முன் குறிப்பு: பொது மக்களிடமிருந்து பணம் வசூலித்து எடுக்கப்பட்ட முதல் கன்னடப் படம் இது. வெறும் 70 லட்சம் ரூபாய் செலவில் இப்படியொரு படத்தினை எடுத்து விட முடியும் என்று திரைப்பட உருவாக்கத்தில் என்னை வியப்பில் ஆழ்த்தியது இப்படம். சரி கதைக்கு வருவோம்.

“கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையேயான மிகப்பெரும் முரண்” இதுதான் இப்படத்தின் ஒன்லைன். லூசியா என்பது ஒரு மாத்திரை... அந்த மாத்திரையை உட்கொள்பவர்களுக்கு புது விதமான ஒரு போதை கிடைக்கும், அதாவது நிஜ உலகை விட்டு கனவுலகுக்கு அது நம்மை அழைத்துச்செல்லும். நிஜ உலக வாழ்க்கை மீதான பற்றுதலற்ற ஒருவன் அப்படியான கனவுலகத்தைத் தேடுகிற கதைதான் இது. மெச்சக்கூடிய சவாலான திரைக்கதை வடிவம்தான் இது. இத்திரைக்கதையில் மயிரிழை அளவு சுணக்கம் ஏற்பட்டிருந்தாலும் கூட படம் அவ்வளவுதான். கதை ஒரு புள்ளியில் துவங்கி அந்தப் புள்ளியின் வழியிலேயே பயணமாகிக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு அதிர்ச்சி, நாம் எந்தப் புள்ளியில் பயணித்தோமோ அது கதைக்கான புள்ளி அல்ல. கதைக்கான புள்ளி வேறொன்று என்பது தெரிய வரும்போது நம்மையும் மீறி ஒரு கைத்தட்டலோ, ச்சே....வோ வந்து விடுகிறது.

(தவிர்க்க முடியாத காரணத்தால் கதையை சொல்ல நேரிடுகிறது) கதை நாயகன் நிக்கி, சங்கர் அண்ணனது திரையரங்கில் டார்ச் லைட் கொண்டு பார்வையாளர்களின் இருக்கையைக் காட்டுபவனாய் பணி புரிந்து வருகிறான். தூக்கமின்மையால் தத்தளிக்கும் அவனுக்கு ஒரு மாத்திரை கிடைக்கிறது. லூசியா என்ற அந்த மாத்திரையை அவன் உட்கொண்டதும் அவனது கனவுலகம் தன் வாசலைத் திறக்கிறது. அதிலிருந்து கதை இரண்டு பாதைகளில் பயணப்படுகிறது. ஒன்றில் நிக்கி திரையரங்க ஊழியர், மற்றொன்றில் நிக்கியோ லட்சாண லட்ச ரசிகர்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு நடிகன். இரண்டாவது பாதியில் பயணப்படும் கதை முழுக்கவே கறுப்பு வெள்ளையாகக் காட்டப்பட்டிருக்கிறது. சாதாரண திரையரங்க ஊழியன், திரைப்பட நாயகனாக கற்பனையில் உலவ விட்டிருக்கிறது இந்த லூசியா என்றவாறு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. டார்ச்மேன் நிக்கி ஒரு முறை ஸ்வேதாவை எதேர்ச்சையாக சந்திக்கிறான். பீட்சாக் கடையில் பணிபுரியும் ஸ்வேதாவைக் கண்டதும் அவனுக்குள் காதல் மலர்கிறது. அவன் லூசியாவை உட்கொள்கிறான் திரை மறுபடியும் கறுப்பு வெள்ளையாக மாறுகிறது அதில் ஸ்டார் நிக்கி. டார்ச்மேன் நிக்கி கண்ட அதே ஸ்வேதாவை ஸ்டார் நிக்கியும் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் பார்க்கிறான். இப்படியாக இரண்டு வேறுபட்ட பாதைகளில் கதை பயணித்தாலும் பாத்திரங்கள், சம்பவங்கள் என இரு உலகத்திலும் ஒற்றுமை இருக்கிறது. இப்படியாக படம் முழுக்க இரண்டு பாதைகள் மாறி மாறி நகர இந்த இரண்டு பாதையில் எது நிஜ வாழ்க்கை எது கனவுலக வாழ்க்கை என்கிற கேள்வியை பிற்பாதியில் இத்திரைக்கதை ஏற்படுத்துகிறது. அதற்கான பதிலையும் திரைக்கதையே அழகாகச் சொல்லி விடுகிறது.

ஏழை டார்ச்மேன் நிக்கியாகட்டும், பணக்கார ஸ்டார் நிக்கியாகட்டும் இரு வேறான வாழ்க்கைகள் இருந்தாலும் இரண்டு வாழ்க்கைக்குள்ளும் முரண்களும், நிராசைகளும் இருக்கவே செய்கிறது என்பதை தெளிவாய் விளக்கியிருக்கிறது இத்திரைப்படம். எத்தரப்பு வாழ்க்கையாகட்டும் மனித வாழ்க்கைக்கே பிரச்சனை என்பது பொதுவானது என்ற கூற்றினைக் கூறியிருக்கிறது. தியேட்டரே நட்டத்தில் நகர்ந்தாலும் கன்னடப் படத்தைத் தவிர்த்து வேறெந்த படத்தையும் திரையிட மாட்டேன் எனச் சொல்லும் திரையரங்க உரிமையாளர் சங்கர் கதாப்பாத்திரத்தின் மூலம் ஒரு தேசிய உணர்வை மேலோட்டமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இரண்டு நிக்கிகளுக்கு ஒரே பிரச்சனைதான் அது காதல். டார்ச்மேன் நிக்கி பீட்சா கடையில் வேலை பார்க்கும் ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்வதற்காக பெண் கேட்டு செல்கிறான். ஸ்வேதாவோ இவனது குறைந்த வருமானத்தில் பிழைப்பை நகர்த்த முடியாது என்பதனை உணர்ந்து இவனை நிராகரிக்கிறாள். கறுப்பு வெள்ளையாக திரை மாறுகிறது அதில் ஸ்டார் நிக்கிக்கும், ஸ்டார் ஸ்வேதாவுக்கும் காதல் துளிர் விடும் காட்சிகள். இப்படியாக டார்ச்மேன் நிக்கியின் வாழ்வில் நடக்காதவைகளெல்லாம் ஸ்டார் நிக்கியின் வாழ்க்கையில் நடந்தேறி விடுகின்றன. டார்ச்மேன் நிக்கியின் தான் எதார்த்தத்தில் நடத்தி விட முடியாததை தன் கனவுலகத்தில் நிகழ்த்திக்காட்டுகிறான் என்பது போலாகவே திரைக்கதை நகர்கிறது. தன்னை நிராகரித்ததற்கான காரணத்தைக் கேட்டு வரும் டார்ச்மேன் நிக்கியை, ஸ்வேதா முகத்தில் அறைந்தாற்போல சில உண்மைகளை எடுத்துரைக்கிறாள். “8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் என்னாலேயே முழுமையான வாழ்க்கையை வாழ முடியவில்லை தியேட்டரில் டார்ச் அடித்து 3 ஆயிரம் ரூபாய் வாங்கும் உன்னைத் திருமணம் செய்து கொண்டால் நெருக்கடியான வாழ்க்கையைத்தான் வாழ முடியும்” என்பதே ஸ்வேதா அவனிடம் எழுப்பிய கேள்வி. ஸ்வேதா சொன்னதை உண்மை என ஏற்றுக்கொண்ட நிக்கி அவளிடம் “உங்களுக்கும் சில கனவுகள் இருக்கும்... தியேட்டரில் டார்ச் அடிப்பவனுக்கு வாக்கப்பட யாருக்குத்தான் ஆசை வரும்” என்று கூறி விட்டுச் செல்கிறான். இதன் பிறகு ஸ்வேதாவுக்கு நிக்கி மீது காதல் மலர்கிறது. ஸ்வேதா நிக்கியை முழுமையாக மாற்ற நினைக்கிறாள். ஆங்கிலம் தெரிந்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என அவனை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறாள். சங்கர் அண்ணனது திரையரங்கை விட்டு விடும்படி கூறுகையில் இருவருக்கும் பிளவு ஏற்படுகிறது.

ஸ்டார் நிக்கி- ஸ்வேதா காதல் இனிமையாய் நகர்ந்து கொண்டிருக்க, ஸ்வேதா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது பெரும் இடி விழுகிறது. பிரபல திரைப்பட நடிகர் நிக்கியோ தனக்கு சொந்தமாகப் போகும் ஒருத்தி கதாநாயகியாவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். இதை ஒரு விதத்தில் ஆணாதிக்க மனோபாவம் எனவே கொள்ளலாம். இப்படியான சூழலில் ஊருக்குச் சென்று வருவதாகப் பொய்யுறைத்து ஸ்வேதா சினிமாவில் நடிக்கிறாள் இதனால் இவர்களுக்குள் பிளவு ஏற்படுகிறது.

டார்ச்மேன் நிக்கி காதலில் வாழ்க்கை என்பதைக் கட்டமைக்க முதல் தேவையாக பொருளாதாரம் இருக்கிறது என்பதும், பொருளாதார வலிமையில் திளைக்கும் ஒருவனது வாழ்க்கையை ஆதிக்க மனப்பான்மை சீர்குலைக்கிறது என்பதும் காட்டப்படுகிறது. இப்படியான சுழற்சியில் இரு வேறுபட்ட வாழ்க்கையில் எது நிஜ உலகம் எது கனவுலகம் என்கிற கேள்வி நம்முள் எழுகிறது. டார்ச்மேன் நிக்கி என்பவன் கனவுலகில் ஸ்டார் நிக்கியாக உருமாறி வாழ்கிறான் என்கிற புள்ளியில் தொடங்கிய திரைக்கதை அப்படியே அந்தர் பல்டி அடிக்கிறது. அதாவது ஸ்டார் நிக்கி தன் கனவுலகில் டார்ச்மேன் நிக்கியாக உருமாறுகிறான் என்கிற உண்மை இறுதிக் காட்சியில்தான் விளக்கப்படுகிறது.

ஸ்வேதாவுடனான காதல் பிரிவுக்கு பின்னர் தனிமையையும் லூசியாவையும் மட்டுமே விரும்பும் ஸ்டார் நிக்கி அவனது கனவுலகில் அவனை டார்ச்மேனாக கற்பனை செய்து கொண்டு அதைத் தன் வாழ்க்கையோடு பொறுத்திப் பார்க்கிறான். “எத்தனையோ தடவ தியேட்டருக்குப் போறோம் இருட்டுல நிக்கிற நமக்கு டார்ச் அடிச்சு வெளிச்சம் காட்டுறவனோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாம யோசிச்சதுண்டா?” என்று ஸ்டார் நிக்கி கேட்கும் அந்த ஒற்றைக் கேள்வியே படத்தினைத் தூக்கி நிறுத்துகிறது. டார்ச்மேன் சினிமா கதாநாயகனாக விரும்புவது இயல்பு ஆனால் ஒரு கதாநாயகன் டார்ச்மேனின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க நினைத்த விதத்திலும், அதனை சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்திச் சென்ற விதத்திலும் லூசியாவை இன்னும் பல முறை பார்க்கத் தூண்டுகிற‌து.

Pin It