திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): பின்கண்ட திருத்தம் முன்மொழியப்படுகிறது:

            “அசல் தீர்மானத்துக்குப் பதிலாக பின்கண்டவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்:

        ambedkar 266    “புதுடில்லிப் பிரதேசத்திலுள்ள மசூதிகளைப் பாதுகாப்பதற்கும், முறையாக மராமத்து செய்வதற்கும் பின்கண்ட நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று நிர்வாக சபையுடன் கூடிய கவர்னர்- ஜெனரலுக்கு இந்த அவை பரிந்துரைக்கிறது:

(அ) மசூதிகள் அமைந்துள்ள வளாகங்களுக்குள் உள்ள இல்லங்களை மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் என்று சம்பந்தப்பட்ட இலாகாவுக்கு ஆணையிடப்படுகிறது; ஆனால் இத்தகைய மசூதிகளை மராமத்து செய்வதற்கும் முஸ்லீம்கள் அவற்றில் தொழுகை நடத்துவதற்கும் எத்தகைய இடைஞ்சலும் இருக்கக்கூடாது என்று பணிக்கிறது;

(ஆ) புதுடில்லிப் பிரதேசத்தில் தற்போதுள்ள மசூதிகளை பழுதுபார்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும், திரும்பக்கட்டுவதற்கும் சம்பந்தப்பட்ட இலாகாவும் புதுடில்லி நகரக் குழுவும் எல்லா வசதிகளையும், உதவிகளையும், தேவையான சட்ட இசைவாணைகளையும் வழங்க வேண்டும் என்று ஆணையிடுகிறது.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (தொழிலாளர் நலத் துறை உறுப்பினர்): இந்தத் தீர்மானம் (அ) (ஆ) என இரு பகுதிகளைக் கொண்டது. பகுதி (ஆ) கல்வி, சுகாதாரம், நிலம் ஆகியவற்றுக்கான மாண்புமிகு செயலாளர் பொறுப்பில் உள்ளதாகும். நான் சம்பந்தப்பட்ட பகுதி (அ) இரண்டு பரிந்துரைகளைச் செய்கிறது. முதலாவது பரிந்துரை தமது வளாகத்திற்குள் மசூதிகளைக் கொண்டுள்ள வீடுகளை இந்திய அரசாங்கத்தின் முஸ்லீம் ஊழியர்களுக்கு ஒதுக்க வகைசெய்கிறது. இரண்டாவது பரிந்துரை தொழுகைகள் செய்வதற்காக வருவோர் இத்தகைய மசூதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கோ அல்லது அவற்றைப் புனரமைப்பதற்கோ இந்த வீடுகளில் குடியிருப்பவர்கள் எவ்வகையினும் இடைஞ்சல் செய்யக்கூடாது என்று கூறுகிறது.

இவ்விரு பரிந்துரைகளையும் என்னால் ஏற்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவரது உணர்வுகளை நான் மதிக்காதது இதற்குக் காரணமல்ல; மாறாக இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ளார்ந்து பொதிந்துள்ள சிரமங்களே இதற்குக் காரணம்.

மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் சர்.யாமின் கான் தீர்மானத்தின் முதல் பகுதியை எடுத்துக்கொண்டு பேசும்போது, இத்தகைய வளாகங்களுக்குள் அமைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட இல்லம் மதிப்பிற்குரிய முஸ்லீம் உறுப்பினர் ஒருவருக்கு ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது என்ற தமது வாதத்தை ஆதரிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று கருதுகிறேன். ஆனால் இது தவறு என்பதைத் திட்டவட்டமாகக் கூறவிரும்புகிறேன். மதிப்பிற்குரிய உறுப்பினர் எவருக்கும் எந்தவீடும் ஒதுக்கப்படவில்லை. அவர் குறிப்பிட்டுள்ளபடி ஒரு முஸ்லீம் உறுப்பினருக்கு வீடு ஒதுக்கப்பட்டிருப்பது ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியாகும். அந்தக் குறிப்பிட்ட வீடு காலியாக இருந்தால் – காலியாக இருக்காது என்றே நம்புகிறேன் – அது மதிப்பிற்குரிய உறுப்பினருக்கு அடுத்த படியாக உயர்நிலையிலுள்ளவருக்கே ஒதுக்கப்பட வேண்டும், மதிப்பிற்குரிய உறுப்பினர் முஸ்லீமாக இருந்தாலும் அல்லது முஸ்லீமல்லாதவராக இருந்தாலும் இவ்வாறுதான் செய்ய வேண்டும் என்பதில் எனக்கு அணுவளவும் ஐயமில்லை.

சர் முகமது யாமின் கான்: ஆனால் ஒரு தடுப்புச் சுவர் ஏற்கெனவேகட்டப்பட்டு விட்டது.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அது வேறு விஷயம். இங்கு கோட்பாடுகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

ஆதலால் இந்திய அரசாங்கம் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தகைய கண்டிப்பான கோட்பாட்டை அரசாங்கம் ஏற்றுக்கொள்வது என்பது அறவே சாத்தியமல்ல என்பதை மதிப்பிற்குரிய நண்பருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஐயா, இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்வது என்பது எதைக் குறிக்கிறது? அது இரண்டு விஷயங்களைக் குறிக்கிறது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்ற வீடுகளில் முஸ்லீம் அல்லாதவர்கள் குடியேறியிருந்தால் அவர்களுக்கு சட்டப்படியாக முன்னறிவிப்பு தந்து அவர்கள் வீட்டைக் காலி செய்யச் செய்வதையே குறிக்கிறது. இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் இத்தகைய விளைவுதான் ஏற்படும்.

இதுபோக, தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் இரண்டாவது விளைவு பின்கண்டவாறு இருக்கும்; இத்தகைய ஒரு வீடு காலியாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், வெளி இடங்களிலிருந்து தவிர்க்க முடியாதபடி டில்லியில் தங்கியிருப்பதற்கு முஸ்லீம் அல்லாத ஒருவர் அரசாங்கத்தால் அழைக்கப்படுகிறார் என்றும் தெரிவித்துக் கொள்வோம். அப்படிப்பட்ட நிலைமையிலும் அவருக்கு அந்த வீட்டை ஒதுக்க முடியாது. எனவே, ஐயா, இது காரியசாத்தியமற்ற நிபந்தனையாகும் என்பது எனது பணிவான கருத்து. இன்று பெருமளவுக்கு எங்கும் வீட்டுவசதிப்பற்றாக்குறை நிலவுகிறது; இங்கு அழைக்கப்படும் அதிகாரிகள் படைவீடுகள் போன்ற வசதி இல்லாத குடியிருப்புகளில் வசிக்க வேண்டியிருக்கிறது; இத்தகைய நிலைமையில் அரசாங்கம் இவ்வகையான விதியைக் கடைப்பிடிப்பது தனக்குப் பயன்படாதது மற்றவர்களுக்கும் பயன்படக்கூடாது என்ற கொள்கையைப் பின்பற்றுவதாகத் தான் இருக்கும். இன்றைய சந்தர்ப்ப சூழ்நிலைகளில் இது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமல்ல என்பதை மதிப்பிற்குரிய என் நண்பர் உணர்வார் என்று நம்புகிறேன்.

இனி, அடுத்து, வீட்டிற்குக் குடி வருபவர்கள் மீது சில குறிப்பிடப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கும்படி அரசாங்கத்தைக் கோரும் தீர்மானத்தின் இரண்டாவது பகுதிக்கு வருவோம். இதுவும் மிகுந்த சிக்கல்களையும் இக்கட்டுகளையும் ஏற்படுத்தும். குடியிருப்பவர்கள்மீது வீட்டுச் சொந்தக்காரர்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்க உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, நன்கு பராமரிப்பது சம்பந்தப்பட்டவையாகவே பிரதானமாக இருக்கும் என்பதை மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் சர் யாமின் கான் ஒப்புக்கொள்வார் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் குடித்தனக்காரர் மீது அரசாங்கம் விரும்பும் கட்டுப்பாடுகளோ முற்றிலும் நியாயமற்றவை. குடியிருப்பை சிறந்த முறையில் பராமரிப்பது சம்பந்தப்படாதவை.

அடுத்து, ஐயா, இனி இரண்டாவது இடர்ப்பாட்டுக்கு வருகிறேன். இத்தகைய கட்டுப்பாட்டுக்கு உள்ளாகும் குடித்தனக்காரரின் நிலைமை எப்படியிருக்கும்? இங்கு குடிவரும் ஒவ்வொருவரும் அவர் முஸ்ஸீமாக இருந்தாலும் முஸ்ஸீமல்லாதவராக இருந்தாலும் தொழுகை செய்ய விரும்பும் எல்லோருக்குமே இந்த வளாகத்தைத் திறந்துவிட வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனையை நான் செயல்படுத்துவதானால் இந்த வீடுகளின் தனிமை இயல்பு அழிக்கப்பட்டு அது ஒரு முசாபிர்கானாவாக ஆகிவிடும் அதாவது சத்திரமாக மாறிவிடும். இத்தகைய ஒரு நிபந்தனையை முஸ்லீம் அல்லாத ஒருவர்க்கு விதிப்பது மிகமிகக் கடினம்; இதேபோன்ற நிபந்தனையை ஓர் ஐரோப்பியருக்கு விதிப்பதும் முற்றிலும் சாத்தியமல்ல. இன்னும் சொல்லப்போனால் மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் விரும்புவதுபோல் ஒரு முஸ்லீம் குடித்தனக்காரர்கூட இந்த நிபந்தனையை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார். அதிகம் போவானேன் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோன்ற ஒரு வீட்டில் குடியிருக்கும் மதிப்பிற்குரிய என் சகாவையே எடுத்துக்கொள்வோம். அவர் என்னதான் தீவிர சமய சார்புடையவராக இருந்தாலும் தொழுகை நடத்துவதற்காக ஒரு பெரிய கூட்டம் தன்னுடைய வளாகத்திற்குள் நுழைவதை அவர் அனுமதிக்க மாட்டார்.

எனவே, ஐயா, நான் மேலே கூறிய காரணங்கள் எல்லாம் தற்காலிகமானவை அல்ல என்பதை மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன். இத்தகைய காரணங்களால் இத் தீர்மானத்தை நான் ஏற்க முடியாதவனாக இருக்கிறேன்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It