நீங்க எல்லாம் படத்தை ஆஹா ஓஹோன்னு புகழும் போதே தெரியும், படம் இப்படித்தான் இருக்கும்னு. 'படமா இது. என்னோட நூத்தி இருவது ரூபா போச்சு. இந்தப் படத்துக்குப் போனதால என் வாழ்க்கையோட பொன்னான ரெண்டு மணிநேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்' - இப்படியெல்லாம் சொல்லனும்னு ஆசைதான். ஆனா படம் நல்லா இருந்துபோச்சே.
பாலாவின் "நாச்சியார்" படம் அறிவிப்பு வந்ததும் படத்தோட கதை என்னவா இருக்கும்னு ஃபேஸ்புக்ல பலபேர் கதை எழுதுனாங்க. அது உண்மையாவே இந்தப் படத்தோட கதையா இருந்துருமோன்னு நினைக்குற அளவுக்கு ஒரு பதட்டம் இருந்துச்சு. காரணம் அவரின் முந்தைய gory வகைப் படங்கள். அந்தப் பதட்டம் படம் வெளிவந்து நல்ல ரிவீயூ வந்ததும் போயே போச்சு. பாலா ஒரு பேட்டியில சொல்லியிருந்தார். "மக்கள் என் படத்துல எதோ புதுசா ஒரு விசயத்தை எதிர்பாக்குறாங்க, அதுக்காகதான் நான் இந்த மாதிரியான படங்கள் பண்றேன்". இப்போ அதே மக்கள் தன்னுடைய வழக்கமான பாணி படங்களை விரும்புவதில்லைன்னு உணர்ந்த பாலாவின் முதல் அடிதான் இந்த 'நாச்சியார்'.
ராஜா கருணாகரன் என்பவரின் "Kiss" என்ற ஷார்ட் பிலிமிலிருந்து இந்தக் கதைக்கு இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார். பிரச்சினைகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு டீனேஜ் காதலர்களின் பின்னனியை ஆராயும் ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரியே இந்த "நாச்சியார்". படத்தை முழுமையாக ஒவ்வொரு காட்சியாக பார்த்தால் இது எந்த வகையிலும் பாலா பாணியிலான வழக்கமான படமாகவே தெரியும். 'நந்தா'வின் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, 'அவன் இவன்' ஆர்யாவைப் போன்ற ஜி.வி.பிரகாஷின் தோற்றம், 'தாரை தப்பட்டை'யில் வரும் கர்ப்பிணித் தாய் எபிசோட் என முந்தையப் படங்களின் தாக்கம் தாராளமாக இருக்கிறது. அதையும் தாண்டி புதுமையாகத் தெரிவது பாத்திரங்களிடமிருந்து நிரம்பி வழியும் அன்பும், காதலுமே.
போலிஸ் அதிகாரியாக வரும் ஜோதிகாவும், ராக்லைன் வெங்கடேஷும் காதலர்களின் மீது காட்டும் மறைமுக அன்பு. நடந்துவிட்ட ஒரு குற்றத்தை அறிய அவர்கள் எடுக்கும் அக்கறை கலந்த முயற்சி, இவானா-ஜிவி பிரகாஷின் அப்பாவித்தனமான நடிப்பு என படம் நெடுக பாசிட்டிவ் எனர்ஜியைத் தருகிறார் பாலா. ஒரு டீனேஜ் காதலைக் காட்டிவிட்டு அட்வைஸ் சொல்லி கழுத்தறுக்காமல் முதிர்ச்சியுடன் பாலா அதைக் கையாள்கிறார். உதாரணமாக Sairat மராத்தி திரைப்படம் போல. "சாதிவெறி புடிச்சு பெத்த புள்ளைங்களையே கொல்ற நாய்ங்களை அடிச்சி நொறுக்கு" என ஆணவக்கொலைக்கு எதிராக சாட்டையெடுக்கிறார். எப்பொழுதும் அவர் படத்தின் மூலம் நமக்குத் தந்திடாத ஆனந்தக் கண்ணீரை இறுதிக்காட்சியில் நம் கண்களிலிருந்து வர வைக்கிறார்.
நாச்சியாரின் க்ளைமாக்ஸைப் பார்த்ததுமே அர்ஜூன் ரெட்டியின் உணர்வுகளை அப்படியே தமிழில் நகலெடுத்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
நாச்சியார் - A Must Watch!!!
- சாண்டில்யன் ராஜூ