பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதற்காக, இந்த நாட்டின் ஆட்சியை இந்துக்களிடம் ஒப்படைப்பதை, இந்திய நாட்டின் நிலைமைகளை நன்கறிந்த, நிதானமாக சிந்திக்கக்கூடிய எவரும் ஒப்புக் கொள்வர் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கக்கூடாது. இந்து மதம் பாசிச, நாசிச சித்தாந்தங்களைப் போன்ற ஓர் அரசியல் சித்தாந்தமாகும் என்பதையும், அது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் காங்கிரஸ் மறந்து விடுகிறது. இந்து மதம் அதன் போக்கில் விடப்பட்டால் - அதைத்தான் இந்து பெரும்பான்மையினர் விரும்புகின்றனர் - இந்து மதத்திற்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் இந்து மத எதிர்ப்பாளர்கள் ஆகியோரின் வளர்ச்சிக்கு அது அச்சுறுத்தலாக அமையும். இது, முஸ்லிம்களின் கருத்து மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பார்ப்பனரல்லாதவர்களின் கருத்துமாகும்.
கீழ்க்காணும் வழிமுறைகளில் ஆங்கில அரசு பிரகடனம் செய்ய முடியும் என்று நினைக்கிறேன் :
1. அமைதிப் பிரகடனம் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்றாண்டுகளுக்குள் இந்தியாவை டொமினியன் (குடியேற்ற நாட்டு) அந்தஸ்துக்கு உயர்த்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
2. அந்த இலக்கை நோக்கி விரைவாகச் செயல்படுவதற்காக, போர் நிறுத்தம் கையெழுத்தான நாளிலிருந்து ஓராண்டிற்குள் இந்திய தேசியவாதிகள், அரசமைப்பு குறித்து தங்களிடையிலான வேறுபாடுகளுக்கு ஒருமித்த தீர்வு காண வேண்டும்.
3. அவ்வாறு தீர்வு காணவில்லையென்றால், அந்தப் பிரச்சினையை உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆங்கில அரசு அளித்துவிடும்.
4. அவ்வாறு அந்தத் தீர்வு கிடைத்தவுடன், இந்திய டொமினியன் அரசமைப்பின் ஒரு பகுதியாக அதை நடைமுறைப்படுத்த ஆங்கில அரசு உறுதியேற்கிறது.
...இந்தப் பிரகடனத்தோடு தேசிய அரசு அமைய வேண்டுமா? அது அமைந்தால் நல்லதுதான். திரு. ஜின்னா இரண்டு கோரிக்கைகளை முன் வைப்பதால் சிக்கல் இருக்கிறது. (1) ஒன்று இறுதியானது. அதுதான் பாகிஸ்தான். (2) இரண்டாவது உடனடியானது. அதõவது, அமைச்சரவையில் 50 சதவிகித பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது. முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்று திரு. ஜின்னா இந்துக்களிடம் கூறுகிறபோது, பாகிஸ்தான் கோரிக்கையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதில் சர்ச்சைக்கு இடமே இல்லை. முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்பதால் அவர்களுக்குப் பாகிஸ்தான் வேண்டும் என்று திரு. ஜின்னா கூறும்போது, இந்துக்கள் நிறைந்த பெரும் எல்லைப் பகுதிகளை எடுத்துச் செல்லாதவரை, தாராளமாக (பாகிஸ்தானை) எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவேன். ஏனென்றால் உங்கள் கொள்கைப்படி, இந்துக்களும் பிறிதொரு தேசிய இனத்தவர்கள்தானே.
வடமேற்கு எல்லைப் பகுதியானது, பாகிஸ்தானுடன் முற்றிணைந்த ஒரு பகுதியாகும். வடமேற்கு எல்லைப் பகுதிக்குத் தான் உரியவரல்ல என்பதை திரு. ஜின்னா ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கு உரியவர் கான் அப்துல் கபார் கான் ஆவார். அவருடைய ஒப்புதல் இல்லாமல், பாகிஸ்தான் என்பது இல்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவுப் பிரச்சாரம் செய்ய சூறாவளிப் பயணம் செல்வதைக் காட்டிலும், கான் அப்துல் கபார் கானை மனம் மாறச் செய்ய திரு. ஜின்னா தனது நேரத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டும். இருப்பினும், இது திரு. ஜின்னா முடிவு செய்ய வேண்டிய விஷயம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், பாகிஸ்தானை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், முஸ்லிம்களுக்கான 50 சதவிகித பிரதிநிதித்துவக் கோரிக்கையை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. மேலும், 50 சதவிகிதத்திற்கான உடனடிக் கோரிக்கை, இறுதி லட்சியமான பாகிஸ்தானோடு எவ்வாறு தொடர்புடையது என்றும் புரியவில்லை. முஸ்லிம் லீக்கின் இந்தக் கோரிக்கை நேர்மையற்றது என்று நிச்சயமாக நம்புகிறேன். இதனை நிராகரித்ததன் மூலம் லின்லித்கோ பிரபு, இந்தியாவிற்கு மிகப் பெரும் நன்மை செய்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
திரு. ஜின்னாவின் கோரிக்கையான 50 சதவிகிதத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், இந்தியாவில் இடைக்கால நடவடிக்கையாக தேசிய அரசாங்கம் எதுவும் அமைய முடியாது என்று உறுதியாக நினைக்கிறேன். போர் முயற்சியைப் பொருத்தவரையில், இப்போது செய்யப்படுவதைவிட தேசிய அரசு அதிகமாக எதையும் செய்து விட முடியாது. இதைக் காட்டிலும் அதிகமாக இந்தியா செய்ய முடியாது. இந் தியாவின் ஆற்றல் அதிகரிக்கப்படவில்லை. அதற்கான முழு பொறுப்பும் ஆங்கில அரசினுடையதுதான். அமைதிக் காலத்தில் இந்தியாவின் வளத்தை மேம்படுத்தாமல் இருந்து விட்டார்கள். அதனால் இந்த அரசு அல்லது தேசிய அரசு, இப்போது செய்வதைவிட அதிகம் செய்ய முடியாத நிலையிலிருக்கிறது.
நாடு நன்றாக, முழுமையாக வளர்ச்சியடைய செய்யப்பட்டிருந்தால் அதனால் பேரரசைக் காத்திருக்க முடியும். இப்போது அது தன்னையே காத்துக் கொள்ள முடியவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் நிகழ இருக்கும் ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, அது இங்கிலாந்தை எதிர்பார்க்கும் கட்டாயத்திலிருக்கிறது. நாட்டின் அவலநிலை இவ்வாறு இருக்கிறது. ஓர் இந்தியரை பாதுகாப்பு உறுப்பினராக நியமிப்பது நன்றாக இருக்கும். ஆனால் அது போதுமா? பாதுகாப்பு அவருடைய பொறுப்பில் இல்லாமல், ஓர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் என்ன செய்ய முடியும்? புரிந்து கொள்ளவே கடினமாக இருக்கிறது.