தமிழின் திரைப்படத்தளத்தில் ஜனரஞ்சகப்படம் என்பதன் முழு அர்த்தத்தையும் விளங்கிக் கொள்ளாத போக்கு இன்றுவரை தொடர்கிறது என்பதை சமீபத்தில் வெளியாகியிருக்கும் பில்லா - 2 படத்தை முன்வைத்துப் பார்க்கலாம். Commercial (வணிகத்தன்மை) என்னும் பதம் இங்கு ஜனரஞ்சக ரசனை என்னும் பார்வையில் படிந்திருக்கிறது.

billa_ajithஅடிதடி, வெட்டுக்குத்துக்கள், மாஃபியா கும்பல், கள்ளக்கடத்தல் பற்றி எடுப்பதெல்லாம் ஜனரஞ்சகப் படங்கள் என்றும், குடும்ப உறவுகள், காதலில் இழையோடும் நுட்பமான பிரச்னைகள், ஆண்பெண் உறவுகளில் வெளிப்படும் சிக்கலான படிமங்கள் பற்றி எடுப்பதெல்லாம் தரமானபடங்களைப் போலவும் ஒருதோற்றம் கட்டமைந்து கொண்டிருக்கின்றது.

இந்தப் போக்கு தமிழ்த்திரைப்படச் சூழலை ஆரோக்கியமற்ற தன்மைக்கு இட்டுச் செல்லும் என்பதுதான் வெளிப்பாடு. ஏனெனில் ஜனரஞ்சகப் படங்கள் என்பவை இவர்கள் சொல்வது போல தர்க்கபூர்வமான காட்சியமைப்புகளோ, யதார்த்தமான கதைப் பின்னணியோ இல்லாமல் கண்டமேனிக்கு ராமநாராயணன், பேரரசு பாணியில் தறிகெட்டு ஓடுவதல்ல. மாறாக முருகதாஸ், மணிரத்னம், வசந்தபாலன் போன்றோரது பாணியில் தர்க்கபூர்வமாகவும்(Logic) அழகியலாகவும், ஜனரஞ்சக சுவாரஸ்யத்தோடும் கட்டமைபவை. இவைகளையே மிக அற்புதமான ஜனரஞ்சகப் படங்கள் என்று கொள்ளலாம்.

ஆனால், இந்த ஜனரஞ்சகக் கருத்துருவாக்கத்தின் பின்னால் மாபெரும் அரசியல் நுட்பங்கள் இயங்குவதை அவதானிக்கலாம்.

1. “இது சத்தியமாக ஆர்ட் பிலிம் இல்லை...” என்று தனது படங்கள் பற்றி கமலஹாசன் அடிக்கடி சொல்வதன் காரணம், கலைப்படங்கள் என்றால் ஓடாது; முக்கியமாக, வினியேதாகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள்; அதிக எண்ணிக்கையில் உள்ள ஜனரஞ்சகப் பார்வையாளர்கள் படத்திற்கு வரமாட்டார்கள் என்பது ஒருகருத்து.

2. ஆனால், அதற்காக தங்களை ‘ஜனரஞ்சக இயக்குனர்கள்’ என்னும் சாதாரணப் படிமத்திற்குள் அடைப்பதை இயக்குனத் திலகங்கள் விரும்புவதில்லை. தாங்கள் அவர்களிலிருந்து மேம்பட்டவர்கள் என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டும். அதற்குக் கலைப்படப் படிமம் ஒத்துவராது; ஆகவே, தரமான பட இயக்குனர்.

3. இதுதான் முக்கியம்: உலகத்திரைப்பட விழாக்களுக்கு ஜனரஞ்சகப்படங்களை அனுப்ப முடியாது. கலைப்படம் அல்லது தரமான படங்களைத்தான் அனுப்பமுடியும்.

4. இன்னும் முக்கியமானது: ஜனரஞ்சகப்படங்கள் என்று சொல்லப்படும் ரஜினி, கமல், ரவிக்குமார், ஷங்கர் பாணிப்படங்கள் பலகோடிகளைத் தாண்டிய மில்லியன் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, அந்தப் பணத்தைப் பெரும் பிரயத்தனத்துடன் வசூல் செய்வதற்குள் பெரும்பாடாகி விடுகிறது. ஆனால், தரமான படங்கள் என்ற போர்வையில், சில கோடி ரூபாய் செலவில் பலகோடி ரூபாய்களை அள்ளி விடுகிறார்கள். ஆக அப்படி ஒரு போக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டுமென்று விரும்புவதன் மர்மம் இது.

இந்தப் பின்னணியிலேயே ஜனரஞ்சகப்படங்களை, ஜனரஞ்சக நடிகர்களை ஆராதிக்கும் போக்கு நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நுண்ணரசியலின் மடிப்புகளினூடே நாம் இதை அணுக வேண்டியிருக்கிறது.

மேலை நாட்டில் இது போன்ற கதைநாவல்களை Pulp fiction என்று அழைக்கிறார்கள். காகித்தை நிரப்பப் பயன்படுத்தும் கூழ்(எழுத்து) என்ற அர்த்தத்தில். அது போல இந்தப்படங்களை Pulp films என்று பெயரிடலாம். இதற்கு தமிழில் ‘மலினமானது’ என்று அர்த்தப்படுவதால் ‘கலகலப்புப்படங்கள்’ என்று சொல்லலாம்.

இந்தக் கலகலப்புப்படங்களின் பின்னணியிலேயே நாம் பில்லாவை அணுக வேண்டும்.

ஈழத்து அகதியாக தமிழ்நாட்டில் தஞ்சமடையும் டேவிட் பில்லா, இங்கு அவமானத்துக்குள்ளாகிறான். வேலை தேடலில், ஒரு முஸ்லீம்பாயின் வேண்டுகோளுக்கிணங்க வைரக்கடத்தலில் ஈடுபடுகிறான். அதன் மறுபக்கத்திலுள்ள திருச்சிற்றம்பலமான இந்துபக்திமானுடன் இணைந்து அத்தொழிலை மேலும் வளர்த்தெடுக்கிறான். லோக்கல் தாதாவாக மாறுகிறான். அதன்பிறகு கோவா மாஃபியா மன்னனான அப்பாஸியுடன் கைகோர்க்கிறான். இந்திய மாஃபியாவாக உருமாறுகிறான். அடுத்த கட்டமாக ரஷ்யாவின் பரோவிய நாட்டில் சர்வதேச ஆயுத வியாபாரம் செய்யும் திமித்ரியுடம் தாவுகிறான். அதுபிடிக்காத அப்பாஸியைக் கொன்றுவிட்டு திமித்ரியிடம் உறவை வளர்க்கிறான். தொழில்முறைப் போட்டியாளர்களை அழிக்கிறான். அவனைப்பிடிக்காத கோவா அரசியல்வாதி திமித்ரியுடன் சேர்ந்து பில்லாவை அழிக்கப்பார்க்க, ஒருகட்டத்தில் இருவரையும் போட்டுத் தள்ளிவிட்டு, திமித்ரியின் ஆயுதக்கிடங்கையும் அழித்துவிட்டு சர்வதேச டானாக உயருகிறான்.

முதலில் இதுபோன்றதொரு கதைத்தளத்தை (கதைக்கருவை அல்ல, கதைக்கரு வேறு, கதைத்தளம் வேறு) கையாள மிகப்பெரும் ஆளுமை வேண்டும். இது வெறும் கள்ளக்கடத்தல் மாஃபியா பிரச்னை அல்ல. கதைத்தளம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு தமிழனுக்கும் மிகமிக நெருக்கமான ஈழப்பிரச்னையும் அகதிகளின் வாழ்வியல் பற்றியதுமானது. ஈழ அகதியைக் காட்சிப்படுத்தும்போது அது குறித்த எந்தவிதமான உணர்வோட்டமும் இல்லாமல் ராமேஸ்வரம் கடற்கரையில், மடித்துக்கட்டிய சாரத்துடன், ஒரு மண்ணென்ணெய்கேன் சகிதம் நடந்து வருவது போலக்காட்டினால் போதுமென்று முடிவு செய்துவிட்டார்கள். அங்கிருந்து துவங்குகின்றன காட்சிக்குளறுபடிகள்.

ஈழத்திலிருந்து வரும் டேவிட்பில்லா ஈழத்தில் என்ன செய்து கொண்டிருந்தான்? துப்பாக்கி தூக்கியவனா? போருக்கு ஆதரவாகவா? மாஃபியாவா? என்பது பற்றியெல்லாம் எதுவுமில்லை. படத்தின் தலைப்பெழுத்துக்கள் போடும்போது அவனது குடும்பப்பின்னணி பற்றிய ஒரு பறவைப் பார்வை புகைப்படங்களாகக் காட்டப்படுகிறது. ஈழத்தின் பின்னணியில் போர்முழக்கம் வந்து வந்து போகிறது. அதெல்லாம் சரி, டேவிட்பில்லா யார்?

யாதோன் கி பாராத் இந்திப் படத்தில் தர்மேந்திரா என்னும் டானை (டான் கலாச்சாரம் இல்லாத காலத்தில்) அறிமுகப்படுத்தும் துவக்கக் காட்சியிலேயே இதை நிறுவியிருப்பார் இயக்குனர், மிகவேகமாக வரும் ரயில். தர்மேந்திரா கறுத்த முகத்துடன் ரயில் பாலத்தின்மீது நின்று வெறுமையாகப் பார்த்தபடி. ரயில் அருகில் வந்ததும், அவர் பாலத்திலிருந்து அதன் மேல்கூரையில் குதித்து ஒருசிறு தடுமாற்றத்துடன் அப்படியே இறுக்கமாக நிற்க, ரயில் அதிவேகமாகப் போகும் காட்சி. படத்தின் போக்கும் கதாபாத்திரத்தின் தன்மையும் உயிரோட்டத்துடன் நகரும்.

சர்ச்சில் தனது அக்காவைச் சந்திக்கும்போது பில்லாவிடமிருந்து துப்பாக்கி கீழேவிழும் காட்சியில்கூட, அதற்குரிய சில அதிவிரைவு சலனக்காட்சிகளில் பில்லாவின் கடந்த காலத்தைப் பூடகமாகச் சொல்லியிருக்கலாம். “அப்பவும் திருந்தலே இப்பவும் திருந்தலே நீ திருந்தவேமாட்டே” என்று அக்காவின் வெறுமையான வசனமாகத்தான் தொக்கி நிற்கிறது.

பில்லா சராசரி மனிதனெனில், தமிழ்நாட்டிற்கு வந்து மாஃபியாவாக உருமாறுவதற்கான மனோதிடம் எப்படி வாய்க்கிறது? இயக்கப்பொடியனெனில் அவன் மாஃபியாவாக உருமாறும் தடுமாற்றங்கள் எங்கே? இந்த இடத்தில் அல்பாசினோவின் Scarface படம் ஞாபகம் வருகிறது. அதன் நாயகன் கியூபாவிலிருந்து அகதியாக அமெரிக்காவின் புளோரிடா பகுதியிலுள்ள மியாமி நகருக்கு வருகிறான். அங்கு கடத்தல் கும்பலிடம் சேர்ந்து மிகப்பெரிய மாஃபியாவாகிறான். அதன்மூலம் கிடைக்கும் வருவாயை தனது நாட்டில் நடக்கும் புரட்சிக்கு நிதியுதவி செய்கிறான். அது ஒரு பாத்திரக்கட்டமைப்பின் படிநிலை. இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு படிநிலைகளை அந்தப் படத்தில் காணலாம். ஆனால் பில்லாவில் இதுபோன்ற காட்சிப் போக்குகளோ, உரையாடலோ கூட எதுவுமில்லை.

ஈழஅகதியான பில்லாவோ மற்ற ஈழத்தினரோ ஒருஇடத்திலும் மறந்தும் கூட ஈழத்தமிழ் பேசவேயில்லை.

ஒரு வரலாற்று விஷயத்தையோ, அல்லது வரலாற்றிலிருந்து எடுக்கப்படும் ஒரு மனிதனையோ பற்றிய பார்வையைக் கட்டமைக்கும்போது அதுகுறித்த சமூகப் பிரக்ஞையும் கலாநுணுக்கமும் செயல்படவேண்டும். இப்படியான வரலாற்றுபூர்வமான விஷயத்தை சமீபத்தில் காட்சிப் படிமமாக்கியவராக முருகதாஸைச் சொல்லலாம். போதிதர்மா என்னும் தமிழின் பண்டைய வரலாற்று நிகழ்வை ஏழாம் அறிவு படத்தில் அழகுற வடிவமைத்திருக்கிறார். இது கலைப்படம் போன்ற சீரியஸான விஷயங்களுக்குத்தான் என்று எண்ண வேண்டாம். மேற்குறிப்பிட்டவை எல்லாமே ஜனரஞ்சகப்படங்கள்தான். தனது Godfather நாவலில் இந்த டான் பாத்திரத்தைக் கட்டமைத்ததும் வெற்றிகரமாகச் செயல்பட வைத்ததும் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளரான மரியோ பூஸோ தான்.
 
இதில் டானாக நடித்த மார்லன்பிராண்டோ மற்றும் அல்பாசினோ நூறு பேரை அடிக்கவில்லை. பஞ்ச் வசனம் பேசவில்லை. வன்முறையோடு ரத்தம் கொப்புளிக்கவில்லை. ஆனாலும் இதெல்லாம் ஏற்படுத்தாத சிலிர்ப்பும் பாதிப்பும் படத்தில் உண்டு.

இதில் ஈழத்தமிழனை மேலும் கொச்சைப்படுத்தும் போக்குதான் கட்டமைந்திருக்கிறதே தவிர, அவனுக்கு நியாயம் செய்யும் போக்கு எங்கும் இல்லை. ‘நாங்கள் அகதிகள்தான் அனாதைகள் இல்லை” என்பது கலகலப்பான படங்களுக்கு உகந்த வசனமாக இருக்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் தங்களது மண்ணை இழந்து, உறவுகளை இழந்து, பஞ்சைப்பராரிகளாக அனாதைகளாகத்தான் நின்றிருக்கிறார்கள் என்னும் சுடு உண்மை, கலை இலக்கிய தளங்களிலும், சர்வதேச மனித உரிமை நிகழ்வுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த இடத்தில் அவர் பேசும் வசனத்தை இப்படி வைக்கலாம்: “ஆமா நீங்கள்லாந்தானே அனாதை ஆக்கினீங்க...”

மேலும் உரையாடல்கள் எல்லா இடங்களிலும் எதற்கெடுத்தாலும் பஞ்ச் வசனங்களாகவே நிரம்பி வழிகின்றன. வசனம் என்பது கதையோட்டத்திற்கான அடிப்படை, கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவேண்டியவை என்பதை பெருவாரியான நட்சத்திர நடிகர்களின் வசனகர்த்தாக்கள் மறந்து விடுகிறார்கள்.

“தீவிரவாதிக்கும், போராளிக்கும் ஒரே ஒரு வித்யாசம்தான். ஜெயிக்கிற வரைக்கும் தீவிரவாதி, ஜெயிச்சிட்டா போராளி” என்கிற வசனத்திலும் வெறும் அடுக்குமொழி அபத்தம்தான் ஊடாடுகிறது. போராட்ட உணர்வுகளின் மீது அதிகார பலத்தையும் ஆதிக்க அரசியலின் செல்வாக்கையும் கொண்டு ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து தீவிரவாதம் என்கிற பெயர் கட்டமைக்கப்படுகிறது. ஆக தீவிரவாதத்தையும் போராளியையும் உருவாக்குவது வெற்றி தோல்வி அல்ல; ஆதிக்க அரசியலும் அதிகார பலமும்தான். தமிழின் ஜனரஞ்சக தளத்தில் மிகப் பெரிய போராளி, இயக்குனர் சசிக்குமார்தான்!

இந்த இடத்தில் வசனத்தை இப்படி மாற்றலாமே: “இத்தனை நாளும் தீவிரவாதி... இனிமேல் போராளி”

ஆனால் இப்படியெல்லாம் பஞ்ச் வசனங்கள் இல்லாமலேயே ஒரு வரலாற்று விமர்சனத்தை சிறப்பாகப் பதிவு செய்கிறது ஏழாம் அறிவு. “ஒரு சின்ன நாட்டை ஏழெட்டு நாடுங்க சேர்த்து அடிச்சதுக்குப் பேரெல்லாம் வெற்றியே கிடையாது”

அதேபோல, “மார்க்கெட் ஆயுதங்களுக்கு இல்லே, சாவுக்குத்தான். சாவு இருக்கிற வரைக்கும் ஆயுதங்களுக்கு மார்க்கெட் இருக்கும்” இதுவும் ஒரு அபத்தமான வசனக்குவியல்தான்.

billa_ajith_380இங்கு கருத்து பெறுவது சாவு அல்ல. மனித மனங்களில் விகாரமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஆசை, பேராசை, ஆதிக்க ஆசை. இந்த ஏகாதிபத்திய ஆசையின் விளைவுதான் ஆயுதம், ஆயுதச்சந்தை. பில்லா முதன்முதலில் அண்ணாச்சியிடம் சொன்ன ‘புகழ்பெற்ற’ வசனத்தை ஞாபகப்படுத்தும் போக்கில் (ஆசை இல்லே... பசி) இப்போது அதற்கு தொடர்ச்சி(Lead) கொடுக்கலாம்:

“மார்க்கெட் ஆயுதங்களுக்கு இல்லே, ஆசைக்குத்தான். மனிதனுக்கு ஆசை இருக்கிற வரைக்கும்... ஆயுதங்களும் இருந்திட்டேதான் இருக்கும்... அது தீராத பசி...ஹாஹாஹ்ஹா”

இந்த இடத்தில் கதை வசனகர்த்தாவும், இயக்குனரும், மரண வியாபாரிகளின் சர்வவேச ஆயுத வியாபாரத்தின் பல்வேறு விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு களமிறங்கியிருக்க வேண்டும்.

ஐரோப்பிய நாடுகள் தங்களது ஆயுத வியாபாரத்திற்காக அரபு, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்குள் போர் மூட்டி வைக்கும் சர்வதேச ஆயுத அரசியலின் வலைப்பின்னல் பற்றி, உள்ளூர் புரட்சிகரக்குழுக்களை ஊக்குவித்து வளர்த்து விடுவது... மூன்றாம் உலகநாடுகளின் சிறுசிறு விடுதலைக் குழுக்களைக் குறிவைப்பது... அதேபோல ரஷ்யாவின் உக்ரைனில் இருந்து தயாரிக்கப்படும் ஆயுதங்கள் தரமாகவும் மலிவாகவும் இருக்கும் சூழல்...

இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பான ஹிக்ஸ் போஸோன் என்னும் நுண்துகளின் நிறை, எதிர்காலத்தில் எடையற்ற அதிவிரைவுத் தாக்குதல் கொண்ட அதிநவீன ஆயுதமாக மாறலாம்.

தற்போதைய நவீன காலங்களில் இந்த ஆயுத வியாபாரத்தின் சந்தைப்படுத்தும் முறை மிக நவீனமாக மாறிக்கொண்டிருக்கிறது. குற்றத்தன்மையுடனோ, ரகசியமாகவோ செயல்படுவதில்லை. நவநாகரிகத் தொழில்நுட்பவாயிலாக படுக்கையறைகளில் நுழைகிறது. சமீபத்தில் தரமான தொலைக்காட்சி ஊடகமான ‘டிஸ்கவரி’, ‘எதிர்கால ஆயுதங்கள்’ என்னும் தொடர்நிகழ்ச்சியின் வாயிலாக மிகநுட்பமான முறையில் இந்த ஆயுதங்களின் தொழில்நுட்பத்திறமையை வியந்துபோய் விளக்குகிறது. ‘எதிர்கால ஆயுதங்கள் பற்றிய விழிப்புணர்வு’ என்னும் போர்வையில் ஒரு மிகப்பெரிய ஆயுதச் சந்தையைக் கட்டிஎழுப்புகிறது டிஸ்கவரி ஊடகம். இந்த எதிர்கால ஆயுதங்களைப்பற்றி விளக்குவதற்கு காட்சித் தொகுப்பாளராக மேக்மேக்கோவிஸ் என்கிற முன்னாள் அமெரிக்கக் கடற்படை வீரர் தொகுத்தளிக்கிறார்.

என்ன ஒரு வெளிப்படையான ஆயுத வியாபாரம்...(இதுகுறித்து விரிவாக டிஸ்கவரி சேனலின் ஆயுத வியாபாரம் என்ற எனது கட்டுரையை நேரம் வாய்க்கும்போது படியுங்கள். தமிழில்: (inioru.com/?p=7576) ஆங்கிலத்தில்: (countercurrents.org/siddarthan070712.htm)

இது போன்ற பல்வேறு பரிமாணங்களில் ஆயுத வியாபாரம் குறித்து விரியும் நிகழ்வுகளையும், அரசியலையும் கதையாளரும் இயக்குனரும் அவதானித்திருக்க வேண்டும். (ஒரு ஜனரஞ்சகப் படத்திற்கு இப்படியெல்லாம் நுட்பமான விஷயங்களைத் தெரிந்து கொள்வது தேவைதானா என்ற கேள்வி எழலாம். இன்றைய காலங்களில் திரைக்கதை என்பது ஜெய்சங்கர் காலத்து சிஐடி சங்கர் பாணியல்ல. தமிழ்த்திரை உலகம் தொழில்நுட்பரீதியாக உலகத் தரத்தையும் தாண்டிவிட்டோம் என்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிற நவீனகாலம் இது)

ஆக இந்த நிகழ்வுகளையும், நுட்பங்களையும், சர்வதேச நுண்ணரசியல் போக்கையும் தனது மண்டையில் இறக்கிக் கொண்டு, இவைகளை ஜனரஞ்சகத்தளத்திற்கேற்ற விதத்தில் எவ்வாறு தருவது என்று யோசித்துச் செயல்பட்டிருந்ததால் இது போன்ற மொக்கைப் படமாக வந்திருக்காது.

மேலும், பில்லா என்பவன் இதுபோன்ற ஆயுதக் கலாச்சாரத்தின் போர்ப் பின்னணியிலிருந்து வந்தவன் என்று ஏற்கனவே கதை விட்டாயிற்று. அதற்குப் பொருந்திப்போவது போன்ற ஒரு சூழல் லட்டுமாதிரி கைக்கு வந்ததை நழுவவிட்ட இயக்குனரை என்னவென்பது?

டான் கதை என்பதே பல்வேறு சுவாரஸ்யமான சூழ்ச்சிப் பின்னல்களும், பதுங்குகுழிகளும் கொண்ட பகடையாட்டமாக இருக்கும். தந்திரமான ஆட்டங்கள் (clever game)கொண்ட காட்சிகளின் விறுவிறுப்பு ஒருகாட்சியில்கூட இல்லை. வெறும் துப்பாக்கி சுடுதல்கள் மட்டுமே டான் என்ற படிமத்தை எப்படி ஏற்றுக் கொண்டார் இயக்குனர்? அதுவும் டான் கலாச்சாரத்தை அறிமுகம் செய்வித்து, பல்வேறு தொழில்நுட்பங்களில் கட்டியமைத்து வெற்றிகரமாக வழிநடத்தும் பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகியிருக்கும் சக்ரி டோலெட்டியிடம் புத்திசாலித்தனமான காய்நகர்த்துதல்களோ, புதிர்த்தன்மைமிகுந்த காட்சிகளோ ஒருஇடத்தில்கூட இல்லை. ஒரு கடைநிலைத் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வே மேலோங்குகிறது.

படத்தில் குறிப்பிடப்படும் ஆயுதத்தயாரிப்பு நிலமான பரோவியா வின் நிலப்பகுதியைப்பற்றி அறிந்து கொள்ளும்போது அட்டகாசமான தொழில்நுட்பத் தந்திரங்கள் கொண்ட ஒரு ஆட்டத்தை வடிவமைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ரஷ்யாவின் உக்ரைன் மற்றும் பெலாரஸ் பகுதிகளுக்கிடையில் இருக்கும் பரோவியா என அழைக்கப்படும் ஒரு சிறிய, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியானது, அனைத்து பக்கங்களிலும் கடந்து செல்ல முடியாத மலைகளால் சூழப்பட்ட மற்றும் தொடர்ந்து அடர்த்தியான மூடுபனியுடன் அடைபட்டு நிற்கும் நிலப்பகுதியாகும். இந்தக் காரணத்தினால் கடத்தல், சட்டவிரோத பொருட்களை உற்பத்தி செய்வது போன்ற பணிகளுக்கு நல்வாய்ப்பாக அமைந்து நிற்கிறது.

மூடுபனி நிரந்தரமானதால் விமானப்பயணம் பயன்படுத்த முடியாத கடுமையாக, மேலே காற்று ஒரு பெர்முடா முக்கோணம் போன்ற விளைவை மட்டுப்படுத்துகிறது. அதே சமயம், இந்த பாதிப்பு, பரோவியாவில் செயற்கைக்கோள்கள் ஊடுருவமுடியாதபடி சிக்னல்களைத் தடுக்கிறது. மற்றும் மூடுபனி, கூகுள் வரைபடத்தில் இருந்து எந்த பயனுடைய உருவங்களையும் பெற முடியாமல் செய்கிறது.

இதுதானய்யா டானுக்கேற்ற நிலம்! இதை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் விளையாடியிருக்கலாம்...

இந்தப் பின்னணியைக் கணக்கில் கொண்டு ஒரு தொழில்நுட்பபூர்வமாக, நுணுக்கமாக அதேசமயத்தில் ஷங்கர் பாணியிலான ஜனரஞ்சகத்தன்மையுடன் ஒரு சுவாரஸ்யமான ஆட்டத்தை நிகழ்த்தியிருக்கலாம். பரோவியாவில் உள்ள ஆயுதக்கிடங்கை இரண்டு பேராக அழிக்கும் அபத்தமான காட்சியை அழகாக்கியிருக்கலாம். இன்னும் பற்பல சாகசங்கள்...

எழுத்தாளர் சுஜாதாவின் ‘சொர்க்கத்தீவு’ என்னும் அறிவியல் நாவலில், ஒரு தீவில் வாழும் மனிதர்களை, அடிமைகளாக்கி வைத்திருக்கிறான் ஒரு டான். ஒரு நவீன கணிணியின் உதவியுடன் அவர்களது யோசிக்கும் திறனை அழிக்க வைத்து ஏவலாட்களாக நடத்துகிறான். அந்தக் கணினி ஒருகட்டத்தில் பழுதாகி விடுகிறது. பழுது பார்ப்பதற்காகப் போகும் நாயகன் அந்தத் தீவு மக்களின் சூழலைக் கணக்கில் கொண்டு கனிணிச் செயல் திட்டத்தில் ஒரு சின்னஞ்சிறிய மாற்றம் செய்துவிட்டு வந்துவிடுகிறான். அதன்பிறகு கணினியில் ஏற்படும் மாற்றத்தில் அந்தத் தீவின் எல்லாச் செயல் திட்டங்களும் அழிந்து மனிதர்கள் மனிதத்தன்மை அடைந்து டானை அழிப்பார்கள்.

இது போன்ற தொழில்நுட்ப திரிப்பு வேலையைக் (Technical Twist) கவனத்தில் கொண்டு பல்வேறு பரிமாணங்களுக்குக் கதையை சவாரஸ்யமாக நகர்த்தியிருக்கலாம்.

படத்தில் பங்கு பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமானவராக ஒளிப்பதிவாளர் ராஜசேகரைக் குறிப்பிடலாம்; கதையை எந்தளவுக்கு சொதப்பியிருந்தாலும் அதைப் பூசி மெழுகிய மாதிரி காட்சிகளை கவர்ச்சிநயம் வாய்ந்த கண்களுடன் எடுத்திருக்கிறார்.

காதல் பாடல் இல்லை. நாயக அறிமுகப்பாடல் இல்லை என்ற தெம்பில் யுவன் சங்கர் ராஜாவின் இசை டானின் மனதுக்கேற்ற வகையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் இசைவடிவமான ஹிப் ஹொப் பாணியில் நிறைய இடங்களில் விளையாடுகிறது. கேங்ஸ்டர் பாடலில் இதன் முழுவீச்சும் இறங்குகிறது. மதுரை பொண்ணு பாடலில் அரேபியன் பாணியின் இசை அழகாகத் தூக்கியடிக்கிறது.

திரைக்கதை தடுமாறும் போதெல்லாம் காட்சிக்கோர்வையை மிகச் சாமர்த்தியமாக அழகுபடுத்தியிருக்கிறார் சுரேஸ்அர்ஸ்.

அப்பாஸி, திமித்ரி, கோட்டி போன்ற நடிகர்களின் நடிப்பாற்றல் லாவகமாகவும் சாதுரியமாகவும் பாத்திரங்களுடன் ஒன்றி நிற்கிறார்கள். அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்துக்கொண்டு பல கோடிகளை வீணடித்திருக்கிறார்கள். மேலும், ஜனரஞ்சகத் தன்மை என்னும் கருத்தியலையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். எல்லாப் புகழும் இயக்குனருக்கே!

Pin It