திட்டமிடப்பட்ட – அதிகாரப்பூர்வ சுரண்டல், பாகுபாடு, ஜாதிய வெறுப்பு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் – டாக்டர் அம்பேத்கர் போன்ற எவ்வித சமரசத்திற்கும் ஆளாகாத புரட்சிகர தலைவர், மார்க்சிய தத்துவத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்த போதிலும் – தனது நோக்கத்திற்கு ஏற்ற தத்துவ வழியாக ஏன் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை? இக்கேள்விக்கு ஒரேயொரு பதிலை அளித்துவிட முடியாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு காரணம், மார்க்சியம் சாதிய சமூகத்துடன் ஒரு தத்துவமாகப் பொருந்தவில்லை என்பது. மற்றொன்று, சாதி அடிப்படையிலான ஒரு காலகட்டத்திற்கு அதைப் பொருத்துவதன் அபத்தம். இந்து சாதிய சமூகத்தின் வட்டக் குழிக்குப் பொருந்தாத சதுரக் காயாக மார்க்சியம் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேம்பட்ட சமூக – பொருளாதார நிலையை அடைந்த பிறகே மார்க்சியம் பொருத்தமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

ஒரு நடுநிலைப் பார்வையில் டாக்டர் அம்பேத்கரை பொருத்தவரையில், பார்ப்பனிய மார்க்சியவாதிகள் – எவ்வகையிலும் நம்பத்தகாதவர்களாக, ஒரு புதிராகவே இருந்தனர். மார்க்ஸ் தனது தத்துவத்தை இவ்வாறு விளக்குகிறார் : “கம்யூனிஸ்டுகளின் தத்துவ முடிவுகளானது, எதிலிருந்தும் உருவாக்கப்பட்ட அல்லது கண்டுபிடிக்கப்பட்ட, ஓர் உலகளாவிய தீர்வை வழங்கக்கூடிய எந்த ஒரு கொள்கையின் அடிப்படையிலும் இல்லை. அவை பொதுவாக, நமது கண் முன்னால் நடக்கக்கூடிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயக்கத்திலிருந்து தோன்றி, தற்பொழுது நடைபெற்று வரக்கூடிய ஒரு வகுப்புப் போராட்டத்தின் உண்மையான உறவுகளை மட்டுமே விவரிக்கிறது.''

women_560

இந்தியாவில் நமது கண் முன்னால் எந்த வகுப்புகளும் இல்லை. எனவே, மார்க்ஸ் கண்டு ஆராய்ந்ததைப் போன்று, ஒருவர் சமூகப் படிநிலையில் தனது வகுப்பு நிலையினை மாற்றிக் கொள்வதற்கான எவ்விதப் போராட்டமோ, அதன் தொடர்ச்சியாக நாம் கண் கூடாகக் காணக்கூடிய எந்த ஒரு வரலாற்று இயக்கமோ இல்லை. எனவே, தத்துவ முடிவுகளும் அதன் நடைமுறை பயன்பாடுகளும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது.

சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான பணியில் நம் முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பானது, நிலவுடைமைச் சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்தே வளர்ந்திருக்கிறது. நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியானது, முதலாளித்துவ சமூகத்தின் கூறுகளை வெளிப்படுத்தி இருக்கிறது :

1. மூலதனத்தை உருவாக்குதல் 2. இலவச உழைப்பின் உருவாக்கம் 3. உழைக்கும் வர்க்கத்தினரால் உருவாக்கப்பட்ட உள்ளூர் சந்தை மற்றும் தொடர்ந்து விரிவடையும் அதன் தன்மை 4. உற்பத்தி முறையில் குறுக்கீடற்ற மாற்றத்தைக் கொண்ட நடைமுறை 5. சமூகப் படிநிலையில் எல்லையற்ற சமூக மாற்றங்கள் ஆகிய அய்ந்து அடிப்படை சமூகக் காரணிகள்தான், ஒரு நாட்டில் முதலாளித்துவம் உருவாகி, வளர்ந்து, வளம் பெற்று, இறுதியில் அழிவதற்கு ஏற்ற சாதகமான சூழலை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவையாகும். இந்த அய்ந்து காரணிகளையும் மார்க்ஸ் எளிமையாக விளக்குகிறார்.

1 மற்றும் 2 : முற்றிலும் வேறு வகையான பொருள்களை உடையவர்கள் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். ஒருபுறம் பணமுடையவர்கள் உற்பத்தியின் ஆதாரத்தைக் கொண்டவர்கள், தாங்கள் கொண்டுள்ள பணத்தின் மதிப்பை அதிகரிக்கப் பிறரின் உழைப்பை வாங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். மற்றொருபுறம் இலவச உழைப்பை தரக்கூடிய – தங்கள் சொந்த உழைப்பை விற்கக்கூடிய உழைப்பாளிகள். விவசாய உற்பத்தியாளரான உழவரிடமிருந்து நிலங்கள் அபகரிப்பு – இதுதான் உழைக்கும் வர்க்கத்தை உருவாக்கியதற்கான ஒட்டுமொத்த செயல்முறையாகும்.

3. தொழில் உற்பத்திப் பொருட்களுக்கு இந்த இலவச உழைப்பாளிகள், ஓர் உள்ளூர் சந்தையை ஏற்படுத்தியுள்ளனர். தொழில்களின் நிலவுடைமை அமைப்பில் தொழில் உற்பத்தியானது, ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டத்தினரின் ஆளுகையின் கீழ் இருந்தது. அது, புதிய சந்தைகளின் வளரும் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை. சந்தை வளர்ந்து கொண்டே இருந்தது, தேவையும் வளர்ந்து கொண்டே இருந்தது. தனது பொருள்களுக்கு தொடர்ந்து விரிவடையக்கூடிய ஒரு சந்தையின் தேவை காரணமாக, தொழில் முதலாளிகள் ஒட்டுமொத்த உலகப் பரப்பையும் தேடி ஓடினர்.

4. உற்பத்தியின் கருவிகளை புரட்சிகர மாற்றங்களுக்கு தொடர்ந்து உட்படுத்தாமலும், அதன் மூலம் உற்பத்தி உறவுகளையும், அதனோடு சமூகத்தின் மொத்த உறவுகளையும் புரட்சிகர மாற்றத்திற்கு உட்படுத்தாமலும் முதலாளித்துவ வர்க்கம் இருக்க இயலாது. உற்பத்தியை புரட்சிகர மாற்றத்திற்கு தொடர்ந்து உட்படுத்துதல், அனைத்து சமூக சூழல்களையும் இடையூறற்று தொந்தரவு செய்தல், தொடரும் நிலையற்ற தன்மை மற்றும் எதிர்ப்புணர்வு ஆகியவையே முதலாளித்துவ காலகட்டத்தை பிற காலங்களிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.

5. நிலவுடைமை உற்பத்தி முறையிலிருந்து மாறுவது என்பது இரண்டு நிலைகளில் ஆனது. இயற்கையான விவசாயப் பொருளாதாரம் மற்றும் இடைக்கால நகர்ப்புற கைவினைத் தொழில்களின் பொருளாதாரத்திற்கு எதிராக உற்பத்தியாளர் வியாபாரியாகவும், முதலாளியாகவும் மாறுகிறார்.

சமூக மாற்றம் மற்றும் வகுப்புப் போராட்டம் மூலம் சமூக வளர்ச்சிக்கான இந்த அடிப்படைக் காரணிகள் எதுவும் இந்தியாவில் உயிர்ப்புடன் இல்லை. இந்திய சமூகத்தில் இந்த அடிப்படை சமூக, பொருளாதாரக் காரணிகள் இல்லாமல் வகுப்பு மாற்றம் என்பது சாத்தியமா என்பதும், வகுப்புப் போராட்டத்திற்கான தூண்டுகோலாக இருக்கக்கூடிய புதிய காரணி என்னவாக இருக்கும் என்பதும் வெளிப்படையான சிக்கலாகும். மார்க்சின் மொழியில் நாமும் எழுதலாம் – "இங்கிலாந்தில் அது உண்மையே. இந்துஸ்தானில் சமூகப் புரட்சியை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் சுயலாபங்களுக்கானவையே. அதை செயல்படுத்தும் முறை முட்டாள்தனமானது. ஆனால் அதுவல்ல கேள்வி. கேள்வி என்னவெனில், சமூக அமைப்பின் அடிப்படையில் புரட்சி ஏற்படாமல், மனித சமூகம் தனது நோக்கத்தை எட்ட முடியுமா?' இயலாதெனில், மார்க்சின் தத்துவம் இந்தியாவின் தொல்குடி மக்களின் நோக்கத்தை அடைய எவ்வாறு பயன்படும்?

முதல் இரண்டு காரணிகளான உழைப்பை விற்பவர்கள் அதாவது, தங்களின் உழைப்பை விற்பதன் மூலம் மட்டுமே தங்களுக்கான உணவை சம்பாதிப்பவர்கள்; முதலாளிகளாக மாறிப்போன பணக்கார குடும்பங்கள். இவை இரண்டுமே இந்திய சமூகத்தில் பரவலாக இருக்கவே செய்கின்றன. ஆனால், மற்ற மூன்று காரணிகளும் அதாவது முதல் இரண்டு காரணிகளையும் உந்தி தள்ளத்தக்கவையான மற்ற மூன்று காரணங்களும் இந்திய சமூகத்தில் அறவே இல்லை.

மூன்றாவது காரணியாவது, உழைக்கும் வர்க்கத்தினர் ஓர் உள்ளூர் சந்தையை உருவாக்குவது. இங்கிலாந்தில் சொந்த விவசாய நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட உழைப்பாளிகள், தொழிற்சாலைகளில் கூலித் தொழிலாளிகளாக சேர நிர்பந்திக்கப்பட்டனர். அதன் காரணமாக, அவர்கள் தொழில் உற்பத்திப் பொருட்களுக்கு ஓர் உள்ளூர் சந்தையை உருவாக்கினர். "இந்தியாவின் தெய்வீக அடிமைகளின்' வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வியல் விருப்பங்கள் ஆகியவை மனித சமூகத்தில் இருப்பதிலேயே கீழான நிலையில் இருப்பவர்களை விடவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. ஏனெனில், அவர்கள் நினை வறியா காலகட்டத்திலிருந்து மனிதர்களாக நடத்தப்படவேயில்லை. அவர்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வந்திருக்கின்றனர். பிறரின் எஞ்சிய உணவு மற்றும் உடைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டனர்.

எந்தவித சொத்தும் இல்லாத உழைப்பாளிகளாக மட்டுமின்றி, அவர்களின் உழைப்பிற்கு குறைந்த ஊதியம் அல்லது ஊதியமே அற்ற நிலைமையே நிலவியது. அவர்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. தங்கள் தற்காப்புக்காகவேனும் ஆயுதங்களை கையாள அனுமதிக்கப்படவில்லை. அது உடைகளானாலும், பாத்திரங்களானாலும் எந்த புதிய பொருளையும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இவையே மநுநீதியாகவும் இருந்தன. இந்தக் காரணங்களால், உழைக்கும் வர்க்கத்தினரின் அன்றாட தேவைகளுக்காக அய்ரோப்பாவில் உருவான உள்ளூர் சந்தையானது இந்தியாவில் வரவேயில்லை.

நான்காவது காரணியானது, "தொடர்ந்து விரிவடையும் சந்தை.' உற்பத்தியின் கருவிகளை புரட்சிகர மாற்றங்களுக்கு தொடர்ந்து உட்படுத்தாமல் முதலாளித்துவ வர்க்கம் இருக்க இயலாது. தனது பொருட்களுக்கு தொடர்ந்து விரிவடையக்கூடிய ஒரு சந்தையின் தேவை காரணமாக, தொழில் முதலாளிகள் ஒட்டுமொத்த உலகப் பரப்பையும் தேடி ஓடினர். இந்த சூழல் இந்தியாவின் சாதிய – பொருளாதார அமைப்பில் உருவாகவே முடியாது. ஏனெனில், அந்த அமைப்பின் அடிப்படையானது, பழங்கால உற்பத்தி முறைகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே பாதுகாக்கிறது.

அய்ந்தாவது காரணி: வர்க்கப் போராட்டம் மூலம் "சமூக மாற்றம்' என்பது, இந்தியப் பொருளாதார அமைப்பில் ஒரு சாத்தியமற்ற வழிமுறையாகும். "நிலவுடைமை அதிகாரத்தின் கீழ் இருக்கக்கூடிய ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கம், பழமையான சமூகத்தின் ஆயுதம் ஏந்திய மற்றும் தன்னாட்சிக் குழு... பின்னர் உற்பத்தி காலத்தில் அரை நிலவுடைமை அல்லது முழு அரசதிகாரத்தின் கீழ் பணி... முதலாளித்துவ வர்க்கம் இறுதியில் நவீன தொழில் மற்றும் உலக சந்தை உருவாக்கத்திற்கு பிறகு, நவீன பிரதிநிதித்துவ அரச முறையின் கீழ் தனக்கென ஒரு தனிப்பட்ட அரசியல் அதிகாரத்தை உருவாக்கியுள்ளது. இந்த வழிமுறையானது, நமது நாட்டில் அறவே இல்லாத ஒன்றாகும். அதோடு, ஜாதிய அமைப்பில் இது நடைபெறுவது என்பதும் சாத்தியமற்றதாகும்.

வர்க்கப் போராட்டம் என்பது சாத்தியமானதே. ஆனால் இந்திய சமூக – பொருளாதாரக் கட்டமைப்பில் சாதியப் போராட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று. இந்திய சமூகம் அடிப்படையில் ஒரு வர்க்க சமூகமல்ல. அது ஒரு சாதிய சமூகம். ஒரு தெய்வீக தத்துவத்தின் அடிப்படையில் நிரந்தரமாக நிலைபெறக்கூடிய வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டது. பாரம்பரிய தொழில் மற்றும் தொழிலாளர் பாகுபாடுதான் சாதிய அமைப்பின் அடிப்படையாகும். சமூகவியலாளர்கள் விளக்கும் வகையில் சாதிய சமூகம் என்பது, ஓர் இறுக்கமான வர்க்க சமூகமாகும். இந்த சமூகத்தில் கீழ் மேலாகவோ, குறுக்கு வாட்டிலோ நிலைமாறுதல் என்பது இயலாத ஒன்று. அதனால், சாதிய நிலை என்பது போராட்டத்தின் மூலம் மாற்ற முடியாதது. அதை இழக்கவோ, பெறவோ முடியாது.

இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்த நொடியிலிருந்தே அதன் தந்தை வழியில் தான் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் வர்க்க நிலை என்பது, பிறப்பினால் நிர்ணயிக்கப்படுகிற சமூக நிலை அல்ல. அதன் காரணமாக வர்க்க சமூகத்தின் உறுப்பினர்கள் – தனியாகவோ, குழுவாகவோ ஒரு போராட்டத்தின் மூலம் தங்கள் சமூக நிலையை மாற்றிக் கொள்ள முடியும்.

சாதிய – பொருளாதாரக் கட்டமைப்பில் சமூக மாற்றம் என்பதற்கு இடமில்லை. போராட்டத்தின் மூலம் சாதியை மாற்ற முடியாது. சாதி பிறப்பிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஓர் இந்து இறந்த பிறகும் கூட சாதி விலகுவதில்லை. ஓர் இந்து மனதிற்கு இது இயற்கையான தத்துவமாகும். இந்து கடவுளான கிருஷ்ணன் கீதையில் இவ்வாறு கூறுகிறான் : "நான்கு வர்ணங்களும் என்னால் உருவாக்கப்பட்டவையே' (சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்). இருந்த போதும் அவை வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு மாறுவதன் மூலம் மட்டுமே அழிக்கப்பட முடியும்.

ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையுட னான தொடர்பையும் சாதியே நிர்ணயிக்கிறது. எனவே, பார்ப்பனிய சமூக அமைப்பில் கீழ் மேலாகவோ, குறுக்குவாட்டிலோ மாற்றம் என்பது சாத்தியமில்லை. மாற்றம் இல்லாத வர்க்கமே சாதி. மாற்றத்துடன் கூடிய சாதியே வர்க்கம். இதன் காரணமாக, உற்பத்தி முறையில் மாற்றம் என்பதும் சாத்தியமற்றுப் போனது. வர்க்கம் மாற்றப்படக்கூடியது. வர்க்கப் போராட்டத்தின் மூலம் ஒரு தனிப்பட்ட நபரின் அல்லது ஒரு வர்க்கத்தின் வர்க்க அடையாளம் மாற்றப்படலாம்.

இத்தகைய தேங்கிப்போன பொருளாதாரக் கட்டமைப்பில், உழைக்கும் வர்க்கத்தினரான (சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள்) வாங்குவோரின் சந்தைக்கு தங்களை விரிவுபடுத்திக் கொள்ள வாய்ப்பே ஏற்படவில்லை. சூத்திரர்களுக்கு அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் மறுக்கப்பட்டன. அவர்களுக்கு சொத்துரிமை இல்லை. ஒருவர் சந்தைக்கு செல்ல அவரிடம் பணப்பை இருக்க வேண்டும். ஆனால், சூத்திரர்கள் பணப்பை ஏந்த அனுமதிக்கப்படவில்லை. மக்கள் தொகையில் 90 விழுக்காடு உள்ள மிகப் பெரும்பான்மையினரான சூத்திரர்கள் (தீண்டத்தகுந்த, தீண் டத்தகாத மற்றும் பழங்குடியினர்) அவர்களுக்கு மேல் இருக்கக்கூடிய மூன்று மேல் ஜாதிகளின் கருணையின் அடிப்படையில், வீணாய்ப்போன மற்றும் எஞ்சிய பொருட்களில் உயிர் வாழ வைக்கப்பட்டனர். உற்பத்திக் கருவிகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தவோ, உற்பத்தி உறவில் மாற்றத்தை ஏற்படுத்தவோ எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

"தேவை சந்தை' விரிவடையாமல், "உற்பத்தி சந்தை' முன்னேறவோ, வாழவோ முடியாது. அதனால் இந்திய தொழில் துறையானது, உழைக்கும் மக்களில் 11 விழுக்காட்டினரை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு செயற்கையான எல்லைக்குள் அடங்கிவிட்டது. கடந்த 60 ஆண்டுகளாக இந்திய தொழில் துறையானது, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களில் 11 விழுக்காட்டிற்கும் மேலாக தனது வேலைவாய்ப்பினை விரிவாக்க வில்லை. இதற்கு மேலான எந்த விரிவாக்கமும் அதிக உற்பத்திக்கே வழிவகுக்கும். அது, ஆபத்தானது. சூத்திரர்களையும், தீண்டத்தகாதவர்களையும் பொருளாதார சந்தைக்குள் அனுமதிப்பதன் மூலம் தேவை சந்தையை விரிவாக்க அனுமதியில்லை. மார்க்சியத்தைப் பொருத்தவரையில், முதலாளித்துவத்தின் சவக்குழியின் மீதே சோசலிசம் உருவாகும். சோசலிசத்தின் உலகமயமாக்கலே கம்யூனிசம்.

இச்சூழலில் சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் – உயர்நிலைகளை அடையவும், அதன் மூலம் அதிக பலம் பெற்ற சமூகக் குழுவாக வளரவும், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முழு அதிகாரம் பெறவும் வாய்ப்பில்லை.

மூலம்: எஸ்.கே.பிஸ்வாஸ்

தமிழில் : பூங்குழலி

Pin It