இலக்கல்ல வாழ்க்கை... இலக்கை நோக்கிய பயணமே வாழ்க்கை என்பது புத்தரின் வாக்கு...

predestinationஆம்... வாழ்க்கை முழுக்க பயணங்களால் நிறைந்ததே இந்த சுழற்சி... . ஆதாம் ஏவாள் வழியாகட்டும்.. பெரு வெடிப்பின் துளியாகட்டும்... நம் கைக்குள் அடங்காத பெரு வாழ்வின் சிறு தோற்றமே இந்த உயிரும் உடலும்.. இன்னபிற மாயங்களும்... .. மாயங்களால் நெய்யப்பட்ட பூமியின் பிரதான மர்மங்களின் உருவமாகவே நமது கற்றதும் இருக்கிறது என்பதே கல்லாததன் பெரும் விளைவுகளின் ஆகாயம் என விரிந்து கிடக்கும் கண்டங்களின் காட்சிகளற்ற பெரும் விரிப்பு... கற்றது கை அளவு என்று பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்... நம் சிந்தைக்கு அகப்படாத சிந்தையே அகப்படாத சூட்சுமக் குறியீடுகளின் வழியே நாம் எங்கும் செல்ல முடியாத தூரங்கள் நம் பக்கத்திலேயே இருப்பதுதான் இந்த பிறவியின் முழு சந்தேகம்...

'ட்ரைஏங்கல்' பார்த்த கண்ணோடு.. அதே போக்கில் இன்னொரு படம்.. "PREDESTINATION"(2014)... இயக்கம் MICHEAL & PETER SPIERIG(BOTHERS)... மீண்டும் ஒரு முறை தலை சுற்றியது.. இம்முறை.. சுற்றி சுற்றி சுற்றவில்லை... பூமியைப் போல... அது பூமியைப் போலவே சுற்றிக் கொண்டிருப்பதில் கொஞ்சம் ஆறுதல்... .அடிக்கடி ஆகாயம் நோக்கும் வெறித்த கண்கள் எனது... மொட்டைமாடி கனவெங்கும் என் சந்தேகமே சிறகு விரிக்கும்.. அப்படி படம் பார்த்த பிறகு... நீண்ட நெடிய நடையில் அல்லது புரண்டு படுத்தலில்... ஒன்று தோன்றுகிறது... அது தோன்றலின் தொடர்ச்சியாகவே இருக்கலாம்... .இந்தப் பயணங்கள்.. எதற்காக..? பயணங்களின் ஊடாகவேதான் நம் ஒவ்வொரு நாளும் பயணிப்பதை நன்றாக விளங்க முடிகிறது... .. விளக்க முடியுமா என்பது தான் நீட்சியின் தொடர்ச்சி..அல்லது . தொடர்ச்சியின் நீட்சி...

பயணம்... பயணம்... பயணம்...

சிந்தையின் பயணம் தொடர தொடர, அது ஒரு கட்டத்தில் நேற்றைக்கு பயணம் செய்தால் அல்லது நாளைக்கு பயணம் செய்தால்... என்று யோசிக்கத் தொடங்கியது... எதிர்காலம் என்பது நாளை மட்டுமல்லை... நாளை மறுநாளும் தான்... . கடந்த காலம் எனபதும் நேற்று மற்றுமல்ல... நேற்றைக்கு முந்தைய நாளும் தான்... ஒருவேளை இந்த பூமி சுற்றுவதை விட வேகமாக முன்னோக்கி நாம் சுற்றினால் நம் எதிர்காலத்துக்குள் போய் நின்று விடலாம்... ஆனால் அங்கும் பூமி சுற்றிக் கொண்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம்.. 'இன்று நேற்று நாளை' படத்தில் ஒரு விதியை படம் ஆரம்பிக்கும் தருணத்திலேயே சொல்லி விடுவார்கள்.. "நிகழ்காலம் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை.. கடந்த காலமும் எதிர்காலமும்தான்" என்று... அதை தீவிரமாக யோசித்தால்... . தலை வலித்து மூலையில் படுத்து தூங்கலாம் போலாத்தான் இருக்கிறது... தூக்கம் என்பதே ஓய்வுக்குத்தானே... .. பயணங்களில் ஓய்வேது..! ஓய்ந்து போவது மரணம் மட்டுமே...

சரி கதைக்கு வருகிறேன்... . நீங்கள்... உங்களையே காதலித்தால்... . அதனால் உங்களுக்கு பிறக்கும் குழந்தே நீங்களாகவே இருந்தால்... அந்த குழந்தை வளரும் பட்சத்தில் அதற்கு ஆண் பெண் இருபால் உணர்வுகளும் உறுப்புகளும் உடலுக்குள் இருந்தால்... . ஒரு கட்டத்தில் பெண்ணாகிய நீங்கள் ஆணாக மாற வேண்டிய சூழல் வந்தால்.. அப்படி மாறிய பின் உங்கள் கதையை உங்களிடமே கூறினால்... . உங்கள் கதையை கேட்கும் நீங்கள் உங்களை உங்கள் கடந்த காலத்துக்கு கூட்டிக் கொண்டு சென்றால்... . அங்கு உங்களை உங்களால் காதலிக்கப் படுவதை மறைந்து நின்று நீங்களே பார்த்தால்... ..சரி கடைசியில் நீங்களே உங்களை சுட்டுக் கொன்றால்... .?ஆம்... . கதை இதுதான்.. நீங்களே உங்களைத் தேடுதலே... அது காதலுக்காக இருக்கட்டும்.. காமத்துக்காக இருக்கட்டும்.. குழந்தைக்காக இருக்கட்டும்.. பாம் வைக்கும் முன் அதைக் கண்டு பிடித்து தடுப்பதாக இருக்கட்டும்.. அனைத்துமே நீங்களே... .

ஜேன்... . அநாதை இல்லத்தில் வளரும் சுட்டிப் பெண்... கோபம் கொள்கிறாள்... யோசிக்கிறாள்... . தனிமைக்குள் தவிக்கிறாள்... சண்டை போடுகிறாள்... .மற்ற பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவள் விண்வெளி தொடர்பான புத்தகம் படிக்கிறாள்... ..வளர்கிறாள்.. பெரியவளாகிறாள்... ஒரு நிறுவனம் அவளை விண்வெளி அனுப்ப முயற்சிகள் எடுக்கின்றன... . அவளும் ஆர்வத்தோடு அணைத்து தேர்வுகளிலும் கலந்து கொண்டு இதுவரை யாருமே எடுக்காத அளவுக்கு மதிப்பெண்கள் எடுக்கிறாள்... எதற்கும் சலைப்பதில்லை... . அப்படி எடுக்கப்படும் ஒரு டெஸ்டில் காரணமே சொல்லப்படாமல் அவளை நிராகரிக்கிறது நிறுவனம்... .. ஆனால் அவளை வேறு ஒரு திட்டத்துக்கு பயன் படுத்துகிறார்கள்... ... .இதற்கிடையில் அவள் கர்ப்பமாகிறாள்.. குழந்தையும் பிறக்கிறது.. அந்தக் குழந்தை இரண்டு வாரங்களில் காணாமலும் போகிறது... . அந்த சமயத்தில்தான்... மருத்துவர், ஜேனிடம் வந்து, உன் உடலில் ஆண் பெண் இரண்டு உறுப்புகளும் இருக்கிறது... .பெண் உறுப்புகள் அதிக ரத்தப் போக்கினாலும் மற்ற இதர பிரச்சினைகளாலும் சிதைந்து விட்டது.. விட்டால் உன் உயிருக்கே ஆபத்து.. ஆகையால் அடுத்தடுத்து சில அறுவை சிகிச்சைகளால் உன்னை ஆணாக மாற்றி விடுகிறோம்... .. குறைந்த பட்சம் வாழவாது முடியுமே... . என்று கூறுகிறார்கள்.. அழுகையை அடக்கிக் கொண்டு அப்படியே மாறுகிறாள்...

கிட்டத்தட்ட ஆணின் உருவம் உடல் மொழியோடு அவள் மது அருந்த வரும் பாரில் பார்மேன் ஆக பணி புரியும் ஆளின் அறிமுகத்தோடுதான் கதையே ஆரம்பிக்கிறது... ..முழுக்க முழுக்க ஒரு அரை மணி நேரம் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்... கதை நகருகிறது... . அங்கு பேச்சு வாக்கில் இருவரும் பேசிப் பழகி பெண் தன்மை பற்றி என்னிடமே கேட்கிறாயா என்ற ஒரு வகை நியாப்படுத்தலின் கூற்றாக, தன் கதையை மெல்ல மெல்ல அடுக்குகிறாள் ஜேன்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.. என் அப்பா அம்மா ஏன் என்னை கை விட்டார்கள் என்ற பயணத்தின் முதல் படியின் கேள்வியோடு சுய பச்சாதாப பார்வையோடுதான் கதையை முடிகிறாள்.. அதற்கு முன்.. என்னை ஏமாற்றி குழந்தையும் கொடுத்துப் போன அவன் யாரென்று தெரியவில்லை என்று தவிக்கிறாள்... ...

பார்மேன்... இதழோரப் புன்னகையோடு "நான் அவனை உனக்கு காட்டுகிறேன்... " என்கிறான்... புரியாத ஜேனை... தன் டைம் மெசினின் மூலமாக கடந்த காலத்துக்குள் அழைத்து செல்கிறான்... அது ஆணாக மாறிவிட்ட "ஜேன்... " அதாவது ஆணான பின் "ஜான்" தன்னை ஏமற்றிய அந்த ஆணுக்காக காத்திருக்கிறான்... . அப்போது இரவு கல்லூரி முடிந்து, ஜேன்... . (ஏற்கனவே நடந்தவை) வெளியே வருகிறாள்.. ஜேனும் ஜானும்... ஒருவர் மேல் ஒருவர் தெரியாமல் முட்டிக் கொள்கிறார்கள்... ஜேனைப் பார்த்ததும் ஜானுக்கு அத்தனை அதிர்ச்சி... .. அதாவது தன் அழகில் தானே மயங்குகிறான்... . தன்னால் அதிகமாக விரும்பப்பட்ட தன் பெண் உடல் தன் கண் முன்னே நிற்பதில், நின்று சிரிப்பதில், பேசுவதில், இதழ் சிவந்து அசைவதில் அதிசயித்து இமை மூடாமல் ரசிக்கிறான்.. அவளும் கிட்டதட்ட தன்னைப் போலவே ஒரு ஆண் தன் முன்னால் நிற்பதைக் கண்டு மெல்ல சலனப் படுகிறாள்... (ஜேன் பார்மேனிடம் கதை சொல்லும் போது எதிர்காலத்திலிருந்து வந்து தன் மீது மோதி.. பேசி புன்னகைக்கும் ஜானை நமக்கு காட்டுவது இல்லை... . இப்போது தான் நமக்கும் தெரிகிறது )... ஜான், தான் தேடி வந்த ஆணை விட்டு விட்டு எதிரே நிற்கும் கடந்த கால, தான் அதாவது ஜேனின் மேலேயே காதலில் வீழ்கிறான்.. அவளும் அப்படியே... ... ... .. ஒரு கட்டத்தில் இருவரும் ஒரு காருக்குள் இணைகிறார்கள்.. இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் பார்மேன் எல்லாம் முன்னமே தெரியும் எனபது போல பார்த்து மெல்ல புன்னகைக்கிறான்... ... அந்த வருடம் 1964. பார்மன் 1965க்கு சென்று ஜேனுக்கு பிறந்த குழந்தையை கடத்திக் கொண்டு சென்று 1945ல் ஒரு அநாதை இல்லத்தின் வாசலில் போட்டு விட்டு வருகிறான்.. அங்குதான் ஜேன் என்று பெயரிடப் பட்டு அந்தக் குழந்தை வளருகிறது... .

(இந்தக் கதையைத்தான் பார்மேனிடம் ஜான் என்ற ஆணாக மாறின ஜேன் கூறிக் கொண்டிருக்கிறாள்... ... .)

மீண்டும் 1964க்கு வரும் பார்மன் ஜானைக் கூட்டிக் கொண்டு எதிர்காலத்துக்கே சென்று விடுகிறான்... . அப்போதுதான் ஜானுக்கு புரிகிறது... . ஏன் நமக்கும் கூட... . எதிர்காலத்தில் இருந்த ஜான் நிகழ்காலத்துக்கு வந்து நிகழ் காலத்தில் இருக்கும் ஜேனாகிய தன்னையே காதலித்து குழந்தையும் கொடுத்து விட்டு போய் விட்டான்..(போக வேண்டும் என்பது விதி... .போகாமாட்டேன்.. அவளை விட்டு என்பது அகதலின் குருட்டு விழி... பார்மேன் முடியாது என்று அழைத்து செல்கிறான்... ) நிகழ்காலத்தில் இருக்கும் ஜேன்.. தன்னை ஏமாற்றிவன் யார் என்று தெரியாமல் (எதிர்காலத்துக்கு காலப் போக்கில வந்த பிறகு, அல்லது டைம் மெசின் மூலமாக வந்த பிறகுதானே தன்னை காதலித்தது தான் என்றே அவளுக்கு தெரியும்.. இப்போது தெரியாதல்லவா... ) அவனை தான் ஆனான பின்னாலும் தேடிப் போகும் கால பயணத்தில்தான் இந்த முடிசுகள் அவிழ்க்கப் படுகின்றன.. அதாவது..தன்னுடன் இணைந்தது 'தன்' எதிர்கால 'தான்' என்று..தெரிய வருகிறது... .தங்களுக்கு பிறந்த குழந்தைதான் 1945 க்கு கொண்டு சென்று அநாதை இல்லத்தில் வளந்த "தான்" என்று, எல்லாம் விளங்குகிறது... . கதை இப்படியே போய்க் கொண்டிருக்கையிலும்.. இன்னும் பாம் வைத்தவனைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறும் சமயத்தில்தான் இறுதி முடிச்சும் அவிழ்க்கப் படுகிறது... .

பார்மேனாக வரும் ஆளும் இப்போது 'அன்மாரிட் மதர்" என்ற பெயரில் உண்மைக் கதைகளை எழுதிக் கொண்டிருப்பதும், விபத்துக்களை திட்டமிட்ட அசம்பாவிதங்களை முன்னமே கண்டு பிடித்து (காலம் கடந்து) செயலிழக்க செய்யும் ஏஜெண்டும் தானே என்பதும் அது எதிர்கால தான் என்பதும்... விளங்குகிறது... (விண்வெளிக்கு அனுமதி மறுத்த நிறுவனம் வேற வேலை தருகிறேன் என்று கூறிய வேலைதான் இந்த வேலை... ) இப்படி அனைத்தும் விளங்கிக் கொள்ளும் இடம்தான் படத்தில் வரும் முதல் காட்சி... . ஆனால் அது தான் படத்தின் மிகப் பெரிய முடிச்சை உள் வாங்கிக் கொண்டு ஆரம்பித்து வைக்கிறது ஒரு காலத்தின் கதையை... .ஆம்... . ஜேனுக்கும் ஜேனுக்கும் நடக்கும் சண்டையில் ஒரு ஜேன் முகம் வெந்து பல மாற்று அறுவை சிகிச்சைகளில் முகமே மாறி விடுகிறது.. அதாவது ஜானுடம் பேசிக் கொண்டும் அவனை கால இயந்திரத்தில் முன் பின்னாக பயணிக்க வைத்ததுமான பார்மேனின் முகம் அது... இறுதியில் ஒரு வழியாக பாம் வைத்தவனைக் கண்டு பிடித்தும் விடுகிறான் ஜான்(பார்மேன் ).. ஆனால் அந்த குற்றவாளியும் அவனே எனபது தான் எதிர்கால முடிச்சு.. எதிர்காலத்துக்கு சென்று அடிக்கடி கால இயந்திரத்தை உபயோகப் படுத்தியதால் ஒரு கை வராமல்.. உடல் நலிவுற்று அமர்ந்திருக்கும் எதிர்கால தன்னை(சரி தவறுகள் பற்றிய பல உரையாடல்களுக்குப் பின் நன்றாக யோசித்தே..(கண்டிப்பாக எதிர்கால சக்கரத்தில் இன்று சுடப் போகும் "தான்" சுடப் படபோகும் "தானாக "எதிரே அமர்ந்து இருக்கவும்.. எதிரே இதே போல கடந்த கால "தான்" வந்து துப்பாக்கி நீட்டி சுடப் போகும் சம்பவங்கள் மீண்டும் தன் வாழ்வில் நடந்தாலும் பரவாயில்லை ) என்று இப்போது கொன்று விடுகிறான்...

பின் ... . அதே உண்மைக் கதையை எழுதி முடிக்கையில் "ஜேன்" என்று பெயரிடப்பட்டு பின் அதை அழித்து "ஜான்" என்று எழுதி விட்டு எழும் போதுதான் அவனின் நெஞ்சு வயிறு பகுதிகளில் இருக்கும் அறுவை சிகிச்சைக்கான தழும்புகள் காட்டப் படுகின்றன... . அப்போதுதான் நமக்கு இந்த பார்மேனும் ஜானும்(ஜேன்) தான் என்று புரிகிறது.. அப்போதுதான் ஜானின் முகம் எரியும் முதல் காட்சி நம் மனதின் முன்னே விரிகிறது... அப்போது தான்... விளங்குகிறது...

அட்டகாசமாக திரைக் கதை ... . மிகவும் சிரமம் கொண்ட நகருதல்.. கொஞ்சம் குழம்பினாலும் மிகப் பெரிய குழப்பத்தை கொண்டு சேர்த்து விடும் கிளைக் கதைகள் கொண்ட கதை இது... நேரான அணுகுமுறையில் மிக தெளிவான பிரமிக்கின்ற படைப்பு.. இந்த "பிரிடெஸ்டினேசன்... "படம் பார்த்து முடிகையில், இது லாஜிக்கே இல்லாத கதைதான் என்று ஒரு துளி கூட மனதில் எழவில்லை... இதுவே இக் கதையின் மாபெரும் வெற்றி... மனிதன் அகம் கணக்கிடமுடியாத ஆழம் மிக்கது..அதற்குள் ஒரு ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை, ஒரு குற்றவாளி, ஒரு நல்லவன்.. ஒரு தேடல் கொண்டவன், ஒரு அறிவாளி, ஒரு முட்டாள். ஒரு சோம்பேறி, ஒரு தலைவன், ஒரு உணர்ந்தவன், ஒரு ஒன்றுமேயில்லாதவன் .. என்று நிறைய ஒருவன் இருந்து கொண்டே இருக்கிறார்கள்... ... அவர்கள் ஒவ்வொருவராக காலத்தின் கையில் அகப்படுவதே சரி... . ஒரே சமயத்தில் அகப்பட்டால்... ...

பிரிடெஸ்டினேசன்... ..

- கவிஜி

Pin It