தேவையான பொருட்கள்:

கோழி இறைச்சி - முக்கால் கிலோ
பெரிய வெங்காயம் - 3 நடுத்தரமானது
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6
பாதாம் பருப்பு - 12
பிஸ்தா - 10
ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி
கோவா - அரை கப்
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - கால் கப்
ப்ரஷ் க்ரீம் - கால் கப்
ரோஜா இதழ்கள் - 10 (உலர்ந்தது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழி இறைச்சியினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு, மேல் தோலினை நீக்கிவிட்டு 15 துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தினை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் தண்டுகளை நீக்கி அரிந்து கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினை பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கோப்பை வெந்நீரில் பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை சுமார் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து எடுத்து தோலுரித்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். தயிரினை சிறிது நீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கின வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

அத்துடன் இஞ்சி பூண்டு மிளகாய் விழுதினைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். அரைத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா விழுதினையும், கோவாவினையும் சேர்த்து ஒரு கோப்பை வெந்நீர் விட்டு குறைந்த தீயில் சுமார் 15 நிமிடங்கள் வேக விட வேண்டும். அவ்வபோது விடாது கிளற வேண்டும். பிறகு கோழித் துண்டங்களைப் போட்டு அடித்து வைத்துள்ள தயிரினையும் ஊற்றி, மூடி வைத்து, குறைந்த தீயில் சுமார் 10 நிமிடங்கள் வேக விட வேண்டும். அவ்வபோது திறந்து கிளறி விட வேண்டும்.

அதன் பிறகு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி மேலும் சில நிமிடங்கள் வேக விட வேண்டும். இறைச்சி நன்கு வெந்தவுடன் ப்ரஷ் க்ரீமினைச் சேர்த்துக் கலக்க வேண்டும். ஏலப்பொடி மற்றும் ரோஜா இதழ்களைத் தூவி இரண்டு நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து இறக்கிவிட வேண்டும்.

Pin It