ஜனவரி மாத அதிகாலைக் குளிர் சில்லென்று இருந்தது. தமிழ்நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த மாதங்கள் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி. ஏ.சி.யோ, பேன் காற்றோ தேவைப்படாது. அதேநேரத்தில் டில்லி குளிர் போல் பெருங்கம்பளிகளின் துணையும் தேவைப்படாது. சாதாரண போர்வையை மேலே போர்த்திக் கொண்டாலே அவ்வளவு சுகமாக இருக்கும்.

குளிர்காலத்தின் ரசிகன் நான். குளிர்காலங்களில் விடிகாலை 4 மணிக்கு எழுந்து, கீற்று வேலைகளைப் பார்த்துவிட்டு, மீண்டும் ஒரு அரைமணி நேரம் குட்டித் தூக்கம் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

kallanai cauvery

(கல்லணையிலிருந்து காவிரியில் பாயும் நீர்)

13.1.2015 அதிகாலை நான்கு மணி. நான் மடிக்கணினியில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கட்டுரைகளை வலையேற்றம் செய்துகொண்டிருந்தேன். அருகில் என் வாழ்விணையர் ஹேமலதா தூங்கிக் கொண்டிருந்தார். பலரை தூக்கத்தில் பார்த்தால் சகிக்காது. ஒன்று அவர்கள் தூங்கும் விதம் அல்லது தூக்கத்தில் அவர்களது முகம் – ஏதோ ஒன்று பார்ப்பவர்களை துணுக்குற வைக்கும். ஆனால், ஹேமாவிற்கு தூக்கம் எப்போதும் கூடுதல் அழகைக் கொண்டு வந்து சேர்க்கும். அப்போது மலர்ந்த மலரைப் போல் தூக்கத்தில் அவரது முகம் அதிகப் பிரகாசத்துடன் இருக்கும். வேறுபக்கம் அவர் திரும்பிப் படுத்திருந்தாலும், நான் வேலை பார்க்கும்போது மெதுவாக அவரது தலையை என்பக்கம் திருப்பி வைத்துக் கொள்வேன். 7 மணிக்கு முன்னர் எழுந்திருக்க வேண்டிய அவசியம் அவருக்கு என்றாவது ஒரு நாள்தான் வாய்க்கும். அந்த நாள் இன்று.

கோவில்பட்டியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கும் திருச்சி வழியாக பலமுறை சென்றிருந்தாலும், இதுவரை கல்லணையைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. பொங்கல் திருவிழாவிற்கு ஊருக்குச் சென்று ஏழு, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த முறை கட்டாயம் செல்ல வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவெடுத்திருந்தோம். அப்படியே போகும் வழியில் கல்லணையைப் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். காலை 5.30 மணிக்கு கிளம்புவதாகத் திட்டம்.

ஹேமாவையும், அம்மாவையும் எழுப்பினேன். அவர்கள் எழுந்து தயாராகும் நேரத்தில் மீதமிருந்த கட்டுரைகளை வலையேற்றம் செய்தேன்.

பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து ஊருக்குச் செல்வது என்றால், தொடர்வண்டியில் பயணச்சீட்டை உறுதி செய்வது இமாலயப் பணி. முன்பதிவு தொடங்கும் நாளில், IRCTC இணையத்தில் நுழைந்து, 3 பேருக்கு பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிட்டால், அதை அந்த ஆண்டின் வெற்றிகரமான நாட்களில் ஒன்றாகக் கருதிக் கொள்ளலாம். ஒரு நிமிடம் தாமதித்தாலும், காத்திருப்போர் பட்டியலில் 1௦0வது இடத்திற்கு மேல் நமது பெயர் தள்ளப்படும். தெரிந்தவர்கள் மூலமாக E.Q. கொடுத்தாலும், நமது முன்பதிவு உறுதியாகுமா என்பது பயணப்படும் நாள் அன்றுதான் தெரியவரும். அது பெரிய தலைவலி.

சரி, பேருந்தில் பயணம் செய்யலாம் என்றால் அம்மாவிற்கு முதுகுவலிப் பிரச்சினை. படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்தில் பயணிக்கலாம் என்றால், கட்டணக் கொள்ளை பெரும் பிரச்சினை. சாதாரண நாட்களில் சென்னை – கோவில்பட்டி பயணக் கட்டணம் 700 ரூபாய் என்றால், பண்டிகை நாட்களில் அது 1200 அல்லது 1300 ஆக உயர்ந்து விடுகிறது. தமிழக அரசின் போக்குவரத்துத் துறை தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைப் பற்றி விசாரணை நடத்துவது, பண்டிகை நாட்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான். ஆனால் அதற்கு முன்னரே தனியார் பேருந்துகள் வெளிப்படையாக ஆன்லைன் வர்த்தகத்தில் அனைத்து பயணச்சீட்டுகளையும் கொள்ளை விலைக்கு விற்றுவிடுகின்றன. IRCTC இணையத்தில் முட்டி மோதி, தோல்வி கண்டவர்களும், வேறுவழியின்றி தனியார் பேருந்துகளை நாட வேண்டியிருக்கிறது.

karikala chozhan mandapam

கல்லணை ஓரத்தில் தமிழக அரசு கட்டியுள்ள கரிகாலச் சோழன் மணிமண்டபம்

படுக்கை வசதி கொண்ட பேருந்தில் மூன்று பேர் செல்வதாக இருந்தால், 3600 ரூபாய் அல்லது 3900 ரூபாய் பயணச்சீட்டுக்கு செலவழிக்க வேண்டும். வீட்டிலிருந்து பெருங்களத்தூர் செல்ல கால் டாக்ஸிக்கு ரூ.150. கோவில்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல ஆட்டோவுக்கு ரூ.50. தோராயமாக ரூ.4000 ஆகிவிடும். அதேநேரத்தில் காரில் செல்வதாக இருந்தால், டீசலுக்கு 1600, டோல்கேட்டுக்கு 600 என மொத்தம் ரூ.2200 தான் ஆகிறது. போக, வர எனப் பார்த்தால் ரூ.3600 மிச்சமாகிறது.

ஹேமாவின் தம்பி வேலை நிமித்தமாக அமெரிக்கா கிளம்பியபோது, திரும்பி வரும்வரை பயன்படுத்திக் கொள்ளச் சொல்லி, அவரது காரை (மாருதி ஸ்விப்ட்) எங்களது வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். தட்டுத் தடுமாறி கார் ஓட்ட ஆரம்பித்தது இந்த வண்டியில் தான். இருசக்கர வாகனத்தை மூலையில் நிறுத்திவிட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வண்டியை ஓட்டித் திரிந்ததில், இப்போது தேர்ந்த ஓட்டுனராக விட்டேன். தொடக்கத்தில் நான் கார் ஓட்டியபோது, ஹேமா என்னைவிட விழிப்பாக இருப்பார். பைக் அல்லது லாரி ஒன்று டிராக் மாறி உரசுவது போல் வந்தால், ‘அய்யோ வண்டி’ என்று அவர் என்று கத்தும் வேகத்தில், நான் உஷாராகிறேனோ இல்லையோ, அந்த வண்டிக்காரர்கள் உஷாராகி, சரியான டிராக்கிற்கு சென்றுவிடுவார்கள். இப்போது கொஞ்சம் நம்பிக்கை வரப்பெற்றவராக, என்னை நம்பி கொஞ்சம் நேரம் தூங்கிறார். I.T. வேலை போய்விட்டால், கால்டாக்ஸி டிரைவராகி விடலாம் என்ற அளவிற்கு எனக்கும் நம்பிக்கை வந்துவிட்டது.

காலையில் 4 அல்லது 5 மணிக்குக் கிளம்பினால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிவிடலாம் என்று பெரும்பாலோனோர் சொல்வார்கள். ஆனால், என்றைக்கு கிளம்புகிறோம் என்பதைப் பொருத்தது அது. நாளைக்கு தைப்பொங்கல், இன்றைக்குக் கிளம்புகிறோம் என்றால், நிச்சயம் போக்குவரத்து நெரிசல் இருக்கும். நம்மைப்போலவே அதிகாலையில் கிளம்பியவர்கள் எல்லாம் GST சாலையில் அவர்களுக்கான இடத்தைப் பிடித்திருப்பார்கள். செங்கல்பட்டு தாண்டும்வரை மெதுவாகத்தான் செல்ல வேண்டி வரும். அதன்பின்பு ஓரளவு வேகமாக செல்ல முடிந்தாலும், ஒவ்வொரு டோல்கேட்டிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். 15 நிமிடம் வரை டோல்கேட்டில் காத்திருந்த அனுபவமும் உண்டு. சென்னையில் இருக்கும் கார்கள் எல்லாம் சொந்த ஊர்களுக்கு கிளம்பியதுபோல் இருக்கும். ஒவ்வொரு வண்டியின் பின்புறத்திலும் போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ் பைகள் பிதுங்கி வழியும். குழந்தைகள் பின் இருக்கையிலும், மனைவியர் முன் இருக்கையிலும் தூங்கி வழிய, கணவர்கள் கண் துஞ்சாது ஸ்டீரியரிங்கை பிடித்து இருப்பார்கள். எல்லா கணவர்களும் ஒருவகையில் சம்பளமில்லாத ஓட்டுனர்கள்தானே!

எங்கள் வீட்டிலிருந்து திண்டிவனம் 90 கி.மீ.தான் என்றாலும், பண்டிகை நாட்களில் குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஆகும்.

இந்த தடவை பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கிளம்பியதால், அந்தளவிற்கு போக்குவரத்து நெரிசல் இல்லை. டோல்கேட்டிலும் எங்களுக்கு முன்னால் ஒரு கார்தான் இருந்தது.

kallanai kollidam

கல்லணையிலிருந்து கொள்ளிடத்திற்கு திறந்துவிடப்படும் நீர்

தேவாமிர்தமே வழியில் கிடைத்தாலும், நான் வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிப்பவர்கள் நம்நாட்டில் அதிகம். காலை, மதியம் இரண்டு வேளைக்கும் சமைத்து, பார்சல் கட்டிக் கொண்டு, டோல்கேட் தாண்டி, வண்டியை நிறுத்தி சாப்பிடுபவர்களை நெடுஞ்சாலைகளில் அதிகம் பார்க்கலாம். நாங்கள் கொஞ்சம் வேறுமாதிரி. போகிற வழியில் எந்தெந்த ஊர்களில் என்னென்ன ஸ்பெஷல் என்பதைத் தெரிந்து கொண்டு, அதைச் சாப்பிடுவோம். எப்போதும் பார்சல் கட்டியது கிடையாது. பெங்களூர் சாலையில் போகிறோம் என்றால் நிச்சயம் ஸ்டார் பிரியாணி சாப்பிடாமல் வரமாட்டோம். அதேபோல், கோவில்பட்டி போகும்போது, திண்டிவனம் ஆர்யாஸ் ஹோட்டலில் மொய் வைக்காமல் போனதில்லை. திண்டிவனம் பைபாஸ் ரோடு தொடங்கும் இடத்தில் வலப்புறம் வசந்தபவன், ஆர்யாஸ் ஹோட்டல்கள் அடுத்தடுத்து இருக்கும். இதில் ஆர்யாஸ் ஹோட்டல் எங்களது பேவரிட் ஹோட்டல்.

இட்லி, பொங்கல், தோசை, பூரி என காலை சிற்றுண்டி எது சாப்பிட்டாலும், மிகவும் ருசியாக இருக்கும். நான்கு வகை சட்டினி, இட்டிலிப் பொடிக் கிண்ணங்கள், சின்ன சாம்பார் வாளி ஆகியவற்றை நம் மேஜையிலேயே வைத்து விடுவார்கள். நாம் வேண்டிய அளவுக்குப் போட்டுக் கொள்ளலாம். பொங்கல், தோசை, பூரி என சிற்றுண்டி, பேருண்டி ஆகும்வரை ஒரு வெட்டு வெட்டுவது என் பழக்கம். கார்கள் நிறுத்த விசாலமான பார்க்கிங், சுவையான உணவு, உள்ளேயே ஒரு புத்தகக் கடை, ஸ்வீட் ஸ்டால், சுத்தமான கழிப்பறைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி என அனைத்து வசதிகளோடும் இருப்பதால், சென்னையில் கிளம்பும் எங்கள் வண்டி இங்கே நிற்காமல் போகாது.

காலை சாப்பாடை முடித்துவிட்டு, மீண்டும் வட்டக்கட்டையைப் பிடித்தால் – அதான் ஸ்டீரியங் – அப்போதுதான் கிளம்பியதுபோல் ஒரு புத்துணர்வு இருக்கும். 1990 – 2000 வரையிலான பாடல்களைக் கேட்டபடி, வண்டியை 90 கி.மீ. வேகத்திற்கு விரட்டினேன். உளுந்தூர்பேட்டை தாண்டிவிட்டால், 100 கி.மீ. வேகத்திற்கு மேல் வண்டியை ஓட்ட முடியும். அதற்கு முன்பு கிழக்கு, மேற்கு செல்ல வேண்டிய வண்டிகள் எல்லாம் தங்கள் வழியில் பிரிந்துவிடுவதால், உளுந்தூர்பேட்டைக்குப் பின்பு பெரும்பாலும் தெற்கு நோக்கிய வண்டிகள் மட்டும்தான் இருக்கும். அதுவரை வண்டி 70 – 90க்கு இடையிலான வேகத்தில் வண்டி ஊசலாடும்.

உளுந்தூர்பேட்டை தாண்டியபின்பு 120 கி.மீ. வேகத்தில் போகலாம் என்றாலும், அவ்வாறு செல்வது மைலேஜுக்கு நல்லதல்ல. சீராக 90 அல்லது 100 கி.மீ. வேகத்தில் சென்றால், தாராளமாக ஸ்விப்ட் வண்டியில் ஒரு லிட்டருக்கு 22 கி.மீ. மைலேஜ் கிடைக்கும். விரட்டிச் சென்று, ஊரில் கொடி நட்டுவதற்கு நமக்கு எந்தக் கோட்டையும் இல்லாததால், 90லேயே போய்க் கொண்டிருந்தேன்.

தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிக்கு முன்பாக கல்லணை செல்லும் பாதை அறிவிப்புப் பலகையுடன் இருக்கிறது இருக்கிறது. கல்லணை 12 கி.மீ. அதிகம் போக்குவரத்து இல்லாத பாதை அது. வலப்புறம் காவிரி ஆறு நம்முடன் இணையாகப் பாய்ந்து வருகிறது. இறங்கி, காவிரியில் கால் நனைக்கலாம் என்றால், கார் நிப்பாட்டுவதற்கு எங்கேயும் இடமில்லை. சுற்றிலும் விவசாய நிலம் என்பதால், சாலையை அடுத்து உடனே வயற்காடும், வாழைத்தோட்டமும் தொடங்கிவிடுகிறது. ஜனவரி மாதம் என்பதால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடாவிட்டாலும், கணிசமாக சென்று கொண்டிருந்தது.

‘ஒரு காலத்தில் இந்தப் பாதை ராஜபாட்டையாக இருந்திருக்கலாம். கரிகாலனின் தேர் இதே பாதையில் கூட சென்றிருக்கலாம். சாலை ஒரங்களில் தென்படும் கிராமங்களுக்கு 2000 ஆண்டு வரலாறு இருக்கலாம்’ என்ற எண்ணங்களை மனதில் ஓட்டியபடி, வண்டியை ஓட்டினேன். சில வீடுகளின் வாசற்படிகள் சாலையில் இருக்கின்றன. வீட்டில் இருந்து எடுத்து வைக்கும் முதல் அடியே சாலையில்தான் இருக்கும். தார் சாலை என்றாலும், அதிகளவில் வண்டிகள் செல்வதில்லை என்பதால், பெண்கள் சாலையோரங்களில் உட்கார்ந்து இருந்தார்கள்.

karikala chozhan statue11 மணிக்கு கல்லணை போய்ச் சேர்ந்தோம். மிகப்பெரிய அணைகளைக் கற்பனை செய்து கொண்டு நீங்கள் செல்வீர்கள் ஆனால், கல்லணையைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். முல்லைப் பெரியாறு அணை, பாபநாசம் காரையார் அணை, மேட்டூர் அணை ஆகியவற்றுடன் இதனை ஒப்பிடமுடியாது. ஏனெனில் கல்லணை என்பதை அணை அல்ல, அணைக்கட்டு.

காவிரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் பொருட்டு கரிகாலச் சோழன் கட்டியதே இந்த அணைக்கட்டு. முக்கொம்பில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிகிறது. ஒன்று ‘கொள்ளிடம்’ எனவும், மற்றொன்று முந்தைய ‘காவிரி’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. முக்கொம்பில் கொள்ளிட ஆற்றின் நிலமட்டம், காவிரியின் நிலமட்டத்தை விட 6 அடி உயரம் அதிகமாகும். இதனால் பெரும்பாலான தண்ணீர் காவிரியாற்றில்தான் செல்லும். முக்கொம்பில் பிரிந்த காவிரி கல்லணைப் பகுதியை வந்தடைகிறது. இப்பகுதியில் காவிரியாற்றின் நிலமட்டம், கொள்ளிடத்தின் நிலமட்டத்தை விட உயரம் அதிகமாக இருப்பதால், அடிக்கடி காவிரியின் கரை உடைப்பட்டு, நீர் எல்லாம் கொள்ளிடத்தில் கலந்தது.

2100 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், பெரும் வெள்ள சேதமும் ஏற்பட்டது; காவிரியை நம்பியிருந்த விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டன. இதனைத் தடுக்க எண்ணிய கரிகாலச் சோழன், காவிரியில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் இடத்தில் ஓர் அணைக்கட்டை ஏற்படுத்தினான். இந்த அணைக்கட்டின் மூலம் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது கணிசமான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றிற்கு திருப்பி விடப்பட்டு, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் உடைப்பு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் ஒரு மடைமாற்றி.

முதலாம் கரிகாலச் சோழனின் பேரன் இரண்டாம் கரிகாலச் சோழன் தான் இந்த அணைக்கட்டை கட்டினான். இவனது காலம் கி.மு.2ம் நூற்றாண்டு என்று சிலரும், கி.பி. 2ம் நூற்றாண்டு என்று சிலரும் கூறுகின்றனர். கி.மு. 2ம் நூற்றாண்டு என்பது உறுதியானால், உலகின் பழமையான அணைக்கட்டுமானங்களில் கல்லணை இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். முதல் இடத்தில் சிரியாவில் ‘Orontes’ நதிக்கு குறுக்கே கட்டப்பட்ட ‘Lake Homs’  (கி.மு.1319-1304) அணை விளங்குகிறது. கி.பி.2ம் நூற்றாண்டு என்றால், உலகின் பழமையான அணைக்கட்டுமானங்களில் கல்லணை நான்காம் இடத்தைப் பிடிக்கிறது.

எப்போதும் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் காவிரியில் எப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கட்டு கட்ட முடிந்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? கடற்கரையில் அலையடிக்கும்போது, நம் கால்களின் கீழே உள்ள மணல் நழுவி, கால்கள் புதைகிறது அல்லவா? இதுதான் கல்லணையின் தொழில்நுட்பமாக மாறியது. ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் பெரிய பாறைகளைப் போட்டார்கள். அவை ஆற்றின் தரைப்பகுதியை அடைந்தன. அங்கு மணல்தானே இருக்கிறது. அந்த மணல் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட, கடற்கரையில் நம் கால்கள் புதைவதைப் போல், பாறைகள் புதையத் தொடங்கியன. அவைகளின் மீது தண்ணீரில் கரையாத களிமண் பூச்சு பூசப்பட்டு, அவற்றின் மீது மீண்டும் பாறைகள் போடப்பட்டன. மேலே உள்ள பாறைகளின் அழுத்தம், மணல் அரிப்பு இவைகளின் காரணமாக பாறைகள் மேலும் கீழே இறங்கின. தொடர்ந்து களிமண் பூசி, பாறைகளைப் போடப் போட, முதலில் போடப்பட்ட பாறைகள் மணலற்ற கடினமான தரைப்பகுதியை அடைந்தன. இவ்வாறு ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட பாறைகளும், அவற்றிற்கிடையேயான களிமண் பூச்சும் தான் அணைக்கட்டாக உருவாகியது.

கல்லணையின் தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேய கட்டுமானப் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் (கி.பி.1803 – 1899), கல்லணையை ‘GRAND ANAICUT’என்று அழைத்தார். இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கோதவரி ஆற்றுக்கு குறுக்கே தௌலீஸ்வரம் என்ற அணைக்கட்டைக் (கி.பி. 1852) கட்டினார்.

கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடி. இது திருச்சியிலிருந்து 18.6 கி.மீ. தூரத்திலும், திருவரங்கத்தில் இருந்து 16.6 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

பழைமையான வரலாற்றுச் சின்னம் என்ற எண்ணத்தில் கல்லணையைப் பார்க்கச் சென்றால், ஏமாற்றமே மிஞ்சும். உலகம் முழுவதும் பழங்கால வரலாற்றுச் சின்னங்களை அதன் பழைமை மாறாமல் பாதுகாப்பதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள்? கல்லணையின் மேற்புறத்தில் பாலம் அமைத்து, வாகனங்கள் செல்லும் வகையில் சாலை போட்டுள்ளார்கள். கரிகாலனின் கல்லணைக்கு மாறாக, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைத்த பாலமும், அதற்கு அவர்கள் அவர்கள் பூசிய வண்ணமயமான பூச்சும்தான் பல்லை இளிக்கிறது. நல்லவேளை, அதற்கு ஓரத்தில் கடைகளைக் கட்டி, வாடகைக்கு விடாமல் விட்டு வைத்துள்ளார்கள் என்ற அளவில் மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.

கல்லணைக்கு அருகிலேயே கரிகாலச் சோழனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது. யானை மேல் கரிகாலச் சோழன் அமர்ந்திருப்பது போன்ற பிரமாண்டமான வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12, 2014 அன்று, அன்றைய தமிழக முதல்வரும், இன்றைய ‘மக்களின் முதல்வரு’மான ஜெயலலிதா, வழக்கம்போல் சென்னையிலிருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் முறையில் இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்துள்ளார். அன்றைய மன்னருக்கு இன்றைய அரசி தந்த மரியாதை அவ்வளவுதான். மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் அரசியாரின் பெயர், கல்லணை அளவுக்குப் பெரியதாக இல்லை என்பது கொஞ்சம் நிம்மதியை அளித்தது.

அதிமுக ஆட்சியே தொடர்ந்து கொண்டிருப்பதால், மணிமண்டபம் (மட்டும்) சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சிறுநீர் கழிக்க கழிப்பறையைத் தேடிய எனது அம்மாவும், ஹேமாவும் போன வேகத்தில் திரும்பிவந்தார்கள். தான் பார்த்த கழிப்பறைகளிலேயே மிக மோசமான கழிப்பறை இதுதான் என்று ஹேமா கூறினார். இதைக் கட்டியது யார் என்று கல்வெட்டைத் தேடினேன்; கிடைக்கவில்லை.

கல்லணைக்கு செல்பவர்கள்ள், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற ஏதேனும் பெட்ரோல் பங்குகளை தங்களது இயற்கை அழைப்புகளுக்கு நாடுவது நல்லது. அதேபோல், உணவையும் கல்லணைக்கு முன்போ, பின்போ திட்டுமிட்டுக் கொள்ளுங்கள். கல்லணைப் பகுதியில் உணவு விடுதிகள் எதுவும் இல்லை.

உணவைப் பொட்டலம் கட்டிக் கொண்டு, எந்த சுற்றுலாப் பகுதிக்கும் – குறிப்பாக பழங்காலச் சின்னங்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்லாதீர்கள். முதல் காரணம் பிளாஸ்டிக் குப்பைகளைத் தவிர்க்கலாம்; இரண்டாவது மீதமாகும் உணவை அதே பகுதியில் கொட்டுவது. இதனால் அந்தப் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

கல்லணையிலிருந்து காவிரிக்குப் பாயும் தண்ணீரை கரையோரமாக நின்று ரசிக்கலாம், நிழற்படம் எடுக்கலாம் என்று பக்கவாட்டில் இறங்கினேன். தயவு செய்து நீங்கள் யாரும் இறங்கி விடாதீர்கள். கரையோரங்களில் எல்லாம் ‘நம்பர் 2’ போகும் நமது மரபின் தொடர்ச்சி இங்கேயும் இருந்தது. இது தமிழர்களின் தேசிய குணமா, இல்லை திராவிடர்களின் தேசிய குணமா அல்லது இந்தியர்களின் தேசிய குணமா என்பதை ‘ஆய்’ந்த அறிஞர்கள்தான் கூறவேண்டும். கடந்த வாரம் புழல் ஏரியின் கரையோரப் பகுதிக்கு சென்றபோதும், இதே அனுபவம்தான் கிட்டியது. இத்தனைக்கும் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில் ஒன்று. வாழ்க நமது நாகரிகம்!

kallanai cauvery

காவிரிக் கரையிலிருந்து கல்லணையின் தோற்றம்

அணைக்கட்டிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைவாகவும், காவிரி ஆற்றில் ஓரளவு அதிகமாகவும் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு மணிநேரம் அங்கு இருந்திருப்போம். கரிகாலனின் கல்லணையைத் தேடிச் சென்றவனுக்கு, கல்லணையை மூடி, தமிழக அரசு கட்டியிருந்த மேம்பாலம் ஏமாற்றமே அளித்தது. கல்லணையின் சுவர்களில் சிமெண்ட் பூசியிருக்கிறார்கள். அதன்மேல் வண்ணம் அடித்து வைத்திருக்கிறார்கள். நாளை கல்லணையின் நீடித்த வாழ்வுக்கு காரணம் நாங்கள்தான் காரணம் என்று சங்கர் சிமெண்ட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸோ உரிமை கோரினாலும், ஆச்சரியப்படுவதற்கு ஓன்றுமில்லை.

பரமாரிப்பது என்பதில் அதன் பழைமை மாறாமல் பாதுகாப்பது என்பதும் அடங்கும். ஓவியர் மருது தனது ஜெர்மனி பயண அனுபவம் குறித்து சொன்ன ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. ஜெர்மனியில் உள்ள முன்ஸ்டர் நகர மியூசியம் ஒன்றில் அந்நகரைப் பற்றிய 400 ஆண்டு கால பழைய ஓவியம் ஒன்றைப் பார்க்கிறார். பார்த்துவிட்டு வெளியே வந்தால், ஓவியத்தில் இருப்பது போன்றே நகரம் இன்றைக்கும் இருக்கிறதாம். அந்த ஓவியத்தில் இருப்பது போலவே நகரை இன்றும் பராமரிக்கிறார்கள். அந்நகரில் இரண்டு முனிசிபாலிட்டி இருக்கிறது. பழைய நகரைப் பராமரிப்பதற்கு old municipality, புதிய நகரைப் பராமரிக்க new municipality. பழைய நகரில் இருப்பவர்கள் தனது வீட்டின் வெளிப்புறத்தை கொஞ்சம்கூட மாற்றமாட்டார்களாம். தாழ்ப்பாள் பழுதானால் கூட, அதே வடிவத்தில், அதே வண்ணத்தில்தான் புதிய தாழ்ப்பாளைப் பொருத்துவார்களாம்.

ஆனால், நாம் பழங்காலக் கோயில்களுக்கு குடமுழக்கு செய்கிறோம் என்று பச்சை, சிவப்பு, நீலம் என வண்ணங்களை அடித்து, அதன் பழைமை சுவடே தெரியாமல் மாற்றிவிடுகிறோம். பழைமை கெடாமல் எந்த ஓர் இடத்தையும் பராமரிப்பது குறித்த பொறுப்புணர்வு அரசுக்கும், பொதுமக்களாகிய நமக்கும் இல்லை. இந்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு சில இடங்கள் மட்டும் தப்பித்திருக்கின்றன. அரசுகளின் வரலாற்றுப் பொறுப்புணர்வைத் திட்டியபடி, காரை ஓட்டத் தொடங்கினேன்.

கல்லணையிலிருந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை இருந்ததால், திருச்சியைத் தாண்டி, 15 நிமிட பயண தூரத்தில் ஒரு மோட்டலில் வண்டியை நிறுத்தினேன். மோட்டல் என்றால் பேருந்துகள் நிறுத்தும் வகையிலானது அல்ல; இது கார்களுக்கானது. அதனால் கூட்டம் அதிகமில்லை. பாலாஜி ஆர்யாஸ் என்று பெயர் இருந்தது. மதுரை புகழ் ஜிகர்தண்டா குடித்துவிட்டு, மணப்பாறை முறுக்கு ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டோம். கார்ப் பயணத்தின்போது கொறிப்பதற்கு ஏதாவது வைத்துக் கொள்வது எங்கள் வழக்கம்.

திருச்சியைத் தாண்டிவிட்டால், தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் அதிகமாக வாகனங்களைக் காண முடியாது. சாலை பெரும்பாலும் காலியாக இருக்கும். ஹேமாவிடம் ‘வட்டக்கட்டை’யைக் கொடுத்து விட்டு, மணப்பாறை முறுக்கை கடித்தபடி, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். மதுரை டோல்கேட் வரை ஹேமா ஓட்டினார். அதன்பின்பு மீண்டும் ஓட்டுனர் இருக்கைக்கு வந்தேன்.

kallanai water

கல்லணையில் தேங்கியிருக்கும் காவிரி

சென்னையிலிருந்து கோவில்பட்டி செல்லும்வரை தோராயமாக 10 இடங்களில் ‘டோல்கேட்’ பகற்கொள்ளைக்கு ஆளாகிறோம். அதிலும் மதுரைப் பகுதியில் தான் மிகவும் அதிகமாக இருக்கிறது. மேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை டோல்கேட், பிறகு மதுரை மாநகராட்சியின் டோல்கேட், அதற்கு அடுத்து திருமங்கலம் முன்பாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் – என ஏறக்குறைய 45 - 50 கி.மீ. தூரத்தில் 3 டோல்கேட்களில் ரூ.160 கட்டுகிறோம். என்னால் முடிந்த அளவு, திருமங்கலம் டோல்கேட்டில் ‘இப்படி கொள்ளை அடிக்காதீங்க’ என்று திட்டிவிட்டு வந்தேன். நெடுஞ்சாலைகளில் நடக்கும் இந்த பகற்கொள்ளைகளை எப்போது தடுக்கப் போகிறோம்? டோல்கேட்களை அடித்து நொறுக்கும் போராட்டத்தை எந்தக் கட்சி/இயக்கம் வலுவாக முன்னெடுக்கப் போகிறது?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் நடைபெற்ற ஈழ ஆதரவு மாநாட்டிற்கு சென்னையிலிருந்து 4 பேருந்துகளில் கிளம்பிய தோழர்கள் வழி நெடுகிலும் டோல்கேட்களில் ‘கட்டணம் செலுத்த மாட்டோம்’ என்று பிரச்சினை செய்திருக்கிறார்கள். கட்டணம் வசூல் செய்யும் நான்கு முனைகளிலும் நான்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, ‘உன்னால் ஆனதைப் பார்’ என்று நின்றிருக்கிறார்கள். பின்னால் நிற்கும் வாகனங்களின் நெரிசல் அதிகமாகவே, எப்படியோ போங்கள் என்று தோழர்களின் பேருந்துகளை அனுப்பியிருக்கிறார்கள். கூட்டமாகச் செல்லும்போது இதுபோன்ற எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம். தனியாளாகச் செல்லும்போது, குறைந்தபட்சம் நமது அதிருப்தியையாவது பதிவு செய்யுங்கள். எந்த எதிர்ப்பும், அதிருப்தியும் இல்லாமல் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கொள்ளையை நாம் அனுமதிப்பது? மக்களிடம் எதிர்ப்பு இருக்கிறது என்பதையாவது அரசுகளுக்கு நாம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

மாலை 4 மணியளவில் கோவில்பட்டி போய்ச் சேர்ந்தோம். அடுத்த பத்து நிமிடத்தில் ‘கன்னி’ சாமியிடம் இருந்து அழைப்பு வந்தது. சபரிமலை பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேச வேண்டியிருந்தது. ஆம்… பொங்கலன்று சபரிமலைக்கு செல்வதாகத் திட்டம். ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்த, ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலைப் பயணம் குறித்து அடுத்த கட்டுரையில்…

தரவுகள்:

http://www.water-technology.net/features/feature-the-worlds-oldest-dams-still-in-use/

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22047:2012-11-22-12-16-06&catid=25:tamilnadu&Itemid=137

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It