தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சியில் கூடிச்செய்த ‘பிறப்பினால் மனிதர்களில் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது’ என்ற *தீர்மானத்தைப் பற்றியும் அதைக் குறித்துச் சிலர் செய்த ராஜீனாமாவைப் பற்றியும், “நவசக்தி” பத்திரிகையில் மேற்படி தீர்மானத்தைப்பற்றி எழுதியிருந்த தலையங்கத்தைப்பற்றியும், இவ்வாரம் நமது பத்திரிகையில் வெளியிடவேண்டி எச்சரிக்கை என்ற தலைப்பின் கீழ் ஓர் குறிப்பு எழுதிவைத்திருந்தோம். ஆனால், நேற்று பத்திரிகைகளில் டாக்டர் வரதராஜுலு நாயுடு கல்கத்தாவினின்றும் அனுப்பிய தந்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் சமூகவாழ்விலும், குருகுலத்திலும் (மனிதர்கள் தங்களுக்குள்) பிறப்பினால் வித்தியாசம் பாராட்டக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் நிறைவேற்றிய தீர்மானத்தையும், அதன்மேல் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் எழுப்பிய ஆட்சேபனைகளையும் காந்தியடிகள் நன்கு பார்த்து அத்தீர்மானம் ஒழுங்கானதுதானென்றும் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அக்கமிட்டி அதிகாரமுள்ள தென்றும் சொல்லியதாகக் கண்டிருக்கிறது. இதைவிட நமது குறிப்பு இவர்களின் மனமாற்றத்திற்கு அதிக உதவிசெய்யாதெனக் கருதி நமது குறிப்பை நிறுத்திக் கொண்டோம்.

குடி அரசு - குறிப்புரை - 31.05.1925

* திருச்சியில் 29.1.25 ² கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானம்

இந்திய சமூக வாழ்க்கையில் பிறப்பினால் எவருக்கும் ஏற்ற தாழ்வு ஏற்படுத்தக் கூடாதென்றும் இக்கொள்கையை தேசீய இயக்கத்தில் ஈடு பட்ட ஸ்தாபனங்கள் அவசியம் அனுஷ்டிக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பட்டது. இக்கொள்கையை சேரன்மாதேவி குருகுலத்தில் அனுஷ்டானத்தில் கொண்டுவரவேண்டிய முயற்சிகளைச் செய்ய கீழ்கண்ட சப் கமிட்டியை இக்கமிட்டியார் ஏற்படுத்துகிறார்கள்,

ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ஈரோடு.

எஸ். ராமநாதன், மாயவரம்.

அ. வெ. தியாகராஜா, தேவகோட்டை

குடி அரசு - 17.05.1925 - பக்கம்.11

Pin It