ஒரு நல்ல இலக்கியம் நல்ல திரைப்படமாக உருவெடுக்கும் சூழல் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அபூர்வமான விஷயம். மிகச்சிறந்த பல சிறுகதைகள், நாவல்கள் தமிழில் இருந்தாலும் அவற்றில் வெகு சிலவே திரைப்படமாகியுள்ளன. ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" (இயக்கம் - பீம்சிங்), சிவசங்கரியின் "நண்டு" (இயக்கம் - மகேந்திரன்), ச. தமிழ்செல்வனின் "வெயிலோடு போய்" ("பூ", சசியின் இயக்கத்தில்), நீல. பத்மநாபனின் "தலைமுறைகள்" ("மகிழ்ச்சி", வ. கௌதமன் இயக்கத்தில்), இப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய இலக்கியப் படைப்புகள் தான் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரு சிறுகதையை, நாவலை படமாக்கும் பொழுது, அவற்றை சிதைக்காமலும், சுவாரசியமாகவும் ஒரு நல்ல திரைப்படமாக உருவாக்குவது அவ்வளவு சுலபமல்ல. இப்படியாக ஒரு சிறந்த கதை சிறந்த திரைப்படமாகவும் உருவாகியிருக்கிறது. அதுதான் "அழகர்சாமியின் குதிரை". கதை வாசித்தபோது ஏற்ப்பட்ட உணர்வு படம் பார்க்கும் போதும் ஏற்படுகிறது.
 
தேனி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் அழகருக்கு (அந்த ஊர் தெய்வம்) திருவிழா எடுப்பது மூன்று ஆண்டுகளாக ஏதேதோ காரணங்களால் தடைபட்டுப் போகிறது. வரும் ஆண்டு திருவிழா நடத்துவதாக ஏற்பாடு. திருவிழா நடக்கும் ஒருசில தினங்கள் முன்னே, அழகரின் வாகனமான மரக்குதிரை  காணமல் போய்விடுகிறது.
 
இது நடந்த ஒருசில தினங்களில் நிஜ குதிரை ஒன்று   வழி தவறி அந்த ஊருக்கு வருகிறது. காணாமல் போன மரக்குதிரை தான் நிஜமான குதிரையாக வந்திருக்கிறது என்று மலையாள மாந்த்ரீகன் புருடாவிட, அதை அப்பாவி கிராமத்து ஜனங்கள் நம்பி விடுகின்றனர். இதற்கிடையே நிஜ குதிரையின் சொந்தக்காரர் (அவர் பெயரும் அழகர்சாமி) குதிரை தேடி ஊருக்கு வருகிறார். குதிரை தன்னுடையது என்று அவர் மன்றாடிக் கூறியும், கிராம மக்கள் அதை கேட்பதாயில்லை. போலீஸ் தலையீட்டால், திருவிழா முடியும் வரை அழகர்சாமியும் அவரது குதிரையும் ஊரில் இருக்க வேண்டும் என்று தீர்மானமாகிறது. அழகர்சாமி தனது குதிரையுடன் அவரது ஊருக்கு திரும்பினால் தான் தனக்கு நிச்சயித்த பெண்ணுடன் திருமணம் நடக்கும். அழகர்சாமி தனது குதிரையுடன் ஊருக்குத் திரும்பினாரா? கிராமத்திருவிழா நடந்ததா? மரக்குதிரையை  யார் திருடியது? போன்ற கேள்விகளுக்கு திரைப்படத்தில் விடை உண்டு.

கதாப்பாத்திரங்களின் தேர்வில் உள்ள நேர்த்தி படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு அசலான கிராமத்தை, கிராம மக்களை, கிராம வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரிப்பதில் படம் பெரும் வெற்றியடைந்திருக்கிறது. இதற்கு பாஸ்கர் சக்தியின் வசனம், இளையராஜாவின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு இவை முக்கிய காரணிகள். படம் நெடுக கதாப்பாதிரங்களின் ஊடே நகைச்சுவை இழையோடுகிறது. ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என்ற வழக்கமான திரைச்சித்தரிப்புகளை, கோட்பாடுகளை (formula) தகர்த்தெரிந்திருக்கிறது இப்படம்.

கிராமத்தில் நிலவும் பல்வேறு சமூக அவலங்களையும் இப்படம் சுட்டிக்காட்டத் தவறவில்லை. படத்தில் ஒரு காட்சி - பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு, குடும்ப வருமானத்திற்க்காக பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும் திருப்பூர் பனியன் கம்பனிகளுக்கு லாரியேற்றி அனுப்பப்படுகிறார்கள். கல்வியுரிமை சட்டம் குறித்தும், அனைவருக்கும் தரமான, சமமான கல்வி குறித்தும்  உரத்த குரலில் பலரும் பேசி வரும் இக்காலகட்டத்தில், இது போன்ற நிகழ்வுகள் நடந்தவண்ணம் தான் உள்ளது. இது போன்ற யதார்த்தங்கள் படம் நெடுக உண்டு.

சாதியமைப்பையும், மூடப்பழக்கவழக்கங்களையும் இப்படம் சாடுகிறது. நேரடியாக எந்த போதனையும் இல்லை. எல்லாம் காட்சி வடிவத்தில். இறுதிக்காட்சியில், அழகர் திருவிழா ஊர்வலத்தில், கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளஞ்சோடி காதல் திருமணம் செய்து கொண்ட செய்தி பரவுகிறது. திருமணம் செய்து கொண்டவர்கள், ஊர்த்தலைவரின் மகனும், ஊர்க்கோடாங்கியின்   மகளும். இதையறிந்த ஊர்த்தலைவர்,"ஜாதி மாறி நடந்த இந்த கல்யாணத்தால இந்த ஊர்ல இனிமே மழையே பெய்யாதுன்னு நான் சபிக்கிறேன்" என்று ஆவேசமாக ஊர் மக்கள் அனைவரின் மத்தியிலும் உரக்கக் கூறுவார். அவர் இவ்வாறு கூறிய அடுத்த கணத்தில் மழை பொழியத்துவங்கும்.

இறுதிக்காட்சிகளில் குதிரை ஊர் மக்களை விரட்டி அடிப்பது போன்ற ஒரு சில செயற்கையான விஷயங்களை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். ஆரம்பத்தில் வரும் "பூவக்கேளு" என்ற பாடல் கதையின் போக்கிற்கு தேவையற்றது என்றாலும்  கண்ணியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

சுசீந்திரன் - பாஸ்கர் சக்தியின் வெற்றிக்கூட்டணியைத் தொடர்ந்து, கோடம்பாக்கத்தின் இளம் இயக்குனர்களும், தமிழகத்தின் இலக்கியவாதிகளும் இணைந்து நல்ல திரைப்படங்களை வழங்கும் போக்கு உருவாக வேண்டும். அத்தகைய ஒரு போக்கு உருவாவதற்கு அடிக்கல்லாக இருக்கிறது அழகர்சாமியின் குதிரை.

Pin It