(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, எண்.12, 1946, பிப்ரவரி 7, பக்.606)

          அவைத்தலைவர்: அடுத்து, தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டத்தின் செயல்பாட்டுக்காக பீகார் மாநிலத்தின் ஹசாரிபாக், மண்பூம், சொன்தால் பர்கானா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுதலைப் பற்றி திரு.இராம் நாராயண் சிங் தீர்மானம் வருகிறது. இத் தீர்மானத்தின் வாயிலாய் மதிப்பிற்குரிய உறுப்பினர் கூற முனைவது என்னவென்று அறிய விரும்புகிறேன்.

            பாபு இராம் நாராயண்சிங் (சோடா நாகபுரி பிரிவின் முகமதியரல்லாதவர் சார்பாளர்): தலைவர் அவர்களே, சில மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டத்தின் நிறைவேற்றத்திற்காகப் பல கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றி நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொள்ளும் நிலை உருவாகி வருகிறது.

            ambd 400 1அவைத்தலைவர்: திட்டம் எப்போது தொடங்கியது? எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது? என்பதை அறிய விரும்புகிறேன்.

            டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): திட்டத்தின் இன்றைய கட்டத்தில் விவாதிப்பதற்குரிய சிக்கல் ஏதுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பீகார், வங்காள மாநிலங்களின் வழியே பாயும் தாமோதர் ஆற்றின் குறுகே சில அணைகளைக் கட்டும் திட்டம் அரசின் கருத்தில் இருந்து வருகின்றதென்பதில் ஐயமில்லை. ஆனால் ஒத்திவைப்புத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருத்தல் போன்று மக்களின் கட்டாய வெளியேற்றம் என்ற சிக்கல் ஏதும் இப்போது எழவில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பதெல்லாம், நீர்த்தேக்கப் பகுதியில் எவ்வளவு நிலம் மூழ்கும்? நீர்த்தேக்கத்தினால் மேலும் எவ்வளவு நிலம் பாதிக்கப்படும் என்பன போன்ற தகவல்களைத் திரட்டும் கள ஆய்வுப் பணிகளே. அப்பகுதிகளிலிருந்து எவ்வளவு மக்களை வெளியேற்ற நேரிடும்? அவர்களது உடைமைகள், உரிமைகளின் மதிப்பென்ன? என்பன போன்ற விவரங்களையும் திரட்டிக் கொண்டுள்ளோம். இவற்றில் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் ஏதுமில்லை; அவையின் விவாதப் பொருளாகக் கூடிய எந்தவொரு செயலையும் அரசு செய்துவிடவில்லை. இதுகுறித்து அரசு தெளிவானதொரு முடிவுக்கு வரும் கட்டத்தில், அரசின் முடிவுகள் அவை உறுப்பினர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கையாய் அனுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன், அந்தக் கட்டத்தில் உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் வகையில் விவாதத்தை எழுப்பலாம் என்பதையும் சுட்டியமைகிறேன்.

            பாபு இராம் நாராயண் சிங்: ஹசாரிபாக் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் செயல்கள் நடைபெற்று வருகின்றன என்றும், ஊரைவிட்டு வெளியேறுமாறு மக்கள் வற்புறுத்தப்படுகின்றனரென்றும் எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

            அவைத் தலைவர்: உறுப்பினர் குறிப்பிடும் நிகழ்ச்சி, இத்திட்டப் பகுதியில்தான் நடைபெறுகிறதா?

            பாபு இராம் நாராயண் சிங்: ஆமாம்.

            அவைத் தலைவர்: ஆனால், அரசு இதுவரை ஏதும் செய்ததாகத் தெரியவில்லையே.

            டாக்டர் அம்பேத்கர்: சாலைகள் அமைப்பதற்காக மட்டும், அரசு சிறிதளவு நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது.

            அவைத் தலைவர்: இந்தத் திட்டத்திற்காகவா?

            டாக்டர் அம்பேத்கர்: ஆம். இந்தத் திட்டத்திற்காகத்தான். அணுகு சாலைகளுக்காக நிலம் காலி செய்ய வேண்டியிருக்கும் என்று முன்னறிக்கைகள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. காலி செய்யும் பிரச்சினை ஏதும் இதுவரை எழவில்லை…

            அவைத் தலைவர்: தகவல் திரட்டும் கள ஆய்வுப் பணிகளுக்காக, இந்தக் கையகப்படுத்தல் என்று கொள்ளலாமா?

            டாக்டர் அம்பேத்கர்: இந்தக் கட்டத்தில் கையகப்படுத்தல் என்ற பேச்சே இல்லை. தாமோதர் ஆற்றின் குறுக்கே சில அணைகளைக் கட்ட அரசு முடிவு செய்துள்ளதென்பதில் ஐயமில்லை; அதற்கான ஆய்வுகள் நடத்தத் தேவைப்படும் அணுகுச்சாலைகளுக்குச் சில துண்டு நிலங்கள் தேவையாதலின், அந்த நிலங்களிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்புத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளவாறு ஹசாரிபாக் மாவட்டத்திலும், மண்பூம், சொனதால் பர்கானாக்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான ஊர்களிலிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்டாய வெளியேற்றம் என்பது போன்ற நிலையேதும் இப்போது கிடையாதென உறுதியாய்க் கூறலாம்; இந்தக் கட்டத்தில் இனி என்ன செய்யலாமென்ற திட்டம் ஏதும் இப்போது அரசின் கவனத்தில் இல்லை; யாவும் தொடக்க நிலையிலேயே உள்ளன.

            அவைத் தலைவர்: அணைகள் கட்டப்பட வேண்டும் என்று அரசு முடிவெடுத்திருந்தால், தற்போது சாலைகள் அமைப்பதற்காகச் சிறிது நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படுவதாயிருப்பினும், அணைகள் கட்டப்பபடும்போது பெரும்பகுதி நிலங்கள் நீரில் மூழ்குமென்பதும் மக்கள் பலர் இடம்பெயர நேரிடுமென்பதும், என்றைக்கிருந்தாலும் எதிர்கொள்ள வேண்டிய நிலைதானே என்பதே இப்போதைய சிக்கல் என உணருகிறேன்.

            டாக்டர் அம்பேத்கர்: இப்போதைய நிலை அதுவன்று; திட்டம் பற்றிச் சரியான முடிவு எடுப்பதில் வெளிநாட்டு வல்லுநர்களின் ஆலோசனையையும் இன்னும் நாடிக் கொண்டிருக்கிறோம். திட்டம் மிகவும் தொடக்க நிலையிலேயே இருப்பதால், அது குறித்து அவையில் அறிக்கையேதும் தர இயலா நிலைமைக்கு வருந்துகிறேன்.

            அவைத் தலைவர்: அணைகள் கட்டப்பட வேண்டுமென அரசு முடிவெடுத்துள்ளதா வென்பதை அறிய விரும்புகிறேன்.

            டாக்டர் அம்பேத்கர்: இது அம்மாநில மக்களின் திட்டம்; திட்டம் குறித்து இறுதி முடிவு ஏதும் எய்தப்படவில்லை.

            திரு.மோகன்லால் சாக்சேனா (லக்னோ முகமதியரல்லா கிராமியச் சார்பாளர்): திட்டம் அவையின் முன் வைக்கப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

            டாக்டர் அம்பேத்கர்: திட்டம் ஆய்விலேயே உள்ளது. திட்டத்திற்கான நிதி வழங்காணையேதும் இதுவரை பெறப்படவில்லை.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

 

Pin It