தமிழக வழக்குரைஞர்கள் தமிழக காவல்துறையினரிடம் இணக்கமாகி நட்பு கொள்ளாவிட்டால் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்திருப்பது ஒருதலைச் சார்பான சமநீதியற்ற முடிவாகும். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கில் புகுந்து வழக்குரைஞர்களையும் நீதிபதிகளையும் வாகனங்களையும் பகைநாட்டு படை போல் தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை வராமல் அவர்களைக் காப்பாற்றவே கருணாநிதி உத்தி வகுத்துள்ளார் என்பது உறுதியாகிறது.

உண்மையிலேயே வழக்குரைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இணக்கம் காண முதலமைச்சர் விரும்பியிருந்தால் உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து அராஜகம் புரிந்து நூற்றுக்கும் மேற்பட்டடோரை படுகாயப்படுத்திய சட்டவிரோத செயல்களுக்குக் காரணமான காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்தும் தடியடியும் கல்லெறியும் நடத்திய காவல்துறையினரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியும் நடவடிக்கை எடுத்த பிறகு இருதரப்பாருக்கும் சமாதான வேண்டுகோளை அவர் விடுத்திருக்க வேண்டும்.

6 மாதங்களுக்கு மேலாக அன்றாடம் ஈழத்தமிழர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் என அனைவரும் சிங்கள அரசு நடத்தும் போரில் கொல்லப்படுகிறார்கள். தமிழ்நாடே ஒருங்கிணைந்து போர் நிறுத்தம் கோருகிறது. போர் நிறுத்தம் கோர மறுத்து இந்திய அரசும் சோனியா காந்தியும் ஈழத்தமிழர் இன அழிப்புப் போரை இயக்குகிறார்கள். இந்த நிலையில் தமிழினத்தை அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாக்க இந்திய அரசை நோக்கி போர் நிறுத்தம் கோரி காலவரம்பற்ற உண்ணாப்போர் அறிவித்திருந்தால் கருணாநிதியின் பின்னால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் திரண்டிருப்பார்கள். அதற்கு மாறாக தமது ஆட்சியில் அட்டூழியம் புரிந்த காவல்துறையினரைப் பாதுகாக்க காலவரம்பற்ற உண்ணாப்போராட்டம் அறிவித்திருப்பது அவரது தன்னல அரசியலையே மறுபடியும் அம்பலப்படுத்துகிறது.

நீதி கோரிப் போராடும் தமிழக வழக்குரைஞர்களை தமிழக மக்கள் அனைவரும் ஆதரிப்பது கடமை என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
நாள் : 23-02-2009
இடம் : சென்னை-17.
-
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It