lens movie

பயணியின் கவிதையொன்று "கண்கானிப்புகள் மிகுந்த இந்த நகரத்தில்"என்ற வரிகளுடன் தொடங்கும்.நாம் ஆயிரம் கண்களால் கவனிக்கப்படுவது நவீன யுகத்தில் தவிர்க்க இயலாத செயல்.பல மன உளைச்சல்களை இது கொடுத்தாலும் ஒரு பகடியுடன் நாம் அதை கடந்து கொண்டிருக்கிறோம்.

ஆயிரம் ஆயிரமாய் நிர்வாண உடல்களை பதிவேற்றம் செய்யவும் அவற்றை  தரவிறக்கம் செய்யவும் வாய்ப்பளித்திருக்கும் அல்லது அப்படி ஒன்றுக்கு நிர்பந்திக்கும் பதட்டமிக்க நூற்றாண்டின் மனசாட்சியை கொடூர மௌனமாய் வெளிப்படுத்திருக்கும் திரைப்படமே "லென்ஸ்"

படத்தின் ஆக்க முறை கதைசொல் நேர்த்தி என எதிலும் சோடையாகாமல் தன் உலக சினிமா புத்தியை காட்டாமல் முழு திருப்தியளிக்கும் படைப்பாக வெளிவந்திருக்கிறது.வெற்றிமாறன் தயாரிப்பு என்பதை தவிர வேறெந்த எதிர்பார்ப்புகளையும் தூண்டாத படைப்பாக புதிய முகங்களுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.

யாரும் எடுக்க தயங்கும் களம் ஆனால் எடுக்கப்படவேண்டிய களமாக இருந்த போர்ன் வீடியோக்கள்,ரொம்ப மலினமாய் கிடைக்கும் வீடியோ சாட்கள் என்று வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கும் சாத்தான்களை அப்பட்டமாய் எந்த வித சமரசங்களுக்கும் இடமளிக்காமல் தோலுரித்திருக்கிறது.அதிக ஒப்பாரி காட்சிகளையும் ஓவர் ஆக்ட் எமோஷன்களையும் வைத்து படைப்பை கெடுத்து கொள்ளாமல் எடுத்திருக்கிறார் இராதாகிருஷ்ணன்.

மாநகரம்,8தோட்டாக்கள் போன்ற படங்களுக்கான ஊடக வெளிச்சம் இப்படத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகமே..?திரைத்துறைக்குள் இயங்கிகொண்டிருக்கும் புதிய படைப்பாளிகளுக்குள் ஒரு உரையாடலை இது தோற்றுவிக்கலாம் என்றாலும் இதற்கான சரியான அங்கீகாரித்திற்கு சற்று குறைச்சலானதாகவே இருக்கும்.

"கதவுக்குள்ள நடக்குற விஷயம் கடைத்தெருவுக்கு வர காலம் இது"என்று வசனங்களில் கூட இணைய உலகத்தை சரியாக படம் பிடித்திருக்கும் படைப்பு தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் தாமதமான வருகையென்றாலும்.இப்பொழுதாவது இப்படி ஒரு படைப்பிற்காக சற்று சந்தோசம் கொள்ளலாம்.இருப்பினும் ஜனரஞ்சக பொதுப் புத்தியில் இதற்கான மதிப்பு என்பது ஒரு நீலப்படத்திற்கு ஒப்பானதாக இருப்பதை திரையரங்கில் காண முடிந்தது.வரக் கூடாத படமொன்றிற்கு வந்து விட்டது போலவே அனைவரும் தங்கள் ஒழுக்கம் இப்படத்தை காண்பதால்  கெட்டு விடுவது போன்ற உரையாடல்களே படம் முடிந்து வெளியேறுகையில் காதில் விழுந்தது.

பார்சினோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பிபிசியின் கவனத்தை ஈர்த்திருக்கும் படத்திற்கு இப்படியான வரவேற்பேயை பொதுஜன புத்தி வழங்குகிறது.அறிவு ஜீவி தளத்திலாவது கொஞ்சம் உரையாடல் நடக்க வேண்டுமென்பதே இக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கம்.

வாய் பேசும் திறனற்ற தன் ஊமை காதலியுடன் தனக்கு கிடைக்கும் புதிய உலகத்தின் அந்தரங்கங்கள் வீடியோ காட்சியாக இணையத்தில் பரப்பப்படுவதால் மீண்டும் சூன்யமாகும் தன் வாழ்க்கையை பழி தீர்த்து கொள்வதுடன் முடித்துகொள்ளும் சிறிய சராசரி மனதின் நியாயமான குரலே"லென்ஸ்"எங்கேயும் பார்வையாளனை குற்றவுணர்வுக்குள்ளாக்கி தன் நியாய கருத்துகளை உரைக்காத நேர்த்தியான படைப்பு.

தயாரிப்பு குழுவினரின் மார்க்கெட் திறமையினால் சில புதிய படைப்பாளிகளின் திரைப்படங்கள் ஊடக வெளிச்சமுடன் வசூல் வெற்றியையும் பெற்று விடுகின்றன.நல்ல படைப்புகள் கவனிக்கப்படும் போன்ற ஒரு ஜல்லியடிக்கும் விஷயத்தையும் இதனுள் புகுத்தி விடுகின்றன.அத்தகைய தந்திரங்களை கையால தெரியாத படங்கள் பெரிய உரையாடல்களை நிகழ்த்தாமல் விருதுகளுடன் அழுந்தி விடுகின்றன. அத்தகையை ஒரு இழப்பிலிருந்து காப்பாற்றப் பட வேண்டிய திரைப்படம்.

Pin It