ஒரு விபத்து. 

அத்தனை நேரம் இருந்த சந்தோசம் பட படவென, பட்டாம் பூச்சியின் சிறகுகளை பியித்து எறிவது போல.... சடுதியில்.....பனி மலையில் பறந்து கொண்டிருக்கும் விமான இருக்கையோடு..... ஜன்னலோடு....மாயத்தோடு.....தெறித்து... எகிறி.. விழுந்து கண் முன்,  காது இரைக்க... மனம் உணர சடுதியில் பறக்க பறக்க காணாமல் போன.....செத்துப் போன, பல சக உறவுங்களைக் கடந்து சில பயணிகளோடு ஒரு பக்கம் அடித்து மோதி சின்னாபின்னமாகி நிற்கிறது மிஞ்சியிருந்த விமான பாகம். 

alive movieதலையிழந்த மீனின் உருவத்தை ஒத்திருந்தது நின்ற விமானம். திக்கென்று மூச்சடக்கி திரைக்கு முன் அந்த நேர பாசாங்களோடு பரிதவிக்கிறது மனது.

தலையில் அடி. வயிற்றில் இரும்பு குத்து. மனது முழுக்க மரணம். என்ன செய்வதென்று தெரியவில்லை. உறையும் பனி மலை. குளிர் வாட்டுகிறது.... பின் இரவானதும் கொல்கிறது. கையிலிருக்கும் சாக்லேட்களையும்.. ஒயினையும் ஆளுக்கு கொஞ்சம் என்று பகிர்ந்து கொள்கிறார்கள். தானே தலைவன் என்று ஒருவன் கூற மற்றவர்கள் ஆமோதிக்கிறார்கள். உயிர் போகையில்.. ஒருவன், தலைவன் என்று சொல்லி முன் வருவதே உயிர் போகின்ற விஷயம்தான் என்பதை உணர்ந்த உள்ளங்கள் முழுக்க குருதி வடியும் பூக்களென இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. 

தலைவனாக இருப்பது ஒன்றும் அத்தனை சுலபமான காரியம் இல்லை என்று உணரும் தருணம் முழுக்க பசியோடு பயம் வாட்டுகிறது. குழந்தை மனம் எங்கிருந்தோ வந்து அப்பிக் கொள்கிறது.

சற்று முன் வாழ்க்கையின் மீதிருந்து மிகப்பெரிய நம்பிக்கை சட்டென காணாமல் போன கண்களின் வெள்ளை நிற குருட்டுத்தனத்தின் ஓலம் வந்திறங்கிய இடமெங்கும் வெண் பணிகள். வேகா பிணிகள்.

காடு பிடிக்கும் என்பவர்கள் "INTO THE WILDE" படம் பார்க்கலாம். எனக்கு மலை பனி பிரதேசங்கள் ரெம்ப பிடிக்கும் என்று கன்னத்தில் கை வைத்து ஒரு பக்கமாக செல்லமாக பார்க்கும் யாவரும் இந்த படத்தை (ALIVE) பார்க்க வேண்டும். 

பரிதவிப்பின் மிச்சத்தை கண் கூட கண்டு கடல் தாண்டும் பறவையின் அடிவயிற்று சூட்டை உணர முடியும். வெகு தொலைவில் இருக்கும் உங்களின் கனவுக்குள் தீ மூட்டி இரவை உதிர வைக்கும் சாகசம் நிறைந்த இரவுகள் இந்த பனி இரவுகள். இன்று, நாளை, இன்று, நாளை என்று ஒவ்வொரு நாளும் காத்திருக்கும் கண்களில்......பனி தாண்டிய தீப்பொறி சிரிப்பாகவும் குழப்பமாகவும்.....அழுகையாகவும்......ரத்தமாகவும் வழிவதை திரை தாண்டி உணரும் நொடிகளில்......வாழ்வு பற்றிய தீர்க்கம் சற்று குலையத்தான் செய்கிறது. 

தான் என்ற அகங்காரம் மெல்ல மெல்ல மறையும் மெல்லிய கோரத் தத்துவதாய் அந்த பனிமலைகள் பரந்து விரிந்து பறை சாற்றுவதை உள் வாங்கித்தான் ஆக வேண்டும். இறந்த தங்கையை இன்று என்னோடே வைத்துக் கொள்கிறேன் என்று அண்ணன் கூறுகையில்... அது பிணம் என்று சர்வ சாதாரணமாக சொல்லி இருக்கும் உயிர்களுக்கு இடம் வேண்டும் மனிதாபிமானம், மனிதம் கடந்த நிலையில் கடவுள் காண்பதா.... கடவுள் கடந்த நிலையில் மனிதம் காண்பதா...? கேள்விகள் உருகத் தொடங்குகின்றன. 

நாட்கள் நகருகின்றன. 

பசி. பெரும்பசி. மனதுக்குள் உருளும் பாறாங்கல் முழுக்க பூனைகளின் சித்திரம் பிராண்டுகிறது. பின் பனிமலையில் உக்கிரம் உருண்டோடுகிறது.

மண்ணைக் கூட தின்ன முடியாது. அத்தனையும் பனி. கூட இருந்து செத்துப் போன பிணங்களை தின்று உயிர் பிழைக்கலாம் என்று யோசிக்கும் போது நமக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. பின் சாப்பிட சாப்பிட ஜீரணித்து விடுகிறது. மனிதனை மனிதன் தின்னும் காலம் வரத்தான் போகிறது என்று விவிலியம் கூறுவதை திக்கென்று நினைத்துக் கொள்ளத் தோன்றியது. 

சரி... இனி நம்பி பிரயோஜனமில்லை. நாமே கடக்க வேண்டிதான் நமக்கான தூரங்கள் இருக்கின்றன என்று உணரப்படுகிறது...

தேர்ந்தெடுத்த மூவர் மலை ஏறுகிறார்கள். மயிரிழையில் உயிர் தப்புகிறார்கள். மூச்சிரைக்க.....பேச்சிரைக்க ..... முகம் இரைக்க..... உடல் இரைக்க தத்தி தத்தி உயிரை காப்பாற்ற போராடும் காட்சிகள்... வேட்டை சமூகத்தை நினைவூட்டுகிறது. பசிக்கு மனித சதைகளை அறுத்து வெட்டி பையில் சேகரித்துக் கொண்டு போகையில்...SURVIVAL OF THE FITTEST என்பதை மீண்டும் மீண்டும் நினைக்கத் துவங்குகிறது மனம். வாழ்வதில் வடிவமைக்கப்பட்ட அணுக்களே இங்கே பிண்டம் என்பதை மறுக்க முடியாத மறக்க முடியாத நினைவூட்டலாய் நம்புகிறது யாவுமே அறியத் தவிக்கும் மனது.

இடையினில்.... பிணத்தையே குறி வைக்கும் காலத்தின் கையில்... தவறி....சீறி விழுகிறது இரவின் பனி. அது துறவின் வெளி. 

பனி சரிவு.....

இரவை விரட்டிக் கொண்டிருந்த அவர்களின் கூடாரத்தையும் அது அடித்துக் கொண்டு போகையில்... நாம் கண்கள் சிமிட்ட மறக்கிறோம்... நினைக்கையில் கண்களில் பனிகளின் வெண்மை போதாதென்று பட படக்கிறது நெஞ்சம்...

மொத்த வெண்பனியின் பாதாள சரிவில் தலைவன்தான் செத்தே போகிறான். 

அவன் "தான் செத்தால் நீங்கள் என்னை தின்று விடலாம்" என்று வாக்குறுதி கொடுக்கும் அந்த கலகலப்பான பொழுது, அன்று இரவு வரும் வெண் பிசாசின் நகங்கள் பற்றி நாமும் அறியோம். அறிக்கையில் நாமும் மரிக்கிறோம். நாட்கள் நகருகின்றன. கூட வந்த உயிர்கள் பிணங்களாகி சதைகளாகி... உணவாகி உயிர் காக்கின்றன. மனம் பேதலிக்கத் துவங்குகிறது. தனிமைக்குள்.. சிக்கும் மனதுக்குள்... திசை அறியா வானம் விதைக்கும் எச்சங்கள்.. மிகக் கொடியவை. 

பனி மலை...முகம் மறக்கும் காடு....பெரிய அச்சுறுத்துதலை தருகிறது.

தேட தேட எதுவும் கிடைக்காத பொழுதுகளை மிஞ்சி இருக்கும் அவர்கள் கொண்டிருப்பதோடு கனக்கிறது காட்சிகள். எப்படியாவது அவர்கள் பிழைத்து  விட வேண்டும் என்று நாமும் நம்பும் இடத்தில் படம் அப்படியே முடிகிறது.

இயற்கை அத்தனை கொடியது. அத்தனையும் கூடியதா என்ற கேள்வியோடு...... இதை எழுதுகிறேன்...

- கவிஜி

Pin It