குடும்பத்துடன் படம் பார்க்கலாமா? வேண்டாமா? என்று தயங்க வைக்கும் படம்; பெயரைக் கேட்டவுடனே பெண்கள் முகம் சுழிக்கும் பெயர், “மதுபான கடை”…..

ரசிகர்களை நோக்கி சொடுக்கு போட்டு பஞ்ச் வசனங்கள் பேசும் கதாநாயகன் இல்லை, தொடைகள் தட்டி சவால் விடும் ஹீரோத்தனம் இல்லை, பக்கம் பக்கமாய் வில்லத்தனம்; நமது போதையர்களை கவரும் கவர்ச்சி நடிகைகளின் குத்துப் பாட்டும் இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் பேசும் நகைச்சுவைக் காட்சிகளும் இல்லை…….

“அரசு மதுபான கடை”
“குடியின்றி அமையாது உலகு”

madhubana_kadai_640

படத்தின் பெயரும் அதன் துணைத் தலைப்பும் இரண்டு வரிக்கவிதை போல இருக்கின்றது.. முரண்களில் மட்டுமே அரசியல் நடத்தும் ஆளும் கட்சிகளும், எதிர்கட்சிகளும் “மக்களின் குடிப்பணத்தில்” அரசாங்கம் நடத்தும் “குடியாட்சி” தத்துவத்தில் மட்டுமே புரிந்துணர்வுடன் செயல்படுகிறது.

தணிக்கை துறையின் வெட்டுக்களில் மாண்டு போன பல வசனங்கள், காட்சிகளுடன் சேர்த்து “அரசு” என்ற வார்த்தையும் தலைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மதுபான கடை என்ற தலைப்பில் வரவேண்டிய “க்” தெரிந்தே தவிர்க்கப்பட்டுள்ளது. காரணம் பெரும்பாலான அரசு மதுபானக் கடைகளின் விளம்பரப் பலகைகளில் இந்த இலக்கணப் பிழையை நாம் கவனிக்கலாம்… படத்தின் எதார்த்தமும் இதில் இருந்தே தொடங்குகிறது.

மருத்துவச்சியும் இல்லை, மருத்துவமும் இல்லை, மருத்துவமனை திண்ணையிலேயே நலமாக பிள்ளை பெற்ற தாயின் வேதனையும், மகிழ்ச்சியும் ஒரு சேர பெற்றிருப்பார் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கமலக்கண்ணன்.

சென்னை நகரத்தில் திரையரங்குகள் கிடைக்காதவாறு வந்த மிரட்டல்களை எல்லாம் கடந்து, சில குறிப்பிட்ட அரங்குகளை மட்டுமே வாடகைக்கு எடுத்து ஓட்ட வேண்டிய கட்டாயத்துடன் பெரும் விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் வெளிவந்த இந்த படம் குறுகிய காலத்திலேயே தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

ஒரு இடத்தையோ அல்லது ஒரு சம்பவத்தையோ மையமாக வைத்து முழுப்படத்தையும் நகர்த்தும் கதைப்போக்குடைய தமிழ் திரைப்படங்கள் மிகக்குறைவு. அப்படி வெளிவரும் திரைப்படங்கள் என்பது பொதுவாக ஒரு பரிசோதனை முயற்சியாகவோ அல்லது விருதுக்காக எடுக்கப்படும் படமாகத்தான் இருக்கும்.
 ஆனால் கால்கள் தள்ளாடியபடி திரையில் நடந்து போகும் “குடிமக்களின்” காட்சிகள் தொடங்கி, படம் எப்பொழுது முடிந்தது என்று ரசிகர்கள் முழித்துக் கொண்டு இருக்கும் வரையிலும் தொய்வில்லாமல், ரசிகர்களின் ஆரவாரங்களுக்கிடையே படம் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

விடுமுறை நாளான காந்தி ஜெயந்திக்கு முந்தைய தினத்தில் ஒரு மதுபான விடுதியில் நடக்கும் ஒரு நாள் நிகழ்வுகள் தான் இந்தத் திரைப்படம். பலவிதமான சமூகப் பின்புலங்களுடன் வரும் பலவிதமான மனிதர்களின் உணர்வுகளையும், அவர்களின் வாழ்வியல் சார்ந்த பிரதிபலிப்புமே இந்தத் திரைப்படம். மற்றபடி குடி குடியைக் கெடுக்கும் என்றோ, அல்லது குடிப்பதை வலியுறுத்தும் போதனைகளை செய்தியாக சொல்லவில்லை.

மதுபானக்கடை, குடிக்கும் விடுதிகள் என எல்லாமே மிகவும் தத்துரூபமாக வடிவமைத்துள்ளார் வினோத் மிர்தா.. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் குடிப்பழக்கம் உள்ள ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக தனது வாழ்நாளில் எங்காவது கடந்திருப்பான்.

படத்தில் மிகவும் பேசப்படக்கூடிய பெட்டிசன் மணி பாத்திரத்தில் கவிஞர் என்.டி.இராஜ்குமார் நடித்துள்ளார். ஒரு பெரும் கலைஞனுக்கே உண்டான மிக நுட்பமான பாவனைகளை மிகவும் சரியான விகிதத்தில் வெளிப்படுத்துகிறார். மிதமான போதையின் தள்ளாட்டத்தை கண்களிலும், குரல்வளத்திலும் வெளிப்படுத்தும்போது அவரின் இயல்பான நடிப்பு மெருகூட்டி காட்டுகிறது.

என்.டி.இராஜ்குமார் அவர்கள் எழுதி, பாடிய அனைத்து பாடல்களும் ஈர்க்கும் மந்திரசக்தி கொண்டவையாக இருக்கிறது. அவரின் கவிதைகளில் அதிகமாக பயன்படுத்தும் காகம், குதிரை, பாம்பு என்ற தனித்துவம் வாய்ந்த உருவகங்கள் இந்தப் படத்தின் பாடல்களிலும் பயன்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பு.

“கோடிக்கால் பூதம்” உலகில் உள்ள எல்லா தொழிலாளிகளையும் இணைத்து ஒருமைப்படுத்தும் ஒற்றை வார்த்தை. இந்த வார்த்தையை காட்சியாக உருவகப்படுத்தினால் அதனை ஒளிப்பதிவு செய்வதற்கு உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படும் அத்தனை பிரமாண்டத்தை இந்த ஒற்றைவரி கொண்டுள்ளது. போதைக்கும் வண்ணம் இருக்கிறதா? “மஞ்சள் நிற போதையிலே, கட்டறுந்து போகையிலே என்னுடைய தேவதைகள்" வார்த்தைக்கு வார்த்தை போதை ததும்புகிறது.

madhubana_kadai_400“கல்லு குளம் வெட்டி ராமன் குளிச்சதும்” என்ற பாடல் நாம் அறிந்திராத பல்குடிகளின் வரலாற்றுத் தகவல்களைத் தருகிறது. பாடல்களின் கவித்துவத்திற்கு எந்த காயமும் இல்லாமல் மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார் வேத் சங்கர் சுகவனம். 'பூ' ராமு அவர்களின் உற்சாகமான நடிப்பும் பெரிதும் பேசப்படக்கூடியதாக உள்ளது. விளிம்பு நிலை மனிதர்களின் கவிஞர் என்.டி.இராஜ்குமார். அவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ஐயப்பன். கலை இலக்கியப் பெருமன்றம் தந்த இரு அற்புதமான கலைஞர்கள் என்.டி.இராஜ்குமார் மற்றும் இந்தத் திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய ஐயப்பன்.

துப்புரவு தொழிலாளியாக வரும் துணை இயக்குனர் குமார் “நாங்கெல்லாம் செய்யுற வேலைக்காக குடிக்குறோம்…. நீங்க இருந்ததை நீங்களே திரும்பி பார்க்க மாட்டீங்கடா” என்று அனல் பறக்க ஆவேசப்படும் காட்சியில் கோபமும் அதற்கு மிக சமீபத்தில் பொருமிக்கொண்டிருக்கும் விசும்பலையும், கலவையாக வெளிப்படுத்தும் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.

“சார் இந்த பொண்ணுங்க யாரையும் நம்பாதீங்க சார்" என்று அழுது புலம்பும் துணை ஒளிப்பதிவாளர் ஜனா நடித்துள்ளார். “கோகி கோகி” என்று அவர் போடும் மொக்கையில் பெட்டிசன் மணி அலறியடித்து ஓடும் காட்சி சிறப்பான நகைச்சுவை.

மதுபான கடை திரைப்படத்தின் உயிர் மூச்சே வசனங்கள் தான். சிறிதும் சமரசம் இல்லாமல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் ஐயப்பன். படத்தின் ஒவ்வொரு வசனத்திற்கும் மக்கள் விசில் அடித்து, கை தட்டி ஆமோதிப்பது இவர் எழுதிய வசனங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். யதார்த்தமான ஒவ்வொரு வசனத்திலும் பெரும் அரசியல் பொதிந்துள்ளது. ராமர், அனுமராக வேடமிட்டு குடிப்பதற்கு மதுபானக்கடைக்கு வரும் பாத்திரங்களில் எவரும் பேசத்துணியாத அனல் பறக்கும் வசனங்களை வெளிப்படுத்தியுள்ளார் ஐயப்பன். நேரடியான கருத்துத் திணிப்பாக இல்லாமல் வசனங்கள் மூலம் அதைப் பற்றி சிந்திக்கும் வேலையை ரசிகர்களிடமே கொடுத்துவிடுகிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு காதல் காட்சிகள் எல்லாம் அவசியமா என்று ஐயப்பனிடம் கேட்டதற்கு, "பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் ஆதிக்கசாதி கதாநாயகர்கள் இஸ்லாமியப் பெண்களையோ அல்லது தலித் பெண்களையோ காதலிப்பதாக மட்டும் தான் இருக்கும். ஏன் ஒரு இஸ்லாமிய கதாநாயகனோ அல்லது தலித நாயகனோ ஒரு ஆதிக்கசாதி பெண்ணை காதலிக்கக் கூடாது?. இந்த படத்தில் மதுபான விடுதியில் வேலை பார்க்கும் ரபிக் என்ற இஸ்லாமிய இளைஞன், ஆதிக்க சாதி வகுப்பைச் சேர்ந்த மதுபான விடுதி உரிமையாளரின் மகளைக் காதலிப்பார்… அவர்கள் ஏன் முத்தமிட்டுக் கொள்ள கூடாது.?..அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம் என்பது கூட ஒரு பூங்காவோ அல்லது கடற்கரையோ அல்ல. அது மதுபான விடுதியை ஒட்டியுள்ள ஒரு மூத்திரச்சந்து தான். அவர்கள் அதைத் தாண்டி பொதுஇடங்களில் சந்திக்கவே முடியாது.

முருகேசன், ரபிக் இருவரும் மதுபான விடுதியில் வேலை பார்க்கும் இளைஞர்கள். இதில் முருகேசன் தலித் அடையாளத்துடன் காட்டப்படும் இளைஞர். எதிரிகள் போல சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இருவரும், ஒரு கட்டத்தில் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள். அதேபோல படம் முடியும் காட்சியில் ஆதிக்கசாதி நபருடன் நடக்கும் பிரச்சனையில் துப்புரவு தொழிலாளியுடன், பொதுவுடமை சித்தாந்தம் பேசும் பெட்டிசன் மணி, முருகேசன், ரபிக் என ஓரணியில் நிற்பதுமாக வரும் காட்சியும் கூட ஒரு அரசியல் தான்" என்கிறார்.

பெரும் மோதல் ஒன்று வெடிக்கப் போகிறது என்ற நிலையில் “சமரசம் உலாவும் இடமே" என்று எதிர்மறையான ஒரு பாடலுடன் மதுபான விடுதியிலிருந்து விடைபெறுகிறது இந்த படம்.

பலவிதமான மனிதர்களை சந்திக்கும் மதுபானக்கடைகள் ஒரு மினி தேசம். அங்கு 'குடி' மக்களின் மூலமாக ஒரு தேசத்தின் நிலையை பிரதிபலிப்பது தான் இந்த படத்தின் சிறப்பம்சம். தமிழக திரைவரலாற்றில் புதிய முயற்சி மதுபான கடை.

Pin It