இயக்குனர் சஞ்சய் அவர்களின் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த ஜகாட் திரைப்படம் மலேசியாவின் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்ற முதல் மலேசியத் தமிழ் சினிமா என்றும் அடையாளப்படுத்தலாம். ஜகாட் திரைப்படமாகுவதற்கு முன் சஞ்சய் அவர்களால் இயக்கப்பட்ட குறும்படம் என்றே அவருடைய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் பன்மொழி கலைஞர்களின் கவனத்தை ஈர்த்த நவீன சினிமாவின் துவக்கம் ஜகாட். மலேசியத் தமிழ் சினிமாவின் அடுத்தக் கட்டப் போக்கை ஜகாட்டிற்கு முன் ஜகாட்டிற்குப் பின் என்றே விவாதிக்கும் அளவில் இத்திரைப்படம் மலேசிய கலை மண்ணில் நம்பிக்கை தடங்களை உருவாக்கியுள்ளது.

jagat 1ஜகாட் திரைப்படம் 2016ஆம் ஆண்டில் சிறந்த மலேசியத் திரைப்படத்திற்கான விருதை 28ஆம் மலேசியத் திரைப்பட விருது விழாவில் பல சர்ச்சைகளையும் போராட்டங்களையும் தாண்டித்தான் பெற்றது. தொடக்கத்தில் ஆறு பொதுப்பிரிவிலும் மூன்று மலாய் அல்லாத பிரிவிலும் ஜககாத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதாவது சிறந்த சினிமா, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளுக்கு மட்டும் மலாய், மலாய் அல்லாத என்கிற பிரிவு நடைமுறையில் இருந்ததை ஜகாட் திரைப்படக் குழு முற்றிலுமாக எதிர்வினையாற்றியிருந்தது. மலாய் அல்லாத என்கிற பிரிவை நீக்கிவிட்டு அனைத்துப் படைப்புகளையும் மலேசியத் திரைப்படம் என்கிற பிரிவுக்குக் கீழ் மதிப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜகாட் இயக்குனர் சஞ்சய், தயாரிப்பாளர் சிவா பெரியண்ணன் போன்றவர்கள் முன்வைத்தனர். மலேசியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் (PFM) மலேசியத் திரைப்பட முன்னேற்ற நிறுவனமும் (FINAS) இணைந்து நடத்திக் கொண்டிருக்கும் இவ்விருது விழாவில் ஜகாட் திரைப்படக் குழு முன்வைத்த எதிர்வினை உள்நாட்டுக் கலைஞர்கள் பலரின் கவனத்தையும் பெற்றது. அதுவரை மலேசியத் திரைப்பட விழாவில் விருது பெற்ற சில பிரபல மலாய் கலைஞர்கள் அவர்களின் விருதுகளை மீண்டும் திருப்பிக் கொடுத்துத் தங்களின் எதிர்வினைகளைப் பதிவு செய்தனர்.

எதிர்வினைகளுக்குப் பின் மலேசியத் திரைப்பட விருது விழாவில் மலாய் அல்லாத என்கிற பிரிவுகள் நீக்கப்பட்டு மலேசியத் திரைப்படம் என்கிற பொதுமைக்குள் அனைத்து விருதுகள் 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அவ்வகையில் ஜகாட் என்கிற மலேசியத் திரைப்படம் சிறந்த மலேசியத் திரைப்படம், சிறந்த மலேசியத் திரைப்பட இயக்குனர் என்கிற இரு பிரிவில் வெற்றிப் பெற்றன.

சமூக அடையாளம்

கலை என்பது வாழும் மக்களின் அடையாளங்களின் பிரதிபலிப்பாக இருத்தல் வேண்டும். அவ்வகையில் ஜகாட் திரைப்படம் 1990களில் இந்திய சமூகம் வாழ்ந்த வாழ்க்கையையும் அதன் வழியாக இருந்த அடையாளங்களையும் மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளது. அப்போய் என்கிற சிறுவன் ஜகாட் திரைப்படத்தின் பிரதான கதைமாந்தராகப் படம் முழுவதும் பயணம் செய்கிறான். அவன் பயிலும் பள்ளிக்கூடமும் அதன் சார்ந்த சில நடைமுறை உண்மைகளும், அப்போய் சிற்றப்பாவின் குண்டர் கும்பல் ஈடுபாடும் அதன் சார்ந்த மனிதர்களும் சிக்கல்களும், அப்போயின் அப்பாவும் அவருடைய வேலை சார்ந்த சிக்கல்களும் என்று ஜகாட் முழுவதும் இந்திய மக்களின் வாழ்க்கை சிக்கல்கள் அப்பட்டமாகக் காட்டப்பட்டிருப்பதே இப்படத்தின் பலமாகும். எந்த ஜோடனைகளும் மிகைகளும் இன்றி ஒரு வாழ்க்கையைப் பதிவு செய்து பார்க்கும் நேர்மையை ஜகாட் திரைப்படம் தனது ஆதாரமாகக் கொண்டிருந்தது.

கலை, சினிமா என்பது தாம் எடுத்துக்கொண்டு மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் நிலத்தையும் மொழியையும் பொய்யின்றி காட்டும் வல்லமை பெற்றிருக்க வேண்டும். அத்தகைய சினிமாவே வாழ்வின் மீது தீவிரமான பார்வையையும் மதிப்படுகளைக் கொண்டு வெளிப்படக்கூடிய கலை சாத்தியங்களை உருவாக்கும். ஜகாட் சினிமாவில் காட்டப்படும் மக்களும் அவர்களின் சமூக அடையாளங்களும் மொழியும் என அனைத்தும் நம்பகத்தன்மையோடு படைக்கப்பட்டுள்ளன.

சமூக சிக்கல்கள்

அடுத்ததாக, சமூக அடையாளங்களை மிகவும் பொருத்தமான உண்மைத்தன்மையுடன் காட்டும் ஜகாட் பின்னர் எடுத்தாளும் மலேசிய இந்திய மக்களின் சமூகப் பிரச்சனைகள் சட்டென்று மனத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது. இது நம் பிரச்சனைகள் என்று பார்வையாளனைச் சினிமாவோடு ஒன்றிவிடச் செய்கிறது. வரலாற்றில் நாம் மீள்பரிசோதனை செய்துகொள்ள மறந்த தவறிய பல தருணங்களை ஜகாட் முன்னெடுத்து வைக்கிறது.

கலை என்கிற வெளிச்சம் பாயும் ஒரு நிலத்தின் மனிதர்களின் சமூகம் சார்ந்த அடையாளங்களை முதலில் உண்மைத் தன்மையுடன் காட்டுவதன் மூலமாகவே அக்கலையானது அம்மக்களுடைய பிரச்சனைகளைப் பேசும்போது மேலும் ஆழமாகச் சென்றுசேர படைப்பில் ஒரு நெகிழ்வுத்தன்மையை உருவாக்குகிறது. அவ்வகையிலும் ஜகாட் திரைப்படம் பேசும் சமூக சிக்கல்கள் இந்த மண்ணில் நிலத்துக்கு நிலம் புலம்பெயர்ந்து வாழ்ந்து சிதைந்து பின்னர் பெற்ற ஒரு வாழ்வினைப் பிண்ணனியாகக் கட்டமைக்கிறது. வாழ்வாதாரப் போராட்டதின் உச்சத்தில் இந்திய சமூகம் அடைந்த எல்லைகளையும் அதன்பின் வெடித்துச் சிதறிய சித்திரங்களையும் ஜகாட் திரைப்படம் ஒரு வரலாறாகப் பதிவு செய்கிறது. இவ்விடத்தில் மலேசியத் தமிழர்களின் 1980களுக்குப் பிறகான தோட்டப்புறத்தை விட்டு வெளிவந்த பின்னர் உருவான தடங்களையும் அதில் உருவான சிதறல்களையும் தீவிரமாகக் கவனப்படுத்திய முதல் மலேசியத் திரைப்படம் எனச் சொல்லலாம்.

குண்டர் கும்பல்

1980-90களில் இந்திய சமூகத்தையே தம் பிடிக்குள் வைத்திருந்து பல சிதைவுகளை உண்டாக்கிய சிக்கலாக குண்டர் கும்பலை அடையாளப்படுத்தலாம். ஆள் கடத்தல், மிரட்டி பணம் வசூலித்தல், போதைப்பொருள் கடத்தல், குழுச்சண்டைகள், கொலை, கொள்ளை என்று பல்வேறு குற்றச்செயல்களை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்ட பல குண்டர் கும்பல்களில் இந்திய இளைஞர்கள் சேர்ந்த காலக்கட்டமாக 1980களின் துவக்கங்களைக் குறிப்பிடலாம். 08 என்கிற இந்தியர் குண்டர் கும்பல் அப்பொழுது நடைமுறையில் இருந்துள்ளதைப் பெந்தோங் காளியின் வாழ்க்கையை அலசும்போது தெரிய வருகிறது.

குண்டர் கும்பலில் இந்திய இளைஞர்கள் சேர்ந்து சீரழிந்த வரலாற்றை அலசி ஆராய்ந்தால் நம்மால் தவிர்க்க இயலாத ஒருவராக இருப்பவர் காளிமுத்து என்கிற பெந்தோங் காளி ஆகும். 1980களில் இந்திய சமூகத்தில் குண்டர் கும்பல், துப்பாக்கி கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் துவங்குதற்குக் காரணியாக இருந்தவர்தான் பெந்தோங் காளியாகும். 1993ஆம் ஆண்டில் காவல்துறையினரால் டாமான்சாராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதுபோன்ற ஒரு சாயலை மையப்படுத்தியே ஜகாட் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குண்டர் கும்பலில் இணைந்து பல குற்றச்செயல்களில் ஈடுப்பட்ட அப்போயின் சிற்றப்பா மெல்ல அதனை உணர்ந்து அவற்றிலிருந்து முழுவதுமாக விடுப்படுவதைப் போல ஜகாட் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கும். இவை ஒரு பக்கம் நிகழ, அப்போய் என்கிற சிறுவன் அங்கீகாரமில்லாமல், புறக்கணிக்கப்பட்டு, சீண்டப்பட்டு எப்படி மெல்ல குற்றங்கள் நிரம்பிய உலகினுள் நுழைகிறான் என்கிற ஒன்னொரு இழையிலும் திரைக்கதை நகர்ந்து செல்லும். இவ்விரு முரண்களுமே ஜகாட் திரைப்படத்தை ஒரு மையக்கருவை நோக்கி நகர்த்தி செல்கிறது எனலாம்.

ஜகாட் திரைப்படம் முன்வைக்கும் விவாதம் என்ன?

தோட்டப்புறங்களில் பால்மரம் சீவும் தொழிலாளிகளாக மட்டுமே வாழ்ந்த இந்திய சமூகம் தோட்டங்களைவிட்டு மறுகுடியேற்றம் ஆனபோதும் தொழில்துறைக்குள் காலுன்றியபோதும் அங்கீகாரமும் கல்வியறிவும் இல்லாமல் சிதைவுக்குள்ளானர்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மையாகும். அதையே அப்போய் எப்படி மெல்ல கல்வி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாமல் தண்டனைக்குள்ளாகி விரட்டப்படுகிறான் என்பதை ஜகாட் காட்டுகிறது. ஒரு நிலத்தை விட்டு இன்னொரு நிலத்திற்குப் புலம்பெயரும்போது அவர்கள் அங்கு அடிமைகளாக வாழ நேரிடும் மேலும் பொருளாதார வீழ்ச்சிக்குள்ளாகவும் நேரிடும் என்பதே நிதர்சனமாகும். அப்படிப் பொருளாதார வீழ்ச்சிக்குள்ளாகும் சமூகம் வறுமையை எதிர்க்கொள்ள முடியாமல் சிதையும்போது அங்கு ஏற்படும் வெற்றிடங்களில்தான் சமூக குற்றங்கள் மெல்ல எழுகிறது என்று ஜகாட் திரைப்படம் தம் விவாதத்தை முன்வைக்கிறது.

இவ்விடத்தில் மாறிவரும் மலேசியத் தமிழ் சமூகத்தின் பிரச்சனைகள் என்கிற குறிப்பை நாம் தொடர்புப்படுத்திக் கொள்ளலாம். மாறிவரும் மலேசியத் தமிழ் சமூகத்தின் பிரச்சனைகள் எனும்போது அதன் வேர்கள் முழுவதுமாக மாறி வரும் நிலம் சார்ந்த பாதிப்புகள், மாறிவரும் வேலை சார்ந்த தாக்கங்கள் என்று இரு வகைகளிலிருந்து எழுகின்றன எனலாம்.

நிலம் சார்ந்த மாற்றம்

தோட்டப்புறங்களில் பால் மரம் சீவும் தொழிலாளிகளாக இருந்த தமிழ் மக்கள் முதலாளிமார்களின் உழைப்புச் சுரண்டல், குடும்பச் சிதைவுகள், உறவுச் சிக்கல்கள் என்று பற்பல சிக்கல்களை எதிர்க்கொண்டிருந்தாலும் நிரந்தரமான ஒரு தொழிலை நம்பியிருந்ததாலும் அவற்றுள் அவர்கள் பலகாலம்தொட்டே வல்லமை பெற்றிருந்ததாலும் சமூக சிக்கல்கள் பூதாகரமாக பெரும் தாக்கங்களை அப்பொழுது உருவாக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், தோட்டத் துண்டால்களுக்குப் பின்னர், 1980களின் இறுதியில் தோட்டப்புறத்தை விட்டு முழுவதுமாக புலம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கும் கம்பங்களுக்கும் வாழ்வாதாரத்திற்காக வெளியில் வந்த மலேசியத் தமிழ் மக்களின் வாழ்க்கை பெரும் திட்டாட்டத்திற்குள்ளும் பொருளாதார வீழ்ச்சிக்குள்ளும் அமிழ்த்தப்பட்டன என்றே சொல்ல வேண்டும்.

இக்காலக்கட்டத்தில்தான் பொருளாதார தாக்கங்களை எதிர்க்கொண்ட இந்திய சமூகம் கிடைத்த வேலைகளில் ஒன்ற முடியாமல் வேலைகள் பல மாறி முதலாளிகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி, அதிக உழைப்பு குறைந்த வருமானம் என்கிற வாழ்க்கைப் போராட்டத்திற்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். ஜகாட் திரைப்படத்திலும் அத்தகையைதொரு பொருளாதார சிக்கல்களைப் பல இடங்களில் காட்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

வானொலியில் அரசியல் தலைவர் ஒருவர் மலேசியாவில் இந்தியர்களின் பொருளாதாரம் உயர்வு கொண்டுள்ளதாக அறிவிக்கப்படும்போது வீட்டில் அப்போயின் அப்பா நெகிழிக் கயிற்றால் இடைவாரை அணிந்து கொண்டிருப்பார். இதுபோன்ற காட்சிகள் சொல்லாமல் மலேசிய இந்திய மக்களின் அன்றைய வறுமை நிலையை அப்பட்டமாகக் காட்டிவிட்டன.

ஆக, மாறிவரும் மலேசியத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் நிலம் சார்ந்து ஏற்பட்ட மாற்றம் உருவாக்கிய பொருளாதார தாக்கமும் அலைச்சலும் கிடைத்த வாய்ப்பில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள ஒரு நியாயமற்ற பாதையையும் திறந்துவிட்டது எனலாம். குற்றச்செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அதன் வாயிலாக பணம் ஈட்டலாம் என்கிற ஓர் அறமற்ற பாதையை வழிகளை அவர்கள் தேர்ந்தெடுக்கத் துவங்கினார்கள். அப்போயின் சிற்றப்பா குடும்பத்தின் வறுமையும் கல்வியறிவின்மையும்தான் அவனைக் குண்டர் கும்பலில் சேர்த்ததாக உணர வைக்கும் காட்சிகள் மேற்கூறிய உண்மைகளுக்குப் பொருத்தமான சாட்சிகளாக வந்தமைகின்றன.

அதே வேளையில் கல்வியின் வாயிலாகத்தான் இந்திய சமூகம் மேலெழ முடியும் என்று அதிகமாக பரிந்துரைக்கப்பட்டு வந்த காலக்கட்டமும் ஒன்றாய்தான் நிகழ்ந்துகொண்டிருந்தன. இதுவரை இந்திய சமூகம் எதிர்க்கொண்ட கீழ்நிலைகளிலிருந்து மேலெழ வேண்டுமென்றால் கல்வி அதற்கு மகத்தான ஆயுதம் என்றே பல இந்திய குடும்பங்கள் உணரத் துவங்கினார்கள். ஆனால், கல்வி நிறுவனம் அத்தகைய இலட்சியங்களுக்க அடித்தளமாக அமையவில்லை என்கிற இன்னொரு விவாதத்தையும் ஜகாட் முன்வைக்கிறது. தனித்திறன்கள் பெற்றிருக்கும் அப்போய் அப்பொழது இருந்த கல்வி அமைப்பால் நிராகரிக்கப்படுவதாகவே காட்சிகள் ஜகாட் திரைப்படத்தில் அமைய பெற்றுள்ளன.

கல்வி அவனுடைய எதிர்காலத்தை உருவாக்க மறுக்கும் இடத்தில் ஏற்படும் வெற்றிடத்தைச் சமூகத்தில் அப்பொழுது மிகவும் தீவிரமாகப் புழங்கிக் கொண்டிருந்த குண்டர் கும்பல் வட்டம் ஆக்கிரமிக்கத் துவங்குவதைப் படம் காட்சிப்படுத்துகிறது. அப்போயின் சிற்றப்பா எப்படி அப்பொழுது மாறிவந்த மலேசியத் தமிழ்ச் சமூகம் எதிர்க்கொண்ட வறுமை, நிராகரிப்புகள் போன்றவற்றின் உச்ச வெறுப்பில் குண்டர் கும்பலுக்குள் சேர்ந்தாரோ அதே புள்ளியில் கல்வி செய்த நிராகரிப்பின் வெறுப்பில் அப்போய் சென்று சேர்வதாக ஜகாட் திரைப்படம் காட்டி நிறைவு பெறுகிறது.

மாறிவரும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கைக்குள் உண்டான சமூக, கல்வி இடைவெளிக்குள் குற்றச்செயல்கள் சார்ந்த சிக்கல்கள் ஆக்கிரத்துக் கொண்டதன் விளைவுகளைத்தான் ஜகாட் திரைப்படம் நமக்குக் காட்டுகிறது. மலேசியத் தமிழ் சினிமா சூழலில் ஜகாட் ஒரு மாற்று முயற்சி.

- கே.பாலமுருகன்

ஜகாட் திரைப்படத்திற்கு இதுவரை கிடைத்த விருதுகள்:

விருது

வகை

விளைவாக

28 வது மலேசிய திரைப்பட விழா 

சிறந்த படம்

வெற்றி

சிறந்த இயக்குனர்

வெற்றி

சிறந்த திரைக்கதை

பரிந்துரை

2016 கோலாலம்பூர் பிலிம் கிரிடிக்ஸ் விருது 

சிறந்த திரைப்படம்

வெற்றி

சிறந்த இயக்குனர்

வெற்றி

சிறந்த ஆண் நடிகர்

வெற்றி

சிறந்த ஒளிப்பதிவு

வெற்றி

சிறந்த திரைக்கதை

வெற்றி

Pin It