எலிஸிஸ் சாலை

 'உலகின் மிக அழகான சாலை' என்று பெயர் பெற்றது. கிரேக்க புராணங்களின்படி எலுசியா என்பது வீரர்கள் இளைப்பாறும் இடமாகும். பதினேழாம் நூற்றாண்டில்  அமைக்கப்பட்ட இந்தச்சாலையில் தான் பிரான்ஸ் நாட்டு அதிபரின் மாளிகையான 'பெடிட்' அரண்மனையும் உள்ளது.

 கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் ஆகியவற்றில் அதிக விருப்பம் மிக்க பாரிஸியன்கள் புத்தாண்டையோ, கால்பந்தாட்ட வெற்றியையோ இந்த சாலையில்தான் கொண்டாடுகிறார்கள். இரண்டாம் உலகப்போர் வெற்றிக் கொண்டாட்டத்தைக் கண்ட சாலையும் இதுதான்.

வெற்றிவளைவு

 போர்கள் பல புரிந்து, வெற்றிகள் பல கண்டவன் மாவீரன் நெப்போலியன். இன்றுவரை பாரீஸ் நகர கதாநாயகனாக சித்தகரிக்கப்படுகிறான். 1806 ஆம் ஆண்டு தான் கண்ட வெற்றிகளின் நினைவாக அவன் கட்டிய வளைவுதான் இது. ஆனால் கட்டி முடியும்போது அவன் உயிருடன் இல்லை.

 நெப்போலியன் ஆட்சிக்காலத்தில் அவன் அடைந்த வெற்றிகள் மற்றும் அவனது தளபதிகளாக இருந்தவர்களின் பெயர்கள் இதில் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. 234 படிகள் ஏறி வளைவின் உச்சியை அடைந்தால் பாரீஸ் நகரத்தையும், அதன் மற்ற சின்னங்களையும் பார்க்கலாம்.

இஸ்தான்புல் மசூதிகள்

 இஸ்தான்புல் நகரத்தை 'மசூதிகளின் நகரம்' என்றும் கூறலாம். துருக்கியின் கட்டிடக்கலை வல்லுநர் மிமார்சினான் அவர்களால், பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுலைமானியா மசூதி இங்குள்ள மசூதிகளில் மிகவும் அழகானதாகும். ஏழே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்த மசூதிக்கு அருகில் மதம், மருத்துவம் ஆகியவற்றைப் போதிக்கும் பள்ளிகள், யாத்ரீகர்கள் தங்குமிடங்கள் ஆகியவை அமைந்துள்ளன.

 சுல்தான் அஹமத் மசூதி உட்புறங்களில் நீலநிற ஓடு மற்றும் சதுரக்கல் ஆகியவற்றால் பதினேழாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது. அற்புதமான அலங்காரங்களின் காரணமாக நீலமசூதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

 இஸப் மசூதி நகரத்தின் புனிதமான மசூதி என்று கருதப்படுகிறது. ஓட்டோமன் சுல்தான்கள் முடிசூட்டிக் கொள்ளும் வைபவங்கள் அனைத்தும் இங்குதான் நடைபெறுவது வழக்கம்.

- வைகை அனிஷ்

Pin It