மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்:) ஐயா! மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி கூறியவற்றின் காரணமாக, அவர் எழுப்பிய விஷயங்கள் பற்றி சர்க்காரின் நிலையை நான் எடுத்துரைக்க வேண்டும் என்பது சரியானதே. ஒரு அர்த்தத்தில், திரு.ஜோஷியின் கூற்றுகள் பொருந்தாதவையாகத் தோன்றலாம். நாம் தேயிலைக் கட்டுப்பாடுச் சட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். தொழிலாளர்களின் நிலைமைகளைப் பற்றி பரிசீலிக்கும் எந்த ஷரத்துகளும் இதில் இடம்பெற முடியாது என்பது தெளிவு. ஆனால், இதை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், வினியோகம் – தேவை பற்றிய சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுமென்று அரசு கோரப்படும்போது, தொழிலாளர் மீது அக்கறை கொண்டவர்கள் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று கேட்பது நியாயம் என்று ஒப்புக்கொண்டாக வேண்டும். இந்தக் கண்ணோட்டத்திலிருந்துதான். சர்க்கார் தரப்பிலிருந்து பதில் அவசியப்படுகிறது என்று கூறினேன்.

    ambedkar 184 ஐயா! திரு.ஜோஷி குறிப்பிட்ட முதல் விஷயம் என்னவெனில், தொழிலாளர்களுக்கான ராயல் கமிஷன் அறிக்கை கொடுத்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன என்றும், அந்தக் கமிஷனின் சிபாரிசுகளைப் பொறுத்தவரை இந்திய சர்க்கார் நடைமுறையில் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார். இந்த விஷயம் பற்றி அலசி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ராயல் கமிஷன் செய்துள்ள சிபாரிசுகளைப் பரிசீலிக்க 12 ஆண்டுகள் என்பது எந்த சர்க்காருக்கும் ஒரு நீண்டகாலமே. ஆனால், நான் சுருக்கமாக குறிப்பிடப்போகும் விவரங்களிலிருந்து இந்திய சர்க்கார் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை சுமத்த முடியாது என்பதை திரு.ஜோஷியும் இந்த அவையும் புரிந்துகொள்ள முடியும். தேயிலைத் தோட்டங்கள் சம்பந்தப்பட்ட வரை, தொழிலாளர்கள் சம்பந்தமாக ஐந்து சிபாரிசுகளை ராயல் கமிஷன் செய்தது. முதலாவது என்னவெனில். அஸ்ஸாம் தொழிலாளர் குடிபெயர்வு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது. இரண்டாவது சிபாரிசு அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய ஊதிய குழுமம் அமைக்கப்பட வேண்டும் என்பது. மூன்றாவது சிபாரிசு, குடிநீர், சுகாதாரம், சாக்கடை வசதி, வைத்திய வசதிகள், குடியிருப்பு ஆகியவை சம்பந்தமான விதிமுறைகளை வகுத்தளிக்கும் அதிகாரம் கொண்ட தொழிலாளர்கள் நலனுக்காக ஒரு சுகாதார அமைப்பு வசதியான வட்டாரங்களில் நியமிக்கப்பட வேண்டும் என்பது. நான்காவது சிபாரிசு, தொழிலாளர்களுக்கு காலம் தவறாமல் ஊதியம் கொடுப்பது, கொடுக்கப்பட்ட முன்பணத்தை பிடிப்பது ஆகியவைப் பற்றிய விதிமுறைகள் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வகுக்கப்பட வேண்டுமென்பது. கடைசி சிபாரிசு, பூங்காக்களில் பொதுமக்கள் சென்றுவர வழி செய்யும் விதிமுறைகள் ஆக்கப்பட வேண்டுமென்பது.

     சிபாரிசுகள் செய்யப்பட்டதும் நோக்கத்தை வீணாக்காமல் அவற்றை செயல்படுத்த வேண்டிய சரியான அதிகாரிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்திய சர்க்கார் பரிசீலித்தது; குடிபெயர்வு சட்டத்தை ரத்து செய்துவிட்டு பதிலாக வேறு ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்ற முதலாவது சிபாரிசை தவிர மற்றவை சட்டரீதியாக அடிப்படையில் ஸ்தலமட்டத்தில் கவனிக்கப்பட வேண்டியவை என்ற முடிவுக்கு வந்தது. இந்தச் சிபாரிசுகளை பொறுத்தவரை பொறுப்பை பிரித்துக் கொடுக்கும் விஷயத்தில் இந்திய சர்க்கார் மேற்கொண்ட கண்ணோட்டம் சரியானதல்ல என்று யாரும் கருத முடியும் என்று இந்திய தொழிலாளர் சம்பந்தமாக ராயல் கமிஷன் சிபாரிசுகள் பற்றி நான் நினைக்கவில்லை. இந்திய சர்க்கார் எடுத்த இந்த முடிவிற்கு ஏற்ப, இந்த மற்ற சிபாரிசுகளை பரிசீலித்து ஆவன செய்ய ஸ்தல சர்க்கார், அஸ்ஸாம் சர்க்காருக்கு உடனே அனுப்பியது; தொழிலாளர்கள் பற்றி ராயல் கமிஷன் செய்த முதல் சிபாரிசின்படி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் சட்டங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஐயா, துரதிருஷ்டவசமாக, அஸ்ஸாம் ஸ்தல சர்க்கார் இந்த விஷயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் எனக்குத் தெரியாது. இந்தச் சிபாரிசுகள் செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்த அவையில் திரு.ஜோஷி இருந்திருக்கிறார் என்றாலும், இந்த விஷயத்தை அவர் எடுத்ததாகவோ, எடுத்துக்கொண்டதாகவோ எனக்குத் தோன்றவில்லை. ஐயா. இந்த விஷயத்தில் இந்திய சர்க்கார் செயல்பட்டது என்று நான் கூறிக்கொள்ள முடியும். தேயிலைக் கட்டுப்பாடு சட்டம் நீட்டிக்கப்படுவதற்காக 1938ல் சட்டமன்றத்திற்கு வந்தபோது இந்திய சர்க்கார் முன்முயற்சி எடுத்து தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை நிலைமைகள் பற்றி ஆய்வுசெய்ய அணுகியது. தொழிலாளர் இலாகா பிரதிநிதிகளுக்கும் தோட்ட முதலாளிகளின் பிரதிநிதிகளுக்குமிடையே ஒரு மாநாடு கூட நடைபெற்றது என்பதை மதிப்பிற்குரிய என் நண்பர்கள் திரு.கிரிப்பித்தும் சர்.பிரடெரிக் ஜேம்ஸூம் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும்.

     மௌலானா ஜாபர் அலிகான்: இந்த விஷயத்தில் ஆவன செய்யாததற்காக அஸ்ஸாம் சர்க்கார் மீது ஏன் இந்திய சர்க்கார் நடவடிக்கை எடுக்கவில்லை?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அந்த சமயத்தில் இந்த இலாகாவிற்கு பொறுப்பாக இருந்த உறுப்பினர் இந்த கேள்விக்கு நல்ல பதிலளித்திருக்க முடியும். நான் நேற்றுத்தான் வந்தேன்; அதனால் எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. இந்தச் சிபாரிசுகள் என்னவாயின, விசாரிப்பதற்கான நேரம் வரவில்லையா என்று நான் கூறத் தயாராக இல்லை. ஐயா! இந்த விஷயங்கள் பற்றி முடிவு செய்ய நேரம் அநேகமாக வந்தபோது, புதிய அஸ்ஸாம் சர்க்கார், அப்பொழுது அது காங்கிரஸ் சர்க்கார், இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வது என்று முடிவுசெய்தது; ஒரு தீர்மானத்தின்மூலம் 1939 மே 23ம் தேதி ஒரு குழுவை நியமித்தது. தாங்கள் முதலில் அனுப்பிய ஆணையின் நிபந்தனைகளின்படி இவற்றை கவனித்துக் கொள்ளும், அதிகாரத்தை ஸ்தல சர்க்காருக்கு வழங்கியுள்ளதால் அஸ்ஸாம் சர்க்கார் எடுத்த இந்த நடவடிக்கையின் விளைவாக, களத்திலிருந்து இந்திய சர்க்கார் பின்வாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி இந்த விஷயம் பற்றிக் குறிப்பிட்டதால், சரியான காரணம் என்ன என்று கூற நான் தயாரில்லை; ஆனால், அந்தக்குழு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது; அது அநேகமாக ஒரு மோதலாக வளர்ந்தது; இதன் விளைவு குழுவின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இறுதியில் அஸ்ஸாம் சர்க்கார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் நடந்தது என்ன என்பது குறித்தும், ஏன் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டது என்பது பற்றியும் ஒரு அறிவிப்பை வெளியிட்டதுதான். இது நடந்தது ஜூலை கடைசியில். சில மாதங்கள் கழித்து யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் யாரும், ஸ்தல சர்க்காரோ மத்திய சர்க்காரோ எந்தவித விசாரணையும் ஆரம்பித்திருப்பது சாத்தியமில்லை. தன் பக்கத்தில் எந்தவித செயலாற்றாமைக்கும் இந்திய சர்க்காரை உண்மையில் பொறுப்பாக்க முடியாது என்பதை இந்த சூழ்நிலைகள் திரு.ஜோஷியை முற்றிலுமாக நம்ப வைத்திருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

     பிரதான கேள்வியைப் பொறுத்தவரை அதாவது தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை சர்க்கார் உணர்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சினை தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்று சர்க்கார் கருதுகிறது எனக் கூறுவதன் மூலம் ஆரம்பிக்கிறேன். தோட்டத் தொழிலாளர் பணி நிலைமைகள் பற்றி நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. தினசரி தாள்களில் பல்வேறு புள்ளி விவரங்களை நாம் பார்க்கிறோம். சிலோனில் இப்போது சம்பளங்கள் பற்றிய புள்ளி விவரங்கள், அஸ்ஸாம் தேயிலைத் தோட்டங்களில் சம்பளங்கள் சம்பந்தமான புள்ளி விவரங்கள் ஆகிய இந்த புள்ளி விவரங்கள் எவற்றுக்கும் சர்க்காரின் இணக்கத்தைத் தெரிவிக்க நான் தயாராக இல்லை. நம்மிடம் திட்டவட்டமான விவரங்கள் இல்லை. இந்த விஷயத்தில் இதுவரை எத்தகைய ஆய்வும் செய்யப்படவில்லை. ஒரு விஷயத்தை நான் கூறமுடியும்; தேயிலைத் தோட்டங்களின் நிலைமைகள் முறைப்படுத்தப்படாதவை; அவை இடத்திற்கு இடம் பெருமளவு மாறுபாடுடையவை. பொதுப்படையான, ஒன்றுபட்ட வேலைநிலைமைகள் இல்லை. இந்த நிலைமையைத்தான் சகித்துக் கொள்ள முடியும் என்று இந்திய சர்க்கார் கருதவில்லை. பாரபட்சமற்ற விசாரணை மூலம் கிடைக்கக்கூடிய போதுமான விவரங்கள் நம்முன் கொண்டு வரப்பட்டாலொழிய எந்த சட்டத்தையும் இயற்ற நம்மால் முடியாது என்பதும் தெள்ளத் தெளிவு. எந்த முயற்சியையும் தடைசெய்ய இந்திய சர்க்கார் கூறும் சால்ஜாப்பு அல்ல இது. தொழிலாளர்கள் கூறிய ராயல் கமிஷன் விதித்த நிபந்தனைகளில் இதுஒன்று என மதிப்பிற்குரிய நண்பர் திரு.ஜோஷியே ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். பல்வேறு பரிந்துரைகளை முன் வைக்கும்போது ராயல் கமிஷன் ஒரு ஷரத்தை சேர்த்திருந்தது; அதாவது, இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு முன்பு, தோட்டங்களில் நிலவும் நிலைமைகள் பற்றி திட்டவட்டமான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அது கூறிற்று. ஐயா, இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி இந்திய சர்க்கருக்கு எந்த சந்தேகமும் இல்லை. சர்க்கார் சார்பில் பேசும்போது, தேயிலைத் தோட்டங்களில் சரியான நல்வாழ்வு விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சர்க்கார் கருதுகிறது என்று கூற நான் தயாராக இருக்கிறேன். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி கூறியதை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன். சிலோனில் நியாயமான சம்பள விகிதங்களைப் புகுத்துவது அவற்றை இந்தியாவில் தொழிலாளர்களின் நேர்மையான சம்பள விகிதங்களை அமுலுக்கு கொண்டு வராததற்கு நிபந்தனையாகவோ அல்லது முன்மாதிரியாகவோ இந்திய சர்க்கார் கருத முடியாது. எங்கெல்லாம் தொழிலாளர் மீது கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் தொழிலாளர்களுக்கு நியாயமான வேலை நிலைமைகள் அளிக்கப்படுவதற்கு பல்வேறு அவசரச் சட்டங்கள் மூலம் இந்திய சர்க்கார் வகை செய்துள்ளது. இந்த விஷயங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் விஷயத்திலும் நிச்சயம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய சர்க்கார் கருதுகிறது. சென்ற காலத்தில் தேயிலைத் தோட்டங்களின் நிலைமை எவ்வாறு இருந்திருந்தாலும், அங்குள்ள இன்றைய நிலைமையில், ஒரு குழுமம் அவற்றின்மீது சுமத்தும் சம்பள விகிதங்களின் சுமையை அவை தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் மறுக்க முடியாது.

     எனவே, இப்பொழுது எழும் ஒரே பிரச்சனை இதுதான்: இன்றைய நிலைமையில் ஒரு விசாரணையை நாம் நடத்த முடியுமா? இரண்டு பிரச்சினைகள் மீது அதாவது நியாயமான நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எனது நண்பர் திரு.ஜோஷிக்கும் இந்திய சர்க்காரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எனக்குமிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை. தேயிலைத் தோட்டங்களில் ஒருபெரும்பகுதி இந்தியாவின் மேற்கத்திய எல்லையில், அஸ்ஸாமிலும் வங்காளத்திலும் உள்ளது என்பதை எனது நண்பர் திரு.ஜோஷியும் பிற உறுப்பினர்களும் நன்கு அறிவர். இந்த பிரதேசங்கள் எதிரியின் தாக்குதலுக்கு உட்படக்கூடியவை என்பதும் தெள்ளத் தெளிவானதே. அங்கு எந்த விசாரணையையும் துவக்கினால், அது அமைதிக்குலைவு நிலையை ஏற்படுத்தலாம். எனவே, மீதமுள்ள ஒரேகேள்வி, தென் இந்தியாவில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இந்த விசாரணையை நாம் ஆரம்பிக்கலாமா என்பதே. வடக்கு, தெற்கு இந்தியாவில் தேயிலைத் தோட்டங்கள் எவ்வாறு பிரிந்து கிடக்கின்றன என்பதை அவைக்கு கூற நான் விரும்புகிறேன். என்னிடம் உள்ள புள்ளி விவரங்கள் 1941ம் ஆண்டுக்கானவை. அவற்றின்படி பரப்பளவு வட இந்தியாவில் 607,000 ஏக்கர்; தென்னிந்தியாவில் 163,132 ஏக்கர்; தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, வட இந்தியாவில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 773,969; தென்னிந்தியாவில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் எண்ணிக்கை 144,385 மட்டுமே.

     சர் எப்.இ.ஜேம்ஸ்: (சென்னை, ஐரோப்பியர்): இது தேயிலையை மட்டும் குறிக்கிறது, இல்லையா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆம். நாம் தேயிலையை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். நான் அளித்த இந்த புள்ளி விவரங்களிலிருந்து, தென்னிந்தியாவில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் அளவு வட இந்தியாவின் தேயிலைத் தோட்டங்களின் அளவில் ஒரு சிறுபாகமே என்பது தெளிவு.

     மௌலானா ஜாபர் அலிகான்: அஸ்ஸாமில் தேயிலை பயிரிடப்படும் பரப்பளவு எவ்வளவு?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் வடக்கு, தெற்கு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். அஸ்ஸாமை தனியாக எடுத்துக்கொள்ளவில்லை. வட இந்தியாவில் உட்படுத்தப்பட்டுள்ளது அஸ்ஸாம். தென்னிந்தியாவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாடு முழுவதிலுமுள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளரின் மொத்த எண்ணிக்கையில் ஒரு மிகச் சிறிய பாகமே என்பது புள்ளி விவரங்களிலிருந்து தெளிவு. இத்தகைய அரைகுறையான, குறுகிய தன்மை கொண்ட விசாரணையை மேற்கொள்வதால், நாட்டுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ எந்தவிதமான பலனும் விளையும் என்று இந்திய சர்க்காருக்குத் தோன்றவில்லை யுத்தம் ஏற்படுத்தியுள்ள நிலைமையில் மொத்தத் தேயிலைத் தோட்ட அளவில் மிகக்குறைவாக உள்ள பரப்பில் ஒரு விசாரணையைத் துவக்குவது சாத்தியமல்ல.

     திரு.தலைவர்: (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): இந்தத் தீர்மானத்தைப் பொறுத்தவரை தொழிலாளர் பிரச்சினை அதில் தற்செயலாக எழுந்ததுதான் என்பதை உணரும்படி மாண்புமிகு உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இதற்குமேல் சொல்வதற்கு எனக்கு வேறு எதுவுமில்லை.

     டாக்டர் சர்.ஜியா வுத்தீன் அகமது: தேயிலையை உற்பத்தி செய்யாது இருக்க தேயிலைத் தோட்ட முதலாளிகளுக்கு கணசமான தொகை அளிக்கப்பட்டதா? இதனால் நுகர்வோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: வாணிகத்துறைச் செயலாளர் பதிலளிக்க வேண்டிய விஷயம் இது.

     மதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள்: இப்போது தீர்மானம் முன்வைக்கப்படலாம்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் இதுதான்: ‘தீர்மானம் இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது”

     தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It