மக்களின் அன்றாட பிரச்சனைகளில் முதலிடத்தில் இருப்பது போக்குவரத்து பிரச்சனையாகும். வீட்டில் இருந்து கிளம்பி அலுவலகம் செல்வதற்குள் மூச்சுத் திணறிவிடும் அளவுக்கு டிராஃபிக் ஜாம். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 10 நிமிடங்களில் செல்ல வேண்டிய இடம், தற்பொழுது 1 மணிநேரத்திற்கு மேல் ஆகும் சூழலில் தான் வாழ்ந்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் பேருந்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாவதால் ஏற்படும் ஆபத்தான நிகழ்வுகள். சென்னை போன்ற மாநகரில்  'மெட்ரோ சிட்டி'களில் புட்போர்டில் ஆபத்தான நிலையில் தினம் தினம் பயணம் செய்கின்றனர். இப்பயணம் அநேக நேரங்களில் உயிரிழப்பு வரை இட்டு சென்றிருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. மாநில அரசு  பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப வாகன வசதிகளை  ஏற்படுத்தி தரவில்லை என்பது மட்டுமல்லாமல் சாலை வசதி, வாகனம் பராமரிப்பு, போக்குவரத்து ஊழியர்களின் கவனக்குறைவு என பல காரணங்களால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது.

இமாசல பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்கு உட்பட்டபோது அதில் பயணம் செய்த 90 பேர்களில் 26 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. இதை அந்த மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து அப்பேருந்தை இன்ஸ்யூர் செய்திருந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள். ஏ.கே. மாத்தூர், டி.கே. பாலசுப்ரமணியம் அவர்கள் கூறுகையில் இந்த பேருந்தில் 42 பயணிகள் மட்டுமே ஏற்றுவதற்கு அனுமதி உள்ளது. இதையும் மீறி 90 பயணிகளை ஏற்றியுள்ளீர்கள். எனவே அந்த பேருந்தில் பயணம் செய்த 90 பேருக்கும் இழப்பீடு வழங்க வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சமாக 42 பேருக்கான இழப்பீட்டு தொகையை 90 பேருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், மனுதாரர்கள் கோரும் மீதத்தொகையை பேருந்து உரிமையாளர் தான் வழங்கவேண்டும் என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கவேண்டியதில்லை என்றும் உயர்நீதிமன்றம் கூறியது. இந்தப் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கும் பொருந்தும். ஒரு பேருந்தில் 42 பேர் தான் பயணம் செய்ய வேண்டும் என்றால் அவ்வளவு தான் பயணம் செய்ய வேண்டும். அதையும் மீறி பயணம் செய்தால் இது போன்று தான் விபத்துக்குள்ளாகும் போது பயணம் செய்த அத்தனை பேருக்கும் இழப்பீடு வழங்க முடியாது.

இந்த பேருந்துகளை இயக்குவது அல்லது கட்டுப்படுத்துவது அரசுதான் என்ற நிலையில் "படிக்கட்டு பயணம்' செல்வதற்கும் அரசே தான் காரணமாகும்.

இது போன்று தான் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் பயணிகள் பேருந்தின் அளவை விட பயணம் செய்து வருகின்றனர். இதனால், பெரும்பாலான பயணிகள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சென்னையில் மட்டும் தினமும் 3500 விதி மீறல்கள் நடந்து வருகின்றன. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாக தினமும் சராசரியாக 3500 வழக்குகள் இசெலான் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ம் தேதி மட்டும் 4200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு இருந்தும் சென்னை நகரில் மட்டும் 2010 ல் 12 இலட்சம் பேர் போக்குவரத்து விதியை மீறி 8 கோடியே 69 இலட்சம் அபராதம் கட்டியுள்ளனர். 4375 பேர் காயமுற்றுள்ளனர். 594 பேர் மரணமடைந்து  இருக்கிறார்கள் என்பதுதான் புள்ளி விவரங்கள் தரும் கசப்பான செய்தியாகும்.

அனைத்து மாவட்டங்களிலும் சாலை விதிமீறல்கள் நடந்து வந்தாலும் சென்னையில் தான் அதிகம் என்பது மேலே சொன்ன புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தும் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கின்றன. இதில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் பயணம் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  இது போன்று படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து அவர்களுடைய 'பஸ் பாஸை' உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் அபராதமும் விதிக்க வேண்டும்.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு நகரம் மற்றும் மாநகரங்களில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அதுபோல முக்கிய சாலைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு வழிப்பாதையாக மாற்றியமைத்தல், மேம்பாலங்களை கட்டுதல், சாலை விரிவுப்படுத்துதல் என அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆபத்துக்களை குறைக்க முடியும் என்கின்றனர்.

அது மட்டுமின்றி, வெளிநாடுகளில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காகவும், வாகனங்கள் செல்வதற்காகவும், சைக்கிள் போன்றவைகள் செல்வதற்காகவும் தனித்தனியே பாதைகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். இதன் மூலம் விபத்துக்கள் மட்டுமின்றி பயணிகள் எந்தவித பயமுமின்றி செல்ல முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கம் சமீபத்திய அறிக்கை ஒன்று திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த நிறுவனம் மக்களின் பாதுகாப்பு ரீதியாக ஒவ்வொன்றையும் அறிக்கை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதன்படி 2006 - 2007 ஆம் ஆண்டுகளில் 178 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானனோர் விபத்துகளில் ஆண்டுதோறும் மரணமடைவதாக சொல்கிறது. படுகாயமடைவோர் எண்ணிக்கை 2 ஆயிரம் கோடியை தாண்டும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் உலகிலேயே மிக அதிகமானோர் சாலை விபத்துகளில் பலியாவது இந்தியாவில்தான் என்பதுதான். அதாவது 2007ல் மட்டும் 1,14,590 பேர் அதாவது, ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 13 பேர் மரணமடைகின்றனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட 6.9 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவைவிட அதிக மக்கள் தொகையும், மோட்டார் வாகனங்களும் அதிகம் உள்ள நாடு சீனா. ஆனால், அங்கு கூட இந்த அளவுக்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாவதில்லை. அங்கு 2006 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,455 பேர் தான்.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் மட்டும் குறைந்து வருகிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதற்கு காரணம் என்னவென்றால் அங்கு ஒரு சட்டம் கொண்டு வரப்படுமானால் அதை பொது மக்களும் முறையாக பயன்படுத்துவதும், சட்டத்தை மீறும் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதனால் தான் என்பது நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

எனவே, பொதுமக்களாகிய நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி போக்குவரத்து ஊழியார்கள் தொடர்பான புகார்களை செல்போன் மூலமும் தெரிவிக்க முடியும். போக்குவரத்து ஊழியர்களும், பயணிகளும் கண்காணிப்பு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

பயணிகளாகிய நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர் 9445030516

காலை  7 மணி முதல் இரவு 10 மணி வரை.

எனவே

புட்போர்டில்லாத பயணங்கள்,

விபத்தில்லாத பயணங்கள்.

- இறையன்பன், தமிழ்நாடு

Pin It