தமிழ்ச் சினிமாவிலும் அவ்வப்போது நல்ல சினிமாக்கள் வந்து விடுகின்றன. நாற்பதாண்டுகளாக பார்த்து பழகி வந்த சினிமாவில், முற்றிலும் மாறுபட்ட சினிமாவாக வந்திருக்கிறது நந்தலாலா. திருவிழாவிற்கு போகையில், குழந்தையை தோளில் சுமந்து ஊரைச் சுற்றிக் காட்டுவதாக சினிமா இருக்க வேண்மென்று ஒரு சினிமாக்காரர் சொல்லியிருந்தார். ஊர் வழியே போகிறோம். நந்தலாலாவின் தோளில் ஏறி.

ஒரு கதை. இல்லை இரண்டு கதை. இல்லையில்லை மூன்று கதை. இல்லவே இல்லை பலகதைகள் இருக்கிறது நந்தலாலாவில். பிடித்தும், பிடிக்காமலும் பல மனிதர்களை கடந்து செல்லும் நமது வாழ்வைப் போல பாஸ்கர்மணியும், அகியும் பல மனிதர்களை கடந்து செல்கிறார்கள். தாயை குறியீடாக வைத்து பிறப்பின் அவசியத்தையும், ரகசியத்தையும் தேடிச் செல்கிறார்கள். தேடிச் செல்லும் அனுபவம் அவர்களை புதுப்பித்து விடுகிறது. பயணத்தின் இறுதியில், மீண்டும் அவர்கள் சந்திக்கும் போது வாழ்வின் அவதானங்களை புரிந்து கொண்டவர்களாக, சினேகத்தோடும், தங்களின் தனித்துவத்தோடும் சாலையில் நடக்கிறார்கள்.

கவித்துவமிக்க சினிமாவாக மட்டுமல்ல, எதிர்கொள்ள சக்தியற்ற சம்பவங்களையும், மனிதர்களையும் அவர்கள் சந்திக்கிறார்கள். யாவற்றையும் விட, தொலைவை கடந்து செல்ல அன்பிற்கினிய மனிதர்கள் அவர்களுக்கு துணை நிற்கிறார்கள். இது தான் நந்தலாலா.

கையில் குழந்தையோடு நிற்கும் மாதா சிலையை பார்த்து கசிந்துருகி நிற்கும் பாஸ்கர்மணி. இருட்டில் நடந்து செல்ல மாதா சிலையின் விளக்குகளை கையில் எடுத்து செல்கிறார். மாதா இருட்டில் இருப்பாளென்று மீண்டும் கொண்டு வந்து சிலையருகே விளக்குகளை வைத்து விடுகிறார்.

மனம் பிறழ்ந்த தன்னை ஐந்து வயதில் மனநல காப்பகத்தில் விட்டுச்சென்று, இருபது வருஷமாக தன்னை வந்து அழைத்துச் செல்லாத தாயை பார்த்து கன்னத்தில் அறைய வேண்டுமெனும் கோபத்தோடு காப்பக சுவர் ஏறி குதித்து, தாய் வாசலுக்கு போகும் தார்ச்சாலையில் வந்து நிற்கிறார் பாஸ்கர் மணி.

அப்பா ஓடிப்போக, அன்றொரு நாளில் அம்மாவும் காணாமல் போக, கண் தெரியாத பாட்டியோடு வாழும் அகிக்கு, மாதந்தோறும் அம்மாவிடமிருந்து கடிதம் மட்டும் வருகிறது. முகவரியை எடுத்துச் கொண்டு யாருக்கும் தெரியாமல் அம்மா இருக்கும் அன்னை வயல் போகும் தார்ச்சாலையில் நிற்கையில், பாஸ்கர்மணியோடு துணை சேருகிறார் அகி என்கிற அகிலேஷ்.

அகியின் பணத்தை திருடன் பறித்துக் கொள்ள, பயணச் செலவுக்கு பணமின்றி, நடந்தே செல்கிறார்கள் காலம் எனும் தார்ச்சாலை வழியே. காலத்தின் குறியீடாக தார்ச்சாலை நீண்டு கிடக்கிறது.

திருடன், போலீஸ், லாரி டிரைவர், கால் ஊனமான மனிதன், சாதி வெறியர்கள், அபலைப் பெண், அவளது குழந்தை, இளநீர் விற்கும் பெரியவர், பள்ளிக்கூடத்து மாணவி, பஞ்சுமிட்டாய்க்காரர், ஆட்டுக்கிடாய் இடையர்கள், மிலிட்டரி சகோதர்கள், குடிகார இளைஞர்கள், ஹனிமூன் தம்பதி, பெண்களை கடத்தும் கும்பல், இறுதியாக பாலியல் தொழிலாளி என இத்தனை பேரையும் சந்திக்கிறார்கள். வெறுப்பையும் சுயநலத்தையும் சுயசந்தோஷத்தையும் குணமாக கொண்ட மனிதர்கள் உண்டு.

இவர்களது பயணத்தில் குறுக்கிடும் மாணவி, தனது சைக்கிளில் வேகமாக வீடு சென்று, டிராக்டரை எடுத்து வந்து சில மணிநேரம் அவர்களோடு குதூகலித்து விளையாடி வழி அனுப்புகிறார். இளநீர் விற்கும் பெரியவர் வாட்டர்கேனில் நிறைய இளநீரை ஊற்றி கையசைத்து விடைகொடுக்கிறார். முரட்டுத்தனமாக அடித்து விட்டொமென்று, பேசாமலே அவர்களோடு கொஞ்ச நேரம் வாழ்ந்து மறைகிறார் லாரி டிரைவர். இப்படியாகத்தான் காட்சிகள் பல சிறுகதைகளாக, கவிதையாக வடிவமெடுத்திருக்கிறது.

சாதி வெறியர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிய பாஸ்கர்மணியிடம் அந்த அபலைப் பெண் கேட்கிறார். “நீங்க என்ன சாதியின்னே’’ என்று. “மெண்டல்’’ என்று கூறுகிறார். பாஸ்கர்மணி. அந்த பெண்ணுக்கு தன்னைக் காப்பாற்றிய எல்லோரும் தன் சாதியாக இருக்குமென்னும் நினைப்பு.

அனேக மனிதர்கள் பிரியத்தோடு பாஸ்கர்மணியையும், அகியையும் நெஞ்சோடு அணைத்து அம்மாவைத் தேடிப்போகும் பயணத்திற்கு கண்ணீரோடு வழி அனுப்புகிறார்கள்.

இருவரின் அம்மாவும் இரு வேறு உலகில் வாழ்கிறார்கள். அகியின் அம்மா இன்னொருவரை திருமணம் முடித்து, அழகான குழந்தையோடு வாழ்ந்து வருகிறார். அகியை தன் மகன் என்று சொல்ல முடியாத, வாரி அணைக்க முடியாத சமூகத் துயரம் நெருப்பு வளையமாக அவரைச் சுற்றி எரிகிறது. வளையத்தை தாண்டாத இவரை குப்பை என காறி உமிழ்ந்து, “உன் அம்மா செத்துப் போச்சு, வா என்னோட அம்மாட்ட போகலாம்’’ என்கிறார் அகியிடம் பாஸ்கர்மணி.

கன்னத்தில் அறையும் கோபத்தோடு தன் அம்மாவைப் பார்க்கும் பாஸ்கர்மணி உறைந்து விடுகிறார். காப்பகத்தில் சேர்த்த நாள் முதல், தானும் மனம் பிறழ்ந்த நிலையில் சங்கிலியால் கட்டுண்டு கிடக்கிறார்! பாஸ்கர்மணியின் அம்மா. ஒன்றைத் தேடிப் போன பாஸ்கர்மணிக்கு உண்மை வேறொரு வடிவமெடுத்து நிற்பது தெரிகிறது. சங்கிலியை கழட்டி எறிந்து அம்மாவை மனநல காப்பத்தில் சேர்த்து விட்டு பலூன் விற்பவனாக தனது புது வாழ்வில் அடி எடுத்து வைக்கிறார் பாஸ்கர்மணி. பாலியல் தொழிலாளியை அம்மாவாக ஏற்று, மீண்டும் பள்ளிக்கு செல்கிறார் அகி.

அன்பு எனும் உண்மையை தேடிப் போகையில் அவர்கள் யதார்த்தமானதொரு உலகை கண்டடைகிறார்கள். மூச்சுக் காற்றை உள்வாங்கிய பலூனும், அழுக்கை மழைநீரில் துடைத்தெடுத்த பெண்ணும் அவர்களது வாழ்வின் துவக்கமாக, அடையாளமாக அமைந்து விடுகிறது.

நாலு பக்கங்களில் எழுதிவிடும் அளவுக்குத் தான் வசனங்கள். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, அத்தனை பாவங்களையும் தனதாக்கி காட்சி வடிவில் கதையை நகர்த்திச் செல்கிறது. ஒரே இடத்தில் இருந்த கேமிரா, பிறகு அங்குமிங்கும் அலையும் கேமிரா, நொடிக்கொருதரம் மாறும் ஷாட்டுகள் என கண்கட்டிவித்தை போல தெரியும் தற்கால சினிமாக்களில் நந்தலாலாவின் கேமிரா தனித்து நிற்கிறது. மனிதர்கள் வருகிறார்கள். அழுகிறார்கள்., பிரியத்தோடு சிரிக்கிறார்கள். வாழ்கிறார்கள் மேலேறி நதி பாய்கிறது. ஆகாயம் பரந்து விரிந்து கிடக்கிறது. கடக்க முடியாத தார்ச்சாலை ஸ்ரீரங்கப் பெருமாளாய் படுத்துக் கிடக்கிறது. இசை குறித்து மாறுட்ட கருத்துக்கள் வந்திருக்கிறது. பாட்டு குறித்தும் அப்படித்தான். பாஸ்கர்மணியாக மிஷ்கின். காப்பக சுவர் ஏறி குதித்து உடை மாற்றும் போதும், போலிசிடமிருந்து தப்பிக்க வெளிக்கி இருப்பதாக நடிக்கும் போதும், நிர்வாணமாக நடித்திருப்பதால் வேறு நடிகர் நடிக்க மறுப்பதாக கூறினார். ஆனால் படம் முழுக்கவே கண்களை உருட்டி, கைகளை ஆட்டி ஆட்டி, வேக வேகமாக நடந்து, கூர்மையாக பார்த்து பாஸ்கர்மணியாக உருவெடுத்திருக்கிறார்.

குழந்தை நடிகர்கள் குறைவோ என்று தான் இதுவரை தோன்றியது. நடிக்க விட்டால் தானே தெரியும். இருக்கிறார்களா? இல்லையா? என்பது இதோ அகியாக நடிக்கும் சிறுவன். அம்மாவைப் பார்க்கும் ஏக்கத்தோடு படம் முழுவதும் வியாபித்திருக்கிறான்.

நெல்லையில் படம் ஓடிய 12ஆம் நாளில் பத்து இருபது பேரோடு படம் பார்த்தோம். கஷ்டம்தான். மனப்பிறழ்வோடு தான் இருக்கிறார்கள். சாலையும், மூடிய கிணறுகளும் அறியாமல் தான் வாழ்ந்து வருகிறார்கள். “உலகமய கலாச்சார தாக்குதல்களை எதிர்கொள்ள நம் மக்களின் சொந்த அறிவை தக்க வைக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்கிற நோம்சாம்ஸ்கியின் வரிகள் தான் ஞாபகம் வருகின்றன.

(இளைஞர் முழக்கம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)

Pin It