தமிழ் திரைச் சூழலில் குழந்தை நட்சத்திரங்களின் பாத்திரப் படைப்பு மிக செயற்கையாகவே இருக்கும். ஆரம்ப காலங்களில் புராணத் திரைப்படங்களில் முருகன் வேடத்திற்கும், விநாயகர் வேடத்திற்கும் குழந்தைகள் தேவைப்பட்டார்கள். பின்னர், எம்.ஜி.ஆர். படங்களில் வரும் புரட்சி பாடல்களில் அவர் கட்டிப்பிடிப்பதற்காக சில ஏழை குழந்தைகள் (மேலாடையில்லாமல்) தேவைப்பட்டனர். 80-களில், கதாநாயகன், நாயகிக்கிடையே தூது செல்வதற்கு பள்ளிச் சீருடை அணிந்த சிறுவர்கள் தேவைப்பட்டனர். 90-களுக்குப் பிறகு, திரைத்துறையிலும், விளம்பரங்களிலும் மேலதட்டு வர்க்க அடையாளங்களுடன் கூடிய குழந்தைகள் பிரபலமாக்கபட்டனர். திரையுலகம் தான் உருவாக்கிய கதாநாயக பிம்பத்திற்கும், தனக்கு தேவையான வணிக வெற்றிக்கும் சேவை செய்யும் விதமாகவே “குழந்தை நட்சத்திரங்களை” உருவாக்கிக் கொண்டது.

marina_370குழந்தைகளின் உலகத்தை, உளவியலை சரியான முறையில் படம் பிடித்த திரைப்படங்கள் மிக மிகக் குறைவு. ‘பசங்க’ திரைப்படம் சிறுவர்களை கதையின் நாயகர்களாகவும், இளைஞர்களை துணைப்பாத்திரங்களாகவும் கொண்டு உருவான திரைப்படம். அந்த வகையில் ‘பசங்க’ இயக்குனரின் சிறுவர்களை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் ‘மெரீனா'. இத்திரைப்படம் சிறுவர்களுக்கான பிரச்சனைகளை சொல்லும் அதே நேரத்தில், சென்னை பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் புகலிடமாக இருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இதுவரை பேசப்படாத, கவனிக்கப்படாத, விளிம்புநிலை மனிதர்களின் உலகத்தை திரையில் எடுத்தியம்பிய வசந்தபாலனின் வரிசையில் இயக்குனர் பாண்டிராஜ்ஜையும் சேர்க்கலாம். அனைத்து தரப்பினரும் விரும்பும் மெரினா - அறிவிக்கப்படாத குழந்தை தொழிற்சாலையாக இருக்கிறது என்கிற உண்மையை இத்திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது. அதிலும் குறிப்பாக, மெரீனாவில் சுண்டல் விற்கும் சிறுவர்களில் பெரும்பான்மையோர் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி போன்ற தென் மாவட்டங்களில் இருந்தே வருகின்றனர் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. பிற்போக்கு சிந்தனையும், சாதியக் கொடுமையும் அதிகம் இருக்கும் பட்சத்தில் குடும்ப வன்முறைகளும் அதிகமாக நிகழும். குடும்ப வன்முறையின் காரணமாகவே குழந்தைத் தொழிலாளர்கள், பெரும்பாலும் உருவாகின்றனர். இது குறித்து, சமூக ஆர்வலர்கள் ஆழமாக ஆராய்ந்து மாற்றுவழி காண முயற்சிக்க வேண்டும்.

மக்களுக்கு புரியும்படியும், வாழ்க்கைக்குப் பயன்படும்படியும் எழுதப்பட்டுள்ள பழைய பாடல்களை அடிக்கடி இப்படத்தில் இடம் பெறச் செய்வது பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறது. நடுத்தர வயதில் வீராப்புடன் குடும்பத்தை விட்டு வெளியேறி வயது முதிர்ந்தவுடன் உறவுக்காக ஏங்கும் முதியவரின் கதாபாத்திரம் நெகிழ வைக்கிறது. “பக்கடா பாண்டி” என்று சிறுவனின் பெயரை டைட்டிலில் முதலில் போட்டதற்காகவே இயக்குனரைப் பாராட்டலாம். ஏழ்மையான சூழலிலும் நேர்மையாக வாழவேண்டும் என்கிற  “பக்கடா பாண்டி”யனின் பாத்திரப்படைப்பு சிறுவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

marina_620

குழந்தைகளின் மறுக்கப்பட்ட உரிமைகளை பெற்றுத்தர வேண்டிய சமூகப்பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்பதை உணர வைக்கும் இயக்குனரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால், ஆண் பெண் உறவு குறித்த இயக்குனரின் பார்வை மிகவும் மலிவாக இருக்கிறது. கடற்கரைக்கு வரும் காதலர்களைப் பற்றிய தன்னுடைய பார்வையை  ஆண்மொழியுடன் பதிவு செய்கிறார். பணம் இல்லாத எத்தனையோ ஏழைக் காதலர்கள் சுதந்திரமாக தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள கடற்கரையை விட வேறு இடம் கிடையாது என்பதை இயக்குனர் உணர வேண்டும். சுயநலத்துடன் மட்டுமே காதலை அணுகும் இன்றைய கார்ப்பரேட் உலகில் ஆண் பெண் இருவருமே குற்றவாளிகள். ஆனால் இயக்குனரின் பார்வை ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் - ஓவியா காதல் ஜோடியின் காட்சிகள் அனைத்தும் பெண்ணை, போகப்பொருளாகவும் ஆண் வலிந்து ஏற்றுக்கொள்ளும் சுமையாகவும் சித்தரித்திருப்பது மூன்றாம் தர இரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்ததுகிறது.

திரையுலகம் கட்டமைத்த செயற்கையான 'சிறுவர்கள்' பிம்பத்தை உடைத்தெறிந்து புரட்சி செய்த இயக்குநர், காதல் மற்றும் காதலர்கள் மீது அடிப்படைவாத சமூகம் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை மட்டும் ஏன் உடைக்க மறுக்கிறீர்கள்? ஆண் - பெண் உறவு குறித்த உங்கள் பார்வையை மறுவாசிப்பு செய்ய வேண்டும். மற்றபடி உங்களுடய முயற்சிக்கு வாழ்த்துக்கள். பள்ளிக்கூட விடுமுறையில் மெரீனாவிற்கு செல்லும் சிறுவர்களுக்கு மத்தியில் பள்ளிக்கு செல்ல இயலாமல் மெரீனாவில் பல சிறுவர்கள் இருக்கிறார்கள் என்கிற உண்மையை பதிவு செய்த பாண்டிராஜ்க்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It