இந்த இடத்தில்தான் காட்சிப்படுத்தலுக்கும், கதை சொல்லுதலுக்குமான பிணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
பருத்தி வீரன் திரைப்படத்தின் வெற்றிக்கு அதனுடைய sense of composition ஒரு மிக முக்கிய காரணம். குறிப்பாக பருத்தி வீரனில் ஒளிப்பதிவாளர் இராம்ஜியின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது . நான் அவரை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அவர் மீது எனக்கு பெரிய மதிப்பு அந்தப் படத்தின் மூலம் வந்துவிட்டது. இயக்குனர் அமீரையும் தாண்டி இராம்ஜியின் பங்களிப்பு அப்படத்திற்கு பெரும் சிறப்பை சேர்த்திருக்கிறது. இந்த அம்சம் சிலரால் மட்டுமே பேசப்பட்டது, கொண்டாடப்பட்டது.
***
100 வருட உலக சினிமா வரலாற்றில் சாதனை புரிந்த இயக்குனர்களை எல்லாம் எடுத்துக் கொண்டால், அவர்கள் Visual oriented background உள்ள இயக்குனர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அது ருஷ்ய இயக்குனர் ஐசன்ஸ்டைன் ஆக இருக்கட்டும் ஜெர்மனியின் பிரிட்ஜ் லாங், ஜான் போர்டு, அகிராகுரசேவா, சத்யஜித் ரே போன்றவர்கள் ஆகட்டும் ஓவிய அல்லது புகைப்பட பயிற்சியோடு திரைப்படத்திற்காக எழுத வந்தவர்கள்; சாதித்தவர்கள்.
இன்றைய ஹாலிவுட் இயக்குனர்களில் முக்கியமான ரிட்லி ஸ்காட் ஓர் ஓவியக் கலைஞர். அவரது script படங்களுடன் இருக்கும். டைட்டானிக், அவதார் படங்களை காட்சியாக சிந்திக்காமல் எடுக்கவே முடியாது. வெறும் எழுத்து அனுபவம் மட்டுமே உள்ளவர்கள் இப்படியான காட்சிப் புலனுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை படைக்க முடியாது. முதலில் காட்சியாக யோசிக்கிற சக்தி தான் வேண்டும்.
இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள் இன்றைக்கும் மக்களிடம் நிற்பதற்கு என்ன காரணம்? அந்த myth வாயால் சொல்லப்பட்டதால் மட்டும் தாக்குப்பிடித்து இருக்கவில்லை. அவற்றை வெகு காலம் சிற்பமாக, ஓவியமாக, திரைச்சீலையாக, கூத்துகளாக நாம் திரும்பத் திரும்ப காட்சிப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம். வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல; கூடவே காட்சி ரூபமும் தான் இந்தக் கதைகளைத் தக்க வைத்தது. டைனோசர் என்ன என்பதை முதன்முதலில் வரைந்து காண்பிக்காமல் வார்த்தையாக மட்டுமே சொன்னால், எவருக்கும் புரியாது. அதை ஒருதடவையாவது படமாகப் பார்த்துவிட்டால், பின்பு எப்போதும் அது மறக்காது. அதுவுமில்லாமல் வார்த்தைகள் ஆளுக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுக்கும்; ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் போகும்போது சிலது சேர்த்தும், சிலது விடுபட்டும் போகும். வார்த்தை எப்போதும் பொய்தான் சொல்லும்; கோடுதான் உண்மையைச் சொல்லும்.
***
ஓர் உணர்ச்சியை உங்களிடம் உண்டாக்க சாத்தியப்பட்ட அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதில்தான் சினிமாக் கலைஞனின் திறமையும் உழைப்பும் இருக்கிறது. ‘மங்கிய நிலவொளியில் அவள் நின்றிருந்தாள்’ என்ற வரியை காட்சியாக்குவதில் உள்ள சவால் இருக்கிறதல்லவா, அதுதான் என்னைப் போன்றவர்களை சினிமாவை நோக்கித் தள்ளுகிறது. அந்தக் காட்சிக்கு எந்தளவு ஒளியைப் பயன்படுத்த வேண்டும், நிலாவைக் காட்டலாமா வேண்டாமா, அவளை frame-ல் எந்தப் பக்கம் நிறுத்துவது, எந்த உடையை அணிவிப்பது, எந்தளவுக்கு சத்தம் இருக்க வேண்டும் – இவை அத்தனையும் சேர்ந்துதான் ஒரு காட்சியாக மாறுகிறது. இதில் கதாசிரியரின் பங்கு அந்த ஒரு வரியோடு நின்று விடுகிறது. மீதியெல்லாம் இயக்குனர், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட கலைஞர்கள் நிகழ்த்தும் மாயங்கள். இலக்கியவாதி சினிமாவிற்கு வந்தால் நல்ல படம் எடுப்பார் என்பதும் ஒரு மாயைதான். சினிமாவிற்கு எழுத்து மொழியை விட காண்பியல் மொழிதான் மிக முக்கியம்.
***
எனக்கு இங்கு மிகப் பெரிய தமிழ் மொழி வல்லுனர்களையும், பெரிய எழுத்தாளர்களையும் தெரியும். ஆனால் என் அனுபவத்தில் பலர் visually தற்குறிகள்தான். காண்பியல் மொழிபற்றி துளியும் தெரியாதவர்கள். அந்தப் பயிற்சி நம்மிடையே தொடர்ந்து நடைபெறவில்லை. அதன் அவசியத்தையும் நாம் புரிந்து கொள்ளவில்லை. வெறும் வார்த்தைகளை நம்புகிறவர்கள் மொழியைக் காப்பாற்றவே முடியாது. சிற்பம், ஓவியம், நாடகம், பயன்படுத்திய பொருட்கள், ஆகாயம், மலைகள், மக்கள் இவை இல்லாமல் மொழி எப்படி வளர்ந்திருக்கும்?
அண்மையில் சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை வடிவமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். ஒரே pattern-ல் ஐந்து புத்தகங்களுக்கான பின்னட்டையை வடிவமைத்திருந்தேன். கல்வி அமைச்சருக்கே தெரியாமல், அதில் ஒரு பின்னட்டையை மாற்றிவிட்டார்கள். இந்தியாவில் முதலில் அச்சான ஒரு புத்தகத்தை (அது ஒரு தமிழ் புத்தகம்தான்) மாணவர்களுக்கு சேரும்படி வடிவமைத்திருந்தேன். அதை எடுத்துவிட்டார்கள். ஒரு மாணவனிடம் இருக்கும் ஐந்து புத்தகங்களில் நான்கு ஒரு pattern-லும், ஒரு புத்தகம் மட்டும் வேறொரு pattern-லும் இருந்தால் சரியாக இருக்குமா என்ற அடிப்படை அறிவுகூட அதை மாற்றியவர்க்கு இல்லை.
***
பழங்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் பற்றிய எந்த சித்திரமும் நம்மிடம் இல்லை. இப்போது இருப்பதெல்லாம் வெள்ளையர்கள் காப்பாற்றி, மியூசியத்தில் வைத்தவை மட்டும்தான். எதையும் ஆவணப்படுத்தும் பழக்கம் வெகுகாலமாக நம்மிடம் இல்லை. சீனர்களிடம் 1000 ஆண்டு பொருட்களும், அவற்றைப் பற்றிய சித்திரங்களும் குறிப்புகளும் இருக்கின்றன. ஜப்பானியர்களிடம் அதேபோல் இருக்கின்றன. அவர்கள் எடுக்கும் சரித்திரப் படங்களில் பெருமளவு உண்மை இருக்கிறது. அந்தப் படங்களைப் பார்க்கும்போது, அதன்மூலமாக நமது முன்னோர் வாழ்க்கையை சென்றடைய முடியுமா என்றுதான் நான் கனவு காண்பேன்; முயற்சிப்பேன்.
இந்தியாவில் ரவிவர்மா ஓவியங்களிலிருந்து பெறப்பட்ட கூறுகளைப் பயன்படுத்தித்தான் மராட்டிய சரித்திரப் படங்கள் வந்தன. மராட்டிய சினிமாவில் பயின்ற அனுபவத்தை வைத்துக் கொண்டு, விஜய வாஹினி தமிழுக்கு வரும்போது அதே காஸ்ட்யூம்களை எடுத்து வந்து தமிழ் மன்னர்களுக்கு மாட்டியது. நாம் சினிமாவில் பார்த்த தமிழ் மன்னர்கள் எல்லாம் உண்மையில் மராட்டிய இரவல் ஆடைகளையும், ஆபரணங்களையும் பொருட்களையும்தான் பயன்படுத்தினார்கள். இராஜராஜ சோழன் காலத்தில் சிம்மாசனமும் கிடையாது; நாற்காலியும் கிடையாது. முக்காலியும் திண்டுகளும்தான். அத்தனை பெரும் ஆபரணங்களோடு எல்லாம் பாண்டிய மன்னர்களோ, கட்டபொம்மனோ நமக்கு சினிமாவில் காட்டப்படுவதுபோல் நிஜத்தில் இருந்ததில்லை. என்.டி.ராமராவ் கழற்றி வைத்த ஆடைகளைத்தான் தமிழ் சினிமா கதாநாயகர்கள் வெகு காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். தேவதை திரைப்படத்தில்தான் அதை கொஞ்சம் மாற்றி அமைக்க முயற்சித்தேன். எனது ஓவியங்களில் இதை கவனமாகத் தவிர்த்து கூடிய மட்டிலும் தமிழ் அடையாளங்களோடு கூடிய மன்னர்களைக் கொண்டு வர முயற்சிக்கிறேன்.
அடுத்தகட்டமாக, முற்றிலும் தமிழ்ப் பின்புலத்தோடு, ஒரு திரைக்கதையை visual-ஆக உருவாக்கி வைத்திருந்தேன். ஒரே ஒருவருக்கு மட்டுமே காட்டினேன். அவர் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளையும் சேர்த்து ஒரு படமாக எடுத்துவிட்டார்.
***
திரைப்படம் இரண்டு வகை. ஒன்று கதை சொல்வது; இன்னொன்று கதை நடக்கும் இடத்தில் பார்ப்பவர்களைக் கொண்டுவந்து நிறுத்துவது.
Comic புத்தகம் போல் தான் சினிமா. ஒரு shotக்கும் இன்னொரு shotக்கும் இடையில் தான் சினிமாவும் இருக்கிறது. Comic புத்தகத்தில் இருக்கிற 3 frameகளில் ஒரு frame-க்கும் அடுத்த frame-க்கும் இடையில் எதை நான் வரைவது முக்கியமோ அதே போல் எதை விடுவது என்பதும் முக்கியம். நான் விட்டவற்றை வாசகர்கள்தான் பூர்த்தி செய்கிறார்கள். டார்ஜான் ஒரு மரத்தில் இருந்து தாவுவது, அடுத்து நடுவானில் டார்ஜான் பறப்பது, அதற்கு அடுத்து வேறொரு மரத்தின் கிளையைப் பிடிப்பது. இந்த மூன்றுக்கும் இடையில் விடப்பட்ட பகுதி அதாவது டார்ஜானின் பயணம் செய்வது வாசகர்களின் கற்பனையில்தான் நடக்கிறது.
இந்த உத்தியை தமிழ் திரையில் மிக அதிகமாக சோதனை செய்து பார்த்த படம் நந்தலாலாதான். படத்தின் பல காட்சிகள் துண்டுக்காட்சிகள்தான். அந்த Cut shotsகளின் தொகுப்பைப் பார்க்கும்போதுதான் சொல்லாமல் விட்ட காட்சிகளின் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறது. பாஸ்கர்மணியும், அகியும் நடந்துவரும்போது, ஒரு குடிசையைப் பார்க்கிறார்கள். அடுத்து பாஸ்கர்மணி உள்ளே போவது; அடுத்து அவனது தலை மட்டும் வெளியே வருவது; அகி தூரமாக நிற்பது; எதிரே பார்த்தால் தாத்தா நிற்பது; அடுத்து அகியும், பாஸ்கர்மணியும் ஓடுவது. இந்த shot-களுக்கு உள்ள இடைவெளியை திரைப்படம் பார்ப்பவர்கள்தான் நிரப்புகிறார்கள். இப்படி செய்வதின் மூலமாக இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்களும் ஒரு பகுதியாகிவிடுகிறீர்கள்.
இது எல்லா படத்திலேயும் இல்லை என்று சொல்ல முடியாது; அங்காங்கு இருக்கிறது. ஆனால் நந்தலாலா படம் முழுக்க இப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட புதுமைபித்தன் எழுத்து மாதிரி தத்தித் தத்தி, தாவித் தாவி போகிற போக்கு இந்தப் படத்தில் இருக்கிறது. உள்ளடக்கத்தில் மாற்றத்துடன் பல படங்கள் முயற்சிக்கப்பட்டன. ஆனால் வடிவத்தில் எனக்குத் தெரிந்தவரையில் நம் சம காலத்தில் தமிழில் இப்படி ஒரு படம் முயற்சிக்கப்படவில்லை.
விருப்பமில்லாமலோ அல்லது தெரியாமாலோ, நந்தலாலாவின் இந்த அம்சம் எந்த எழுத்தாளராலும், விமர்சகர்களாலும் பேசப்படவே இல்லை.
***
ஏற்கனவே இருந்த ஒன்றிலிருந்துதான் மற்றொன்றை நாம் உருவாக்குகிறோம். ஆயிரம் பேர் காதலித்தாலும், அவரவர் காதல் அவரவர்க்கு தனித்துவமாக இருக்கிறது. அதனால்தான் காதல், மோதல், எதிர்ப்பு என்று இத்தனை தமிழ்ப் படங்கள் வந்திருக்கிறது. இவையெல்லாம் அம்பிகாபதி காதலின் உல்டாவா என்றால் இல்லை. ஷேக்ஸ்பியரின் ‘மாக்பெத்’தைத்தான் அகிராகுரசேவா படம் எடுத்தார். ஆனால் அது ஷேக்ஸ்பியரின் மாக்பெத் அல்ல; குரசேவாவின் மாக்பெத்தான். அப்படித்தான் இந்தியாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட ராமாயணங்கள் இருக்கின்றன. மூலத்தை நீங்கள் எப்படி மறுவாசிப்பு செய்கிறீர்கள், எப்படி தருகிறீர்கள் என்பதில் அது உங்களுடைய பிரதியாகிறது.
Inspiration எங்கிருந்தாலும் வேண்டுமானாலும் வரலாம். உங்களுக்கு நல்ல கதை inspiration ஆக இருக்கலாம்; நல்ல இசை உங்களைத் தூண்டலாம்; நல்ல ஓவியம் உங்களுக்கு ஒரு take off image ஆகலாம். அதற்கு மேல் நீங்கள் என்ன பங்களிப்பு செய்கிறீர்கள் என்பதில்தான் உங்களது திறமை இருக்கிறது. டைட்டானிக் கதை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். படம் பார்க்க வருபவர்கள் எல்லோருக்கும் தெரியும், கடைசியில் டைட்டானிக் மூழ்கிவிடும் என்று. ஆனாலும் உங்களை கடைசிவரை படம் பார்க்க வைப்பதுதான் இயக்குனருக்கு இருக்கும் சவால்.
இயக்குனர் என்பவர் ஒரு வகையில் மந்திரவாதிதான். பல ரூபங்கள் எடுத்து உங்களை இரண்டரை மணி நேரம் இருட்டில் உட்கார வைக்கிறார். அவர் சிரிக்கச் சொன்னால் சிரிக்கவும், அவர் அழச் சொன்னால் அழவுமாக உங்களை வசியப்படுத்தி வைக்கிறார். படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ‘கடைசியில் இப்படித்தான் முடியப்போகுது’ என்று ஒருவர் இலகுவாக சொல்லிவிட்டால், பார்வையாளர்களின் மீது இயக்குனரின் பிடி குறைந்து விட்டதாகத்தான் அர்த்தம்.
மர்ம நாவல்களைத் (pulp fictions)தான் ஹிட்ச்காக் படமெடுத்தார். ஆனால் மர்ம நாவல்களைத் தூக்கிப் போடுவதுபோல் அவரது படங்களைத் தூக்கிப் போட்டுவிட முடியாது. சினிமாவாக அதன் தரம் வேறு. பின்னால் வந்த சினிமா விமர்சகர்கள்தான் ‘இவர் வியாபாரப் படம் எடுத்தவரல்ல; உன்னதமான கலைஞர்' என்று புரியவைத்தார்கள்.
குரோசோவா content-க்காக பேசப்பட்டவர் அல்ல, காட்சி அமைப்புக்காக பேசப்பட்டவர். காட்சிகளை எப்படி வடிவமைத்திருக்கிறார் என்பதுதான் அவரது சிறப்பு.
சினிமாவை இப்படித்தான் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அதை விட்டுவிட்டு content-ஐ வைத்து மட்டுமே நாம் எப்போதும் சினிமாவைப் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆகையினால்தான் நம் சினிமா எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கிறது, கதையை சொல்லிவிட வேண்டும் என்று.
நந்தலாலா ‘கிகுஜிரோ’ பாதிப்பில் எடுக்கப்பட்டிருந்தாலும் கிகுஜிரோ வேறு; நந்தலாலா வேறு. இது மிஷ்கினின் படம். காண்பியல் மொழியில் சமகாலத்தில் பல பரிசோதனைகளை செய்த தமிழ்ப் படம். ரசிகர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய படம்.
எல்லோரும் கதை திருடியது, எழுதியது, விற்றது என்று மட்டும் பேசுகிறார்கள். எதைப் பேசவேண்டுமோ அதை பேசவே இல்லை.
***
நந்தலாலா படத்தில் வேலை பார்க்கும்போது ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தோம். படத்தில் எந்தக் காட்சியும் பழைய படங்களின் எந்தவொரு காட்சியையும் நினைவூட்டக்கூடாது. எல்லாமே புதிதாக இருக்க வேண்டும். வழக்கமான தமிழ் சினிமாவின் திரைமொழி எங்கேயும் வந்துவிடக்கூடாது.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு sub text இருக்கிறது. நீங்கள் நேரிடையாக பார்க்கும் காட்சிக்கு உள்ளே - வேறொரு சொல்லப்படாத காட்சியும், உள்ளர்த்தமும் இருக்கிறது. படம் முழுக்க இந்த sub text இருப்பது தமிழ் சினிமாவில் நந்தலாலாவில்தான் என்று நினைக்கிறேன்.
***
படத்தில் அழகியல் இயக்குனர் என்ற என்னுடைய பங்கு என்னவென்றால், ஹாலிவுட் படங்களில் இருக்கும் production designer வேலையைப் போன்றதுதான். இந்தக் காட்சியில் என்ன இருக்க வேண்டும், படம் முழுக்க என்ன colour effect இருக்க வேண்டும், காட்சிக்குத் தகுந்தமாதிரியான mood-ஐக் கொண்டுவர என்ன செய்யவேண்டும் என்பதுமாதிரியான வேலை. இதற்குமேல் கலை இயக்குனர் வேலை செய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. நாங்கள் முடிவு செய்தவற்றை அவர் தன்பங்குக்கு மேலும் மெருகேற்றிக் கொடுப்பார். மிஷ்கின் நடிக்கவும் செய்ததால் பல நேரங்களில் அவர் எதிர்பார்த்த மாதிரி காட்சி வந்திருக்கிறதா என்று மேற்பார்வையும் செய்தேன்.
***
மிஷ்கின் வெறுமனே சினிமா பார்த்து சினிமா எடுப்பவர் அல்ல. நிறைய படிக்கிறவர்; ஓவியங்களில் ஆழ்ந்த அறிவு உடையவர்; சினிமா இயக்குனருக்கு முக்கிய தகுதியாக நான் நினைக்கும் – காமிக்ஸ் புத்தகங்களில் அவருக்கு ஆர்வம் அதிகம். எல்லா வகை உலக இசையிலும் பரந்த ஞானம் உண்டு. போட்டோகிராபியும் தெரியும். ஒரு சினிமா கலைஞனுக்குத் தேவையான அத்தனை உபகலைகளிலும் நல்ல பரிச்சயம் இருக்கிறது. அதனால்தான் அவரால் நல்ல சினிமாவைத் தரமுடிகிறது என்று நினைக்கிறேன்.
- டிராட்ஸ்கி மருது (