தமிழகத்தில் சென்னை அடையாறில் உள்ள கல்லூரி உள்ளிட்ட 4 அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன. இவற்றின் ஆசிரியர்களில் ஒருவர்கூட தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இல்லை. அதேபோல் 17 மாவட்டங்களில் அரசு இசைப் பள்ளிகள் உள்ளன. இவற்றிலும் ஒரு தலித் ஆசிரியர் கூட இல்லை. இந்தக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தலித் ஆசிரியர்கள் இல்லாததற்குக் காரணம் தலித்துகளில் இதற்கான தகுதியுள்ளவர்கள் இல்லை என்பதல்ல; மாறாகத் தகுதியுள்ளவர்கள் திட்டமிட்டே, வஞ்சகங்கள் மூலம் தடுக்கப்படுகிறார்கள் என்பதுதான்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இவர்கள் குரலிசை (வாய்ப்பாட்டு) பயின்று, பட்டம் பெற்று, பதிவு மூப்பு அடிப்படையில் மூத்தவர் நிலையில் உள்ளவர்கள். “உயர்ந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தான் படிக்கும் தகுதியுடையதாக நடைமுறைப்படுத்தப் படுகிற கர்நாடக இசையைப் படித்துப் பட்டம் பெற நாங்கள் பட்ட பாட்டை ஏடுகளில் எழுத முடியாது. அந்த அளவுக்குத் துயரங்களை அனுபவித்திருக்கிறோம்” என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான நடைமுறைகள் தொடங்கியதை அறிந்து இவர்களும் முறைப்படி விண்ணப்பப் படிவங்கள் அளித்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி 18 அன்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. 24, 25 தேதிகளில் சென்னையில் கலைப் பண்பாட்டு இயக்க வளாகத்தில் நேர்க்காணல் நடந்தது. “அந்த நேர்க்காணலுக்கு ஒரே ஒரு தலித் விண்ணப்பதாரர் கூட அழைக்கப்படவில்லை. முற்றிலுமாக தலித் பட்டதாரிகள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.”

இவர்களில் சிலர் எப்படித் தள்ளிவிடப்பட்டார்கள் என்பதில்தான் சாதிய மூளையின் சூழ்ச்சி இருக்கிறது. வாய்ப்பாட்டுப் பிரிவில் தகுதி உடையவர்கள் என்ற போதிலும் வேண்டுமென்றே மிருதங்கம், வயலின் ஆசிரியர்களுக்கான பிரிவுகளுக்கான நேர்க்காணலுக்கு இவர்கள் அழைக்கப்பட்டார்களாம். ஒரு வேளை ஆவணப் பிழையாக இருக்கக் கூடும் என்று நினைத்து இயக்கக ஆணையரிடம் முறையிட்டிருக்கிறார்கள். அவரோ பதிவு மூப்புக்கான தகுதி நிலை 1994 ஆம் ஆண்டு வரையில் தான் என்று கூறினாராம்.

அப்படியானால் மிருதங்கம், வயலின் பிரிவுகளுக்கான நேர்க் காணலில் பங்கேற்க இவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது எப்படி? அதுமட்டுமல்ல, இதற்கு முன் சென்ற ஆண்டு செப்டம்பரில் நடந்த நேர்க்காணலுக்கு 2005/06 வரையில் பதிவு மூப்பு உள்ளவர்களும் இணைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். ஐந்தே மாதங்களில் பதிவு மூப்பு 1994 வரையில்தான் என்று பின்னுக்குத் தள்ளப்பட்டது எப்படி?

பயிற்சி பெறாத துறைக்கு அழைத்து, போட்டியில் ஈடுபட வைத்து, வெற்றி பெறவில்லை, அதனால் தேர்ந்தெடுக்கவில்லை என்று கழித்துக் கட்டுகிற நோக்கத்துடன் தான் இப்படியொரு குளறுபடி நடத்தப்பட்டிருக்கிறது என்ற ஐயத்திற்கு முழு வாய்ப்பு இருக்கிறது. கடந்த மாதம் நடந்த நேர்க்காணலில் பங்கேற்ற 9 தலித் பட்டதாரிகளும் இப்படிக் கழிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் தனியார் இசைப் பள்ளிகளில் பணி புரிந்த அனுபவம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். நேர்க்காணல் முடிந்து, தாங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பதையறிந்து பள்ளிக் குழந்தைகள் போல் அழுதுகொண்டே திரும்பியிருக்கிறார்கள்.
இவ்வாறு தகுதி பறிக்கப்பட்ட தலித் இசையாசிரியர்கள் நிறையபேர் மாநிலம் முழுவதும் இருக்கிறார்கள். இதற்கு இயக்ககம் என்ன விளக்கம் தரப் போகிறது? மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றாலாவது தங்கள் வாழ்வில் பூபாளம் இசைக்காதா என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் இவர்கள்.
நன்றி: ‘தீக்கதிர்’ நாளேடு

Pin It