31.12.2012

காலை 9.30 மணிக்கு கோவாவை விட்டுப் புறப்பட்ட மாண்டவி விரைவுத் தொடர்வண்டி, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மீதே ஊர்ந்து சென்றது. அந்தத் தடத்தில் உள்ள அனைத்துத் தொடர்வண்டி நிலையங்களும், கடல் மட்டத்தில் இருந்து, 300 முதல் 500 அடி உயரத்துக்கு உள்ளாகவேதான் அமைந்து இருக்கின்றன. என்றாலும், நிலப்பரப்பு, குன்றுகள், சிகரங்களாகவும், மேடு பள்ளங்களுடன் மரங்கள் அடர்ந்த காடுகளுமாகவே உள்ளது. கோவாவில் இருந்து மும்பை வரையிலும், இடைப்பட்ட பகுதிதான் ‘கொங்கண்’ ஆகும். தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைப் போல!

Konkan_railway_bridge_300மேற்கு நாடுகளில், ஒவ்வொருவரும், தங்களது ஊர், கடல் மட்டத்தில் இருந்து எத்தனை அடி உயரத்தில் இருக்கின்றது; உலகின் எந்த கோணத்தில், எந்த அச்சில் அமைந்து இருக்கின்றது என்பதையும் அறிந்து வைத்து இருக்கின்றார்கள். உங்கள் ஊர், கடல் மட்டத்தில் இருந்து எத்தனை அடி உயரத்தில் உள்ளது? உலகின் எந்தக் கோணத்தில் உள்ளது?

கர்மாலி, திவிம், பெர்னெம், சாவந்த்வாடி சாலை, குடால், சிந்துதுர்க், கனக்வாலி, வைபவ்வாடி, ராஜாபூர் சாலை, சிப்லுன் சாலை, அஞ்சனி, கேட், கரஞ்சாடி, மங்காவ்ன், அப்டா, பன்வல், டாணா என்பவை, இந்த வழியில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள்.

இந்தத் தடத்தில் உள்ள குகைகளை எண்ணவே முடியவில்லை. தொடக்கத்தில் எண்ணிக்கொண்டே இருந்தேன். பிறகு விட்டு விட்டேன். பெரியதும், சிறியதுமாக 91 குகைகள் என பின்னர் இணையத்தில் பார்த்தேன். ஒவ்வொன்றும், இரண்டு, மூன்று கிலோமீட்டர்கள் நீளம். ராஜாபூர் என்ற தொடர்வண்டி நிலையத்துக்கு அடுத்து, சரியாக பிற்பகல் 4 மணி அளவில் ஒரு குகைக்கு உள்ளே தொடர்வண்டி சென்றது. அப்போது, வண்டி சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. அந்த வேகத்தில் குகையைக் கடப்பதற்கு சுமார் ஐந்து நிமிடங்களுக்கும் மேல் ஆயிற்று. பத்து கிலோ மீட்டருக்கும் கூடுதலாக இருக்கலாம். சில குகை வழிகளைக் குடைவதற்கு, ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆனதாம்.

தமிழகத்துக்கு உள்ளே தொடர்வண்டிகளில் பயணிக்கும்போது, ஆண்டின் பெரும்பகுதி நாள்களில், காவிரி ஆறே வறண்டு, மணல் மேடாகக் காட்சி அளிப்பதைப் பார்க்கும்போது, வேதனை நெஞ்சைக் கவ்விப் பிசையும். சிற்றோடைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியது இல்லை. டெல்லி தொடர்வண்டித் தடத்தில் பயணிக்கும்போது, ஆந்திர மாநிலத்திலும், பல சிற்றாறுகள் வறண்டுதான் கிடக்கும். ஆனால், கொங்கன் தொடர்வண்டித் தடத்தில் குறுக்கிடும் அனைத்துச் சிற்றாறுகள், ஓடைகளிலும் நீர் தழும்பிக் கொண்டு ஓடுவதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் இருக்கின்றது. வண்டியில் இருந்து இறங்கிச் சென்று, ஆற அமர உட்கார்ந்து குளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இவ்வளவு நீர் இருந்தாலும் ஒன்றிரண்டு இடங்களில் கிணறுகளும் தென்பட்டன. தண்டவாளத்துக்கு ஒருபக்கம், தண்ணீர் பெருகிக் கிடக்கின்றது. மறுபக்கம், கிணறும் இருக்கின்றது. இயற்கையின் படைப்பை, நில எழிலைக் கண்களால் பருகிக் கொண்டே சென்றேன். அதற்காகத்தான், இந்தத் தடத்தில் பகல் நேரப் பயணத்தைத் தேர்ந்து எடுத்தேன்.

மட்காவ்ன் -மும்பை தொடர்வண்டித் தடம் 765 கிலோமீட்டர்கள் தொலைவு. மாண்டவி எக்ஸ்பிரஸ் 12 மணி நேரத்தில் கடந்து செல்கின்றது. நான் இதுவரை பல ஆண்டுகள், தொடர்வண்டியிலேயே கழித்து இருக்கின்றேன். ஆனால், இந்த வண்டியில்தான், சிறுவணிகர்கள் அலையலையாகப் படையெடுத்து வந்துகொண்டே இருந்தனர். எண்ண முடியவில்லை; அத்தனை பேர் வந்தனர். காபி, டீ, பிரெட் ஆம்லெட், சிக்கன் லாலி பாப், தக்காளி சூப், குலாப் ஜாமூன், லஸ்ஸி, முள்ளங்கி, சாண்ட்விச், சிவப்புக் கீரை, கருந்திராட்சை, கடலை மிட்டாய், சாக்லேட்,சமோசா, வடா பாவ், ஊத்தப்பம், தோசை, லட்டு, கமலா ஆரஞ்ச், கடலை மிட்டாய், புத்தகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொம்மைகள், ஃபுரூட்டி, லஸ்ஸி என வந்து கொண்டே இருந்தது.

கடலை மிட்டாயை மராட்டிய மக்கள் லோனவலா சிக்கி (LONAVALA CHIKKI) என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் எப்படி கோவில்பட்டி கடலை மிட்டாய் பிரபலமோ அதை விட இரண்டு மடங்கு இந்த லோனவலா சிக்கி இங்கு பிரபலம். இதில் காஜு சிக்கி, பதாம் சிக்கி, கடலை சிக்கி, எல் சிக்கி, தேங்காய் சிக்கி என பலவகைகள் உண்டு. LONDON BBC தொலைக்காட்சி வரை இந்த சிக்கியின் பெருமை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வடஇந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் இதை வாங்கிச் செல்கிறார்கள்.

இட்லி-வடை, இந்தியாவின் பொது உணவு

வடை விற்பவர்கள், மெதுவடை என்றே, தெளிவாகக் கூவி விற்பதைக் கேட்டபோது, மராட்டியரின் வாயில் இருந்து வந்த தமிழோசை, கேட்க இனிமையாக இருந்தது. எப்படி வட இந்தியர்களின் சப்பாத்தி, புரோட்டா தமிழகத்துக்கு உள்ளே ஊடுருவியதோ, அதுபோல, நமது இட்லி, வடை, தோசை, சாம்பார், வட இந்தியாவுக்கு உள்ளே புகுந்து வெற்றிக்கொடி நாட்டி விட்டன. நான் பார்த்த வட இந்தியாவின் அனைத்து ஊர்களிலும், இப்போது கடைகளில் இட்லி, சாம்பார் கிடைக்கின்றது. தமிழ்நாட்டுத் தரத்தில் இல்லை என்றாலும், நன்றாகவே உள்ளது. அரிசி-உளுந்து கலவை, தகுந்த அளவில் அமைந்து விட்டால், மேலும் சிறப்பாக அமைந்து விடும். இட்லி, இப்போது, இந்தியாவின் பொது உணவுகளுள் ஒன்றாகி விட்டது.

சாண்ட்விச் 15 ரூபாய்தான். நல்ல தரமாக இருந்தது. நான்கு ரொட்டித் துண்டுகள், முட்டைக்கோஸ், தக்காளி, வெள்ளரித் துண்டுகள், அத்துடன் ஒரு தக்காளிச்சாறு தருகின்றார்கள். சென்னையில், குறைந்தது 30 ரூபாய் வாங்கி விடுவார்கள். முள்ளங்கி மற்றும் சிவப்புக்கீரையை வாங்கிய பெண்கள், வண்டிக்கு உள்ளேயே கட்டுகளைப் பிரித்து, பழுது நீக்கும் பணியைத் தொடங்கி விட்டார்கள். வீட்டுக்குச் சென்றதும் அப்படியே சமைத்து விடலாம்.

இரவு எட்டு மணிக்கு, பன்வல் தொடர்வண்டி நிலையத்துக்கு வந்து நின்றது வண்டி. இந்தியாவிலேயே இப்படி ஒரு தொடர்வண்டி நிலையத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை. பன்னாட்டு வானூர்தி நிலையத்தைப் போல இருக்கின்றது. உயர்ந்த மாடங்கள். இந்தியத் தலைநகர் தில்லி, மும்பை, சென்னை நகரங்களில்கூட, இப்படிப்பட்ட மாடங்கள் கிடையாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சென்னை மையத் தொடர்வண்டி நிலையத்திலும், மும்பை, கொல்கத்தாவிலும், பிரமாண்டமான இரும்பு மாடங்கள் உள்ளன. தில்லி தொடர்வண்டி நிலையத்தில், அப்படி ஒரு மாடம்கூடக் கிடையாது.

2012 ஜனவரி 31 ஆம் நாள் இரவு 9.30 மணிக்கு, மும்பை தாதர் தொடர்வண்டி நிலையத்தில் வந்து இறங்கினேன். தூத்துக்குடி ஜோயல் அவர்களுடைய நண்பர் மும்பை மாடசாமி, மும்பை கேப்டன் தமிழ்ச்செல்வன் அவர்களுடைய உதவியாளர் மாரி ஆகியோர் வந்து, காரில் அழைத்துச் சென்றனர். செம்பூரில் ஒரு விடுதியில் தங்க வைத்தனர்.

மும்பைக்கு வருவது மூன்றாவது முறை

தில்லியில் இரண்டு ஆண்டுகள் பணி ஆற்றினேன் (1987-89). அதற்குப்பிறகும், கடந்த இருபது ஆண்டுகளில், முப்பதுக்கும் மேற்பட்ட முறை தில்லிக்குச் சென்று வந்து உள்ளேன். ஆனால், மும்பையின் நான் கால் பதிப்பது, இது மூன்றாம் முறைதான். 2009 ஆம் ஆண்டு, சயான் கோலிவாடாவில், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து, கேப்டன் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த கூட்டத்தில், வைகோ சிறப்புரை ஆற்றினார்கள். அப்போது உடன் வந்தேன். பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு இருந்தார்கள். மராட்டிய மண்ணில் சாதனை படைத்த தமிழர் பொதுக்கூட்டம் அது.

அதன்பிறகு, ஐரோப்பிய நாடுகளின் பொது நாடாளுமன்றம் அமைந்து உள்ள பிரஸ்ஸல்ஸ் நகரில், ஈழத்தமிழர் பிரச்சினைக்காக நடைபெற்ற கூட்டத்தில், வைகோ அவர்கள் உரை ஆற்றச் சென்றபோது, பெல்ஜியம் நாட்டுக்கான நுழைவு உரிமை வாங்குவதற்காக, மும்பை வந்து இருந்தேன். இரண்டு முறையும், இரண்டு நாள்கள் மட்டுமே தங்கி இருந்தேன். வந்த வேலை சரியாக இருந்ததால், ஊர் சுற்றிப் பார்க்க முடியவில்லை.

இம்முறை, ஒரு வார காலப் பயணமாக வந்து உள்ளேன். 2013 ஆம் ஆண்டு, ஜனவரி 5 ஆம் நாள், மும்பை செம்பூரில் உள்ள ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில், 'ஈழத்தில் இனக்கொலை: இதயத்தில் இரத்தம்' என்ற ஒளிப்படக் குறுவட்டின் மராத்திய மொழிப் பதிப்பு வெளியீட்டு விழா நடைபெறுகின்றது. அதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காகவே முன்னதாக வந்தேன்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

இன்று இரவு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கின்றது. வழக்கமாக, நண்பர்களோடு சென்னை நகருக்கு உள்ளே, ஈருளை வண்டியில் சுற்றுவேன். கடந்த சில ஆண்டுகளாக, கடற்கரைக்குச் செல்லும் வழிகளை, பத்து மணிக்கு போக்குவரத்துக் காவல்துறையினர் அடைத்து விடுகின்றார்கள். ஊளையிட்டுக் கொண்டு வருகின்ற இளைஞர்கள் ஓட்டுகின்ற, சர்சர்ரெனப் பறந்து வருகின்ற வண்டிகளுக்கு ஊடாகப் போய் வருவதற்கு அச்சமாக உள்ளது. எங்களது குடியிருப்பிலேயே கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்; எனவே, புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இனி வெளியில் செல்வது இல்லை என்று தீர்மானித்து உள்ளேன்.

மும்பையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எங்கே சிறப்பாக இருக்கும்? என்று நண்பர் மாரியிடம் கேட்டேன். கேட்வே ஆஃப் இந்தியா பக்கம் போகலாம் என்றார்கள். ‘அங்கே போவோம்’ என்றேன்.

நான் பதினைந்து ஆண்டுகளாக இங்கே இருக்கின்றேன். இதைப்பற்றியெல்லாம் எண்ணிப் பார்த்ததே இல்லை. நீங்கள், 12 மணி நேரம் பயணித்து வந்து இருக்கின்றீர்கள். ஓய்வு எடுக்காமல் உடனே வெளியில் சுற்றக் கிளம்புகின்றீர்களே? என்றார் மாரி.

‘அடிக்கடி வர முடியாத இடங்களுக்கு வரும்போது, கிடைக்கின்ற நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; அதுதான் பயண எழுத்தாளருக்கு அழகு’ என்றேன்.

lonavala_chikki_640

வாடகைக் கார் ஒன்றைப் பிடித்துப் புறப்பட்டோம். வழியில் ஒரு இடத்தில் மாரியின் நண்பர் வந்து சேர்ந்து கொண்டார். 11.45 மணி அளவில், கேட்வே பகுதிக்குப் போய்ச் சேர்ந்தோம். சாரை சாரையாக மக்கள், இந்திய நுழைவாயிலை நோக்கி நடந்து கொண்டு இருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் நாங்களும் இணைந்து கொண்டோம்.

திடீரென எங்களுக்கு அருகில், சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய ஒரு கார் வந்து நின்றது. காவலர்கள் பரபரப்பானார்கள். மராட்டிய உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் வந்து இறங்கினார். செய்தியாளர்களும், தொலைக்காட்சி ஊடகங்களின் ஒளிப்பதிவாளர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

நாங்கள் அங்கிருந்து விலகி, நுழைவாயிலுக்கு அருகில் செல்லும்போது, காவலர்கள் தடுத்து நிறுத்தி, கூட்டத்தை இரண்டாகப் பிரித்தார்கள். பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு வருபவர்களுக்கு ஒரு வழி. தனியாக வந்து இருக்கின்ற இளைஞர்கள், ஆண்களுக்கு மட்டும் மற்றொரு வழி. இடையில் உயரமாக துணியைக் கட்டித் தடுத்து இருந்தார்கள். ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்தைப் பார்க்க முடியாது.

ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த பகுதிக்கு உள்ளே நுழைகின்ற இடத்தில் நெரிசல் ஏற்பட்டது. இளைஞர்கள் ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளினார்கள். ஒழுங்கு செய்வதற்காகக் காவலர்கள் தடிகளை ஓங்கிக் கொண்டு வந்தார்கள். சரி அடி விழப்போகிறது என்று கருதி, நாங்கள் மூவரும் கூட்டத்தை விட்டு விலகி, நடைமேடைப் பக்கம் ஓடித் தப்பித்து விட்டோம். ஆனால், காவலர்கள் தடிகளை ஓங்கினார்களே தவிர, ஒருவரையும் அடிக்கவில்லை. யாரேனும் ஓரிருவருக்கு அடி விழுந்தாலும், புத்தாண்டு நாளில் அடி வாங்கினோமே என்று வருந்துவார்களே? எனக் கருதித்தான், காவலர்கள் அடிக்கவில்லை போலும். சற்று நேரம் கழித்து நெரிசல் குறைந்தது. மீண்டும் வரிசையில் இணைந்து உள்ளே சென்றோம்.

12.00 மணி ஆனது. புத்தாண்டு பிறந்தது. எல்லோரும் அமைதியாக நின்று கொண்டு இருந்தார்கள். சாரைசாரையாக இளைஞர்கள் கூட்டம்; ஆனால், ஆரவாரமோ, கூச்சலோ எதுவும் இல்லை. முன்பு, கடலில் நின்று கொண்டு இருக்கின்ற கப்பல்களில் இருந்த வான‌வேடிக்கை காட்டுவது உண்டாம். எல்லோரும் வானத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்று கொண்டு இருந்தார்கள். மொத்தம் நான்கே நான்கு சிறிய வெடிகள் மட்டுமே வெடித்தன. அங்கே மேடையில் இருந்த ஒரு பேண்டு வாத்தியக் குழுவினர், சும்மா நின்று கொண்டு இருந்தனர்.

சென்னையில் அறிமுகம் இல்லாதவர்களையும் பார்த்து, “ஹேப்பி நியூ இயர்” என்று சொல்லுவார்கள், ஆரவாரிப்பார்கள், கூப்பாடு போடுவார்கள், இளைஞர்கள் ஈருளை வண்டிகளில் சர் சர்ரெனப் பறப்பார்கள். இவை, எதுவுமே மும்பையில் இல்லை. அருகில் நிற்பவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லாதது மட்டும் அல்ல, தங்கள் குடும்பத்தாருக்கே கூட வாழ்த்துச் சொல்லுகின்ற வழக்கம் கூட இல்லை. எல்லோரும் எதையாவது பேசிக்கொண்டே, சற்று நேரத்தில் அங்கிருந்து கலையத் தொடங்கினார். வந்த வழியே திரும்பிச் செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. தாஜ் ஓட்டலைச் சுற்றிக்கொண்டு, சற்றுத் தொலைவு நடந்துதான் திரும்ப முடிந்தது. சாரட் வண்டிகள், மின்விளக்கு அலங்காரத்துடன் நின்றுகொண்டு இருந்த சாரட் வண்டிகளில், குடும்பத்தோடு ஏறிச் சுற்றினார்கள். அயல்நாட்டவர்களும் அதை விரும்பினார்கள்.

மும்பை மாநகரில் வலுவாக உள்ள சிவசேனா, பாரதிய ஜனதா கட்சி ஆகியவை, ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைக் கடுமையாக எதிர்ப்பதால், பொது இடங்களில் கொண்டாட்டங்கள் குறைவாகவே இருக்கின்றன. ஆனால், பார்கள் நள்ளிரவிலும் திறந்து இருந்தன.

மும்பை 1.1.2013

இந்தியப் பேனா நண்பர் பேரவை என்ற அமைப்பை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்ற நண்பர் மும்பை கருண், விடுதிக்கு வந்தார். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, கடிதங்கள் மூலமாகத்தான் அயல்நாட்டவரைத் தொடர்பு கொள்ள முடியும். இப்போது, இணையதளங்கள், முகநூல், ஆர்குட் என எத்தனை சமூக வலைத்தளங்கள் உலகை இணைக்கின்றன. இன்றைய சூழலிலும், பழைய நண்பர்களை பேனா நண்பர்களை இப்போதும் ஒருங்கிணைத்து, ஆண்டுதோறும் ஒரு ஊரில் நட்புச் சங்கமம் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றார் கருண். அவர்கள் குடும்பத்தோடு சந்தித்து மகிழ்கின்றார்கள். மும்பையில் நடக்கின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்நிற்பவர் கருண்.

செம்பூரில் நான் தங்கி இருந்த விடுதிக்கு அருகில்தான் அவரது வீடு. இருவரும் சேர்ந்து, அண்டோப் ஹில் என்ற இடத்தில் உள்ள தமிழ்ச்செல்வன் அவர்களுடைய அலுவலகத்துக்குச் சென்றோம். அது அவருடைய மக்கள் தொடர்பு அலுவலகம் (ஜன சம்பர்க் காரியாலயம்) சுமார் மூன்று மணி நேரம் அந்த அலுவலகத்தில் இருந்தேன். அந்தப் பகுதி மக்கள், மராட்டியர்கள், இதர மாநிலத்தவர்கள் வந்து, தங்கள் குறைகளைச் சொல்கின்றார்கள். அலுவலகத்தில் இருக்கின்ற பெண் சுதா, அவர்களது குறைகளைக் கேட்டு, அது தொடர்பான அலுவலர்களுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றார். பெரிய பிரச்சினைகளை, தமிழ்ச்செல்வன் கையாள்கின்றார். ஒரு தமிழரின் அலுவலகத்தைத் தேடி இத்தனை வட இந்தியர்கள் வருவதைப் பார்த்தபோது, பெருமையாக இருந்தது.

கேப்டன் தமிழ்ச்செல்வன், மும்பை சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து புறப்படுகின்ற தொடர்வண்டிகளில் கொல்கத்தாவுக்கு சரக்குகளைக் கொண்டு செல்லுகின்ற தொழில் செய்து வருகின்றார். சொந்த ஊர், பட்டுக்குகோட்டை அருகே, பிலாவிடுதி. இவரது மூத்த மகள் திருமணம், டிசம்பர் கடைசி வாரத்தில்தான் நடைபெற்றது. டிசம்பர் 30 ஆம் நாள்,சொந்த கிராமத்தில் வரவேற்பு வைத்து இருந்தார். இவரது ஒரே மகன் 11 வயதில் இறந்து போனார். அவரது நினைவாக, ஆண்டுதோறும் ஜனவரி 2 ஆம் நாள், சொந்த கிராமத்தில் அன்னதானம் செய்து வருகின்றார். 2009 ஆம் ஆண்டு, சயான் கோலிவாடாவில், ஈழத்தமிழர் படுகொலை கண்டனப் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, வைகோவை உரை ஆற்றச் செய்தார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கு ஏற்ற அந்தக் கூட்டத்தில், 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடை அணிந்து இருந்தனர்.

கேப்டன் ஏற்பாட்டின் பேரில், நவபாரத் என்ற இந்தி மொழி நாளேட்டின் ஆசிரியர் பிரஜ்மோகன் பாண்டே, பிரஹார் என்ற மராத்தி மொழி நாளேட்டின் ஆசிரியர் மகேஷ் மாத்ரே ஆகியோர், ஜனவரி 5 ஆம் தேதி, மராட்டி மொழி புத்தகம், ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு விழாவுக்கு விழாவுக்கு வர ஒப்புக்கொண்டு இருந்தனர். சிறப்பு விருந்தினர்களைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுப்பதற்காக, கருண், மாரி ஆகியோருடன் காரில், அவர்களுடைய அலுவலகங்களுக்குச் சென்றேன்.

சொந்தக் கார் தேவையா?

மும்பை நகரத்தில், குறிப்பிட்ட உள்வட்டப் பகுதிகளில், கார்கள் மட்டுமே ஓடுகின்றன. தானிகள் (auto) நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ஓடுகின்ற தானிகளின் கட்டணத்தை விட, மும்பையில் மகிழுந்து (கார்) வாடகைக் கட்டணம் குறைவு. காய்கறி விற்கின்ற பெண்மணிகூட, காய்கறிக் கூடையோடு மகிழுந்துகளில் ஏறித்தான் பயணிக்கின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதைப் பார்த்தபிறகுதான், நான் துணிச்சலாகக் கார்களில் ஏறி, மும்பையை வலம் வந்தேன். இப்போது சொந்தமாகக் கார் வைத்துக் கொண்டு, ஓட்டுநரைத் தேடிப் பிடித்து, அவ்வப்போது பழுது பார்த்துச் செலவழித்து நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருப்பதைவிட, இரவு பகல் எந்நேரமும் தொலைபேசியில் அழைத்தால் உடனே வருகின்ற கார்களில் பயணிப்பதே சிறந்தது, சிக்கனமானது.

மும்பையில் கையைக் காட்டியவுடன் வண்டிகள் நிற்கின்றன; நீங்கள் ஏறி அமர்ந்துகொண்டு, எந்த இடத்துக்குப் போக வேண்டும் என்று சொல்கின்றீர்களோ, அந்த இடத்துக்கு ஓட்டுகின்றார்கள். பணி முடித்து வீட்டுக்குத் திரும்புகின்ற ஓட்டுநர்கள், இரவு 8.30 மணிக்கு மேல்தான், எந்த இடத்துக்குப் போக வேண்டும் என்று கேட்கின்றார்கள்; இல்லை, நான் வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லி விடுகிறார்கள்.

மும்பையில் பெரும்பாலும் ஃபியட் கார்கள்தாம். இப்போது, பல்வேறு வகையான மகிழுந்துகள் ஓடுகின்றன. மூன்று வகையான நிறங்களில் இயங்குகின்றன. ஒன்று, ஊருக்குள் மட்டும் ஓடும்; மற்றொரு வண்ணக் கார்கள், புறநகர்களுக்கும் செல்லும்; மற்றொரு வண்ணத்தில் ஓடுகின்ற கார்கள், 100 கிலோமீட்டர்களையும் தாண்டி ஓடும்; புணே வரையிலும் செல்லும்.

கட்டடக் கலைஞர்களே, மும்பையைப் பாருங்கள்

நவபாரத் அலுவலகம் சென்று, பிரஜ்மோகன் பாண்டேயைச் சந்தித்து அழைப்பு இதழைக் கொடுத்தோம். அங்கிருந்து, மகேஷ் மாத்ரேயின் இல்லம். அங்கே ஒரு அழைப்பிதழைக் கொடுத்து விட்டு, எல்பின்ஸ்டன் பகுதியில் உள்ள இந்தியா புல்ஸ் என்ற கட்டடத்தின் 9 ஆவது மாடியில் உள்ள, பிரஹார் மராத்தி மொழி நாளேட்டின் அலுவலகத்துக்குச் சென்றோம். பிரமாண்டமான கட்டடம். ஒருபுறம் சாய்கிறார்போல கட்டி இருக்கின்றார்கள்.

நாங்கள் கல்லூரியில் படித்தபோது, தொழிற்கூடப் பயணம் (Industrial tour) என்ற பெயரில், தாழையூத்தில் இயங்குகின்ற சிமெண்டு தொழிற்சாலைக்கும், அதே பகுதியில் இயங்குகின்ற கார்பைடு தொழிற்கூடத்துக்கும் அழைத்துச் சென்றார்கள். அதுபோல, இன்று கட்டுமானக் கல்வி கற்பவர்கள் அனைவரும், பெருநகரங்களுக்குச் சென்று கட்டடங்களைப் பார்க்க வேண்டும். அவற்றை எப்படிக் கட்டி இருக்கின்றார்கள் என ஆராய வேண்டும் என்றால், அவர்கள் பார்க்க வேண்டிய நகரம் மும்பை. சில இடங்களில் உள்ள கட்டடங்கள், 8 அடி 10 அடி அகலம் மட்டுமே உள்ளது போலத் தெரிகின்றது. ஆனால், 20 மாடி வரையிலும் கட்டி இருக்கின்றார்கள்.

இரவில் அறைக்குத் திரும்பினோம். கருண், மாரி ஆகியோரின் அழைப்பின்பேரில் மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல தோழர்கள், நான் தங்கி இருந்த விடுதிக்கு வந்து சந்தித்தனர். நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகளைப் பெற்றுச் சென்றனர். அவர்களுள் ஒருவர் நாடோடித் தமிழன். சஃபாரி அணிந்து இருந்தார். இரவு பத்து மணி வரையிலும் பேசி மகிழ்ந்து, பிறகு கலைந்து சென்றனர். நிகழ்ச்சி குறித்து, இந்தி, மராத்தி மொழிகளில் சுவரொட்டி அச்சிட வேண்டும் என்றனர். கடைசியில், துண்டு அறிக்கை அச்சிட்டால் போதும் எனத் தீர்மானித்தோம்.

(தொடரும்)

- அருணகிரி

Pin It